இலங்கைக்கு எமது குடும்பங்களைப் பார்வையிட அல்லது உல்லாசப்பயணியாக போகும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு ஆனால் இலங்கையின் உட்பிரதேசங்களுக்குச் சென்று வசதி குறைந்த மக்களுடன் பழகும்போது அவர்களின் வாழ்வாதாரம் குழந்தைகளின் கல்விநிலை பற்றி அறியும் போது எமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு. இலங்கை போன்ற நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். அந்த இடைவெளியில் எந்தவொரு பாலமும் இதுவரை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது மனவருத்தம் தரும் விடயம்.
நான் இலங்கை சென்றபோது நகர்ப்புற வசதி கூடிய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கற்கும் முன்பள்ளி, நடுத்தரக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கற்கும் முன்பள்ளிகள், மிகவும் வசதிகுறைந்த பின்தங்கிய பிரதேசங்களில் கற்கும் குழந்தைகளின் முன்பள்ளிகள் என பலதரப்பட்ட முன்பள்ளிகளுக்கு சென்றிருந்தேன்.
இலங்கையில் இலவசக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ஆரம்ப மற்றும் இடைநிலை, உயர்தர பள்ளிகள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன, இது முன்பள்ளிகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது எந்த உதவிகளும் வளங்கப்படாத நிலையில் உள்ளது. இது குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளை பெரிதும் பாதிக்கிறது.
உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகளில் குழந்தைகளின் மிக முக்கியமான பருவம் முன்பள்ளி பருவமே என்பதை உணர்த்தினர். இதில் மழலைகளின் உடல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை மிக வேகமாக வளர்ச்சி பெறுகின்றன என்பது ஆய்வுகளின் பெறுபேறுகளாகும். மேற்குறித்த விடயங்களை வைத்து முன்பள்ளியின் முக்கியத்தவத்தையும், உலகளாவிய ரீதியில் வியாபித்து உள்ள தன்மையையும் எம்மால் அறிய முடிகிறது.
இந்தநிலையில் இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிடையே பாரிய வேறுபாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. வசதிவாய்ப்புகள், பாடசாலைகளுக்குக் கிடைக்கும் உதவிகள், ஆசிரியர்களின் கல்வித்தராதரம், தத்தமக்கான முன்பள்ளிப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் காட்டும் ஆர்வம், குழந்தைகளை முன்னேற்ற வேண்டும் என்ற பெற்றோர் ஆசிரியர்களின் முனைப்பு போன்ற இன்னோரன்ன பல விடயங்களில் இந்த வேறுபாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமும் பிரதேசங்களுக்கிடையான வேறுபாட்டைக் காட்டுவதால் பின் தங்கிய பகுதிகளில் ஆசிரியர்களின் ஊக்கம் குறைவடைவதற்கு காரணமாகிறது. அத்துடன் இந்த முன்பள்ளிப் பாடசாலைகள் அரச கல்வித்திணைக்களத்தின் கீழ்க் கொண்டுவரப்படும் என்று அரசாங்கத்தால் பல்லாண்டுகாலமாகக் கூறப்பட்டுவரும் நிலையில் அது இன்னும் நிறைவேறாமை கண்டு ஆசிரியர்கள் ஏமாற்றத்தையும் மனத்தளர்வையும் அடைந்துள்ளனர். (அரசாங்கம் முன்பள்ளிகளைப் பொறுப்பெடுப்பதிலுள்ள சவால்கள்: முன்பள்ளிகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் தொகையும் அதிகமாக இருப்பதால் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு அதிக பணம் தேவை) தமக்கான ஒரு நிலையற்ற தன்மை காணப்படும்போது அவர்கள் தாங்கள் ஏன் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற மனப்பாங்கையும் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆயினும் எமது குழந்தைகளின் நலன் கருதி அரும்பாடுபட்டு அவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுன் செயற்பட்டு குழந்தைகளுக்கு சிறிய நாடகங்கள், பாட்டுகள், ஆத்திசூடி போன்ற விடயங்ளை அரங்காற்றல் செய்யக் கற்றுக் கொடுத்தும், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதற்கிணங்க அந்தச் சூழலில் இலகுவாகக் கிடைக்கும் பொருட்களைப் (நிறமூட்டிய காய்ந்த தேங்காய்த் துருவல், சிரட்டை, ஓலை ) பயன்படுத்தி குழந்தைகளைக் கைவேலைகளில் ஈடுபடுத்தியும் வரும் பல ஆசிரியர்களும் குறைந்த ஊதியத்துடன் தரமான கல்வியை வழங்கும் மனப்பான்மை உள்ள ஆசிரியர்களும் இன்னும் வாழ்கிறார்கள் என்பது மகிழ்வைத் தருகிறது. அவர்களை நான் தலை வணங்குகிறேன்.
போதிய நிறப்புத்தகங்களும், (250 ரூபாவில் இருந்து விற்பனை செய்யப் படுகிறது.)விளையாட்டு உபகரணங்களும், விளையாட்டுப் பொருட்களும் இலங்கை நகர்ப்புற கடைகளில் போதியளவு விற்பனை செய்யப்பட்ட போதும், வசதி படைத்தவர்களின் குழந்தைகள் கற்கும் முன்பள்ளிகளில்க்கூட குழந்தைகளுக்கான நல்ல உபகரணங்களோ , நிறப்புத்தகங்களோ விளையாட்டுச் சாமான்கள்களோ(educational toys) காணப்படவில்லை.
"தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்" என்பதற்கமைய ஒவ்வொரு பாடசாலையும் அல்லது நிர்வாகத்தினரும் வசதிபடைத்தவர்களிடமோ அல்லது பொது நிறுவனங்களிடமோ கேட்டுத் தத்தம் பாடசாலைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைதான் அங்கு காணப்படுகிறது. ஆனால் இது நடைபெறுவதாகத் தெரியவில்லை. இது அங்குள்ள மனப்பாங்கு என்று கூறலாம்.
இப்படிப்பட்ட வசதிகளை இலங்கையின் உட்புறக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வது பெரிய சவாலான விடயமாக இருந்த போதும் போர்க் காலங்களின் பின் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் (NGO's) இந்தப் பகுதிகளுக்குச் சில உதவிகளை வழங்கி வந்தமை அறியப்பட்ட போதும் அந்த நிறுவனங்கள் தற்போது இல்லாத நிலையில் பல நடுத்தர முன்பள்ளிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் பின்தங்கிய போக்குவரத்து வசதிகளற்ற பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க FACE போன்ற நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளது. குழந்தைகள் கல்வி கற்கும் போது, குடும்ப, சமூக பொருளாதாரச் சிக்கல்களுக்குள் அகப்பட்டு தமது வளமான எதிர்காலத்தைச் சீர் குலைக்காமல் அவர்களைக் காப்பாற்றுகிறது. அவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள், நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும், அவர்கள் தமக்கென ஒரு வளமான எதிர்காலத்தை அமைப்பதற்கும் அதில் முதலீடு செய்வதற்கும் இந்த நிறுவனங்கள் உதவுகின்றன.
மேலும் கல்வி என்பது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், எல்லா குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலம், வாழ்க்கைத் தரம் மற்றும் வேலை ஆகியவற்றை வழங்குவதற்கும் முக்கியமானது. தரமான ஆரம்பக் குழந்தைக் கல்வியானது, நல்ல பழக்கவழக்கங்களைக்கற்றுக் கொள்வதற்கும், சமூக வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. அத்துடன் அறிவு, தன்னம்பிக்கை மற்றும் மேலதிக உயர்கல்விக்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு வழங்குவதற்கான அடித்தளத்தை உருவாக்குகிறது.
இலங்கைப் பழங்குடி மக்களின் குழந்தைகள், இளம்பராயத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மாரின் குழந்தைகள் போன்ற பல தரப்பினரின் குழந்தைகளுக்கு FACE நிறுவனம் உணவும் உடையும் வளங்கி அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைச் செய்து முன்பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வந்து அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகின்றது. இந்தப் பிரதேசங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். துணிச்சலுடனும் திடசங்கல்ப்பத்துடனும் விடாமல் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் இலங்கையில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது.
இப்படியான நிறுவனங்கள் மேலும் பல முன்பள்ளிகளை அமைத்து குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் ஈடுபட எல்லோரும் உதவ வேண்டும் என்பது எனது பேரவா.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியுரிமை உண்டு எனவே வெளி நாடுகளில் வாழும் நண்பர்களும் இலங்கையில் வாழும் வசதி படைத்த மக்களும் நலம் விரும்பிகளும் இந்தப் பாடசாலைகளுக்குத் தேவையான தரமான பொருத்தமான புத்தகங்களையும் விளையாட்டு உபகரணங்களையும், குழந்தைகளைக் கற்றலில் ஈடுபடுத்தக்கூடிய விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதன்மூலம் நம் நாட்டில் வாழும் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெற்று தன்னம்பிக்கையுடன் வளமான வாழ்வை அமைக்க உதவுவோம்.
bhawany65@gmail.com