-அண்மையில் இலங்கையில் கிறிஸ்த்த ஆலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களில் பலியாகியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை முன்வைத்த எண்ணங்கள் -
ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள் மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்றி
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்கள் இருந்தீர்கள்.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்களிருந்ததைப்போல்
உங்கள் குழந்தைகளும் இருந்தார்கள்.
உங்கள் பிரார்த்தனைகளிலிருந்தன.
உங்கள் கனவுகளெத்தனையோ?
உங்கள் பிரார்த்தனைகள்
உங்கள் குடும்பத்தைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் உறவுகளைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் பிறந்த மண்ணைப்பற்றியதாக இருந்திருக்கக் கூடும். இருந்தும்
உங்களைப்பற்றி, உங்களை இழந்தவர்தம் வலி பற்றி
ஊடகங்களேன் எழுதவில்லை?
ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட
மறைக்கப்பட்ட வலிதனை
உள்ளதுள்ளபடி எடுத்துரைப்போம்.
உங்கள் கனவுகளை
உங்கள் குழந்தைகள் பற்றி, அவர்தம்
உள்ளத்துக் கனவுகளை, உணர்வுகளை நாம்
உலகிற்கெடுத்துரைப்போம். உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.
உதிர்ந்தவர்களே! உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.