வாஷிங்டன் போஸ்ட்: சிறீலங்கா இராணுவத்தின் கொடுமைகள் போரினால் ஏற்பட்ட புண்ணில் வேலை நுழைப்பதாகத் தமிழ்ப் பெண்கள் சொல்கிறார்கள்
- தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post, July 06, 2012) யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில் "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை, 'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல் போன்ற பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார். அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. -
சிறீலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் போது பல்லாயிரம் பொதுமக்கள் இருபக்கச் சூட்டில் அகப்பட்டு பயப்பீதியில் உறைந்து போனார்கள். "பசி காரணமாகக் குழந்தைகள் அழுதன. அப்ப யாரோ தேங்காய்ப்பால் கஞ்சி கொடுப்பதாகச் சொன்னார்கள். உடனே பதுங்கு குழியில் ஒளித்திருந்த நாம் வெளியே வந்தோம்" என வட மாவட்டம் துணுக்காயைச் சேர்ந்த 35 அகவை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார். "அப்போது இராணுவம் அந்த இடத்தில் குண்டு போட்டது. எனது குழந்தை உட்படப் பெரும்பாலான குழந்தைகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்."