எம் மாணவப்பருவத்தில் எமது பிரதானமான பொழுதுபோக்குகள்: திரைப்படங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் & பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிகள் இவையே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் ஒலிபரப்புச் சேவை இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற சேவை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தமிழ்ச் சேவை என்றதும் உடனடியாக எனக்கு ஞாபகத்தில் வரும் பெயர்கள் அப்துல் ஹமீட், 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி புகழ்' ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, ராஜகுருசேனாதிபதி கனகரத்தின்ம், சற்சொருபவதி நாதன், வி.என்,மதியழகன், சில்லையூர் செல்வராசன், கமலா தம்பிராஜா...இவர்களே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவையில் எல்லா நிகழ்ச்சிகளையும் நான் கேட்பவனல்லன். அவ்வப்போது வயதுக்கேற்ப கேட்கும் நிகழ்ச்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு வயதில் பொங்கும் பூம்புனல் கேட்பது பிடித்திருந்தது. இன்னுமொரு சமயம் 'தணியாத தாகம்' போன்ற தொடர் நாடகங்கள், 'இசையும் கதையும்' போன்ற இசையுடன் கூடிய கதைகள், இன்னுமொரு பருவத்தில்'நெஞ்சை ஈர்க்கும் 'நெஞ்சில் நிறைந்தவை' என விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளின் தன்மையினை எம் வயதும் , அவ்வயதுக்குரிய உளவியலும் நிர்ணயித்தன. எனக்கு அக்காலத்தில் ராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் மிகவும் பிடிக்கும். சீரான வேகத்தில் நிதானத்துடன் சொற்களை வழங்கும் குரல் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்துடையது. இவ்விதமாக முறையான பயிற்சியும், அனுபவமும் மிக்க அறிவிப்பாளர்கள் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கினார்கள்; தமிழ்த்திரைப்படப்பாடல்களின் ஆவணச்சுரங்கங்களாக விளங்கினார்கள்; எப்பாடலுக்கும் உரிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு அவற்றை விபரிப்பதில் மிகவும் வல்லவர்களாகவிருந்தார்கள்.
நிகழ்ச்சிகள் தவறுகள் அதிகமற்று, சிறப்பாக அமைந்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று இலங்கை ஒலிபரப்ப்புக் கூட்டுத்தாபனமென்னும் அரச கட்டமைப்பு. ஆனால் புகலிடச் சூழலிலோ இவ்விதமான கட்டமைப்புகள் எதுவுமற்றுள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களது பொருளீட்டுவதற்குரிய வர்த்தக முயற்சிகளாகவே இங்கு இயங்கும் வானொலிகளிருக்கின்றன. இதனால் ஒலி/ஒளி பரப்புத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஈடுபடுகின்றார்களே தவிர. இவர்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து, சீரமைப்பதற்குரிய முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல தவறுகளை இவர்கள் புரிகின்றார்கள். உதாரணத்துக்கு ஒன்று: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒருவர் ஆர்வமுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் நடத்துபவருக்கோ அந்நிகழ்ச்சியினை விரைவாக முடித்து விட வேண்டுமென்று எண்ணம் போலும். கலந்து கொள்பவருடன் இவரால் ஆனந்தமாக , உற்சாகமாகத் தொடர்ந்தும் உரையாட முடியாமலுள்ளது. அவரது குரலிலும் அதற்கான சலிப்பு தென்படுகின்றது. கேட்கின்றவர்களுக்கும் அந்நிகழ்ச்சியினை நடத்துகிறவரின் சலிப்பும் தெரிகின்றது. இதனால் அவர்களுக்கும் சலிப்பு ஏற்படுகின்றது. இது போன்ற சலிப்புகளையெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் அடைந்ததில்லை.
இக்குறையினை நீக்க இத்துறையில் மிகுந்த அனுபவமுள்ள முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களும் , ஊடகவியலாளர்களுமான வி.என்.மதியழகன், பி.விக்கினேஸ்வரன் போன்றவர்கள் இத்துறையில் ஒரு கல்வி நிலையத்தை ஆரம்பிக்கலாம். இங்குள்ள வானொலி, தொலைக்காட்சி அமைப்புகள் இத்துறையில் வகுப்புகளை எடுத்துப் பயிற்சி உள்ளவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தலாம் என்னும் நிலைப்பாட்டினை எடுக்கலாம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் பணியாற்ற முன்னர், எவ்விதம் பணியாற்ற வேண்டும் என்பது பற்றிய பயிற்சியை எடுத்திருப்பார்கள். அதன் மூலம் தற்போது விடும் தவறுகளையெல்லாம் அவர்கள் விடாது தவிர்த்துக்கொள்வார்கள். நிகழ்ச்சிகளும் தரமானதாக, நீண்ட காலம் கேட்பவர்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.
அண்மையில் ஊடகவியலாளரும், முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக விளங்கிய வி.என். மதியழகன் அவர்கள் தன் அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய 'சொல்லும் செய்திகள்' என்னும் நூலைப்பற்றிய அறிமுகமொன்றினை பொதிகை தொலைக்காட்சியின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்தேன். இந்நூலினை இதுவரையில் நான் வாசிக்கவில்லை. ஆனால் Dr. சீ.ஆர். மஞ்சுளா வி.என்.மதியழகனுடன் நடாத்திய இந் நூல் நயம் நிகழ்ச்சியில் இந்நூலைப்பற்றி அறிவதுடன் , வானொலிக் கலைஞர்களுக்கு, குறிப்பாகச் செய்தித் தயாரிப்பாளர்களுக்கு, அறிவிப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதி, ஆளுமை பற்றிப் பல்வேறு விடயங்களை அறிய முடிகின்றது. இந்நேர்காணலில் மதியழகன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துப் பணி அனுபவங்களை, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழர்கள் நடாத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளில் ஊடகவியலாளர்கள் அடையும் அனுபவங்களையும் ஒப்பிட்டுப் பதில் பகர்ந்திருப்பார்.
மதியழகனின் மேற்படி நேர்காணலைக் கேட்டபோது , கண்ட போது ஏற்பட்ட எண்ணங்களே இப்பதிவு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.