தலைமை நீதியரசரை துகிலுரிந்த துரியோதனர்கள்!
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
பிடி சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே!
மணி முடி, கிரீடம் அணிந்த மன்னரும் மற்ற எல்லாரும் கடைசியில் ஒரு பிடி சாம்பலாய் தீயில் வெந்து அல்லது மண்ணில் புதை உண்டு போவதும் அதைப் பார்த்த பின்னும் இந்த உறவுகள் என்னும் பிடி சார்ந்த வாழ்கையை நினைப்பது அல்லால் பொன்னால் செய்யப்பட்ட நடன சபையில் ஆடுபவர் (சிவன்) திருவடி பற்றி நாம் பிழைக்க வேண்டும் என்று அறிபவர் இல்லையே! பட்டினத்தடிகளாரது பாடல் இது. வாழ்க்கை நிலையாமை பற்றிப் பாடுகிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி தோற்கடித்த சிங்கள - பவுத்த பேரினவாதம் இப்போது தனது கறைபடிந்த கைகளை நாட்டின் நீதித்துறைக்கு எதிராக நீட்டியுள்ளது.