ஆய்வு: இந்துப் பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் ! - சிவப்பிரியா சிவராஜா, நான்காம் வருடம் (இந்துநாகரிகத் துறை), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. -
மேலைத்தேசத்தவர்களுக்கு இந்துப்பண்பாடு குறித்த கரிசனையும், அது குறித்த அருட்டுணர்வும் தற்செயலாய் நிகழ்ந்ததொன்றல்ல. மூன்று நூற்றாண்டுகளாய் (கி.பி.17-19) தொடர்ந்த பல்வேறு அரசியல் பொருளாதார சமூக நிகழ்ச்சிநிரல்களின் விளைவாக அவர்களே நினையாப்பிரகாரமாய் நிகழ்ந்த ஒரு பக்கவிளைவாகவே இதனைக் கருத வேண்டும்.
குடியேற்றவாதம், வர்த்தகம், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புதல் என்ற மூன்று அடிப்படைக்காரணிகள் இந்தியாவிற்குள் மேலைத்தேசத்தவர்களின் வருகைக்கு ஏதுவாயின. அந்தவகையில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனரிகள் தமது சமயத்தை இந்துக்கள் மத்தியில் பரப்புவதற்காக இந்துப்பண்பாட்டை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதே போன்றே 'இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்", 'ஆரியவாதம்" போன்ற எண்ணக்கருக்களால் உந்தப்பட்ட ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலர் குறிப்பாக ஜேர்மன் நாட்டவர்கள் வைதிக இலக்கியங்களையும், சம்ஸ்கிருத மொழியையும் ஆழமாக அறிந்து ஆய்வு செய்வதற்கு உந்தப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்காகவே இந்துப்பண்பாடு பற்றிய கற்கைகளில் மேலைத்தேயத்தவர்கள் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அவர்களே நினையாப்பிரகாரமாய் இந்துப்பனுவல்களைக் கற்கக் கற்க இந்துப்பண்பாட்டின் மீதும் சம்ஸ்கிருத மொழிமீதும் அவர்களுக்கு ஈர்ப்பு உண்டாயிற்று. இதனால் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்தல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் உரைவிளக்கம் எழுதுதல், ஆய்வுநூல்கள், கட்டுரைகள் வெளியிடுதல், ஆய்வுச் சஞ்சிகைகளை வெளியிடுதல், ஆய்வுநிறுவனங்களை ஸ்தாபித்தல் ஆகிய இன்னோரன்ன முயற்சிகளில் மேலைத்தேச அறிஞர்கள் முனைப்போடு செயற்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகளில் இந்துப்பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் பற்றி பின்வருமாரு நோக்குவோம்.