நடேசன் அவர்கள் தனது 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:
"போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம். இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ என வாழ்ந்தபோதிலும் ஊர் நினைவுகளை மீட்டுகிறார்கள். அது அவர்களது தவறல்ல . ஊர் நினைவுகள் ஒரு எலும்பில் புகுந்த சன்னம் போன்றது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அடிமை கொள்ளும் போதை போன்றது. விலகுவது சுலபமல்ல. நண்பர் ஷோபாசக்தி நேர்மையாக அதை சமீபத்திய செவ்வியில் ஒப்புக்கொண்டார். பலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்ற லேபலுக்குள் இருந்து பால்ய கால நினைவுகளையும் இலங்கையில் நீடித்த போர் பற்றியும் எழுதுகிறார்கள் . நான்கூட அசோகனின் வைத்தியசாலை , உனையே மயல்கொண்டேன் முதலான அவுஸ்திரேலியாவின் வாழ்வு சார்ந்த நாவல்களை எழுதிவிட்டு மீண்டும் கானல் தேசம் என்ற போரக்கால நாவலை எழுதினேன்."
( மேற்படி கட்டுரையை வாசிக்க: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5960:2020-06-04-08-32-37&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62 )
இதிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஊரின் நினைவுகள் வருவது தவிர்க்கப்பட வேண்டுமென்ற தொனி தென்படுகிறது. இது தவறான கூற்று. எழுத்தாளர் ஒருவர் எங்கிருந்தாலும் எவை பற்றியும் எழுதலாம். எழுத்துகள் என்பவை அவர்கள்தம் உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடுகளே. புகழ்பெற்ற சல்மான் ருஷ்டியின் நாவல்களிலொன்று 'நள்ளிரவுக் குழந்தைகள்' (Midnight Children).அதை அவர் இந்தியாவிலிருந்து எழுதவில்லை. இந்தியாவைக் களமாகக்கொண்ட நாவலது. மேற்கு நாடுகளிலொன்றிலிருந்துதான் எழுதினார். அவரது சிறந்த படைப்புகளிலொன்று அது. புகழ்பெற்ற போலிஷ் அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி தனது புகழ்பெற்ற நாவலான 'நிறமூட்டப்பெற்ற பறவைகள்' (The Painted Birds) நாவலை அமெரிக்காவிலிருந்துதான் எழுதினார். அந்நாவல் அவர் தன் பால்ய பருவத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், நாசிகளின் அக்கிரமங்களிலிருந்து தப்புவதற்காக அலைந்து திரிந்த அனுபவத்தை மையமாகக்கொண்டெழுதப்பட்டது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். படைப்புகளின் சிறப்பென்பது அவை கூறப்படும் களங்களைக்கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.,
ஏன் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கூடத் தனது நாவல்களான '‘ஒரு கோடை விடுமுறை’(1981), 'தில்லையாற்றங்கரையில்' (1987) ஆகிய நாவல்களில் இலங்கையையைத்தான் முக்கிய களமாகக்கொண்டு எழுதியிருக்கின்றார்.
மேற்படி கட்டுரையின் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார் :பெரும்பாலான இலக்கியங்கள் ஏதோ ஒரு அனுபவத்தின் மூலமாகவே பெறப்படுகிறது ". ஆக அனுபவங்களின் மூலமே பெரும்பாலான இலக்கியங்கள் படைக்கப்பட்டால் , புகலிட எழுத்தாளர்களும் தம் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையுல் படைப்புகளைத்தருவதிலென்ன தவறிருக்க முடியும்? மேற்படி கட்டுரையிலுள்ள இன்னுமொரு கூற்றும் என் கவனத்தைக் கவர்ந்தது. அது:
"இந்த நிலையில் நாம் இங்கிலாந்தில் வதியும் இராஜேஸ்வரி பலசுப்பிரமணியத்தை மட்டுமே புலம்பெயர்ந்த இலக்கியத்தைப் படைப்பவராகச் சொல்லமுடியும் . போரின் மணம் வீசாத காலத்தில் இங்கிலாந்து சென்றவர். அங்கு இங்கிலாந்தவர்களோடு வேலைசெய்து , அவர்கள் மத்தியில் வாழ்ந்ததால் அவரது மனதில் அங்குள்ளவை கருப்பொருளாக வருகிறது"
இவ்விதம் அவர் முடிவுக்கு வருவதற்கு முக்கிய காரணம்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏனையவர்களைப்போல் இலங்கையைக் களமாகக்கொண்டு நாவல்களைப்படைக்காமல், புகலிடச் சூழலை மையமாக மட்டுமே வைத்துத் தன் படைப்புகளை வழங்கினார் என்னும் கருத்துப்படத் தன் ஆரம்பக் கருத்துகளைக் கூறியதன் அடிப்படையில்தான். ஆனால் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் ஏனையவர்களைப்போல் தான் விட்டு விலகிய மண்ணை வைத்தும் எழுதியுள்ளதால் மேற்படி கூற்றின் தர்க்கச்சிறப்பு மங்கிவிடுகின்றது.
அடுத்துத தமிழகத்தில் இவரது படைப்புகளை வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் பற்றியது. முனைவர் பிரியாவின் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களை முன்வைத்து எழுதப்பட்ட ஆய்வு பற்றிக் குறிப்பிடுகையில் "எட்டு நாவல்களையும் தமிழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர் பிரியா புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல் என்ற தலைப்பில் இலக்கியத் திறனாய்வுக்கு எடுத்துக்கொண்டு அதன்மூலம் தனது டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார் . இந்த ஆய்வு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உண்மையில் இந்தவிடயம் புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை இந்தியாவிலும் முக்கிய செய்தி ." என்று குறிப்பிடுகின்றார். வேண்டுமானால் இது நடேசனுக்கு முக்கிய செய்தியாகவிருக்கலாம். இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள் பலரின் (புகலிட எழுத்தாளர்களின் படைப்புகளையும் உள்ளடக்கி) படைப்புகளை முன் வைத்துத்தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் பல செய்யப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றியெல்லாம் நடேசன் அறிந்திருக்கவில்லையென்றே தெரிகிறது. எனவே நடேசனின் மேற்படி கூற்றும் வலுவிழந்த கூற்றே.
புகலிட எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் புகலிட அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நடேசன் அவர்கள் விருப்பு வெறுப்பின்றி வாசிக்க முயற்சி செய்ய வேண்டும். அவ்விதம் அவர் வாசித்திருப்பாரானால் இவ்விதமான கூற்றுகளைத் தம் கட்டுரையில் தர்க்கங்களாக முன் வைத்திருக்க மாட்டார். உதாரணத்துக்கு மொன்ரியால் மைக்கலின் ஏழாவது சொர்க்கம் புகலிடச் சூழலை முன் வைத்துப் பின்னப்பட்டது. வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' தமிழ் அகதியொருவனின் நியூயார்க் மாநகர அனுபவங்களையே மையமாகக்கொண்டு புனையப்பட்டது. அது போலவே அவரது 'அமெரிக்கா' சிறு நாவலும் அமெரிக்கத்தடுப்பு முகாம் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டது. வ.ந.கிரிதரனின் சுமார் இருபது சிறுகதைகள் புகலிட அனுபவங்களை மட்டுமே விபரிப்பவை. ஜீவமுரளியின் (ஜேர்மனி) 'லெனின் சின்னத்தம்பி' புகலிட அனுபவங்களை விபரிக்கும் முக்கியமான நாவல்களிலொன்று. இவை போன்று மேலும் பல உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.
இவர்கள் தொடர்ந்தும் இது போன்ற கருத்துகளை மீண்டும் மீண்டும் விதைப்பது ஒருவகையில் கோயபல்ஸ் பிரச்சாரம் போன்றது. பொய்களை மீண்டும் மீண்டும் விதைப்பதால் அவை உண்மைகளாகி விடுவதில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.