கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!
கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது?
இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.
இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.
கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?