அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!
- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -
உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும் தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும் எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும் வலுப்படுத்த முடியும்.
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள். அந்தத் தேர்தல் முடிவு, எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு உலக நாடுகளால் வரவேற்கப்பட்டன. எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள் தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.