வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனங்களின் யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தாக்குதலையும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: 'ஊடகத்துறையை உலகத்தின் “மூன்றாவது கண்” என்றும், ஊடகவியலாளர்களை “ஜனநாயகத்தின் காவல் நாய்கள்” என்றும் உலக கனவான்கள் விளிக்கின்றனர். ஜனநாயக மறுப்பு சம்பவங்களின் போதும், ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களின் போதும், அதை எதிர்த்து நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியின் சிறப்பு கருதி இத்தகைய கௌரவத்தை வழங்கி உலகம் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கின்றது. சிறீலங்கா போன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத ஆபத்தான நாடுகளில் ஊடகவியலாளர்கள் ஆட்சியாளர்களோடும், அதிகாரத்தோடும் போராடிக்கொண்டு மிகவும் நெருக்கடியான சூழலிலும் செய்தியறிக்கைகளை இடுவதால் தான், ஜனநாயகம் என்ற சொல்லை இன்றும் கூட நம்மால் உச்சரிக்க முடிந்திருக்கின்றது.
ஆனால் இந்த அரசும், இந்த அரசுக்குள் இருப்பவர்களும், இந்த அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உண்மையான ஜனநாயக விரும்பிகள் அல்லர் என்பதையே யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தாக்குதலும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலும் கோடிட்டு காட்டுகின்றன.
ஜனநாயகத்தை முறையாக கோரும் ஊடகங்கள் மீதும், அந்த ஊடக நிறுவனங்களின் ஊடகப்பணியாளர்கள் மீதும் அரச பயங்கரவாதத்தை ஏவி விடும் கலாசாரம் காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறிய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.
ஊடகங்கள் தம் அநாகரிக செயல்களை தாறுமாறாக ஆதரிக்கவும், தம் அருவருப்பான நடவடிக்கைகளுக்கு ஒத்தூதவும் வேண்டும் என்று சிறீலங்கா ஆட்சியாளர்கள் அவாப்படுகின்றனர். தம்மை திருப்தி படுத்தவும், மகிழ்ச்சி படுத்தவும் தயாரில்லாத, தம்மை துதிபாடவும், வழிபடவும் தயாரில்லாத ஊடகங்களின் மூச்சை நிறுத்தி விட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.
அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழினத்தின் உரிமைப்போராட்டத்துக்கு சார்பாகவும், தமிழினத்தின் மீது ஏவி விடப்பட்ட அரச வன்முறை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நியாயம் கேட்டும் குரல் எழுப்பிய ஊடக நிறுவனங்களின் மீதான அனைத்து தாக்குதல்களும், ஊடகவியலாளர்கள் படுகொலைகளும் சிறீலங்கா அரசால் ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தம்மால் சத்துணவூட்டி வளர்க்கப்படும் குண்டர்களையும், காடையர்களையும் ஏவி விட்டே நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் இன்றுவரை சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் ஆளும் ஆட்சி அதிகாரம் தடுப்பதாகவும், தம்மை எதிர்ப்பவர்களுக்கு ஒரு நீதியும், தம் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு ஒரு நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று அதே ஆளும் ஆட்சி அதிகாரம் விரும்புவதாகவும் வெளிப்படையாகவே தெரிய வருகின்றது. இத்தகைய சட்டவாட்சி நடைமுறை பிரயோகத்தை நாம் பலமாகவே எதிர்க்கின்றோம்.
நம் பெரு மதிப்புக்குரிய மன்னார் மாவட்ட ஆண்டகையை மிரட்டிய, அச்சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சரின் தம்பி ஒருவர் மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் காணி அபகரிப்புகள் ஆக்கிரமிப்புகள் பற்றி எழுதிய புதியவன் பத்திரிகையின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பத்திரிகை அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம். பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் நல்லாட்சிக்கு தடையான, ஜனநாயகத்துக்கு விரோதமான இத்தகைய பாசிசவாத செயல்களையும், அழுத்தங்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன். பாரபட்சமற்ற பக்கச்சார்பற்ற நீதி விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
சிறீலங்கா அரசுக்குள் இருக்கின்ற கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றுவதோடு, ஊடக மாண்பு காக்கப்பட நாம் என்றும் ஊடகவியலாளர்களின் நலன்கள் தொடர்பில் அக்கறையோடும் கவனிப்போடும் செயல்படுவோம் என்றும் உறுதி கூறுகின்றேன்.' என்று அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.