மலேசியா: இந்தியர்களைக் காப்பவர்களுக்கே நமது ஓட்டு!
‘ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்’ என்பது போல் அண்மையில் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதைக் கண்டு இந்திய சமுதாயம் அதிச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது. 56 ஆண்டுகளாக ஆட்சி புரியும் பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் வாழ்க்கை உயரவில்லை. 2008 ஆம் ஆண்டு இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பக்கத்தானுக்கு ஓட்டளித்த பின்பு ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியது, ஏழ்மையிலும் சமூகப்பிரச்சனைகளிலும் மூழ்கித்தவிக்கும் இந்திய சமுகத்தைக் கைதூக்கி விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் மண்விழுந்ததுதான் மிச்சம். கடந்த, 56 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாரிசான், 5 ஆண்டுகளாக நான்கு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாக்கத்தான் கட்சியும் நயவஞ்சகத்துடன்,இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தனர் என்பதை அறிய மிகவும் வருத்தமாக இருக்கிறது.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியர்கள் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில், பச்சைக்காடாக இருந்த இந்நாட்டை,வளப்படுத்துவதில் இந்தியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இந்தியர்களின் இரத்த வியர்வில் உருவான இந்நாட்டு மண்ணுக்கு இலட்சக் கணக்கில் இரையாகிப் போன நம் இந்தியர்களின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுவிட்டது.