தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்
மகிந்தாவும் அவரது அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கும் தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவரைக் குறைகூறுகிறார்கள். அவர் அப்படிச் செய்வதையிட்டு யார் முறையிடுகிறார்கள்? அவர் எதைச் செய்வேன் என்று கூறினாரோ அதையே அவர் செய்கிறார். அவர் என்ன சொன்னார்? முதலாவதாக 13 ஆவது திருத்த சட்டத்தில் கணிசமான மாற்றங்களைச் செய்யாவிட்டால் அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றார். அவர் 13 ஏ அல்லது 13 ஏ + இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்வில் எல்எல்ஆர்சி அறிக்கையில் கூறிய பரிந்துரைகள் அல்லது பேராசிரியர் திஸ்சா விதாரண குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டவை உள்ளடக்கப் படவேண்டும் என்றார். இரண்டாவதாக அய்க்கிய இலங்கைக்குள் (தமிழர்களுக்கு) சுயநிருணய உரிமை வேண்டும் என்றார். அது கொடுக்கப் படாவிட்டால் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்குகளிலும் அயல்நாட்டு உதவியோடு அல்லது உதவி இல்லாமல் முழுமையான சுயநிருணய உரிமைக்குப் போராடுவேன் என்றார். மூன்றாவதாக பிரபாகரன் ஒரு தமிழ் மாவீரன் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் என்றார். முடிவாக மகிந்தா நடத்திய போர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றார்.