அறிமுகம்  

அ. முத்துலிங்கம் அ. முத்துலிங்கம் 80 களுக்கு முன்னர் ஈழத்தில் இருந்து தொழிலின் நிமிர்த்தம் புலம்பெயர்ந்து சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். உலக வங்கியிலும் ஐ.நா சபையிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றம் பெற்ற காலத்தில் கைலாசபதியால் எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அக்காலத்தில் எழுதிய சிறுகதைகள் 1964 இல் ‘அக்கா’ என்ற தொகுதியாக வெளிவந்தது. பின்னர் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பாகங்களிலும் உள்ள நாடுகளுக்கு பயணப்பட்டு வாழ்ந்தவர்.  ஏறத்தாழ 25 வருடம் எழுத்திலிருந்து ஒதுங்கியிருந்து பின்னர் 1995 இல் இரண்டாங் கட்டமாக தமிழ்ப்படைப்புலகில் நுழைந்தார். காலம், அம்மா போன்ற புகலிடச்சஞ்சிகைகள் ஊடாகவும், தமிழகச் சஞ்சிகைகள் ஊடாகவும் சிறுகதைகளை எழுதியபோது தமிழ்நாட்டில் நன்கு அடையாளம் காணப்பட்டார். அதன்பின்னரே திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவருகின்றன.    

முத்துலிங்கம் உலக அனுபவங்கள் ஊடாக கதை சொல்பவர்களில் முதன்மையானவர். இவரிடம் தாயக வாழ்வு பற்றிய ஏக்கத்தையோ, கழிவிரக்கத்துடன் கூடிய புலம்பெயர் வாழ்வையோ எதிர் பார்க்கமுடியாது. ஆனால், தனது தொழில் காரணமாக உலகமெல்லாம் பயணப்படும் முத்துலிங்கம் எமக்குக் காட்டும் உலகம் தமிழ் இலக்கியத்துக்குப் புதியது. வித்தியாசமான நிலவமைப்புடைய நாடுகளின் அனுபவங்களை, வெவ்வேறுபட்ட இனத்தவர்களின் வாழ்க்கை முறைகளை, அவர்களின் பண்பாட்டை தனது கதைகளில் கொண்டு வருகின்றார்.  இவ்வகையில் முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நாவல் பற்றி இக்கட்டுரை நோக்குகிறது.

 வடிவம் பற்றிய சர்ச்சை
 
    ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலை நாவல் என அ. முத்துலிங்கம் குறிப்பிடுகிறார். ஆனால் அவை தனித்தனியே 46 சிறுகதைகளைக் கொண்ட தொகுதி போல தோற்றந்தருகிறது. இத்தொகுப்பை நாவல் அல்ல என பலர் மறுக்கிறார்கள். இது தனித்தனியே எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுதி எனவும் கட்டுரைத்தன்மையானது எனவும் தன்னனுபவம் சார்ந்தது எனவும் பலவாறான விமர்சனங்கள் தமிழ்ச்சூழலில் எழுப்பப்பட்டுள்ளன.
  
எனவே இக்கட்டுரையில் உண்மை கலந்த நாட்குறிப்புக்களில் நாவலுக்குரிய அம்சம் உள்ளதா என்பது பற்றியும் இந்நாவல் தமிழ்ச்சூழலில் பெறும் முக்கியத்துவம் பற்றியும் ஆராயப்படுகிறது.

“உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கி.ரா வின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்த தொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008 வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளைத் தொகுத்து உயிர்மை பதிப்பகம் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?” (1)    என்று வினாவெழுப்புகிறார் அருண்மொழிவர்மன்.
  
   

தமிழ்ச்சூழலில் மரபுவழியாக வந்த நாவல்களில் இருந்து வித்தியாசப்படும் புனைவாக இது இருக்கின்றது. அதாவது நாவலில் அறுபடாத் தொடர்ச்சியுடன் பாத்திர வார்ப்போ அல்லது கதைத் தொடர்ச்சியோ இல்லை. களத்தொடர்ச்சியும் இல்லை. இதனால்த்தான் இந்நாவல் பற்றி வினாவெழுப்பவேண்டியிருக்கிறது. ஆனால் பாமாவின் ‘கருக்கு’  நாவலிலும் இவ்வாறான தொடர்ச்சியில்லாதபோதும் அது தலித்திய நாவலாகக் கொள்ளப்பட்டது. இதற்கு முத்துலிங்கத்தின் வாக்குமூலத்தையே நாம் கருத்திற்கொண்டால் உண்மை புலப்படும்.

“சுயசரிதைத் தன்மையான நாவல் என்று அழைப்பதுதான் பொருத்தம். நீங்கள் சொல்வதுபோல ஒரு சதவீதம் கற்பனை இருந்தாலும் அது புனைவுதான் என்று ஆகிவிடுகிறது. எழுதும்போது எனக்கே பல சமயங்களில் எங்கே புனைவு முடிகிறது எங்கே உண்மை தொடங்குகிறது என்பதில் சந்தேகம் தோன்றிவிடும். இந்த நாவல் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைத் துண்டு துண்டாக உடைத்துவிட்டு மீண்டும் திருப்பி ஒட்டிவைத்ததுபோல என்று சொல்லலாம். சில துண்டுகள் கிடைக்கவில்லை ஆனாலும் முழுக்கண்ணாடி போன்ற ஒரு தோற்றம் கிடைக்கும். நீங்கள் பார்க்கும்போது அதில் உங்களுடைய முகம்தான் தெரியவேண்டும். என்னுடையது அல்ல” (2)

“சில வருடங்களுக்கு முன்னர் சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிப் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றைச் சொன்னார். “சிறுகதை என்றால் வசனங்களை அழகாகச் செதுக்கிச் செதுக்கி அமைக்கலாம். நாவல் பெரிய பரப்பு, வசனத்தில் கவனம் செலுத்தமுடியாது.” ஆங்கிலத்தில் இருப்பதுபோல சுயசரிதை நாவல் ஒன்று எழுத எனக்கு விருப்பம். அத்துடன் எழுத்தாளர் சொன்னதுக்கு மாறாக செதுக்கியதுபோல வசன அமைப்பும் நாவலில் வரவேண்டும் என விரும்பினேன். நாவல் என்றால் இறுதியில் ஓர் உச்சக்கட்டம் இருக்கும். அது செயற்கையானது. உண்மை வாழ்க்கையில் அலைபோல உச்சக் கட்டம் அவ்வப்போது வந்து போகும். அதன் விளைவுதான் இந்த நாவல். இதை ஆரம்பத்தில் இருந்து வாசிக்கத் தேவையில்லை. எங்கேயிருந்தும் தொடங்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தனியாகவும் நிற்கும், சேர்ந்தும் இருக்கும். நாவலை வாசித்த சில நண்பர்கள் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் என்றார்கள். 'இதைச் சேர்த்திருக்கலாமே, இதை விட்டுவிட்டீர்களே' என்றார்கள் சிலர். அவர்களிடம் நான் எப்படி சொல்வேன் 600 பக்க நாவலை 287 பக்கங்களாக சுருக்கியிருக்கிறேன் என்று. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்னும்போது நாவலை நிறுத்திவிடுவதுதானே புத்தி. பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் இருந்தார். அவர் தனக்கு பிடித்த நாவல் ஒன்றை படிக்க விரும்பினால் அவரே ஒன்றை எழுதிவிடுவாராம். நண்பர்களிடம் அப்படிச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்” (3)
  
முத்துலிங்கத்தின் மேற்கூறிய கூற்றுக்களின் ஊடாக ஆங்கிலத்தில் இருப்பதுபோல ஒரு சுயசரிதை நாவல் எழுதவேண்டும் என்பதும், அது இயல்பாக வரவேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது. எனவேதான் பொதுவான வாசிப்புத்தளத்தில் உள்ள ஒரு நாவலுக்குரிய பண்போ வடிவமோ இதில் வெளிப்படையாக இல்லை என்பது தெளிவானது. மேலும்,  முத்துலிங்கம் நேர்காணல் ஒன்றில்  இன்றைய உலக இலக்கியங்கள் புனைவுக்கும் புனைவுசாரா எழுத்துக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியை அழித்துக்கொண்டு வருகின்றன என்ற கருத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பண்பை இவரது எழுத்துக்களிலும் காணமுடியும். 

“இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு கட்டுரை இலக்கியம். Truman Capote, Norman Mailer போன்றவர்கள் கட்டுரை இலக்கியத்தை புது உயரத்துக்குத் தூக்கிச் சென்றார்கள். கட்டுரை என்றும் இல்லாமல் முழுப்புனைவு என்றும் இல்லாமல் இரண்டுக்கும் உள்ள இடைவெளியில் படைத்தார்கள். The Executioner's Song  என்ற உண்மைக்கதை நாவலுக்கு முதல்முறையாக புனைவுப்பிரிவில் புலிட்சர் பரிசு கிடைத்தது. இலக்கிய வாசகர்களுக்கு இது முற்றிலும் புதுமையான விருந்து.” (4)   
  

என்று குறிப்பிடுகிறார். இவரது “அங்கே இப்போ என்ன நேரம்” என்ற நூலில் இந்த வடிவப்பிரக்ஞையைக் கண்டுகொள்ள முடியும். அத்தொகுப்பு ‘அனுபவக்கதை, விமர்சனம், சிந்திப்பதற்கு, சந்திப்பு’ என்றவாறாக அமைகின்றது. ஆனால் அத்தொகுப்பின் நடைக்கும், முத்துலிங்கம் கதைகளின் நடைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியோ மிகக் குறுகியது என்றே கூறலாம்.
  
தமிழ்ச்சூழலில் ஏற்கெனவே வந்துள்ள பல படைப்புக்கள் இவ்வாறு விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அருளரின் ‘லங்காராணி’ வந்தபோது அது சம்பவங்கள் விபரணங்களின் தொடர்ச்சிதான் எனக் கூறப்பட்டது. அ.ரவியின் ‘காலம் ஆகி வந்த கதைகள்’ வந்தபோது அது சிறுகதைத்தொகுதியா நாவலா என வினாவப்பட்டது. அதேபோல செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ வந்தபோது அது நாவல் அல்ல சுயவிபரக் குறிப்புக்கள் என பேசப்பட்டது. இறுதியாக முத்துலிங்கத்தின் இந்நூல் நாவல் அல்ல என மறுக்கப்படுகிறது,
   
முடிவாக, முத்துலிங்கத்தின் நோக்கமும் எழுத்தும் அவரது வாசிப்பினூடாகவும் வாழ்முறை அம்சங்களினூடாகவும் மாற்றமடைந்து வந்துள்ளமையை அறியமுடிகிறது. இந்நிலையில்தான் இந்நாவலும் மரபுவழிப்பட்ட வடிவத்திலிருந்து வேறுபடுகிறது. 
   
எனினும் இந்நூலில் பாத்திரங்களின் தொடர்ச்சி, களங்களின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இல்லையெனக்கூறமுடியாது. நாவல் முற்றுப்பெறும் வரையில் நிலவமைப்பு மாறுவதன் ஊடாகவும் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பண்பாடுகள் மாறுவதன் ஊடாகவும் முத்துலிங்கம் கூறுகின்ற அனுபவத்தில் ஒரு தொடர்ச்சியைக் கண்டுகொள்ளமுடிகிறது. இந்நிலையிலேயே முத்துலிங்கம் கூறுவதுபோல் சுயசரிதைத்தன்மையான நாவல் என்ற கருத்துடன் ஒன்றுபட முடிகிறது.

புனைவின் உள்ளடக்கம்
  
கதைசொல்லி முத்துலிங்கத்தின் ‘சிறுவன்’ பாத்திரம் வளரவளர அவன் அனுபவங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன.  நிலவுலகச் சூழல் மாறுகிறது. வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான வாழ்க்கை அம்சங்கள், அவற்றுக்கூடாக வித்தியாசமான பண்பாடுகளை அறிந்து கொள்ளமுடிகிறது. 
   
 இது முத்துலிங்கம் என்ற மனிதனின் இளம்பாராயம் தொடக்கம் முதுமைக்காலம் வரையான வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக நாம் அறிந்து கொள்ளும் காட்சிகளாக அமைந்துள்ளன. குக்கிராமத்தில் இருந்து ஆபிரிக்கக் காடுகள் வரை விரிகின்ற இக்கதையில் உயிரோட்டமாக இருப்பது முத்துலிங்கத்தின் வீட்டுச் சூழலும் அவர் கடந்து வந்த சமூகமும்தான்.
   
வீட்டுச்சூழல், பள்ளிச்சூழல், பல்கலைக்கழகச் சூழல், தொழில் புரியும் இடம், உலக நாடுகளில் பயணப்படும் அனுபவம், வித்தியாசமான பண்பாடுகள், வித்தியாசமான வாழ்வனுபவம், ஓய்வுப்பருவம் என கதை நகர்ந்து முற்றுப்பெறுகிறது.
  
   தாய், தந்தை, அக்கா, மனைவி, மகள், பேரப்பிள்ளை என தன்னுணர்வாக கதை கூறப்படுகிறது. சிறுவனின் பார்வையில் நகரும் பாத்திரங்கள் அழகாக வார்க்கப்பட்டுள்ளன. கோயில், வீடு, பாடசாலை, கிராமம், நகரம், தொழிற்தளம், புகலடைந்த நாடுகள், கூடப்படித்த நண்பர்கள், தொழில் புரியும் நண்பர்கள், தெரிந்த மனிதர்கள், என பல களங்களையும் மனிதர்களையும்  நோக்கி கதைகளுடன் விரிகிறது நாவல். கொக்குவில் கிராமத்தில் தொடங்கிய கதை கொழும்பில் வேலை செய்யும் காலத்துடன் இணைந்து, பின்னர் கண்டங்கள் தாண்டிச் செல்கிறது. எல்லாமே முத்துலிங்கம் என்ற மனிதனின் தரிசனங்கள்தான். வாழ்வின் சின்னச்சின்னத் தருணங்களை ஞாபகக்கிடங்கில் இருந்து மீட்டுத் தருகிறார். அந்தத் தருணங்கள் ஊடாக உலகத்து மாந்தர்களின் வாழ்வும் சொல்லப்படுகிறது.

பாத்திரங்கள் சம்பவங்களின் தொடர்ச்சி
  
முத்துலிங்கம் தனக்கு நினைவு தெரிந்த மூன்று வயதில் இருந்து இந்தக் கதையைத் தொடர்வதாகக் குறிப்பிடுகிறார். தன்னைப் பற்றியும், தனது சகோதரர்கள் பற்றியும், பள்ளிப்பருவ நண்பர்கள் பற்றியும், இளம்பருவக் குறும்புகள் பற்றியும் எழுதிச் செல்கிறார். தன்னைச் சூழ இருந்த குடும்ப உறவுகளின் கதையை அடிமனத்தின் ஆழத்திலிருந்து கதை கதையாகச் சொல்லியபடியே செல்கிறார். குறிப்பாக் தாய், தந்தை, அக்கா ஆகிய பாத்திரங்களின் வார்ப்பும் அவர்களைப் பற்றிய படிமமும் மனத்தை விட்டு அகலாதவையாக உள்ளன. 
  
இந்நாவலில் வரும் அம்மா பாத்திரம் பற்றித் தனியே எழுதலாம். முத்துலிங்கம் தனது தாயாரை 13 வயதில் இழந்துவிடுகிறார். அப்பருவம் வரை தன் நினைவில் நிறைந்திருக்கின்ற அம்மாவை அழகாகச் சித்திரித்துள்ளார். ஏற்கெனவே முத்துலிங்கத்தின் பல சிறுகதைகளில் அம்மா பாத்திரம் அழகாக வார்க்கப்பட்டுள்ளது. அதனால் தாய் பற்றிய உணர்வு புனைவு முழுவதும் ஆங்காங்கே இழையோடுகிறது. ‘அம்மாவின் பாவாடை’, ‘தில்லையம்பலபிள்ளையார்’ ஆகிய கதைகள் இதற்கு நல்ல உதாரணம். அம்மாவின் பாவாடையில் வருகின்ற பாத்திர வார்ப்பு கச்சிதமாக இங்கும் பொருந்தி வருகிறது. தவிர்க்கமுடியாமல் அந்த வர்ணணைகளையும் கூட இங்கும் பொருத்திப் பார்க்கலாம். 
   
இப்புனைவில் ‘முதல் நினைவு’, ‘பேச்சுப்போட்டி’, ஆகிய தலைப்புக்களில் வருகின்ற அம்மா பற்றிய பதிவு மறக்கமுடியாதது. ஒருமுறை நல்லூர் சப்பறத்திருவிழாவுக்கு அம்மா ஐயா சகோதரர்களுடன் சென்றபோது சனநெரிசலில் அகப்பட்டு தாயையும் சகோதரியையும் பிரிந்துவிடுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை பின்வருமாறு எழுதுவார்.

“ஒரு நீண்ட வாங்கில் நாங்கள் எல்லோரும் பொலீஸ் ஸ்டேசன் வாசலில் உட்கார்ந்திருந்தோம். அங்கு இருந்த பொலிஸ்காரர்களும், வந்துபோன சனங்களும் நாங்கள்தான் தொலைந்துபோனவர்கள், யாருடைய வருகைக்கோ காத்திருக்கிறோம் என்பதுபோல புதினமாகப் பார்த்தார்கள். திடீரென்று அண்ணன் அழத்தொடங்கியபோது எனக்குப் பயம் பிடித்தது. அரை மணிநேரம் கழித்து அம்மா அரக்கப்பரக்க ஓடிவந்தார். எந்தப்பூகம்பம் வந்தாலும் அழாத தங்கச்சி அழுகை முடிந்து விம்மிக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கண்ணீர் காய்ந்து காணப்பட்டது. அம்மா கவனமாக மடிப்புகள் வைத்து உடுத்திய சேலை தாறுமாறாகக் குழம்பிக் கிடந்தது. தலைமயிர் குலைந்து கண்ணீர் ஒழுகியது. வாய் குழறியது. அப்படியே ஓடிவந்து எங்களைக் கட்டிக்கொண்டார். ‘என்ரை பிள்ளைகள், என்ரை பிள்ளைகள்’ என்று வாய் ஓயாமல் பிதற்றிக் கொண்டு எங்கள் ஒவ்வொருவருடைய அங்களையும் தடவிப் பார்த்து அவை அந்தந்த இடங்களில் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொண்டார். அம்மா தைரியமானவர் இப்படியான அற்ப விசயங்களுக்கெல்லாம் கலங்காதவர். ஆனால் அன்று யாரோ மூன்று பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டார்கள் அம்மாவின் மனதில் அது நாங்கள்தான் என்பது தீர்மானமாகிவிட்டது.” (5)

இங்கு அம்மாவின் படிமம் அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. கோயில்திருவிழா சனநெரிசலில் காணாமற்போன தங்களுக்காக அம்மாவின் கலக்கத்தையும் துன்பத்தையும் எடுத்துக்காட்டுவார்.
  
இதேபோல் ஒரு குக்கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் இருந்து பேச்சுப்போட்டிக்குச் சென்று பரிசில் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவுகளையும் எடுத்துக்காட்டுவார். அந்த வர்ணணை மனத்தில் ஒர் இருளாக மூடிக்கொள்வதையும் படிப்போர் உணர்வார்.

“பேச்சுப்போட்டி முடிந்தபோது பெரும் மழை பிடித்துக் கொண்டது. ஒருவரும் எதிர்பாராமல் திடீரென்று பெய்த மழை, அது வந்தமாதிரியே உடனேயே போய்விடும் என்றார்கள். ஆனால் மழை விடாமல் இரண்டு மணிநேரமாகக் கொட்டியது. திரும்பும்போது மாஸ்ரர் சைக்கிளை உழக்க நான் பின் சீட்டில் உட்கார்ந்து வந்தேன். சைக்கிள் மெதுவாகச் சென்றபடியால் டைனமோவும் மெதுவாகவே சுழன்று மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்தது. கறுப்பு வானமும் நீண்ட வீதியும் மழையில் நனைந்து கூனிப்போன மாஸ்ரரின் முதுகும் வெட்டவெளியில் தனியாக நின்ற பனைமரம் ஒன்று இடி விழுந்தது எரிந்துகொண்டிருந்ததும் என்னுடைய அன்றைய மன நிலையில் அப்படியே பதிந்து போனது. ஒழுங்கைகளில் வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. வாத்தியார் எங்கள் வீட்டுப் படலையில் என்னைக் கொண்டுவந்து இறக்கி விடும்போது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. ‘பார்த்துப்போ’ என்று சொல்லிவிட்டு மாஸ்ரர் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு போனார்.”

“வீடு இருட்டில் மூழ்கிக் கிடந்தது. எல்லோரும் தூங்கப்போய்விட்டார்கள் என்றே நினைத்தேன். ஒரேயொரு கைவிளக்கு எரிய அம்மா எனக்காகத் தூங்காமல் காத்திருந்தார். நான் ஒரு பெரிய ஆள், ஏதோ முக்கியமான காரியமாக வெளியே போய்விட்டு வருகிறேன் என்பதுபோல அம்மா எனக்காகக் கண்விழித்திருந்ததை இன்றுவரைக்கும் என்னால் மறக்கமுடியாது. என்னைக் கண்டதும் அம்மா கட்டி அணைத்து, தலையைத் தடவி ஈரம் இல்லையென்று உறுதி செய்தபிறகு ‘பிள்ளை உனக்கு நல்ல பசி. வா, நான் சாப்பாடு போடுறேன்’ என்றார். அன்றைய பேச்சுப்போட்டியில் என்ன நடந்தது என்றோ, நான் எப்படிப் பேசினேன் என்றோ, யாருக்குப் பரிசு கிடைத்தது என்றோ ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. கையிலே வெற்றிக் கிண்ணம் இல்லாததைப் பார்த்துவிட்டு என்னைக் கேள்வி கேட்டு வேதனைப்படுத்தக்கூடாது என்று நினைத்திருக்கலாம். (6)

இங்குகூட அம்மாவின் உண்மை அன்பு எடுத்துக் காட்டப்படுகிறது. முத்துலிங்கத்தின் இந்த எழுத்துக்கள் பற்றி, வரப்பிரசாதம்  தனது விமர்சனக் குறிப்பொன்றில் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.

“வெளிநாட்டுக் கதைகளைவிட மனக்கிடங்கின் ஆழத்தில் சேர்ந்திருந்த தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து எழுதிய சில கதைகளில் மனித மனங்களின் ஆசைகள் பாசங்கள், உணர்வுகள், உளவியல்புகள், ஏழ்மைகள், ஆகியவை மிகத்திறமையாக எழுதப்பட்டுள்ளன” (7)

அக்கா பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அக்காவின் ‘சங்கீதசிட்சை’ என்ற தலைப்பில் உள்ள கதையைக் குறிப்பிடலாம். இதில் வரும் சம்பவங்கள் முத்துலிங்கத்தின் அங்கதத்திற்கு நல்ல எழுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒருமுறை இவரது அக்காவுக்கு சங்கீதம் கற்றுக்கொடுப்பதற்காக ஐயாவால் ஒரு பாட்டு வாத்தியார் ஒழுங்குசெய்யப்படுகிறார். அக்கா சங்கீதம் படிக்கப் பட்ட பாடுகளை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுவார். இப்பகுதியை அழகான சித்திரமாக மாற்றியிருப்பார். புன்னகையை மீறி வாய்விட்டு சிரிக்க வைக்கும் அங்கதம் இந்நாவலின் முழுவதும் விரவிவருவதை அறிந்துகொள்ளமுடியும்.

“ஒரு நாள் உயரமான மெலிந்து எலும்பு தெரியும் ஒருத்தர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். விபூதி பூசி, பொட்டு வைத்து, கக்கத்தில் குடையை வைத்துக்கொண்டு அவர் ஒற்றைக் கையை வீசி வீசி நடந்து வந்தது விசித்திரமாக இருந்தது. அவர் தன் பாரத்திலேயே நுனியில் வளைந்துபோய் இருந்தார். அவசரமாக உட்கார்ந்தால் நடுவிலே முறிந்துவிடுவார் போலவும் பட்டது. நாங்கள் எங்களுக்குள் பந்தயம் கட்டினோம். மாட்டுத்தரகர், சாதகம் பார்ப்பவர், குடை திருத்துபவர், எல்லா ஊகங்களும் பிழைத்துவிட்டன. அவர்தான் அக்காவின் கனவுகளை நிர்மூலமாக்க ஐயாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாட்டுவாத்தியார்.

“அக்காவின் சித்திரவதை ஸ்வர வரிசைகளில் ஆரம்பித்தது. வீடு நிறைய ஸ்வரங்கள் சத்தம் போடும் காலை, பகல், மாலை எல்லாம் அதே சத்தம்தான். அக்காவுக்கு சங்கீதத்தில் இயற்கையான ஈடுபாடு கிடையாது. குரலையும் கருக்குமட்டைக்குரல் என்று அம்மா வர்ணித்திருக்கிறார். வாத்தியார் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கா பாவம் கத்தினார். நிலம், கூரை, சுவர் எல்லாம் சங்கீதமாய் அதிர்ந்தது”

“ அக்காவுக்கு ஸ்வர வரிசைகளில் ஒருவித சாமர்த்தியம் வந்ததும் பாட்டுவாத்தியார் ‘யாரோ இவர் யாரோ’ என்ற கீர்த்தனையைச் சொல்லிக் கொடுத்தார். இது பைரவி ராகத்தில் அமைந்தது. அருணாசலக்கவிராயர் அல்லும் பகலும் பாடுபட்டு அருமையாக எழுதிய பாட்டு. அக்கா அதை சப்பு சப்பென்று பாடமாக்கி உருத்தெரியாமல் ஆக்கிவிட்டார். பாட்டு வாத்தியாருக்குத் திருப்தியில்லை. ‘அம்மா இது ராமரும் சீதையும் முதன்முதலாகச் சந்திக்கும் இடம். ராமன் ஆர் என்று தெரியாமல் சீதை இரங்கிப் பாடுவது. நீ பாடும்போது குரலில் ஏக்கம் இருக்கவேண்டும்: உருகிப் பாடம்மா உருகு. என்று சொல்வார். அக்கா அதைப்பிடித்துக் கொண்டு மெழுகுவர்த்திபோல உருகினார். “யாரோ இவர் யாரோ” என்று அக்கா காலை, மாலை என்று பார்க்காமல் உருகுவது வீட்டிலும், வளவிலும், ரோட்டிலும் கேட்டது. தெருவிலே போகிற யாரோ ஒருத்தன் ஒருநாள் பாட்டைக் கேட்டுவிட்டு ‘அது நான்தான்’ என்று உரக்கக் கத்திவிட்டு மறைந்தது ஐயாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆள் யார் என்பதையும் ஐயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றே அந்தப் பாடலுக்கு தடை விழுந்தது. ஐயா விதித்த முதல் தடை அதுதான்.” (8)
  

தந்தையைப் பற்றிக் குறிப்பிடும்போது அக்காவின் சங்கீத சிட்சை, படிக்காசு ஆகிய தலைப்புக்களில் தந்தையின் நினைவு படிமமாக அழகாக வருகிறது. நாங்கள் பிழை செய்தால் ஐயா அடிக்கடி தன் தலையில் குட்டிக்கொள்வார் என்று சொல்வதும்,  மாமன்மார், நண்பர்கள், உறவினர்கள் என்று சம்பவங்களின் ஊடாகவும் கதை விரிகிறது. இவற்றின் ஊடாக இந்நாவலில் குறிப்பிட்ட பாத்திரங்களின் தொடர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. 

ஏனைய அம்சங்கள்
  
நாவலின் தொடக்கத்தில் தான் பிறந்து வளர்ந்த கொக்குவில் கிராமத்தை அறிமுகம் செய்யும் பகுதியே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

“ மழை இல்லையென்றால் கொடும்பாவி கட்டி இழுத்துக்கொண்டு போய் சுடலையில் எரிக்கும் வழக்கம் கொண்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். நாய் கடித்தால் உச்சந்தலையில் மயிரை இழுத்து மந்திரித்தால் விஷம் இறங்கிவிடும் என்று நம்பும் கிராமம். தலையிடி என்றாலும், கால்முறிவு என்றாலும், நெருப்புக் காய்ச்சல் என்றாலும் ஒரே மருந்தை முலைப்பாலில் கரைத்து உண்ணத்தரும் பரியாரியார் உள்ள கிராமம். வாத்தியாரிடம் சண்டையென்றால் உடனே அவர் படிப்பிக்கும் பள்ளிக்கூடத்தை நெருப்பு வைத்துக் கொழுத்திவிடும் கிராமம். மானம்பூ திருவிழா நடக்கும்போது ஐயர் வாழை மரத்தை வெட்டுவார். கடையிலே ஐந்து சதத்துக்கு விற்கும் அந்த வாழைப்பூவுக்காக ஐந்துபேர் வீதியிலே உருண்டு பிரண்டு பத்து நிமிடநேரம் சண்டை போடுவார்கள். இங்கேதான் நான் பிறந்து வளர்ந்து படித்து வாழ்வு முறைகளைக் கற்றுக்கொண்டேன்.” (9)

“பாடம் முடிந்து போகும்போது தன் செருப்பு நுனியைப் பார்த்தபடியே நடந்துபோவாள். என் முகத்தைக் கொண்டுபோய் அவளுடைய செருப்பு நுனியில் ஒட்டிவைத்தால் ஒழிய அவள் என்னைப் பார்க்கப்போவதில்லை. இரண்டு தவணைகள் நான் இவளுக்காக என் நாட்களை விரயமாக்கினேன்.” (10)

இவை மட்டுமன்றி வித்தியாசமான உவமைகளையும் இப்புனைவில் பயன்படுத்துவார். இது முத்துலிங்கத்தின் கதைகளுக்கே உரிய தனித்துவம். ஒன்றில் ஈழத்துப் பாரம்பரிய வாழ்விலிருந்து உவமைகளை எடுத்தாள்வார் அல்லது மேலைத்தேய  பிரபல்யமான கதைகளில் வருவதுபோல் உவமையை கையாள்வார்.

“மாம்பழம் பழுத்துவிட்டதா என்பதை அழுத்தி அழுத்திச் சோதிப்பதுபோல அவர் என் கன்னத்தைப் பிடித்து அமுக்கிப் பார்க்கவில்லை. அதுதான் அவரை எனக்குப் பிடித்திருந்தது.”(11)   

கிராமியப் பண்பாட்டுக் கூறுகளையும் கதைகளின் ஊடே உயிரோட்டமாக எடுத்துக்காட்டுவார்.  பள்ளிப்பருவத்தில் நண்பர்களுடன் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆடியபாதம் என்ற நண்பன் செய்த குறும்புகளை ஞாபகப்படுத்துவார். ஒருமுறை இவர்கள் போர்த்தேங்காய் அடித்துக்கொண்டிருந்தபோது ‘பத்துமா’ என்ற பெண் தேங்காயை ‘உரிச்சுத்தரச்சொல்லி’ கொடுத்தபோது ஆடியபாதம் அதனை உரிப்பதற்குப் பதில் சிதற அடித்துவிட்டான் அவள் அழுதுகொண்;டு சென்றிருக்கிறாள். பின்னர்.

“ சிறிது நேரம் கழித்து பத்துமா தாழ்த்திய கண்களுடன் வெளியே வந்து ‘அம்மா உடைந்த தேங்காயை கொண்டரட்டாம்” என்றபோது நாங்கள் சிரட்டையைத் தவிர மற்ற எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டோம். ரோட்டுச் சண்டைக்கும் வசைக்கும் பேர்போனவர் அந்தத்தாய். அவர் வெளியே வந்து வசைபாட ஆரம்பித்தால் பள்ளிக்கூடத்தில் பத்து இலக்கிய வகுப்புகளில் கற்றுக்கொள்ளமுடியாத கற்பனை எல்லைகள் ஒரே நிமிடத்தில் கற்றுக்கொண்டுவிடலாம். ஆடியபாதம் என்ற பெயரில் இருந்து ஆரம்பித்தார். அந்த அம்மா. ‘பாதம்’ என்பதை நீக்கிவிட்டு இன்னும் பொருத்தமான ஓர் உடலுறுப்பைச் சேர்த்து வைத்துப் பேசினார். பிறகு அவனுடைய தாயையும் தகப்பனையும் திட்டித் தீர்த்தார். இறுதியில் ‘உன்ரை கொப்பனிட்டை போய்ச் சொல்லடா உன்ரை இளங்கொடியை தாட்ட இடத்தில் கிண்டிப் பார்க்கச் சொல்லு. உன்ரை மூளையில பாதி அதோடை போட்டுது. என்றார்.”

“அழுதுகொண்டு உள்ளே ஓடிய அதே பத்துமா சரியாக ஐந்து வருடம் கழித்து ஆடியபாதத்துடன் ஓடிப்போனாள்.” (12)

   
மேலும் உலகப்பயணங்களின் ஊடான களங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவார். முடிதிருத்தும் கடைக்குச் செல்லும் ஒரு நாள் சுவருடன் பேசும் ஒரு மனிதரை அறிமுகப்படுத்துவார். அராமிக் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரின் கதையைக்கூறும்போது அந்த மொழி அழியும் ஆபத்திலிருக்கும் மொழியாகவும் அதனை அவரும் மனைவியும் மட்டுமே பேசுவதாகவும் மனைவி இறந்தவுடன் தன் மொழி இறந்துவிடாமல் இருக்க வீட்டில் சுவருடன் பேசுவதாகவும் ஒரு கதையைச் சொல்வார். “நண்பரே அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த தனி மனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்” என்று கூறுவார். 
   
இங்கு மொழிகுறித்தும் அதைப் பேணிக்காக்கவேண்டிய தீவிரம் குறித்தும் பேசுவார். இந்த நாவலின் இறுதிப்பகுதி அவரது வேலைஓய்வுகால நினைவுகளுடன் முற்றுப்பெறுவதை அறியலாம். ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஒரு நிமிடம் நாலு வினாடி பின்னுக்குத் தள்ளிக்கொண்டே போகிறது என்ற குறிப்புடன் நாங்கள் வாழும் காலமும் குறுகிக்கொண்டே போகிறது.  என்ற தொனிப்பட நாவலை முடித்து வைப்பார். 
   
பல்வேறுபட்ட நாடுகளுக்கும் தொழிலின் நிமிர்த்தம் பயணப்படுவதன் ஊடாக முத்துலிங்கத்திற்கு இந்த வித்தியாசங்கள் வசப்படுகிறது. இதன்மூலம் வேற்றினத்து மனிதர்களை, அவர்களின் பண்பாடுகளை, அவர்களின் வேறுபட்ட வாழ்வனுபவங்களை தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார். இதனாலேயே அவரின் கதைகள் உலகளாவிய அனுபவங்களுடன் நம்மிடம் வந்து சேர்கின்றன.
   
வைரம் அரித்த கதை, மிதவையில் இறந்த கிழவியின் கதை ஆகிய உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை தமிழுக்குத் தரும்போது உலகப் பொதுவான கதைகளாகி விடுகின்றன. இதேபோல்தான் முடிதிருத்தும் கடைக்காரன் சொன்ன கதையும் மொழிபற்றிய பிரக்ஞையை நமக்குத் தருகிறது. இப்பகுதி அதிகமான விமர்சகர்களால் சிலாகித்துப்பேசப்பட்டது. அதேபோல் ஆபிரிக்கப்பஞ்சாயத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஆபிரிக்கப் பண்பாட்டுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவுகிறது. விருந்துக்காக மகளின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை செலவு செய்யும் கனவான் நிலையில் உள்ள ஒருவர் விருந்தினர்கள் முன்னிலையில் அவமதிக்கப்படும் நிலையையும் எடுத்துக்காட்டுகிறார். இவையெல்லாம் முத்துலிங்கத்தின் உலகத் தரிசனங்களின் ஊடாக நமக்கு வந்து சேர்கின்றன.
  
அ. முத்துலிங்கத்திடம் புதியஅனுபவங்களின் தகவல்கள் தீரவே தீராத வகையில் கதைகள் வந்துகொண்டே இருக்கும். இதற்கு

“அ.முத்துலிங்கத்தின் விரிவான உலகப் பயணம். அதன் விளைவான மானுட தரிசனம் அவரது எல்லைகளைச் சராசரி தமிழ் எழுத்தாளனால் கற்பனை செய்து பார்க்கமுடியாத  அளவு விரிவு செய்துள்ளது. அவரது மறுபக்கம் அல்லது மற்றவன் நில அடையாளங்களினாலோ, இன அடையாளங்களினாலோ, பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ, உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது விழுமியங்கள் சார்ந்ததாகவே பெரிதும் உள்ளன.” (13)


கதைகளின் ஆதார சுருதியாக நகைச்சுவையுணர்வும், கதைகளில் வெளிப்படும் புன்னகையும், மரபுகளின் அடுக்கமைவுகளைத் தீண்டாத சாமர்த்தியமும் இவர் கதைகளில் உள்ளமையைக் கண்டு கொள்ளமுடியும். இதனாலேயே ‘புன்னகைக்கும் கதைசொல்லி’ (14) என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார்.

நவீன இலக்கியத்தின் நவீன கோட்பாடுகளின் எந்தச் சாயலையும் தீண்டாத, நாட்டார் கதைக்கூறுகளின் நளினத்தைக் கொண்ட முத்துலிங்கத்தின் படைப்புநெறி சுயாதீனமானது. தனித்துவமானது.

தொகுப்பு 
   
முத்துலிங்கத்தின் எழுத்துக்களை கூர்ந்து நோக்கினால் அவரின் எழுத்துக்களின் வித்தியாசம் புலப்படும். அவரின் எழுத்துக்களில் புனைவுக்கும் புனைவு சாரா எழுத்துக்களுக்கும் இருக்கும் இடைவெளியை அறிவதென்பது மிகக் கடினம். கதை, கட்டுரை, விபரணம் ஆகிய மூன்று இலக்கிய வடிவத்திற்கும் தமிழ்ச்சூழல் வெவ்வேறு வரையறைகளை வைத்துள்ளது. ஆனால் இந்த வரையறைகள் எல்லாவற்றையும் தாண்டிச் செல்லக்கூடிய எழுத்து வடிவம் முத்துலிங்கத்தினுடையது. இதற்கு பின்வரும் மூன்று பண்புகளை அவரின் படைப்புகளில் இருந்து இனங்காண முடிகிறது.

1. கட்டுரைத் தன்மை
2. பயண அனுபவங்களுக்குரிய விபரணம்
3. நாட்டார் கதைக்கூறுகளின் பண்பு
  
இவற்றுக்கூடாகவே நகைச்சுவையையும் சுவாரஷ்யம் குறையாத நடையையும் கலந்து விடுகிறார். இவையெல்லாம் வாசகனை முத்துலிங்கத்தின் கதைகளோடு இணைத்து விடுகின்றன. இவைதான் முத்துலிங்கத்தின் புனைவுகளின் வடிவம் பற்றிச் சிந்திப்பதற்கும் இடங்கொடுக்கின்றன.
   
இந்தக் கதைசொல்லலே கதைகளின் வடிவத்தையும் தீர்மானிக்கின்றன. நவீனத்துவத்தின் சாயலே இல்லாத அதே நேரம் புனைவின் தருக்கத்துக்கு ஏற்ற அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிய வடிவம் முத்துலிங்கத்தின் கதைகளின் வடிவம் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

“அப்படியானால் இவ்வடிவ இலக்கணத்தின் வெற்றி தோல்விகளை எப்படிக் கணிப்பது? இங்கு முதல்விதி, நம்மைச் சுவாரஷ்யப்படுத்தி, நம் கவனம் விலகாமல் கடைசிவரை கொண்டு செல்லப் படைப்பாளியால் முடிந்திருக்கிறதா என்பதுதான். இரண்டாவது விதி, கதை முடிந்ததுமே அதுவரை சொல்லப்பட்டவை அதுவரை அடைந்தவற்றைவிட மேலான அர்த்தத் தளங்களை அடைகின்றனவா என்பது” (15)

எனவே முத்துலிங்கம் புனைவுகளின் வடிவம் என்பது நவீனத்துவ வடிவம் என்று கருதுவதற்கு மாறாக அவரின் மொழியினூடாக வருகின்ற வடிவமாகக் கருதமுடிகிறது.  இவ்விடத்தில்தான் தவிர்க்கமுடியாமல் முத்துலிங்கத்துடன் கி.ராஜநாராயணனையும், நாஞ்சில் நாடனையும் இணைத்துக்கூறவேண்டியிருக்கிறது.
  
முத்துலிங்கத்தின் எழுத்துக்களுக்கு அடிப்படைகளாக பின்வரும் பண்புகளை ஜெயமோகன் முன்வைப்பார்.

1. கதைசொல்லி என்ற இணைப்புச் சரடு
2. வடிவ கச்சிதத்தை நாடாத  சகஜத்தன்மை.
3. புறவயமான உலகை முக்கியப்படுத்துதல் - குறிப்பாக உடலை, நிகழ்வுகளை.
4. படிமமாக்குதல் முதலிய கவித்துவ அம்சங்களில் சிரத்தை இல்லாமை.
5. பண்டைய இலக்கியங்கள் முதலியவற்றை புனைவுடன் கதை சொல்லும்  போக்கில் இணைத்துக் கொள்ளும் ஊடு பிரதித் தன்மை.
6. பொதுவாக உள்ள அங்கதப்பார்வை.(16)

இவையெல்லாம் சேர்ந்து முத்துலிங்கத்தின் எழுத்துக்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாண அடுக்கமைவுகளைத் தீண்டாமல் கதைசொல்லும் நடையை கண்டுகொள்ளலாம். அதாவது யாழ்ப்பாணத்தின் அடுக்கமைவுகளில் மேலோங்கியிருப்பதில் முதன்மையானது சாதியம். ஆனால் அது பற்றிய பதிவுகளை முத்துலிங்கம் தந்திரமாகத் தவிர்த்துவிடுவார். இவை மட்டுமல்லாமல் முத்துலிங்கம் இந்நாவலில் தாண்டிச் செல்லும் வேறு பலவற்றையும் டிசே தமிழன் சுட்டிக்காட்டுவார்.

“இவ்வாறான மிக நுட்பமாய் கதையை எப்படிக்கொண்டு போவது குறித்தும், எப்படி முடிப்பது பற்றியும் அறிந்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் சில இடங்களில் முக்கியமான விடயங்களைக் கூட மிக எளிமையாக மெல்லிய நகைச்சுவையால் கடந்துவிடச் செய்கின்றார். முக்கியமாய் எல்லோரைப் போலவும் அம்மாவில் அதிக பாசம் கொள்கின்ற கதைசொல்லி, அவரது பதின்மூன்றாவது வயதில் ஏற்படுகின்ற அம்மாவின் இழப்பை மிக எளிதாகக் கடந்துபோய்விடுகின்றார். அதேபோன்று 1958 கலவரத்தின்போது கொழும்பில் அகதியாக்கப்படுகின்ற கதைசொல்லி அந்த அத்தியாயத்தோடு சிங்கள தமிழ் பிரச்சினையை மறந்து போய்விடுகின்றார். மீண்டும் இறுதி அத்தியாயங்களில் 'சுவர்களுடன் பேசும் மனிதர்” பகுதியில் மட்டுமே மொழி, ஈழம் பற்றி நினைவூட்டப்படுகின்றன (ஒரு மொழி நீண்ட காலமாய் உயிருடன் இருக்கவேண்டுமாயின், அந்த மொழியை முன்நிலைப்படுத்தும் ஒரு அரசு வேண்டுமென்பது இங்கே வலியுறுத்தப்படுகின்றது) 1983 இனப்படுகொலையின்போது, கதைசொல்லி ஈழத்திலிருந்து ஏற்கெனவே புலம்பெயர்ந்ததால் அதன்பின்னரான காலங்களை எழுதுதல் கடினமென எடுத்துக்கொண்டாலும், கதைசொல்லி நேரடியாகப் பாதிப்புற்ற 58 கலவரம் பற்றிக்கூட மனதில் பதியும் படியாக எழுதிவிடவில்லை என்பதை ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும்.” (17)

ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடம் இருக்கும் புலம்பெயர்வின் காரணமான சோகமும், அவலமும், தாயகநினைவும் இவரிடம் அதேபோல் எதிர் பார்க்கமுடியாதுள்ளது. மாறாக புன்னகை நிறைந்ததாகவும், அதற்குள்ளாக சிறியளவிலான சோகத்துடன் கூடியதாகவும் அமைந்து விடுகின்றன. இவரிடம் தாயக வாழ்வு பற்றிய மீள் நினைவு உள்ளதாயினும், அது மிக ஆழமாக, இந்த மண்ணின் மீதான மானிட வெளிப்பாடாக அதிகம் பதிவு பெறவில்லை. இது மிக முக்கியமான ஒரு குறைபாடாகும். இதற்கு காரணமாக அவரது தொழிலையும் அவரின் வாழ்வுப் பின்னணியையும் கூறிக்கொள்ளலாம். 
  
எனவே தனக்குத்தெரிந்த மனிதர்களை அவர்களின் குணவியல்புகளை அந்த மனிதர்கள் வாழ்கின்ற மண்ணின் பண்பாட்டை தன்னுணர்வாக புனைவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் முத்துலிங்கம். ஒவ்வொரு கணநேரத்தையும் அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். நுண்மையான அவதானிப்பும் வாழ்வு பற்றிய ஏக்கமும் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது. தன்னுணர்வு சார்ந்த கதையாக இருப்பினும் அவற்றைச் சொல்லும் விதத்தில் அழகு இருக்கிறது. மனிதர்களின் குணங்குறிகளை புன்னகையோடு தருகிறார். வடிவம் பற்றிய பிரக்ஞையின்றி கதைகளின் போக்குக்கு ஏற்பவே விட்டுவிடுகிறார். இவையெல்லாம் தமிழில் வந்துள்ள ஏனைய புனைவுகளில் இருந்து வித்தியாசத்தைக் காட்டி நிற்கின்றன.

(யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ் மறைமாவட்டமும் இணைந்து நடாத்திய தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா ஆய்வரங்கு 28.07.2013 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தபோது வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை )

அடிக்குறிப்புகள்

1) அருண்மொழிவர்மன் : “அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது
ஆண்டுகள்” http://arunmozhivarman.com/
2) முத்துலிங்கம்.அ  : 2010, ‘மோனாலிசாவின் புன்னகையின் புகழ்
முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ நேர்காண்டவர் - மதுமிதா, http://madhumithaa.blogspot.com/
3) மேலது 2.
4) முத்துலிங்கம். அ  : ‘மற்றுப் பற்றெனக்கின்றி’, 2007, இதழ் 86, பதிவுகள்
http://www.geotamil.com/pathivukal/
5) முத்துலிங்கம். அ : 2008, உண்மை கலந்த நாட்குறிப்புகள், உயிர்மை
பதிப்பகம். சென்னை, பக் 18.
6) மேலது 5, பக் 41.
7) வரப்பிரசாதம் : ‘மகாராஜாவின் ரயில்வண்டி’, காலம், இதழ் 16, கனடா,
ப. 134.
8) மேலது 5, பக்.26-27.
9) மேலது 5, பக் 13.
10) மேலது 5, பக் 87.
11) மேலது 5, பக் 13.
12) மேலது 5, பக் 33.
13) ஜெயமோகன் : 2003, அமர்தல் அலைதல், தமிழினி பதிப்பகம், சென்னை, ப. 56.
14) மேலது 13. பக். 51.
15) மேலது 13, பக் 72.
16) மேலது 13, பக் 66.
17) தமிழன் டி.சே : 2009, ‘அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் in வாசிப்பு’ http://djthamilan.blogspot.com

உசாவியவை
1) முத்துலிங்கம். அ : 2008, உண்மை கலந்த நாட்குறிப்புகள், சென்னை, உயிர்மை பதிப்பகம்.
2) வெற்றிச்செல்வன்.தெ : 2009, ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்,   சென்னை,சோழன் படைப்பகம்.
3) ஜெயமோகன் : 2003, அமர்தல் அலைதல், சென்னை, தமிழினி பதிப்பகம்.
4) ஜெயமோகன் : 2009, நாவல் கோட்பாடு, சென்னை, கிழக்கு பதிப்பகம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்