- தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post, July 06, 2012) யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில் "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை, 'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல் போன்ற பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார். அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. -
சிறீலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் போது பல்லாயிரம் பொதுமக்கள் இருபக்கச் சூட்டில் அகப்பட்டு பயப்பீதியில் உறைந்து போனார்கள். "பசி காரணமாகக் குழந்தைகள் அழுதன. அப்ப யாரோ தேங்காய்ப்பால் கஞ்சி கொடுப்பதாகச் சொன்னார்கள். உடனே பதுங்கு குழியில் ஒளித்திருந்த நாம் வெளியே வந்தோம்" என வட மாவட்டம் துணுக்காயைச் சேர்ந்த 35 அகவை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார். "அப்போது இராணுவம் அந்த இடத்தில் குண்டு போட்டது. எனது குழந்தை உட்படப் பெரும்பாலான குழந்தைகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்."
போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் வட இலங்கைத் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு - இவர்கள் மூன்று பத்து ஆண்டுகள் நடந்த மோதலில் அதிகளவு இறந்து பட்டதோடு புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் பயத்தோடும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்தார்கள் - அமைதி என்பது வலி நிறைந்த ஏமாற்றமாகிவிட்டது.
முற்றிலும் சிங்கள - பவுத்தர்களைக் கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் கீழ் நாளாந்தம் தாம்பட்ட அவமானத்தைப் பல பெண்கள் நினைவு கூர்ந்தார்கள். அதற்காக அவர்கள் நினைப்பில் பேசுவதற்குப் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஒரு மாதத்தில் இருமுறை இராணுவத்தினர் வீடுகளுக்கு வந்து படம் பிடிப்பதாக அந்தப் பெண்கள் சொன்னார்கள். ஒரு சிறிய சந்திப்புக்கும் - அருகிலுள்ள காட்டில் விறகு வெட்ட என்றாலும் - இராணுவத்திடம் அனுமதி தேவைப்படுகிறது.
"எனது வீட்டில் எனது பிள்ளையின் பிறந்த நாள் விழா நடத்துவதென்றாலும் இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது" எனக் கண்டாவெளியைச் சேர்ந்த 46 அகவை நிறைந்த தாயார் சொன்னார். பெயர்களை வெளியிட்டால் அது தங்களது உயிருக்கு ஆபத்தென்பதால் மற்றவர்களைப் போல் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது என்ற நிபந்தனையில் பேசினார். "அவர்கள் (இராணுவம்) இல்லை என்று மறுத்தால் எனது 8 அகவை நிறைந்த மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாட முடியாது."
பெண்கள் எப்படி அரசாங்கத்தை ஆதரித்தும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு அரசைக் கண்டிப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் அல்லது ஏமாற்றி அழைத்து வரப்படுகிறார்கள் என்பதை விபரித்தார்கள். கிராம மக்கள் பிரார்த்தனையின் போது தேவாலயத்தில் ஒரு மெழுகுவர்த்தியைத் தானும் கொளுத்த இராணுவம் அனுமதிப்பதில்லை. காரணம் அருகில் புதைப்பட்டிருக்கும் இறந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு மதிப்பளிக்க முனைகிறார்கள் என இராணுவம் அய்யப்படுகிறது.
இன்னொரு பெண், இராணுவத்தினர் தங்கள் அடுக்களைக்குள் நுழைந்து ஒரு கோப்பை கோப்பி தருமாறு கேட்பதையிட்டு முறைப்பட்டார். "எங்களுக்குப் பேய்ப் பயம்" என்கிறார் 6 அகவை குழந்தையின் தாயார். "அதற்கு மேலாக எனக்கு விரக்தியாக இருக்கிறது. எனக்குக் கோபமாக இருக்கிறது. இந்த உணர்வை என்னால் வார்த்தையில் விபரிக்க முடியாது."
'இராணுவம் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது'
சிறீலங்காவின் இந்துக்கள் மற்றும் தமிழ்க் கிறித்தவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை 1976 ஆம் ஆண்டு தொடக்கினார்கள். அவர்கள் சிறீலங்காவின் வட கிழக்குப் பகுதியில் பெருமளவு நிலத்தைக் கைப்பற்றி இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டார்கள். வன்முறை மற்றும் பயம் மூலம் சிறார்களைப் படையில் கட்டாயப்படுத்திச் சேர்த்தார்கள். எதிராளிகளைக் கொன்றார்கள். பயங்கரவாதத்தின் ஒரு கூறாகத் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தினார்கள்.
அய்க்கிய நாடுகள் அவை உள்நாட்டுப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த கொலைகள் பற்றிய விசாரணையைக் கோரியுள்ளது. அய்க்கிய நாடுகள் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தினார்கள் எனக் குற்றம்சாட்டுகிறது. அதே போல் இராணுவம் கண்மூடித்தனமான செல் தாக்குதல் நடத்தியதையும் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைப்பதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டுகிறது. அண்ணளவாக 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்று, சண்டை பிடிக்கத் தேவையில்லாத நிலையில், இராணுவத்தினர் இந்துக் கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் வைபவங்களுக்கும் போகிறார்கள். "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை, 'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.