மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது: "அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்."
இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான 'நானா'வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் 'நானா' தொடராக வெளியான சமயம் எழுதிய 'எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா' என்னும் கட்டுரையும் முக்கியமானது.
எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: "ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்."
மேலும் "பிளாபரியின் இலக்கியப் போக்குக்கும் ஸோலாவின் இலக்கியப் போக்குக்கும் வித்தியாசம். இருந்தபோதிலும் பிளாபரி பிளாபரி ஸோலாவின் அகண்டாகாரமான இலக்கிய வளத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்குப் பிடிக்காத அம்சம் ஸோலாவின் எல்லை மீறிய - சில சமயங்களில் அருவருப்பூட்டும் யதார்த்தவாதமேயாகும். பிளாபரி ஸோலாவைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்." என்றும் கூறுவார்.
இவற்றிலிருந்து இயற்கைவாதம் என்றால் தீவிர யதார்த்தவாதம் என்று முடிவு செய்யலாம். இயற்கைவாதம் , யதார்த்தவாதம் இரண்டுமே மானுட வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்திரிப்பவை. இரண்டுமே கற்பனாவாதப்படைப்புகளுக்கு எதிராகத் தோன்றிய இலக்கிய வடிவங்கள். இவற்றில் இயற்கைவாதம் இயற்கை, அதன் விதிகள், பரம்பரை, நிலவும் இயற்கைச் சூழல் ஆகியவை மானுட வாழ்வை நிர்ணயிக்கும் கூறுகள் என்பதை அக்கோட்பாட்டின் அடிப்படைகளாகக் கொள்பவை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அதன் சிக்கல்களை , கோரங்களை அப்படியே எடுத்துரைப்பவை. உண்மையில் இயற்கைவாதம் யதார்த்தவாதத்தின் தீவிர வடிவமே.
இந்நிலையில் முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லோரும் யதார்த்தவாதிகள் அடிப்படையில். மக்களுக்காக இலக்கியம் படைத்த அ.ந.கந்தசாமியை மக்களுக்காக இலக்கியம் படைத்த எமிலி ஸோலாவின் படைப்புகள் கவர்ந்ததில் ஆச்சரியமென்னவிருக்கமுடியும்?
மேற்படி மு.தளையசிங்கத்தின் கூற்றிலுள்ள 'சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல' என்னும் கருத்து தர்க்கச்சிறப்பற்ற கருத்து. ஏன்? எமிலி ஸோலா வாழ்ந்த காலகட்டம் 1840-1902. ஆனால் சோஸலிச யதார்த்தம் என்னும் கோட்பாடு உருவான காலகட்டம் ருஷ்யப் புரட்சிக்குப் பிற்பட்ட ஸ்டாலினின் ஆட்சிக் காலகட்டம். எதற்காக சோஸலிச யதார்த்தவாதம் உருவானது என்பது பற்றிக் குறிப்பிடுகையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் 'மார்க்சிய இலக்கியக் கொள்கையின் மேனாட்டு நிலைநின்ற வளர்ச்சி' என்னும் கட்டுரையில் ('இலக்கியமும், கருத்துநிலையும்' என்னும் பேராசிரியரின் நூலிலுள்ள கட்டுரை) பினவருமாறு குறிப்பிடுவார்:
"உண்மையில் புரட்சியின் பின்னர் புரட்சிகர அரசு எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கத்தக்கதான ஒருவகை புரட்சிகர எழுத்து அவசியமாயிற்று. இதற்கு என்ன பெயர் சூட்டுவதென்பது பற்றிப் பலத்த வாதவிவாதம் நடைபெற்றதாக அறிகிறோம். இந்தப்பின்புலத்தில்தான் சோஷலிச யதார்த்தவாதம் என்பது சோவியத் கட்சியின் கொள்கையாயிற்று. (எனவே சோஷலிஸ்ட் றியலிசம் என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் தோன்றியதென்பதும் அதே வரலாற்றுச் சூழல் எல்லா இடங்களிலும் இருந்திருக்க முடியாதென்பதும் உண்மையாகும்.)"
ஆக ஸோலாவின் காலத்தில் இல்லாத சோஸலிச யதார்த்தக் கோட்பாட்டினை எவ்விதம் அவர் அறிந்திருக்க முடியும்? அல்லது பின்பற்றியிருக்க முடியும்? இந்நிலையில் ஸோலா சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல என்னும் தர்க்கமே தேவையற்றதொன்று.
மு.தளையசிங்கம் சிறந்த சிந்தனாவாதிகளிலொருவர். இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது பிரபஞ்சயதார்த்தவாதம் என்னும் சிந்தனைப்போக்கு பற்றிய அவரது எழுத்துகள் முக்கியமானவை. அதே சமயம் முற்போக்கு எழுத்தாளர்களை எதிர்க்கின்றோம் என்னும்பேரில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டம் தட்டி, தாழ்த்தப்பட்ட சமூகங்களிலிருந்து உருவான எழுத்தாளர்களின் எழுத்துகளை நையாண்டி செய்து, காழ்ப்புணர்வுடன், எழுதப்பட்ட அவரது 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் நூலானது அவரது இலக்கிய வாழ்விலோரு களங்கம். முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் நிலவிய குறைபாடுகளை அவர் தர்க்கரீதியாகச் சுட்டிக்காட்டியிருந்தால் அந்நூல் தமிழ் இலக்கிய உலகில் முக்கியதோரிடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் அதற்குப்பதிலாக அவர் அந்நூலில்பாவித்த மொழியும், எழுத்தாளர்களின் பின்னணியைக்கீழ்த்தரமாக எடுத்துரைத்து அவர்களது படைப்புகளைத் தாக்கியதும் அந்நூலின் மிகப்பலவீனமான அம்சங்கள். அந்நூலைப்பற்றிப் பின்னொரு சமயம் விரிவாக எழுதும் எண்ணமுண்டு.
முகநூலில் மேற்படி பதிவுக்கான எதிர்வினைகள் சில:
Pena Manoharan : தேடி வாசிக்கத் தோன்றுகிறது.பதிப்பக முகவரி...வருடம் தாருங்கள்.எங்கே கிடைக்கும் என்பதையும்...வாழ்த்துகள் வையைக் கரையிலிருந்து...
Giritharan Navaratnam : 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலை 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/01/01/01.htm
Vickneaswaran Sk: எமிலி ஷோலாவை வெறுமனே இயற்கை வாதியென்று மதிப்பிடும் மு.த வின் கருத்து பொருத்தமானதல்ல என்பதே எனது கருத்தும் கூட. தமிழில் சுரங்கம் என்ற பெயரில் மொழிபெயர்க்கபட்டு வெளிவந்த சுரங்கத் தொழிலாளர்கள் பற்றிய அவரது நாவல் மு.தவின் இந்தக் கருத்தை மறுக்க போதுமானது என்பது எனது கருத்து. ஆயினும் அவரது ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி முக்கிய ஒரு திருப்புமுனைக் காலம் பற்றிய ஒரு கவனத்துக்குரிய பதிவு. மு.த வின் நிலைப்பாடு சார்ந்த கறாரான விமர்சனமான அது பல விடயங்ங்களைப் பதிவு செய்கிறது. அரசியலிலிருந்து விலகி தனிப்பட்ட முறையிலான தாக்குதலை தொடுக்கும் எழுத்து முறைமை அன்றைய காலத்து எழுத்துக்களில் - இதற்கு க.கை யும் விதிவிலக்கல்ல.- காணப்பட்டது ஒரு வகையில் ஏமாற்றம் தருவதே!. ஆயினும் இவைதான் இன்று எமக்கான வரலாற்று ஆவணங்களாகவும் உள்ளன.எழுதுங்கள் கிரி.
Jeyaruban Mike Philip : Vickneaswaran Sk விளாமிடிர் நபக்கோவுக்கும் எமிலி ஷோலாவுக்குமிடையே எங்கோ மு.த. விழுந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். லொலிடாவையொட்டி அவர் எழுதிய சிறுகதையில் இதைக்காணக்கூடியதாகவே இருந்தது.
Giritharan Navaratnam: //இயற்கை வாதியென்று மதிப்பிடும் மு.த வின் கருத்து பொருத்தமானதல்ல என்பதே எனது கருத்தும் கூட. // விக்கி, இயற்கைவாதம் என்பதே யதார்த்தவாதத்தின் மிகத்தீவிரமான வடிவம்தானே. தீவிர யதார்த்தவாதம் என்றும் கூறலாம். இயற்கைவாதிகள் யதார்த்தவாதிகளைவிட இன்னும் நுணுக்கம…See More
Giritharan Navaratnam: //ஆயினும் அவரது ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி முக்கிய ஒரு திருப்புமுனைக் காலம் பற்றிய ஒரு கவனத்துக்குரிய பதிவு.// விக்கி, கவனத்துக்குரிய பதிவாக இருந்திருக்கும் அப்பதிவில் சான்றுகளுடன் மு.த தர்க்கித்திருந்தால் என்பதென் கருத்து. பொதுவாக நண்பர்களுடன் உரையாடுவதைப்போல், முற்போக்கு எழுத்தாளர்களின் மேலுள்ள தன் ஆத்திரத்தை , எண்ணத்திலுள்ளவாறு கூறியிருக்கின்றார் மு.த. மேலும் முற்போக்கு இலக்கியத்தில் சமூக, அடக்குமுறைகளுக்குள்ளாகிய சமூகங்களிலிருந்து எழுந்த எழுத்துகளையெல்லாம் அவர்கள்தம் சமூகப்பின்னணி காரணமாக நையாண்டி செய்யும் தொனியில் மு.த தர்க்கம் செய்வதை என்னால் ஒருபோதுமே ஏற்கமுடியாது. பிரபஞ்ச யதார்த்தம் பற்றிச் சிந்தித்து மானுட விடுதலை பற்றிச் சிந்தித்த ஒருவர் இவ்விதம் நையாண்டி செய்ததை என்னால் ஏற்க முடியாது. இதுபற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'டொராண்டோ' வருகையின்போது 'டொராண்'டோப் பல்கலைக்கழக மண்டபத்தில் அமரர் கரவெட்டி சிவம் (தேடகம்) , வ.ந.கிரிதரன் ஆகியோருடன் மேலும் பலர் பங்குபற்றிய ஆக்ரோசாமம் மிக்க கலந்துரையாடலை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கின்றேன். மு.த.வின் இந்நூல் பற்றி 'தாயகம்' (கனடா) சஞ்சிகையிலும் அக்காலகட்டத்தில் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றேன்.
Giritharan Navaratnam: //இவைதான் இன்று எமக்கான வரலாற்று ஆவணங்களாகவும் உள்ளன.// விக்கி, இதனை விடத் தர்க்கச்சிறப்புள்ள வரலாற்று ஆவணங்கள் பல உள்ளனவே. உதாரணத்துக்கு 'இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் இலக்கியம்'
Giritharan Navaratnam: //ஆயினும் இவைதான் இன்று எமக்கான வரலாற்று ஆவணங்களாகவும் உள்ளன.// விக்கி, வரலாற்று ஆவணங்களென்றால் அவை காய்தல் , உவத்தலின்றி வரலாற்றைப்பதிவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு மு.த.வின் மேற்படி நூலிலுள்ள பின்வரும் கூற்றினைக் கவனிக்க: "முற்போக்கு'க் கூட்டுக்கு 'முற்போக்கு இலக்கியம், 'சோஷலிஸ யதார்த்தம்' 'தேசிய இலக்கியம்' என்பவை எப்படிப்பட்டவை என்பது செவ்வையாகத் தெரியாது." இவ்விதம் பொதுவாகக் கூறிவிட்டுச் சென்று விடமுடியாது. ஏன் முற்போக்குக் கூட்டுக்கு இவையெல்லாம் தெரியவில்லை என்பது பற்றி ஆதாரபூர்வமாக எடுத்துரைக்க வேண்டும். ஆனால் உண்மை இதற்கு எதிர்மாறானது. தேசிய இலக்கியம் பற்றி, மரபு பற்றியெல்லாம் விரிவான விவாதங்கள் மரகதம் சஞ்சிகையில் , தினகரன் பத்திரிகையில் அறுபதுகளின் ஆரம்பத்தில், ஐம்பதுகளின் பிற்பகுதியில் முற்போக்குக் கூட்டணியினரால் நடாத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் மு.த வாசிக்கவில்லையா? நிச்சயம் வாசித்திருப்பார். ஆனால் தன் நிலைக்குக்கு அவை எதிராகவிருக்கும் என்பதால் சாமர்த்தியமாக அவற்றைத் தவிர்த்துவிட்டு, பொதுவாக முற்போக்குக் கூட்டணிக்கு இவை பற்றி எதுவும் தெரியாது என்று கூறிச்செல்கின்றார். மு.த.வின் ஆத்திரமெல்லாம் கைலாசபதி முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பதும், முற்போக்கு இலக்கியவாதிகளைத் தூக்கிப்பிடிப்பதும்தாம். அதனையெதிர்ப்பதற்காகத்தான் இவ்விதம் அவர் எழுதியிருக்கின்றார் என்று கருதுகின்றேன். அதனால்தான் மேற்படி நூல் பாரபட்சமாக முற்போக்குக் கூட்டணியைத்தாக்குகின்றது என்பது என் கருத்து. இது பானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோன்றதோர் எடுத்துக்காட்டே.
K S Sivakumaran : The difference between Naturalism and Realism is that the former is not selective in depicting reality. whereas the latter is selective in depicting the reality.In my understanding Nana falls under Naturalism because it describes in total everything as it was..But in his Germinal this tendency wasn't there Selective realism came to the fore..Espo's Thee was modeled on Nana one could say as far as the description of seeing the genitals of the female character.
Vickneaswaran Sk : K S Sivakumaran I agree with u dear K.S. that is y i feel he cannot be described as a naturalist.
Giritharan Navaratnam : //the former is not selective in depicting reality// Dear Sir, thanks for your feedback on this subject. That's why it's considered as the extreme form of Realism. It takes everything into account. realism represents real life, but naturalism represents life in a more scientific as well as clinical manner than realism.
K S Sivakumaran : Well said dear VNG
Sivanesaselvan Arumugam: A very good critical analysis
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.