நூல் அறிமுகம்: கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
பொலிகையூர் சு.க. சிந்துதாசனின் கடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி 53 கவிதைகளை உள்ளடக்கியதாக, 128 பக்கங்களில் அலைகரை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிந்துதாசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியே கடலின் கடைசி அலை என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் 2004 இல் ஓரிடம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உட்காயங்களைப் பேசும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு த. அஜந்தகுமார் தனதுரையை முன்வைத்துள்ளார். அதில் சிந்துதாசன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''கவியரங்குகள் பலவற்றில் பங்குகொண்டவர். மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். சிறுகதைதள், கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதி வருபவர். இவரது கவிதைக் குரல் அனைவரையும் கட்டுப் போடும் ஆற்றல்கொண்டது. அறிவிப்பு, பாடல் துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இறுதிப் போர்க் காலத்தில் வன்னியில் அகப்பட்டு வாழ்ந்தவர்.'' பொலிகையூர் சு.க. சிந்துதாசன் தனதுரையில் ''இத்தோடு என் வாழ்வு முடிந்ததாய் எண்ணிய தருணங்கள் மீண்டும் மீண்டும் என்னுள் உயிர்ப்புற அவ்வப்போது என் விழிகளுடன் சேர்ந்து நான் கொட்டியவையே இக்கவிதைகள். இவையெல்லாம் கனவுதானா என்ற சந்தேகங்கள் நம்பமுடியாதபடி அடிக்கடி இன்றும் என்னுள் வந்து போகிறது. என்னைச் செதுக்கும் ஏதோவொரு சக்தி நான் செதுக்கவும் துணை புரிவதாய் ஒரு உணர்வு. எவை எவையெல்லாம் என்னை அழுத்திப் போனதோ அவற்றையெல்லாம் கவிதைகளாக்க நான் முயன்றுள்ளேன். நெருடல்களில் உழன்று நித்திய வலியில் தவித்து எதையும் எவருடனும் பரிமாற முடியா சம்பவிப்புக்களை என் நெஞ்சத்துள் புதைத்து ஏக்கங்களை அளவுக்கதிகமாய் தேக்கி நான் வீங்கி வெடித்ததன் விளைவே இக்கவிதைகள்'' என்கிறார்.

புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் - இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் - அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.


‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து - எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.
சுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள் வெகு யதார்த்தமான அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும் குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும் சிறுகதைகளாயிருந்தன. அவற்றையெல்லாம் அவரின் அனுபவக் கதைகளாகக் கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது நிறைய எழுத ஆரம்பித்தார். செகந்திராபாத் வாழ்க்கையை சிறுகதைகளாக ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். .
அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. நாராயணன், நளினி சாஸ்த்ரிகள், ஆர். எம். நௌஸாத், கே.பாலமுருகன், வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள். கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனை, நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.
பூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.
இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது–2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாலிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. வியக்க வைக்கும் பிரபஞ்சம்! இது நாம் அனைவரும் ஒப்பும் ஓர் உண்மை. வியப்பு என்பது அறிவினால் அளவிட முடியாது எனும் உணர்வும், உணர்வினால் உணர்த்திட முடியாது எனும் அறிவும் ஒருசேரத் திரண்ட திகைப்பு எனலாம். இந்நூலில், கதிரவன் மண்டலம் அன்றும் இன்றும், பிரபஞ்சம், விண்மீன்கள், சூரியன், நிலாக்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, வௌ;வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்), சேண்மம் (நெப்டியூன்), சேணாகம் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கும் அப்பால், வான் கங்கை, நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள் ஆகியவை பற்றிப் பேசப்படுகின்றன. இவைகள் அனைத்தும் வான்வெளித் தொடர்பு பற்றிய செய்திகளாகும். மேலும் இவைகள் யாவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தனவாகும். சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் முதல் ஆறு கோள்களாகிய புதன், சுக்கிரன் (வெள்ளி), பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்கள் அமைந்துள்ளன. மற்றைய மூன்று கோள்களாகிய யுறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களின்றி ஆங்கிலச் சொற்கள்தான் பாவனையில் இதுவரை இருந்துள்ளன. இவற்றிற்கான தமிழ்ப் பெயர்களை முறையே விண்மம், சேண்மம், சேணாகம் என்று பாவனைப்படுத்தி முதல் அடி எடுத்து வைத்துள்ளார் ஆசிரியர்.
ஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.
அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய 'சமஸ்காரா' என்ற புதினம், தமயந்தி எழுதிய 'வாக்குமூலம்' என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது. தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன். பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான் அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன். சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம். அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறி வகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில்.
1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து மேடும் பள்ளமும் என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.
பூங்காவனம் இலக்கிய வட்டத்தின், கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் 13 ஆவது இதழ் பூத்து தற்போது வாசகர்கள் கைகளில் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. ஷஅன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம்| என ஒளவையார் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுகின்றார். உண்மையில் சகலவற்றிலும் தாய்க்கும், தந்தைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். பொருளாதாரத்தின் பலம் அவர் கையில்தான் இருக்கிறது. அவரது உழைப்பு இன்றேல் குடும்பத்தின் வாழ்வு நிலை வழுக்கி வீழ்ந்துவிடும். அன்னையர் தினத்தைப் போல தந்தையருக்கும் தினம் ஒன்று இருக்கிறது என்பதனை வாசகர்களுக்கு நினைவூட்டி அவர்களைக் கன்னியப்படுத்த வேண்டும் என்பதை சஞ்சிகை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பூங்காவனத்தின் உள்ளே நான்கு சிறுகதைகள், எட்டுக் கவிதைகள், இரண்டு கட்டுரைகள், இரண்டு நூல் மதிப்புரைகள் என்பவற்றோடு வாசகர் கடிதமும், நூலகப் பூங்காவும் வழமை போல் இடம் பிடித்துள்ளன. செல்விகள் ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இருவரும் ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியச் சேவை புரிந்து வரும் திருமதி பவானி தேவதாஸ் அவர்களை நேர்கண்டு அவர் மூலமாக பல இலக்கியத் தகவல்ளைத் தந்து இருக்கிறார்கள். திருமதி. பவானி தேவதாஸ் கண்டியில் பிறந்து வளர்ந்து விஞ்ஞான ஆசிரியையாகி கல்விச் சேவை செய்தவர். ஸிந்து கன்னியா என்ற பெயரில் இவருக்கு ஒரே ஒரு மகள் மாத்திரம் இருக்கிறார்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு - எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.
”எனது நீண்டகால மருத்துவ பணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல்லாயிரம் அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடாகவே இந்த கருணை நதி கருக் கொண்டது” கருணை நதி குறுநாவலின் முகவுரையில் அதன் ஆசிரியர் மிதாயா கானவி (மிதிலா) இவ்வாறு குறிப்பிடுகின்றார். ”மனித வாழ்வின் வாழ்வியல் அனுபவங்களே இலக்கியமாகிறது” அந்த வகையில் கருணை நதி மருத்துவ தாதியாக கடமையாற்றும் மிதாயாகானவியின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்களை உணர்வூட்டும் காதல் கதையொன்றுடன் பேசுகிறது. ஈழத்தமிழ் மக்கள் நெருக்கடியானதும் துன்பகரமானதுமான பாதையை கடந்து வந்திருக்கிறார்கள் முள்ளி வாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் பேரழிவாக பதிவாகியிருக்கிறது. இந்த அனர்த்தங்களோடு இணைந்து பயணிக்கிறது கருணை நதி இதுவே இந் நாவலை கவனத்துக்குரியதாக்குகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர் அவலங்கள் பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கினறன. அந்தவகை இலக்கிய பதிவாக வெளிவந்த கருணை நதி தமிழர் துயரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதைவிட போர்ச்சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்ததுவ பணியாளர்களின் கருணையை மறக்க முடியாது. காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனிதநேய அணுகுமுறை கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது. உண்மையை எழுதுதலே சிறந்த இலக்கியமாகிறது .இங்கும் வாழ்வின் யதார்த்தமே நாவலின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.
இன்றையதினம் லண்டனில் வாழும் ஈழத்துத் தமிழறிஞர் திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி. 13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.

வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும். வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது. 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு ஆண்டு நிறைவு விழா பிரான்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்வாறானதொரு நூல் எழுதும் ஆதர்ஷம் தனக்கு ஏற்பட்டது என்கிறார் வாசுதேவன். வாசுதேவனுக்கு நிச்சயமாக இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எதிர்கொண்ட கருத்தியல் மற்றும் நடைமுறைக் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக அவரது பூர்வீக நிலம் சார்ந்த ஈழவிடுதலைப் போராட்டம் இருந்தது என்பதுதான் அந்தக் காரணம். பிரெஞ்சுப் புரட்சி குறித்துப் பேசும், நிறைந்த தமிழ்ப் புதுச்சொல்லாக்கங்களும் கவித்துவ மொழியும் கொண்ட இந்த நூலில் 'போராளிகளின் தற்கொடை, மாவீரர்' போன்ற சொற்கள் வாசுதேவனிடமிருந்து இயல்பாக வந்து விழுகின்றன.
[ 13-10-2004 திகதி அன்று காவலூர் இராஜதுரையால் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. - பதிவுகள்] இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும். 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான் தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.
இலங்கையின் (ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை )விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின் கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில் முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர்தான் இந்த பாயிஸா அலி. அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண். கவியூற்று கசியும் நிலம். மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு. தன் கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









