கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கின்றன. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை. இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!
முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் மீதிருந்த மாபெரும் குற்றச்சாட்டு, அவரின் உலகை நோக்கிய பார்வையாகும். அமேரிக்கா அமேரிக்கர்களுக்கு மட்டும் எனும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்ததே அதற்குக் காரணம் என்றார்கள் அனுபவமிகுந்த அரசியல் அவதானிகள். அத்தோடு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் உலக சமாதானத்துக்கு குந்தகம் விளைவிப்பவை எனும் கருத்தும் வலிமையாக நிலவி வந்தது. ஆனால் இன்று மாற்று எதிர்பார்ப்புகளோடு ஐனாதிபதியான பைடன் அவர்களின் செயற்பாடுகள் அக்கருத்துகளில் எத்தகைய மாற்றங்களை விளைவித்திருக்கின்றது என்பதும் கேள்விக்குறியே! விடையை 2022 நல்குமா? என்பதற்குக் காலம்தான் விடை பகர வேண்டும். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் நிலையைப் பார்ப்போமா?
2020ம் ஆன்டு டிசம்பர் 31ம் திகதியோடு பிரெக்ஸிட் எனும் கத்தி கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான 40 வருட உறவென்னும் தொடர்பை முற்றாக அறுத்தது ஐக்கிய இராச்சியம். இருப்பினும் இதன் முக்கியத்துவம் கோவிட் எனும் நுண்கிருமியின் முக்கியத்துவத்தினுள் புதைந்து போயிற்று என்பதே உண்மையாயிற்று. வழமையாக இந்நிகழ்வினை அறுத்து உருத்துப் புரட்டி எடுக்கும் ஊடகங்கள் தமது முழுக்கவனத்தையும் இதன்பால் திருப்ப முடியாமல் போனதுக்கு பிரதமர் பொரிஸ் ஜான்சன் கோவிட்டுக்கு நன்றி சொல்லியிருப்பாரோ?
கோவிட் தாக்கத்தினால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிய நிலைமையைச் சமாளிக்க ஒரு முழு லாக்டவுனை அமுலாக்கி ஐக்கிய இராச்சிய மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 2020 கிறிஸ்மஸ் நிகழ்வையே இரத்தாக்கிய பெருமைக்குரியராகினார் பிரதமர் பொரிஸ் ஜான்சன், பாவம் பொதுமக்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதைப் பெரிதாக என்ணுவார்களா? இல்லை பொருலாதாரச் சிக்கலை உருவாக்கப் போகும் பிரெக்ஸிட்டின் தாக்கத்தை எதிர்நோக்குவார்களா?
பிரெக்ஸிட்டினால் உருவாகிய பொருளாதாரப் பின்னடைவுகள் அனைத்தும் கோவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு எனும் போர்வைக்குள் அமுங்கிப் போய் விட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தினரின் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதற்கு உருவாகிய புதிய கட்டுப்பாடுகள் ஐக்கிய இராச்சியத்தின் பல துறைகளில் பணியாளர்களின் தட்டுப்பாட்டைத் தோற்றுவித்தது.
அதேநேரம் மகத்தான ஒரு பெரிய நன்மை விழைந்ததும் 2021இலேதான். ஆம் 2020 அக்டோபர்/ நவம்பர் மாதங்களில் வைத்தியத்துறையின் சாதனையால் உருவாக்கப்பட்ட கோவிட்டுக்கான தடுப்பூசி மக்களின் பரவலான பாவனைக்கு கொண்டு வரப்பட்டது 2021இலேதான். பலமுனைகளில் விமர்சிக்கப்பட்ட பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களதும், அவரது மந்திரிசபையினதும் மாபெரும் வெற்றியாக இந்தத் தடுப்பூசி நடைமுறையாக்கம் ஊடகங்களினால் விமர்சிக்கப் பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையில் அரைப்புங்குக்கும் அதிகமாக மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதால் ஜீலை மாதம் 19 தேதி முதல் ஐக்கிய இராச்சியம் லாக்டவுனிலிருந்து விடுபட்டு மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது. எந்தவொரு எதிர்மறையான விமர்சனங்களாலும் பாதிக்கப்படமுடியாதவர் எனும் நிலையிலிருந்த பொரிஸ் ஜான்சனது செல்வாக்கு கொஞ்சம், கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியது. ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாதவர் , நாட்டின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர் எனும் வகையிலான கருத்துகள் அவர் மீது எழ அடுத்தடுத்து அவருக்குப் பாதகமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளது.
2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது பிரதமருக்கான பணிமனையிலேயே அவருக்கு கீழியங்கும் சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அந்தப் பணிமனையிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தினார்கள் எனும் செய்திகள் புகைப்பட ஆதாரங்களுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது பிரதமர் மீதும், அவரது மந்திரிசபை மீதும் மக்களுக்கான நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது எனலாம். அதைத்தவிர அவரின் இருப்பிடத்தினை சீரமைப்பதற்கான நிதி அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளரின் தயவால் கிடைத்தது என்பதும் அவரது நிலையை மேசங்கடத்துள்ளாக்கியுள்ளது.
இப்போது இக்கொரோனா நுண்கிருமியின் திரிபடைந்த தோற்றமான ஒமிக்குரோன் எனும் வகை உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடற்ற முறையில் பரவத் தொடங்கியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தினமும் 120000 க்கும் மேற்பட்டவர்கள் இப்புதிய தொற்றால் பீடிக்கப்படுகிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் பகுதிகளான ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் இங்கிலாந்தில் எதுவிதமான சட்டபூர்வமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தொற்றுக்கள் அதிகரிப்பினும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவிற்கு இது பாரதூரமானதல்ல எனும் கருத்தின் அடிப்படையில் செயற்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்,
இதன் தாக்கம் இனிவரும் நாட்களிளேயே தெரியவரும். இது சரிந்து வரும் பிரதமரின் செல்வாக்கை தூக்கி நிறுத்துமா? இல்லை அவரது செல்வாக்கை அதாள பாதாளாத்தை நோக்கித் தள்ளி விடுமா என்பதனை இனிவரும் நாட்களே முடிவு செய்யப்போகிறது. இதுதவிர ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தின் மீதான பிரக்ஸிட்+ கோவிட் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவுகள் கூட 2022இல் மேலும் வெளிப்படையாகத் தெரியும்.
இனி சர்வதேச அளவிலான சில முக்கிய பாதிப்புகளை பார்ப்போமா?
கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் அமைந்தது எனலாம். சர்வதேச பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நாடு ஆப்கானிஸ்தான் எனும் குற்றச்சாட்டின் பிரகாரம் அன்றைய ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கலைத்து தலிபான்களுடன் போரிட்டு ஆப்கானிஸ்தானைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர போரிட்ட சர்வதேச நாடுகளின் முன்னனியில் அமேரிக்காவும், இங்கிலாந்தும் இருந்ததை அனைவரும் அறிவோம்.
ஆப்கானிஸ்தானில் ஐனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என்று அமேரிக்காவும், இங்கிலாந்தும் முன்னெடுத்த நடவடிக்கையில் இருநாடுகளும் பலநூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களைப் பலிகொடுத்துள்ளார்கள். இதைத் தமது நாட்டு மக்களுக்கு சர்வதேசப் பயங்கரவாதத்தை ஒலிப்பதன் மூலம் தத்தமது நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கலாம் எனும் வாதத்தையே இவர்கள் முன் வைத்தார்கள்.
தலிபான் இயக்கத்தை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் ஒரு நிரந்தர ஐனநாயக அரசை அமைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார்கள் என்பதே உண்மை. அமேரிக்க முன்னாள் அதிபர் பதவிக்கு வரும்போது அமேரிக்கா இனி வெளிநாட்டுப் பிரச்சனைகளில் ஈடுபடாது எனும் கொள்கையை முன்வைத்தார். அவரது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் 2021 இல் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமேரிக்க இராணுவத்தினர் அனைவரையும் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் கையளிக்க இரு பகுதியினருக்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின.
பைடன் அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்நிலையில் மாற்றம் ஏற்படுமா? எனும் எதிர்பார்ப்புகள் பல பகுதிகளில் இருந்து எழுந்தன. ஆனால் அதிபர் பைடனோ , ட்ரம்ப் அவர்களின் காலக்கெடுவையே தானும் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அமேரிக்க இராணுவத்தின் ஆதாரத்தில் தங்கியிருந்த எஞ்சிய ஐக்கிய இராச்சிய இராணுவமும் வெளியேறும் என்று ஐக்கிய இராச்சிய பிரதமரும் அறிவித்தார்.
இவ்விரு இராணுவத்தினரும் ஆப்கானிஸ்தானை தலிபான் அவர்களின் வார்த்தைகளின் அடிப்படையில் அவர்களிடம் கையளித்தார்கள். இவ்விரு இராணுவத்தினருக்கு பல வழிகளில் உதவி புரிந்து வந்த ஆப்கானிஸ்தானியரைத் தத்தமது நாடுகளுக்கு கொண்டு செல்ல தலிபான்களிடம் அனுமதி பெற்ற இவ்விரு நாடுகளும் பலரைத் தமது நாடுகளுக்குக் கொண்டு சென்றாலும் விடுபட்டுப் போன பலரின் கதை அம்போ என ஆகி விட்டது.
ஆப்கானிஸ்தான் ஒரு மாபெரும் பஞ்சத்தில் உழல்கிறது என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கைகள் கூறுகின்றன. 20221இன் ஒரு மிகப்பெரிய இடரினை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தித்துள்ளனர் என்பதுவே உண்மை.
என் தாய்நாடான சிறீலங்கா மாபெரும் பொருளாதாரச் சிக்கலுக்குள் தன்னை சிக்க விட்டுள்ளது. அரசியல் சூதாட்டக்களத்தில் பகடைக்காயாக இன்று உருட்டப்பட்டுக் கொன்டிருக்கின்றது. தமது எதிர்காலத்தை அச்ச உணர்வுடன் அந்நாட்டு மக்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கான தீர்வை 2022வது கொண்டு வருமா? என்று போர்ச்சூழலில் இருந்து வெளிவந்தும் இன்னும் வாழ்வாதார அடிப்படை உரிமைகளுக்காக ஏங்கும் ஈழத்தமிழ் உறவுகள் எதிர்பார்த்தபடி காத்திருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து கொண்டிருந்த இந்தியாவுக்கு கோவிட்டின் வரவு சில சிக்கல்களைத் தோற்றுவித்தும் அவற்றிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் ௹தென்படுகின்றன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. டெல்டா எனும் கொரோனாவின் தாக்கத்தினை அதிக அளவில் எதிர்கொண்ட இந்தியா அந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒமிக்குரோனின் தாக்கத்தினை மட்டுப்படுத்துமா? எனும் கேள்விக்கு 2022 இன் ஆரம்ப மாதங்கள் விடையளிக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனாவின் ஆரம்ப நிலைகளிலேயே தமது எல்லைகளை முற்றாக அடைத்து விட்ட அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மற்றைய நாடுகளின் அளவுக்கு பாதிக்கப் படவில்லை என்பதுவே உண்மை. ஏறத்தாழ இரண்டு வருடங்களின் பின்னால் தமது எல்லைகளை அவுஸ்திரேலியப் பிரஜைகளுக்கும், நியூசிலாந்துப் பிரஜைகளுக்கும் திறந்து விட்ட அவுஸ்திரேலியா ஒமிக்குரோனின் வரவினை எவ்வகையில் எதிர்கொள்ளப் போகிறது? என்பதற்கும் விடை 2022 இலேயே கிடைக்கும்.
கோவிட்டின் தாக்கம் ஒருபுறமிருக்க குளோபல் வோமிங் எனும் உலக வெப்பமயப்படல் எனும் தாக்கத்தினால் காலநிலைச் சீரழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளையும் 2021இல் கண்கூடாகப் பார்த்துள்ளோம். வெப்ப மிகுதியால் ஏற்படும் பாரிய தீ விபத்துகள், அசாத்திய மழைப் பெருக்கினால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள்,அசாதரணமான சூறாவளிகள் எனப் பல்வேறு வகையிலான பாதிப்புகள் ஆசியா, ஐரோப்பா, அமேரிக்கா எனும் அனைத்துப் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை.
ஆக மொத்தம் 2021 இல் மனித நடவடிக்கைகளினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும், கொரோனா எனும் கொடிய கிருமியால் ஏற்படும் நோயின் விளைவுகள் என்பன காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை எத்தனையோ கோடி எனலாம். இத்தனை எமக்கு அப்பாற்பட்ட சக்திகளை எதிர்க்க வேண்டிய சூழலில் இருக்கும் எம் மத்தியில் இன்னமும் இனம், மதம், மொழி, நாடு எனும் பாகுபாட்டினை முதன்மைப் படுத்தி பழிஉணர்வுகளால் வீணே சக மனிதர்களை அழிக்கும் செயல்களும் நடந்தேறிக் கொண்டிருப்பது உள்ளத்தை வருத்துகிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒற்றுமை எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்து உலக மக்கள் அனைவரும்
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உலக மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
என்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே எமது எதிர்காலச் சந்ததிக்காக இவ்வுலகைக் காப்பாற்றுவர்களாவோம்.
2022 இத்தகைய ஒரு அற்புதத்தைக் கொண்டு தருமா?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
31.12.2021