Sidebar

பதிவுகளில் தேடுக!

பதிவுகள் -Off Canavas

 அறிமுகம்

ஆதவன் கதிரேசபிள்ளை  சு. குணேஸ்வரன் ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர்.  ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.     80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.  ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில்  ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய  ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.

ஆரம்பகால நாவல்கள்

   90கள் வரை வெளிவந்த புலம்பெயர்ந்தோரின் நாவல்களை முதற்காலகட்ட நாவல்களாகக் கருதலாம். இவ்வகையில் எமது கவனத்திற்கு உட்படுபவர்களில் ஆதவனும் பார்த்திபனும் முக்கியமானவர்கள்.

   1983 இல் இருந்தே ஈழத்தமிழர்கள் அதிகளவில் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர். எனினும் அங்கிருந்து 80 களின் நடுப்பகுதியின் பின்னரே சஞ்சிகைகளும் நூல்களும்  வெளிவரத் தொடங்குகின்றன. அவ்வாறு வெளிவந்த சஞ்சிகைகளில் கவிதை, சிறுகதை, கட்டுரைகளோடு தொடர்கதைகளும் வெளிவந்தன. அதிகமான இதழ்களில் இவற்றை அவதானிக்க முடிகிறது.

   தொடர்கதையாக வெளிவந்த ‘மண்மனம்’ இதுவரை நூலுருப் பெறவில்லை. நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகள்1 சஞ்சிகையில் 32 அத்தியாயங்களாக 1989 இல் இருந்து 1995 வரை வெளிவந்து முற்றுப்பெற்றது. 

   பார்த்திபனின்2 முதல் நாவல் “வித்தியாசப்படும் வித்தியாசங்கள்” 1986 இல் வருகிறது. இதுதான் 80 களில் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து வெளிவந்த முதல் நாவலாக உள்ளது. பார்த்திபனின் ஏனைய மூன்று நாவல்களும் 1990 ற்குள் வந்துவிடுகின்றன. மேலும் ‘தூண்டில்’ சஞ்சிகையில் வெளிவந்து முற்றுப்பெறாத ‘கனவை மிதித்தவன்’ தொடர்கதையும் இக்காலப்பகுதியிலேயே வருகிறது. அதேபோல் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் “தில்லையாற்றங்கரை” 1987 இல் வருகிறது.

   மேற்குறிப்பிட்ட படைப்புக்கள் அதிகமும் தாயகநினைவு சார்ந்தனவாகவே அமைந்துள்ளன என்பது கவனத்திற் கொள்ளவேண்டியதாகும். இந்த அடிப்படையில் க. ஆதவனின் ‘மண்மனம்’ என்ற நாவலை நோக்கலாம்.

மண்மனம் - கதையும் கதைப்பண்பும்

   ‘மண்மனம்’ அடிப்படையில் தாயக நினைவு தொடர்பான ஒரு நாவலாகும். இந்நாவலின் கதையோட்டத்துக்கு ஆதாரசுருதியாக இருப்பது  ஒரு காதற்கதை. ஆனால் அதற்கு ஊடாகச் சொல்லப்படும் விடயங்கள் மிக முக்கியமானவை. 80களின் இறுதிப்பகுதியில் போராளிக் குழுக்களின் உருவாக்கமும் செயற்பாடுகளும்,  அரச படைகளின் அச்சுறுத்தல்கள், கைது, சித்திரவதை, கொல்லப்படுதல் ஆகியன மிக எளிமையாகச்  சம்பவங்களின் ஊடாக இந்நாவலில் சொல்லப்படுகின்றன.

   மண்மனம் நாவலில் பிரதான பாத்திரம் ரகுநாதன். ரகுநாதனின் கதையோடுதான் நாவல் விரிகிறது. ரகுநாதனின் நண்பனாக வரும் ‘சுரேஷ்’ மற்றும் ரகுநாதனின் காதலி சுசீலா ஆகியோர் நாவலின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் பாத்திரங்கள்.

   கொழும்பில் ஒரு தேநீர்க்கடையில் இருந்து “ நீ இந்த உலகத்தில் எதை நம்புகிறாய்” என்ற கேள்வியுடன் நாவல் தொடங்குகிறது. அக்காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காகப் புறப்பட்ட இயக்கங்களில் நீ எந்த இயக்கத்தை நம்புகிறாய் என்பதே சுரேஷை நோக்கிய ரகுநாதனுடைய கேள்வியாகும். இவ்வாறான உரையாடல்களின் ஒரு கட்டத்தில் சுரேஷ் ரகுநாதனை விட்டுப் பிரிந்து விடுகிறான்.

   “என்னடா சுரேஷ் என்னதான் நடந்தது I Don’t understand this, what happened to you?   படபடப்புடன் கேட்டான் ரகு. சுரேஷ் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் ரகு கையை எடு நான் ஒரு இயக்கத்தில இருக்கிறன். அதுக்கு உன்னால உதவமுடியாது. நீ துரோகியாக மாறாதவரைக்கும் உன்னைக் காப்பாற்றிக் கொள்ளு”3

   என்று சுரேஷ், தான் இலட்சியத்தோடு வாழ்வதால் நமது நட்பு அதற்கு இடையூறாக இருந்துவிடும் என்பதால் பிரிந்து விடுகிறான்.

   இந்தப் பிரிவுடன் யாழ்ப்பாணத்துக்கு வேலை மாற்றலாகிச் செல்லும் ரகுநாதன் ஒருபுறமும், இயக்கச் செயற்பாடுகளுடன் சுரேசும் நாவலின் கதையோட்டத்தில் நகர்கின்றனர். ஒரு கட்டத்தில் இயக்கச் செயற்பாடுகளுக்கு ஊடாக அறியப்பட்ட சுரேஷைத் தேடிவரும் இராணுவம் அவனின் தம்பி கணேசானந்தனை லைற்போஸ்ரில் அடித்துக் கோரமாகக் கொன்று போட்டுவிட்டுப் போகிறது.

   தொடரும் கதையோட்டத்தில் ரகுநாதனின் தங்கையை சுரேஷ் காதலிக்கிறான். ஒரு நாள் அவளும் சுரேஷ் இருக்கும் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறாள். பின்னர் ஒரு சம்பவத்தில் சயனைற் கடித்து செத்துவிடுகிறாள். அவளது சாவை இயக்கமும் ஊரும் இலட்சியத்துக்காகச் செத்துப்போனாள் எனக் கொண்டாடுகிறது. இச்சம்பவத்தால் மனமும் உடலும் சோர்ந்துபோகிறான் ரகுநாதன். பின்னர் ஊரில் நடக்கும் சூட்டுச் சம்பவமும் குண்டுவெடிப்பும் கதையில் கூறப்படுகிறது. இதில் ரகுநாதனின் தந்தையும் குண்டுபட்டு இறந்துவிடுகிறார்.

   இவ்வாறான இழப்புக்களுக்கு மத்தியில் மௌனசாமியாகத்திரியும் ரகுநாதன், ஒருமுறை சலூனுக்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவனுக்குக் கற்பித்த ஆசிரியரின் உரையாடலுக்கு ஊடாக திருமணம் செய்யும் விருப்பத்துக்குத் தூண்டப்படுகிறான். அதற்கு ஆதாரமாக அவனது பாடசாலைக் காதல் உயிர்பெறுகிறது. ஆனால் அதற்குள்தான் குழப்பம் ஏற்படுகிறது.

   ரகுநாதன் தனது காதலி சுசீலாவைக் கண்டது, பேசியது, கோயில்திருவிழாச் சந்தர்ப்பத்தில் அவளைத் தனியாகச் சந்தித்தது, அவள் திருமணத்தை மறுத்தது, பின்னர் ரகுநாதன் குடித்துவிட்டு ஊரறிய அவளைக் கேவலமாகப் பேசியது. சுசீலா அவனை வெறுத்து ஒதுக்கி  “கையை விடுடா நாயே!” என்று அவனை வெறுத்தொதுக்கியது எல்லாம் விலாவாரியாகச் சொல்லப்படுகின்றன.

   இறுதியில் தனது காதல் தோற்றுப்போனதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்று சேரும் நேரத்தில் இராணுவம் ரகுநாதனைப் பிடித்துச் சென்று விடுகிறது. ரகுநாதனின் தங்கை இயக்கத்தில் இருந்ததற்காகவும், சுரேசின் நண்பன் என்ற காரணத்திற்காகவும் கொரூரமாகச் சித்திரவதை செய்து செத்துப்போகும் நிலையில் ரகுநாதனை பற்றைக்குள் எறிந்துவிட்டுப் போகிறது. இறுதியில் வைத்தியசாலையில் சுயநினைவில்லாமல் கட்டிலில் கிடக்கும் ரகுநாதனின் உடலைத் தழுவி சுசீலா அழுகின்ற சம்பவத்துடன் நாவல் முற்றுப்பெறுகிறது. 

பாத்திரங்களின் இயல்புநிலை
   நாவலின் பிரதான பாத்திரம் ரகுநாதன். கதை நகர்வுக்கு ஏற்ப சுரேஷ் மற்றும் ரகுநாதனின் காதலி சுசீலா ஆகியோர் அடுத்து முக்கியம் பெறும் பாத்திரங்களாக அமைகின்றன. இம்மூன்று பாத்திரங்களையும் சுற்றியே நாவல் விரிகிறது.

   இந்நாவலில் ரகுநாதன் ஒரு யதார்த்தவாதியாக சித்திரிக்கப்படுகிறான். அதிகம் எந்த விடயத்தையும் துருவி ஆராய்ந்து முடிவெடுப்பவனாகவும் அதிகாரமும் பகட்டும் போலியும் இல்லாத நேர்மையான பாத்திரமாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

   சுரேஷ்  என்ற பாத்திர வார்ப்பு ஆரம்பம் போலவே இறுதிவரையும் மிக அமைதியான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிகம் உரையாடலில் பங்கெடுக்காத பாத்திரம். பொறுமையும் கொள்கைப் பிடிப்பும் முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது.

   சுசீலா ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்கக்கூடிய இயல்புகளுடன் படைக்கப்பட்டுள்ள பாத்திரம். ரகுநாதன் குடித்துவிட்டு வந்து அவளை ஊரறிய கேவலமாகப் பேசியபோது ஆற்றாமையில் எல்லையில் இருந்து அவனுக்காக நீலாம்பரியில் உருகிப் பாடும் சம்பவம் முக்கியமானது.

நாவலில் கவனிக்கத்தக்க அம்சங்கள் சில

   அரச படைகளுக்கும் போராளிகளுக்குமான முரண்பாடுகள் உக்கிரம் அடைகின்ற போதில் மக்கள் மீதான கண்காணிப்பும் சொல்லாமற் சொல்லப்படுகிறது. இங்கு இரண்டு சம்பவங்கள் அக்காலச்சூழலைப் புரிந்துகொள்ளச் சான்றாக இருக்கின்றன.
 
   குடித்துவிட்டுப் பாட்டுப் பாடிக்கொண்டு இரவெல்லாம் ஊரைச் சுற்றித்திரிவதை வழக்கமாகக் கொண்ட சோமன் ஒரு நாள் செத்துப்போய்க் கிடக்கிறான்.

 “சுடலை மடத்துக்கை ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி கிட்டப்போய்ப் பாத்தா சோமனாம். வெறியில கிடக்கிறான் எண்டுதான் முதல் நினைச்சவனாம். பிறகு ஏதோ ஐமிச்சத்தில கூப்பிட்டுப் பாக்கத்தான் பிரேதம் எண்டு தெரிஞ்சுதாம். ஊரெல்லாம் கூடி கடைசியில தற்கொலை எண்டு முடிவெடுத்தது. அதற்கான  Postmortom எல்லாம் சான்றாக அமைஞ்சுது. கொலைகள் கூடிவிட்ட இந்தக் காலத்தில தற்கொலையைப் பற்றி ஆர் நினைக்கப் போகினம். அதிலும் குடிகாரச் சோமன் இருந்தென்ன இல்லாட்டி என்ன? எண்டுறதுதான் பலபேற்றை அபிப்பிராயமும். என்னாலை தாங்க முடியேலாமக் கிடக்கு இவன் ஏன் தற்கொலை செய்தான். எந்த இரகசியத்தைக் காப்பாற்ற - எந்த சயனைட்டைக் கடித்தான்?” 4

   மற்றைய சம்பவம்; சுசீலாவுக்கும் ரகுநாதனுக்குமான காதல் முறிவின் பின்னர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரகுநாதனை எச்சரித்துவிட்டுச் செல்வது.

“எங்கட சுசீலா அக்காவின்ரை பிரச்சினையில தலையிட்டா வெடிதான் வைப்பம் AK47 ஐ ஒருமுறை தட்டிக் காட்டியதாக ரகுநாதன் நினைத்துக் கொண்டான்” 5

   இந்த இரண்டு சம்பவங்களும் ஆழமாக வாசகர் மனதைத் தைத்து விடுகின்றன. குடிகாரச் சோமனின் சாவுக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அது அக்காலகட்ட அரசியல் நிலையை குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் போராளிகள் மக்களின் சாதாரண பிரச்சினைகளிலும் தலையிடுதல் அச்சுறுத்துதல் என்பவற்றுக்கு உதாரணமாக மற்றைய சம்பவம் விளங்குகின்றது.

   மேலும் தங்கை சந்திரா இயக்கத்துக்குப் போனபின்னர் கதையில் வரும் காட்சிகள் ரகுநாதனைப் பயமுறுத்துவனபோல் அமைந்திருத்தல் - குறிப்பாக பலர் துப்பாக்கி முனையில் அவனைப் பிடித்துப்போய் பாறையில் வைத்து சுடுவதற்கு துப்பாக்கியை நீட்டுதல் ‘கனவு’  எனக் கூறப்படுகிறது. இதனை ஒரு உத்தியாகப் பார்க்கலாம்.

   இவை கதையோட்டத்துடன் இணைந்து வருவதால் அக்காலகட்ட அதிகாரத்தரப்பினர் மீது ஆசிரியர் வைக்கும்  விமர்சனமாகக் கருதமுடிகிறது.  குறிப்பாக 90களின் முன்பின்னாக இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைச் சுட்டுவதற்கும் இறுதிச் சம்பவத்தை ஆதவன் பயன்படுத்தியிருக்கலாம்.

   நாவலில் இருக்கக்கூடிய மற்றுமொரு அம்சம் கதையோட்டத்தின் வேகம். இது நாவலை அழகியலுடன் வளர்த்துச் செல்வதற்கு தடையாக இருந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது. ஆதவனே இந்தக் குறைபாட்டை உணர்ந்துதான் இருக்கிறார்.

“என் மனம் உணர்ந்ததை அப்படியே எழுதியிருக்கிறேன். நாவலுக்குரிய இலக்கணங்களையோ கட்டுக்கோப்புகளையோ எதையும் நான் பொருட்படுத்தவில்லை. உணர்வுக்கும் உண்மைக்கும் முதலிடம் கொடுத்து அவையே என் பேனாவை இழுத்துச் சென்றிருக்கின்றன.” 6

    குடும்பங்களில் ஏற்படும் இழப்பை மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறார். சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக திடீர் திடீர் என மாற்றமுறுகின்றன. இருந்தாலும் நாவலின் வாசிப்பில் சலிப்பை இவை ஏற்படுத்தவில்லை என்பது முக்கியமான குறிப்பாகும்.

   ரகுநாதன் குடித்துவிட்டு வந்து அந்த ஊர் அறிய ஏசும் சம்பவ விபரிப்பும், இளமைக்காலக் காதற்கதைகளை கூறும் இடங்களும் மனத்தில் அழுத்தமாகப் பதிந்து விடுகின்றன.

   இந்நாவலில் இருக்கக்கூடிய மிகப் பலமான அம்சமாக இதன் மொழிநடையைக் கூறலாம். புகலிடத்தில் இருந்து வெளிவந்த ஆரம்பகால நாவல்களில் ஒன்றாக இருந்தாலும் ஈழத்து மொழிநடையை பொருத்தமாகப் பயன்படுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்துள்ளார் என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நாவலின் பாத்திர உரையாடல்கள் அழகாக வந்திருக்கின்றன. 

“டே  விசரா இதுக்கெல்லாம் இப்பிடி அழுறதே? எழும்படா எழும்பி ஆகவேண்டிய வேலையைப் பார். ஆம்பிளை மாதிரி இரு. அவளைப் பாத்தியே எவளவு மரியாதையோடு செத்தாள் எண்டு. அவள் வீரி. நீ என்ன பேத்தைமாதிரி நிண்டு அழுறாய். எழும்படா எழும்பு முதல், எழும்பி ஏதன் தின். பரிசுகெடப்போகுது. எவளவு இளசுகள் எல்லாம் உன்னையே பாக்குது தெரியுமே…” 7

   குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வலிகாமப் பிரதேசத்துக்கு உரிய வட்டார மொழிவழக்குச் சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருத்தலும் சிறப்பாக உள்ளது.

“உச்சிக்கொப்பை குறிபார்த்து எறியவேணும் அப்பதான் பொல பொலவெண்டு கொட்டுண்ணும்” (அத்.3)
“எழும்படா! இனிக்காணும். அப்படி என்ன நித்திரை. ஓடிப்போய் கோயிலடியில அரசம் பழுத்தல்கள் ஏராளங் கொட்டுண்டு கிடக்கு பொறுக்கியந்து அந்த ஆடுகளுக்குப் போடன்.” (அத்.2)
“எவ்வளவுதான் பிடிச்சு அழுத்தினாலும் பிடரியில ரெண்டு மயிர் கெம்பிக்கொண்டு நிக்கத்தான் செய்யுது” (அத்.9)

சில சம்பவங்கள் இந்நாவலின் கதைப்போக்குக்கு அவசியமில்லாத ஆசிரியரின் விபரிப்புக்கள் கதைப்போக்கில் குறைபாட்டை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளதையும் இங்கு குறிப்பிடவேண்டும். நாவலில் பல இடங்களில் அதிக பிரசங்கித்தனமாக சிலவிடயங்களைச் சுயவிசாரணை செய்தல், எல்லாவற்றுக்கும் ‘காலம்’தான் காரணம் என்ற பகுதியில் அதுபற்றி நீண்ட விசாரணை நடாத்துதல்; இதுபோல பல இடங்களைச் சுட்டிக்காட்டலாம். மேலும் நாவலை வளர்த்துச் செல்லுவதற்கு பல இடங்கள் இருந்தும் ஆசிரியர் அதனைத் தவறவிட்டுவிடுவதாகவே தோன்றுகிறது.

   சுசீலாவை கோயில் திருவிழாநேரம் பீநாறிப் பற்றைக்குள் அழைத்துச் சென்று கட்டியணைக்கும் சம்பவத்துக்குப் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் ரகுநாதன் குடித்துவிட்டுப் போய் அவளை வாய்க்கு வந்தபடி வெறியில் திட்டும் சம்பவம் முரண்நிலையாகத் தோற்றந்தருகிறது.

    மேலும் இது தொடர்கதையாக வந்த காரணத்தால் பல சம்பவங்கள் தொடர்பில்லாமல் அல்லது அவை நாவலின் கதைப்போக்குக்கு ஏற்ப வளர்த்துச் செல்லப்படாமல் அங்கங்கேயே தங்கிவிடுகின்றன.

   பாடசாலையில் நீங்கள் என்ன சாதி என்று கேட்கும் வாத்தியாருக்கு “நாங்கள் மரமேறுகிற ஆக்கள்” என்று மாணிக்கத்தின் மகன் தயங்கித்தயங்கி பதில் கூறும் சம்பவம், ரகுநாதன் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது செக்குச்சுத்துகிற இடத்தில் தோட்டத்தில் வேலை செய்யும் கந்தியின் மகள் பற்றி விபரிக்கும் இடம், கிளிநொச்சியில் சாராயம் குடிக்கப்போன இடத்தில் ரன்மொனிக்கா என்ற சிங்களப்பெண் பற்றிய பதிவு, மற்றும் இந்தியாவில் இருந்து வந்து தங்கிய தவிலுக்கு தாளம்போடுபவர் பற்றிய பதிவு, ஆகிய சம்பவங்கள் பல்வேறுபட்ட மனநிலை உடையவர்களை நாவலில் காட்டவந்ததின் விளைவாக இருந்தாலும்,  குறித்த சம்பவங்கள் நாவலின் கதையோட்டத்தில் மேம்போக்காகவே சொல்லப்படுகின்றன.

    இவற்றுக்கு செலவளித்த பக்கங்களை ரகுநாதன், சுரேஷ், சந்திரா, சுசீலா பாத்திரங்களுடன் தொடர்புடைய களங்களை விபரிப்பதற்கு செலவளித்திருக்கலாம். சுரேஷ் என்ற பாத்திரத்தைச்  சித்திரிப்பதிலும் அப்பாத்திரம் தொடர்பான உரையாடல்களிலும் போதாமை உள்ளதும் அவதானிக்கத்தக்கது.

   மேலே குறிப்பிட்ட குறைபாடுகளுக்கு, இந்நாவல் தொடர்கதையாக வந்தமையும் ஐந்து வருடங்கள் என்ற நீண்ட கால இடைவெளியை நாவல் முற்றுப்பெறுவதற்கு எடுத்துக்கொண்டமையும் கூட காரணமாக இருந்திருக்கலாம். (புலம்பெயர்ந்தவர்களின் அசாதாரண சூழ்நிலை, மனநிலை மற்றும் பிரசுரவெளிகளும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கக்கூடும்) பொதுவாக தொடர்கதைகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளில் ஒன்றாக ‘சுவாரஷ்யம்’ காரணமாக சில சம்பவங்கள் இங்கு சேர்க்கப்பட்டு பின்னர் கதைத்தொடர்ச்சிக்கு அவசியமில்லாத காரணத்தால் அவை விடப்பட்டிருக்கலாம்.

    எனினும் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகால நாவல் என்ற வகையிலும் 80 களின் பின்னரான காலத்தைப் பதிவுசெய்கிறது என்ற வகையிலும் ஈழத்துக்கேயுரிய மொழிநடையைப் பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்கின்ற வகையிலும் ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் கவனத்திற்குரியதாக அமைந்துள்ளது.

தொகுப்பு

   புலம்பெயர் படைப்புக்களின் பேசுபொருள்களில் தாயக நினைவு முதன்மையானது.  தாய்த்தேசத்தைப் பிரிந்தவர்களுக்கு தாயக நினைவு என்பது பிரிக்கமுடியாத உணர்வுநிலையாகப் பேசப்படுகிறது. நாடிழந்து உலகில் அகதிகளாக அலைந்துதிரிந்த பாலஸ்தீனர்களின் படைப்புக்களில் இதற்கு நல்ல உதாரணங்களைக் கண்டுகொள்ள முடியும். இன்று உலகமெங்கும் மில்லியன்கணக்கான மக்கள் நாடிழந்து நாடோடியாகவும் அகதியாகவும் புகலிட தேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தம் தாய்த்தேசத்தை இழப்பதென்பது சொல்லமுடியாத உணர்வுநிலையை ஏற்படுத்துகின்றது.

   இவ்வாறுதான் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் தம் தாய்த்தேசத்தைப் பற்றி தமது படைப்புக்களில் எழுதும்போது தவிர்க்கமுடியாமல் அவர்கள் நினைவில் வாழும் தேசத்தை எழுத்துக்களில் பதிவு செய்கின்றனர். அது தனிமனித வாழ்வில் இருந்து தேசத்துக்கான விடுதலை வரை விரிகின்றது. இதற்கு இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கின்றன புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் சான்றாக அமைகின்றன. அவ்வகையில் நாவல் இலக்கியத்தில் ஆரம்பகாலப் படைப்பாளிகளில் ஒருவர் என்ற வகையில் இங்கு ஆதவனின் நாவல் நோக்கப்பட்டுள்ளது. இது 80 களின் இறுதிக்காலகட்ட விடுதலைப் போராளிகளின் செயற்பாடுகளை மக்களின் வாழ்வுநிலையின் ஒரு பகுதியை குறுக்குவெட்டுமுகமாகப் பேசுகின்றது. இந்நாவல் குறிப்பிடும் காலத்துடன் ஒப்பிடுவதற்கு வேறு பல படைப்புக்கள் தமிழ் நாட்டிலிருந்தும்  ஈழத்தில் இருந்தும் புகலிடத்தில் இருந்தும் வந்திருக்கின்றன. எனினும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த ஆரம்பகால நாவல்களில் ஒன்று என்ற வகையில் ‘மண்மனம்’ கவனத்திற்குரியதாக அமைந்துள்ளது.

   இதற்கூடாக 80 களின் பின்னரான ஒரு காலகட்டம் பதிவுசெய்யப்படுவதோடு புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகாலப் படைப்புக்களின் போக்கினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.


அடிக்குறிப்புகள்
1. சுவடுகள் நோர்வேயில் இருந்து வெளிவந்து நின்றுபோன சஞ்சிகையாகும். 1988 இல் இருந்து 1997 வரை 78 இதழ்கள் வரை வெளிவந்தமை கட்டுரையாளரால் இனங்காணப்பட்டுள்ளது.
2. பார்த்திபனின் வெளிவந்த படைப்புக்கள் பற்றி ஏலவே எழுதிய அறிமுகக்கட்டுரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கலைமுகம் இதழில் வந்துள்ளது. பதிவுகள் இணையத்தளத்திலும் வாசிக்கமுடியும்.
3. க. ஆதவன், மண்மனம், அத்தியாயம் 1, சுவடுகள், நோர்வே,1989.
4. மேலது, அத்தியாயம் 12.
5. மேலது, பாகம் 2, அத்தியாயம் 11.
6. மண்மனம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. முதற்பாகம் 16 அத்தியாயங்களில் முற்றுப்பெற்றபோது ‘முதலாம் பாகத்துக்குப் பின்னர் ஒரு முன்னுரை’ என்ற பக்கத்தில் ஆதவன் மேற்குறித்தவாறு எழுதியுள்ளார்.
7. க. ஆதவன், மண்மனம், பாகம் 2 – அத்தியாயம் 2, சுவடுகள், நோர்வே.

(நன்றி -  மண்மனம் நாவலின் அத்தியாயங்களைப் பெறுவதற்கு உதவிய நூலகம், படிப்பகம் இணையத்தளத்தினருக்கும்; விடுபட்டவற்றைப் பெறுவதற்கு உதவிய க.ஆதவன், பதிவுகள் வ.ந. கிரிதரன், இளவாலை விஜயேந்திரன் ஆகியோருக்கும் மிக்க நன்றி)

- 2013 டிசம்பர், ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும், மணவை செந்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடாத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் பின்னர் வெளியிட்ட ‘தற்கால படைப்புகளில் தமிழில் பன்முக ஆளுமை’  என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை. -

kuneswaran@gmail.com


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்