ஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு! - முனைவர் செ. துரைமுருகன் -
பால் எனும் சொல் தமிழில் பிரிவு எனப் பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Gender என்பர். இத்தகைய பால் எனும் அடிப்படையில் பிரிவாகக் கொண்டு ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இத்தகைய பாகுபாடானது உலக மொழிகள் பலவற்றிலும் உள்ளது. ஆனால், உலக மொழிகளில் காணப்படும் பால் பகுப்பினை எடுத்து நோக்கின் “இயற்கைப் பால் பகுப்பு, இலக்கண பால் பகுப்பு என இரண்டு வகையாகப் பகுக்கலாம். இயற்கைப் பால் பகுப்பு என்பது உலகில் காணப்படும் மனிதர்களையும், விலங்கு, இடம், மரம், ஆறு போன்ற பிறவற்றையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். இலக்கணப் பால் பகுப்பு ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பானது. இலத்தீன் மொழியில் நட்சத்திரங்களைப் பெண் பாலாகப் பகுப்பர்” . அதுபோலவே இந்தி மொழியில் உயிரில் பொருட்களையும் ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இலக்கணப் பால் பகுப்புக்கு முக்கியக் காரணம் மொழியின் அமைப்பேயாகும்.
இதனடிப்படையில் தமிழில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் எனப் பகுக்கின்றனர். “தமிழ் மொழியில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பகுப்பதற்கு காரணம் தமிழ் மொழியில் காணப்படும் பதிலீடு பெயர்களேயாகும். அவன், அவள், அவர் என்ற மூன்று பதிலீடு பெயர்களை உயர்திணை கொண்டிருப்பதால்தான் இது மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. உயர்திணையில் ஒருமையில் ஆண், பெண் வேறுபாடு உள்ளதேயன்றிப் பன்மையில் இவ்வேறுபாடு இல்லை. இதனால்தான் பலர்பால் எனப் பிரித்தனரேயன்றி ஆண்பால் பன்மை என்றோ, பெண்பால் பன்மை என்றோ பிரித்திலர் எனத் தமிழில் இலக்கணப் பகுப்பாக, உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்று பிரிக்கக் காரணம் அறியலாம்.