31.01.2020
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் கர்நாடக இசையில் சிறந்தவர் என்பதோடு, இசை குறித்து பல நூல்களையும் எழுதியவர். மதவெறிக்கு எதிராகவும், சாதிய பாகுபாடுகளையும் எதிர்த்து உறுதியாக குரலெழுப்பி வருபவர். அது குறித்த தம் கருத்துக்களைத் துணிச்சலாகப் பொதுவெளியில், கட்டுரைகள், ஊடக உரையாடல்கள், உரைகள் மூலம் முன்வைப்பவர். இதனை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத மதவெறி சக்திகள், ஏற்கனவே டெல்லியில் நடப்பதாக இருந்த அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தது போல், 02.02.2020 அன்று நடக்க இருந்த அவரது சென்னை புத்தக வெளியீட்டுக்கும் தடையை உருவாக்கியுள்ளன.
‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற அவருடைய சமீபத்திய நூல் மிருதங்கம் மற்றும் அதனை உருவாக்குபவர்கள் குறித்ததாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிருதங்கம் உருவாக்குவதற்கான மாட்டுத்தோலை பதப்படுத்தி கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், மிருதங்கம் குறித்த வரலாற்றில் அவர்களது பங்கு, பாத்திரம் இடம் பெறுவதே கிடையாது என்ற சாதிய பாகுபாட்டு கோணத்தை பின்புலமாக எழுதியுள்ளார். மிருதங்க வரலாற்றில் இதுவரை கொண்டாடப்படாத அவர்களை கொண்டாடுவது என்பதே இந்த நூலின் முக்கிய அம்சம் என்று ஒரு ஊடக பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 2 அன்று மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனமான கலாஷேத்ரா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நூலின் உள்ளடக்கம் அரசியல் கலாச்சார ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் என்று காரணம் கூறி, கடைசி நேரத்தில் கலாஷேத்ரா நிறுவனம் வெளியீட்டு விழாவிற்கான தங்களது அரங்கத்தை தர முடியாது என மறுத்து விட்டது. மதவெறி சக்திகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கலாஷேத்ரா நிர்வாகம் இவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளதென கருத வேண்டியுள்ளது. கலைகளை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கலாஷேத்ரா நிறுவனம் சிறந்த இசைக்கலைஞரின் ஆய்வு பூர்வமான நூலை வெளியிட அனுமதி மறுத்திருப்பதை ஏற்கவே முடியாது.
பல்வேறு கருத்துக்கள், கோணங்கள், கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் பிரதிபலிப்பது இயல்பானது. இத்தகைய ஜனநாயக அடிப்படையிலான மாறுபாடுகளை அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் பாசிச போக்கிற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும். மத்திய அரசின் இத்தகையப் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.
இந்நிலையில் நூல் வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருந்தபடி அதே நாளில் அதாவது பிப்ரவரி 2, 2020 அன்று மாலை 6. 45 மணிக்கு சென்னை தரமணியில் செயல்படும் ஆசிய ஊடக கல்லூரியில் அமைந்துள்ள எம். எஸ். சுப்புலட்சுமி அரங்கில் நடைபெறவுள்ளது. இது வெற்றிகரமாக நடப்பதே மத்திய அரசுக்கு தகுந்த பதிலடி ஆகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
Communist Party of India (Marxist)
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017
Ph.: 044 + 24326800 / 900
Fax: 044 + 24341294
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அனுப்பியவர்: thambirajah elangovan - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.