ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது. சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது. 1988 இல் வெளிவந்த “நீர்வளையங்கள்” என்ற தொகுப்பினூடாக இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பிறகு 2010 இல் தான் அவருடை ய இரண்டாவது தொகுதியான “சிதைந்துபோன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும்“ வெளிவந்தது. இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம்போலவே தொகுக்கப்பட்டுள்ளதை படிப்பவர் உணர்வர். அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. விமர்சனத்தின் புதிய போக்குகளை அவை இனங்காட்டத்தக்கவை. கவிதைகளோடு சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிவற்றிலும் தன் ஆளுமையைச் செலுத்திவந்துள்ளார். ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலைநிறுத்தியுள்ளளது.
கவிஞர் சண்முகம் சிவலிங்கம் பற்றி மூன்று ஞாபகங்கள் என்னிடம் உள்ளன.
அன்னாரை ஒரே ஒருமுறைதான் நேரில் காணக்கிடைத்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ‘தூண்டி’ என்ற இலக்கிய இதழ் 2003 இல் யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் 3 நாள் ஆய்வரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கவிதை தொடர்பான அரங்கில் சண்முகம் சிவலிங்கம் வ.ஐ.ச ஜெயபாலன், ஒட்டமாவடி அறபாத், மு. பொ ஆகியோரின் கவிதைகள் பற்றி உரையாற்றினார். அவரை நேரில் கண்டிருக்கிறேன். ஆனால் உரை கேட்கக் கிடைக்கவில்லை.
மற்றும் ஒரு சந்தர்ப்பம் நான் அப்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது (1999 ற்கு முன்னர்) “நாட்டார் இசைமாலை” என்ற நிகழ்வினை யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தினூடாக பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் வழிகாட்டலில் நண்பர்களுடன் பயின்று அதனை பல இடங்களில் நிகழ்த்தினோம். முக்கியமாக ஆக்காண்டிப்பாடல், பண்டிப்பள்ளுப்பாடல், முசுறுப்பாடல், தாலாட்டு முதல் வேடிக்கைப்பாடல் வரையான பலவகையான நாட்டார்பாடல்கள் அங்கு நிகழ்த்தப்பட்டன. ஆனால் ஆக்காண்டிப்பாடலை தனிக்குரலில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் நண்பி சுகன்யா தனியாக முதலில் பாட; நாங்கள் கோரஷாக பாடுவோம். அப்போது அந்தப் பாடலில் இழைந்து வரும் சோகம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. அந்த நேரங்களில் எல்லாம் சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டிப்பாடல் பற்றியும் அறிந்திருந்தோம். அதன்பிறகு நான் பணியாற்றிய பாடசாலைகளில் வரும் கலை நிகழ்வுகளில் அந்தப்பாடலை மாணவர்களுக்கு பழக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் பெயரும் எப்படியோ வந்துவிடும்.
இன்னொரு சந்தர்ப்பம் 2008 இல் எனது “மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் “ தொகுப்பு வெளிவரமுன்னர் அ.யேசுராசா அவர்களிடம் கவிதைகளில் இருக்கும் முரண்கள், தவறுகள், திருத்தங்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது "முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்" என்ற எனது கவிதையை சிலாகித்து சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை ஒன்றுடன் தொடர்புபடுத்தி உரையாடினார். அது எனக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்திருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிக்காக நாங்கள் கவிதைகளை அறிந்து கொண்ட சந்தர்ப்பங்கள்; மேலும் ஈடுபாட்டோடு பல கவிஞர்களைத் தேடிப்படிக்க வைத்தன. அப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியவராக சண்முகம் சிவலிங்கம் எங்கள் முன் இருந்தார்.
இந்த மூன்று ஞாபகங்களும் தவிர்க்கமுடியாமல் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் மறைவின்போது முன்னால் வந்துவிடுகின்றன. ஈழத்துக் கவிதை வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக என்றும் நிலைத்திருக்கும் பெருமைக்குரியவர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம். அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்
நான் மேலே குறிப்பிட்ட இரண்டு கவிதைகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1.
இன்று இல்லெங்கிலும் நாளை
-சண்முகம் சிவலிங்கம் -
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக.
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.
அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.
2.
ஆக்காண்டி ஆக்காண்டி
-சண்முகம் சிவலிங்கம் -
”ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.
கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.
கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.
கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.
கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.
கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.
நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.
சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.
வீதி சமைத்தேன்.
விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.
ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.
கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.
பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.
கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.
வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.
சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.
"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.