இலங்கையும், இந்தியாவும் , ஐநாவின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமும்!
இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.