யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.
பல்கலைக்கழகப் படிப்பு என்பது மேற்கல்வி படிக்க வரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளினதும் பிரமாண்டமான எதிர்காலக் கனவுகளைத் தாங்கிக்கொண்டுவரும் ஒரு மகத்தான பிரயாணம். அந்தப் பிரயாணத்தின் ஆரம்பமே அசிங்கமான அனுபவங்களுடன் ஆரம்பித்தால், அந்த மாணவ மாணவிகளின் இளம் கனவுகள், எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களில் வைக்கும் நம்பிக்கை, மரியாதை என்பவற்றைக் கேள்விக்குறியாக்கும் விடயமாக அமைகிறது.இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவர்களின் தூய உணர்வுகள் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே 'காமவெறிபிடித்த சில காவாலிகளின்' சேட்டைகளால் சிதறியழிவதை ஒரு சமுதாயம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அதைப் பெரிதுபடுத்தாமல். ஏதோ சாட்டுக்கள் சொல்லி மறைப்பது,என்பவை அந்தச் சமுதாயத்தில் கவுரமாக வாழ வலிமையற்றவர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமான இடமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.
இலங்கையிற் தொடர்ந்து வரும் பகிடிவதைக் கொடுமைகள், இலங்கைச் சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சியின் பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது.இந்த வதையைச் செய்பவர்கள் தங்களின் ஆளுமையைப் புதிதாக வரும் மாணவர்களிடம் காட்டி அவர்களை உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் வருத்துவதும்,கேவலப்படுத்துவதும் என்பது மனித உரிமைக்கு அப்பாற்பட்ட விடயங்கள். முன் பின் தெரியாத ஒரு அமைப்புக்குள் வரும் அப்பாவியான மாணவ மாணவியரைத் தாங்கள் 'ஒரு வருட,அல்லது இரு வருட சீனியர்கள்' என்ற தகைமையுடன் வதைப்பது எந்தவிதமான நாகரீகமான சமுதாயத்திலும் நடக்கக் கூடாத விடயம்.ஒரு தனி மனிதனின் தன்மானத்தைக் கேவலப்படுத்தி இன்பம் காணுவது ஒரு பல்கலைக்கழகச் சாதாரண செயலாக எடுக்கப்படுவது அந்த மாணவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் மிகக் கேவலாமான சிந்தனையமைப்பைச் சித்தரிப்பதாகும்.
முக்கியமாக, புதிதாக வரும் மாணவிகளைத் தங்கள் அசிங்கமான இச்சைக்கு உட்படுத்தி அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளுவதை ஒரு சமுதாயம் 'வெறும் விளையாட்டுச்' சமபவமாக எடுத்துக் கொள்ளுமானால் அந்தச் சமூகமே சித்தம் குலைந்த நிலையிலிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
உலகத்தில் பலநாடுகளில் பல்கலைக்கழகப் பகிடி வதைகள் நடந்தாலும் இலங்கை,இந்தியா,பங்களதேஷ்போன்ற நாடுகளில் நடப்பதுபோல் கொடுமையும் வக்கிரமானதாகவும் இருப்பதில்லை என்று அறிக்கைகள் சொல்கின்றன.
நான் எனது திரைப்படப் பட்டப் படிப்பை லண்டனில் ஆரம்பித்தேன். புதிய மாணவர்களான எங்களுக்கு வெல்கம் பார்ட்டி வைத்தார்கள்.அதில் எங்கள் விரிவுரையாளர்களும் கல்விக்கூடத்தின் 'சீனியர்களும்' வந்திருந்து எங்களின் 'புதிய மாணவர்கள்' என்ற மனப்பயத்தை நீக்கும் விதத்தில் பேசிப்பழகி வரவேற்றார்கள். முதல் வருடம் தொடங்கி மூன்று வருடங்கள் முடியுமட்டும் திரைப்படம் சம்பந்தப் பட்ட என்னென்ன விதமான படிப்புக்கள், அனுபவங்கள், சந்தோசங்கள், சங்கடங்கள் வரும் என்பதைத் தங்கள் அனுபவம் சார்ந்த தடயங்களுடன் மறைமுகமாகவும் நேரடியாகவும் 'சீனிய மாணவர்கள்'கலந்துரையாடினார்கள். புதிய மாணவர்களாகிய எங்களுக்கு,ஸ்கிறிப்ட் எழுதுவது தொடக்கம் கமரா,ஒலி,ஒளி,எடிட்டிங்,டைரக்ஷன் போன்ற விடயங்களில் உதவி செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். அந்த வரவேற்பு புதிய மாணவர்களுக்கு ஒரு தென்பைத் தந்தது. எங்களுக்குத் தெரியாத திரைப்பட நுணுக்கங்களை அவர்களிடம் தயங்காமற் கேட்டறியும் துணிவைத் தந்தது.அதுதான்; ஒரு கல்வி நிலையத்தை மேம்படுத்தும் படிப்புமுறை.
இதைச் சொல்வதானால் லண்டனில் மட்டுமல்ல பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதை முற்று முழுதாக நடப்பதில்லை என்று நான் பதிவிடவில்லை. ஏகாதிபத்திய ஆளுமையின் சரித்திரத்தைப் பின்னணியாகக்கொண்ட பிரித்தானியாவின் கல்வி நிலையங்களில் மட்டுமல்ல,பணிபுரியம் இடங்களிலும் இனவாத, நிறபேத,வர்க்கபேத,பாலியல் பேதம் சார்ந்த பல நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஆனால் அந்த விடயங்கள் வெளியில் வந்தால் அவற்றைக் கண்டிக்கும் சட்டதிட்டங்கள் நிர்வாகத்திடமுண்டு.அரசியற் சட்டதிட்டங்களிலுமுண்டு. அவற்றைக் கண்டிக்கப் பெரும்பாலான ஊடகங்கள் முன்வருவதுண்டு.
ஆனால் இலங்கையில் தொடர்ந்து நடக்கும் விடயங்கள் அசிங்கமானவை.இவை யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல இலங்கையின் பல பல்கலைக் கழகங்களிலும் தொடருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.இந்த 'பகிடிவதை' என்ற அசிங்கமான முறை ஆங்கிலேயர் இலங்கையை ஆண்டகாலத்தில் ஆரம்பிக்கப் பட்டது என்று தகவல்கள் சொல்கின்றன.
ஆங்கிலேயர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று ஆளுமை கொள்ளும் வரையும் உலகின் பல நாடுகளும் தங்களின் பண்பாட்டுடன் சேர்ந்த கல்விக் கூடங்களில் பயின்றார்கள்.
இலங்கையில் 1942ம் ஆண்டு பல்கலைப்படிப்பு ஆரம்பமானது.முதலில் கொழும்பு (1942) அதன்பின் பேராதெனியா(1949) ஆரம்பிக்கப் பட்டது. சுதந்திரத்தின்பின் பல இடங்களில் பல பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப் பட்டன.
அதாவது,வித்தியோதயா(1959) வித்தியாலங்காரா(195) கட்டுப்பேட்ட(1972) யாழ்பாண பல்கலைக்கழகம்(1974)என்று பலவாகும்
அன்னியர்கள் காலடி எடுத்து வைக்கும்வரை, உலகத்தில் பலநாடுகளில் இருந்ததுபோல் இலங்கையிலும்;,தமிழர்களும் சிங்களவர்களும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாகச் சமயக் கல்வி,(மதகுருமார் அல்லது மத அறிவாளர்கள் தலைமையி;ல்) சமுதாயக் கல்வி(திண்ணைப் பள்ளிக் கூடங்கள்), பாதுகாப்புக் கல்வி (அரசரின் படை) முறைகளில் வெவ்வேறு தத்துவங்களுடன் பயிற்றப் பட்டவர்கள்.
இலங்கையில்,ஆங்கிலேயர்காலத்தில் பல்கலைக்கழகங்கள் அவர்களின் அரசநிர்வாகத்திலிருந்தன. அதில் சேர்க்கப் பட்ட மாணவர்கள் சிலர் இரண்டாம் உலக யுத்தகால கட்டத்தில் இராணுவத்திற்குப் போய்வந்தவர்களாகவிருந்தார்கள். இராணுவ முறையில் ஒரு வீரனின் உள உடல் தைரியத்தைப் பரிசோதிக்கப் பல விதமான பரீட்சைகள் வைக்கப்படுவதுபோல் இராணுவத்திலிருந்து வந்து மாணவர்களாகச் சேர்ந்தவர்கள் தங்களைவிட 'இளையவர்களைத்' தங்களுக்குத் தெரிந்த விதத்தில் (இராணுவ) பகிடி வதை செய்தார்கள். அக்காலத்தில் பல்கலைக்கழகங்களுக்குச் செனறவர்கள் ஆங்கிலம் படித்த மத்தியதர வர்க்கத்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.வர்க்க பேதத்தைச் சதாரணமாக நடைமுறைப்படுத்தித்; தங்கள் ஆளுமையை நிலைநாட்டத் தயங்காத பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள்.அதன் நீட்சியே இன்று தொடரும் அசிங்கமான பகிடிவதை என்று சொல்லப்படுகிறது.
இவை 'சீனிய மாணவர்களின் தாங்கள் பெரியவர்கள், சிறியவர்களைச் சீண்டி வேடிக்கை பார்ப்பது என்பதற்கப்பால், 'சீனியர்களின்' தனிப்பட்ட மன அமைப்பையும் உட்கொண்டதாகும். இப்படி வக்கிரமான பகிடிவதை செய்பவர்கள் பெரும்பாலும் ஆணவம் பிடித்த மனப்பாங்குடன் அல்லது மிகவும் தாழ்ந்த மன நிலையுடன் வளர்ந்தவர்களாகவிருப்பார்கள்.' சீனியர்களில்' பெரும்பான்மையோர் இப்படியான விடயங்களில் ஈடுபட விரும்பாவிட்டாலும் வக்கிரபுத்தியுள்ள அவர்களின் சினேகிதர்களைத் திருப்திப்படுத்த இப்படியான கேவலமான சேட்டைகளில் மாட்டுப்படுவார்கள்.
'பகிடிவதை' செய்து இன்பம் காணுவது வேடிக்கையான பழக்கமல்ல. அது ஒரு மனநோயின் அறிகுறி. மற்றவர்களைத் துன்புறத்தி இன்பம் காணும்' சாடிஸ்டிக்' நோய் கொண்டவர்கள் இவர்கள்.
அதுவும்' சீனியர்கள்' பணத்தாலோ அல்லது சமுதாயத்தில் 'பெரியதலைகளின்' பிள்ளைகள் என்ற தகமைகளிருந்தால் அவர்களின்; 'வக்கிரத்தின்' பரிமாணங்கள் வாய்விட்டுச் சொல்லமுடியாத அளவுக்குக் கேவலமாகவிருக்கும்.
- ஆய்வுகளின்படி:
1974ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா, வித்தியாலங்கர பல்கலைக்கழகத்தில் (இன்றைய கெலனியா பல்கலைக்கழகம்) நடந்த ';பகிடி வதை' விடயத்தை விசாரிக்க திரு. வி. டப்ளியு.குலரத்னாவை நியமித்தார்.12 மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்கள்.
-1975ல் பேராதெனியப் பல்கலைக்கழக சீனியர்களின் ;பகிடிவதையால்' 22 வயதுப்பெண் இறந்தார்.ரூபா ரத்னசீலி என்ற பெண் 'வக்கிரமான பாலியல்' (என்னால் எழுதமுடியாத கேவலம்) பகிடிவதையிலிருந்து தப்ப இராமநாதன் மண்டபத்திலிருந்து குதித்ததால் பரலைஸ்டாகினார்.அந்த வேதனையால் பல்லாண்டு வாடிவதங்கி 2002ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
-பிரசன்னா நிரோஷனா (ஹக்மனா என்ற இடத்தைச் சேர்ந்தவர்) 'கொடுமையான பகிடிவதையால்' வந்த காயத்தால் இறந்தார்.
-1997ல் 21 வயதான வரபிரகாஷ் என்ற என்ஞினியரிங் மாணவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு நடந்த கொடிய ;பகிடிவதையால்' சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டிறந்தார்.
-1997. அம்பாரை டெக்னிக்கல் கொலிஜ்ஜைச் சேர்ந்த முதலாவது வருட மாணவர் கெலும் துசார விஜயதுங்க என்ற 'பகிடிவதைக்கொடுமைக்காரர்' குடிக்கப் பண்ணிய அளவுக்கு மீறிய மதுவின் தாக்கத்தால் சிறுநீரகம் பாழாகி மரணமடநை;தார்.
-2002ம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தானபுரப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வருடமாணவர் சமந்தா விதானகே பகிடிவதையை எதிர்த்த காரணத்தாலான வாக்குவாதத்தால் கொல்லப்பட்டார்.
-2006ம் ஆண்டு,மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்திம விஜயபண்டார 'பகிடிவதை' சம்பந்தமான விடயத்தில் மாணவர்கள் அவருக்குப் பணியாததால் தனது பதவியைத் துறந்தார்
-2014.டி. கே. நிஷாந்தா என்ற மாணவரின் இறந்த உடல் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்கள் விடுதியின் அருகிலுள்ள புதரருகில் தொங்கிக்காணப்பட்டது.இவர் 2010ம் ஆண்டு,இவரின் சினேகிதன் பல மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டவர்.அதன்பின் மிகத்துயருடனிருந்த நிஷாந்தா பல்கலைக்கழகத்திற்கு வரவில்லை.இறந்ததற்குக் காரணம் தற்கொலை என்று முடிவானது.
2015. சப்ரகாமுவா பல்கலைக்கழகத்தில், 23வயதான அமாலி சத்துரிக்கா என்ற மாணவி 'பாலியல் பகிடிவதைக் 'கொடுமைக்காளாகித் தற்கொலை செய்துகொண்டார்.
2019- .23 வயதான டிலான் விஜயசிங்க என்ற மாணவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ;பகிடிவதைக்குள்ளாகித்'தற்கொலை செய்துகொண்டார்.இந்தமாணவர்.யாழ்ப்பாணத்தில்மாணவராகவிருந்தபோது,'பகிடிவதைக்கொடுமை'க்காளாகியதால் மொரட்டுவைக்கு மாற்றப்பட்டவராகும்.
சட்டப்படி@ இலங்கைப் பிரஜைகள் 'பகிடிவதைக்கொடுமைகளுக்'கெதிராக சுப்றீம்கொர்ட் 126வது சட்டத்தின்படி,'பகிடிவதைகள்'மனித உரிமையை மீறியது என்று 'பெட்டிஷன்' போடலாம்.படிக்குமிடங்களில் மாணவர்களக்கெதிரான 'பகிடி வதைகளுக்கு' எதிராக 20 இலக்கம் 1998ம் ஆண்டு சட்டம் உண்டாக்கப் பட்டிருக்கிறது.
இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கெதிராக ஒரு அமைப்பு இருக்கிறது. இலங்கையில் அப்படி ஒன்றும் கிடையாது. ஆனால் இலங்கையின் பிரமாண்டமான பல்கலைக் கழகமான பேராதெனியாவில்,'பகிடிவதைககெதிராக' 1996ல் ஒரு அமைப்பு ஒண்டாகியது.ஆனாலும் 'பகிடிவதைக்' கொடியவர்கள் அப்படியான அமைப்பின் நடவடிக்கைகளிலுமிருந்தும் தப்பி விடுகிறார்கள் என்று சொல்லப் படுகிறது. பகிடிவதைக்கெதிரானவர்களும் பகிடிவதையை ஆதரிப்பவர்களும் சில சமயங்களில் கைகலப்பில் ஈடுபடுவதுமுண்டு.
ஸ்ரீ ஜெயவார்த்தனாபுர பல்கலைக்கழகத்தில் சமந்தா விதானகே என்ற மூன்றாவது வருட மாணவர் பகிடிவதைக்கெதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப் பட்ட காலகட்டத்தில்; கல்வி மந்திரியாயிருந்த,எஸ்பி.திஸநாயக்கா பகிடிவதைக்கெதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தார்.
ஆனால் இன்றும் பேராதெனியா, றுகன பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் தொடர்கினறன என்று சொல்லப்படுகிறது.
தாய் தகப்பன் எத்தனையோ கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அண்மையில் கிளிநொச்சி வளாகத்தில் நடந்த கொடுமைகள் போன்று பல தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அந்த மாணவர்களின் சமுதாயப் பழக்கவழக்கங்களாகும்.
சில வருடங்களுக்குமன் யாழ்ப்பாணப் பல்கலைக விரிவுரையாளர் ஒருத்தர் அவரின் இளவயது வேலைக்காரியைப் பாலியற் கொடுமை செய்ததாகக் கோர்ட்டுக்கு இழுக்கப் பட்டார். காலம் கடந்தது. அந்த ஏழைப்; பெண்ணுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு எதுவம் நடக்கவில்லை.அவர் இன்று அப்பல்கலைக்கழகத்தின் பிரமுகர்களில் ஒருத்தராகவிருக்கிறார்.
புங்குடுதீவில்,பாடசாலைக்குச் சென்ற வித்தியா என்ற பெண்ணை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து கொலை செய்தார்கள் அவனில் ஒருத்தன் தப்பிச் செல்ல ஒரு தமிழ்ப் பெண் பாராளுமன்றவாதி முயற்சித்ததாக வதந்திகள் அடிபட்டன. இப்படியான வேலியே பயிரைமேயும் சமுதாயத்தில் அப்பாவி மாணவர்களின் கெதி எப்படியிருக்கும் என்பதற்கு அண்மையில் பாலியல் வதைக்குள்ளான பெண் தற்கொலை முயற்சிக்கு ஆளானது சாட்சியாகவிருக்கிறது.
இந்த நிலை மாறச் சமுதாயம் முன்வராவிட்டால் எதுவும் மாறாது.படித்தவர்கள். பண்புள்ளவர்கள், புத்திஜீவிகள், சமுகநலவாதிகள்,ஊடகவாதிகள்,பெண் ஆளுமைகள், என்று பல தரப்பட்ட சக்திகளும் ஒன்றுபட்டு இப்படியான கொடுமைகளுக்குக் குரல் கொடுப்பது இன்றைய கால கட்டத்தின் தவிர்க்கமுடியாத தேவையாகும். பாலியல் வதை செய்யும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்காவிட்டால் மற்றவர்களும் அதே தவறுகளைச் செய்து தப்பித்துக் கொள்வார்.இப்படியானவர்கள்தான் பல்கலைக் கழகப் படிப்பிற் கிடைத்த பட்டத்துடன் வெளிவந்து,எதிர்காலத்தின் ஆசிரியர்கள், சட்டத்தறிஞர்கள், வைத்தியர்கள், அறிஞர்கள் அரசியல்வாதிகளென்று பொன்னாடை போர்த்தப்படுபவர்கள். அந்தச் சமுதாயம் ஒருநாளும்,அறம் சார்ந்த உயர்சிந்தனையுள்ள கவுரமான எதிர்காலத்தைப் படைக்கமுடியாது.
எதிர்காலத்தில் ஒரு கவுரமான சமுதாயம் வளரவேண்டுமானால், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பவற்றைப் படிப்பிப்பது,பெற்றோர்,ஆசிரியர்கள் என்போரின் தலையாய கடமையாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.