சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று சிங்கள - பவுத்த பேரினவாத அரசு பகிரங்கமாக அறிவித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. கேட்டால் அவர்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் செய்தி ஏடுகளில் வெளிவந்த செய்தியின் படி வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகிறதாம். வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்றத் திட்டம்! என்ற தலைப்பிட்டு வெளிவந்திருக்கும் அந்தச் செய்தியின் படி வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவும் அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான சிறப்புக் கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.