இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் புலம்பெயர்ந்து சென்றார்கள். தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருந்தன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும், அவர்கள் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் கனடியத் தமிழ் புதினங்களாகக் கணிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கனடியத் தமிழ் இலக்கியத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. காரணம் தாயகத்து எழுத்தாளர்களால் சொல்லத் தயங்கிய பல விடையங்களை இந்தப் புதினங்கள் இந்த மண்ணில் துணிவோடு எடுத்துச் சொன்னது மட்டுமல்ல, புகுந்த மண்ணின் புதிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கின. கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் புதினங்கள் வெளிவருமா என்பது சந்தேகத்திற்குரியதே!
கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்திற்கு இந்த மண்ணில் இந்தத் தலைமுறையினர் ஆதரவு கொடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நாங்கள் அரும்பாடு பட்டுக் கட்டி வளர்த்த கனடிய தமிழ் இலக்கியம் ஒரு தேக்க நிலையை அடைந்து விடும் என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே இங்குள்ள தமிழ் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். சிறுவர் இலக்கியத்தில் தேக்க நிலை ஏற்பட்டால், கனடியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி குன்றிவிடும். அதுவே எதிர்காலத்தில் கனடிய தமிழ் இலக்கியத்தின் அழிவிற்கு வழி கோலிவிடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை நாம் மறக்கக்கூடாது. எங்கே சிறுவர் இலக்கியம் செழித்து வளர்கிறதோ அங்கே அந்த இனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது வரலாற்று உண்மை.
அடுத்து வாசகர்களைப் பற்றிப் பார்ப்போம். யாருக்காக எழுதுகின்றோம் என்பது இங்கே முக்கியமானது. எழுத்து என்பது எவ்வளவு வாசகர்களைச் சென்றடைகின்றது என்பதைப் பொறுத்தது. சிற்றிலக்கியப் பத்திரிகையில் வெளிவருவதைவிட வர்த்தகப் பத்திரிகையில் வெளிவந்தால் லட்சக்கணக்கான வாசகர்களை இலகுவாகச் சென்றடைகின்றது. வாசகர்களில் பலவிதமானவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் ரசனையும் வித்தியாசமானவை. ஆனால் 90 வீதமான வாசகர்கள் மனதிற்கு இதமான மகிழ்வான விறுவிறுப்பான கதைகளையே விரும்புகின்றார்கள் என்பதை நான் விகடனில் வெளிவந்த நீர்மூழ்கி நீரில் மூழ்கி என்ற எனது குறுநாவல் மூலம் அறிந்து கொண்டேன்.
இனி கனடிய தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வருவோம். புலம்பெயர்ந்த கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்கள் என்று குறிப்பிடும் போது ரொறன்ரோவில் அவர்கள் வெளியிட்ட அல்லது அறிமுகம் செய்த நாவல்கள் சிலவற்றைக் குறிப்பிட முடியும். எனக்குக் கிடைத்த, நான் வாசித்த, என் நினைவில் நிற்கும் சில நாவல்களைப் பற்றி மட்டுமே நான் இங்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். இன்னும் பலர் புதினங்களைக் கனடாவில் வெளியிட்டிருக்கலாம், அல்லது தொடராக எழுதியிருக்கலாம். ஆனால் ஆய்வுரைக்காகவோ, அல்லது எனது பார்வைக்காகவோ யாராவது எனக்கு நாவல்களை அனுப்பியிருந்தால் அப்படி என்னால் அறியப்பட்ட அவற்றை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகின்றேன். கனடிய தமிழ் புதினங்கள் என்ற முக்கிய கட்டுரை எழுதப்படும்போது இங்கே குறிப்பிடும் பெயர்கள் ஏதாவது தவற விடப்பட்டிருந்தால் இவற்றையும் அக்கட்டுரையில் இணைத்துக் கொண்டால் ஒரு ஆவணமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இதைக் குறிப்பிடுகின்றேன். ஏனைய கனடிய புதினம் எழுதிய எழுத்தாளர்களும் தங்கள் விபரங்களைக் கொடுத்து உதவினால் கனடியப் புதினங்கள் பற்றிச் சிறந்த நிறைவான ஒரு ஆவணமாகப் பதிவதற்கு வாய்ப்பாக இருக்குமென நம்புகின்றேன்.
தேடலில் உள்ள ஆர்வம் காரணமாக கனடாவில் நாவல் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள சிலரிடம் சில தகவல் கேட்டிருந்தேன். ஒரு சிலர் மட்டும் அக்கறை எடுத்துத் தகவல் தந்திருந்தனர். அவற்றைக் கீழே தருகின்றேன். அவர்களில் கனடிய எழுத்தாளர் அகில் அவர்கள் குறுகிய காலத்தில் எல்லா விபரங்களும் சேகரிக்க முடியவில்லை என்பதைக் குறிப்பிட்டு, தனக்கு அறிமுகமான கனடிய நாவல் எழுத்தாளர்கள் சிலரின் பட்டியலைக் கொடுத்திருந்தார். அவர்களின் பெயர்களை இங்கே தருகின்றேன்.
தேவகாந்தன், குரு அரவிந்தன், கே.எஸ்.பாலச்சந்திரன், குறமகள், அ.முத்துலிங்கம், செழியன், வ.ந.கிரிதரன், அகில், மெலிஞ்சி முத்தன், சிவநயனி முகுந்தன், இரா.சம்பந்தன், ரவீந்திரநாதன், பசுந்தீவு கோவிந்தன், மனுவல் ஜேசுதாசன், பொன் குலேந்திரன், தமிழ் நதி, கமலாதேவி பெரியதம்பி சரஸ்வதி அரிகிருஸ்ணன் (மலேசியா) விஜயா ராமன் (புதுவை) இவர்களைவிட இசைப்பிரியன், வீணைமைந்தன், இரா,தணி, டானியல் ஜீவா, சக்கரவர்த்தி போன்றவர்களின் தொடர்களைப் பத்திரிகைகளில் வாசித்த ஞாபகம் இருக்கின்றது, நாவலின் பெயர் தெரியவில்லை. இவற்றில் சில நூல் வடிவில் வெளிவந்தனவா தெரியவில்லை.
எதுவரை.நெட் என்ற இணையத்தளத்தில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் கே.எஸ். சுதாகர் கனடிய புதினங்கள் பற்றிக் குறிப்பிட்ட சில பகுதிகளை முதலில் இங்கே தருகின்றேன். கனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். தேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை ‘திருப்படையாட்சி’(1998), ‘வினாக்காலம்’(1998), ‘அக்னி திரவம்’(2000), ‘உதிர்வின் ஓசை’(2001), ‘ஒரு புதிய காலம்’(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட ‘கனவுச்சிறை’ என்ற நாவலாகத் தந்திருக்கின்றார். இவரது ‘யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்’ என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது. ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற படைப்பை அ.முத்துலிங்கம் எழுதியுள்ளார். எண்ணற்ற பல நல்ல சிறுகதைகளைத் தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவு சார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும் என்று கே. எஸ்.சுதாகர் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், ‘மறைவில் ஐந்து முகங்கள்’ (2004), ‘கனடாவில் சாவித்திரி’ (2003), ‘சிவப்பு நரி’ (2004) என்பன கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள். மற்றும் மண்ணின் குரல் (*வன்னி மண், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும், மண்ணின் குரல் & கணங்களும், குணங்களும் ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு) , ‘அமெரிக்கா’ என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் - ‘திசை மாறிய தென்றல்’, ‘கண்ணின் மணி நீயெனக்கு’ நாவல்களை எழுதிய அகில் - ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ (2009) எழுதிய கே.எஸ்.பாலசந்திரன் - ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ (2006), ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர். – என்று எழுத்தாளர் கே.எஸ். சுதாகர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நூல் வடிவத்தில் வெளிவந்த குரு அரவிந்தனின் நாவல்கள் பற்றிப் பதிவுகள் இணையத் தளத்தில் வெளிவந்த முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களின் ஆய்வுரையில் இருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.
உறங்குமோ காதல் நெஞ்சம்: ‘உறங்குமோ காதல் நெஞ்சம்?’ (2004) என்ற முதல் நாவல் ஈழத்தின் விடுதலைப்போராட்டச் சூழலின்; பின்புலத்திலான சமூக அவலங்களையும் நம்பிக்கைத் துரோகம் விளைவிப்பவர்களின் செயற்பாடுகளையும் கூறுவது. போராட்டச்சூழலில் பாதிப்புற்ற பெண்களின் பிரச்சனைகளையும் மையப்படுத்தி அமைந்த கதையம்சங் கொண்டது இது. உன்னருகே நானிருந்தால்: வடஅமெரிக்க – கனடியச்சூழ்களில் வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுப் பிரச்சனைகளை மையப்படுத்தியவையாகும். காதல், குடும்ப உறவுகளில் திருமணம் முடித்தல் என்பன தொடர்பாக எழும் பண்பாட்டுப் பிரச்சினைகள் இவற்றில் கதையம்சங்களாக விரிகின்றன.
எங்கே அந்த வெண்ணிலா: உணர்ச்சிகளை மோதவிட்டு அவற்றின் முரண்பாடுகளுக்கிடையிலே கதையம்சங்களைச் சுவைபட வளர்த்துச் செல்லும் ஒரு சிறந்த எழுத்தாக்க முறைமையை இவற்றில் நாம் காண்கிறோம். குருஅரவிந்தன் அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட கதையம்சத்தைச் சுவைபட வளர்த்துச் சென்று எதிர்பாராத முடிவுகளோடு நிறைவு செய்யக் கூடியவர் என்பதை மேற்படி நாவல்கள் உணர்த்தி நிற்கின்றன.
நீர் மூழ்கி நீரில் மூழ்கி.. : நீர்மூழ்கி நீரில் மூழ்கி… என்ற குறுநாவலின் கதையம்சமானது, ‘நீர்மூழ்கி’ சம்பந்தமான இராணுவ இரகசியங்கள் வெளிப்படாதிருப்பதற்காக அதிகாரமட்டத்திலிருப்பவர்கள் மேற்கொண்ட சில அணுகுமுறைகள் தொடர்பானதாகும். இத்தொடர்பில,; நடுநிசி 12மணி ஒருநிமிடத்திலிருந்து மறுநாள் பின்நேரம் 6மணிவரை, அதாவது 18மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற சம்பவங்களையும் எண்ண ஓட்டங்களையும் மையப்படுத்தி இதன் கதையம்சம் விரிகிறது. ஆனந்தவிகடனில் வெளிவந்த இக் குறுநாவல் பல லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்ததும் குறிப்பிடத்தக்கது. சஞ்சிகைகளில் தொடராக வெளிவந்த குரு அரவிந்தனின் புதினங்கள் பற்றி இங்கே குறிப்பிடுகின்றேன்.
தாயுமானவர் (குறுநாவல்) : தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த தமிழ் பத்திரிகையான கலைமகள் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவுக் குறுநாவல் போட்டியில் 2 ஆம் பரிசு பெற்ற கதை. ஈழத்துச் சூழலில் இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களைப் பற்றிய ஆவணமாக அமைந்த இக்கதை தமிழகத்தில் பலரின் பாராட்டையும் பெற்றிருந்தது. இப்போட்டிக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் திருமதி டாக்டர் லட்சுமி அவர்கள் முதன்மை நடுவராக இருந்தார்.
அம்மாவின் பிள்ளைகள் (குறுநாவல்) : தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி நடத்திய குறுநாவல் போட்டியில் 2ஆம் பரிசு பெற்ற குறுநாவல். போர்ச் சூழலில் புலம் பெயர்ந்த ஒரு தாயின் பரிதாபக் கதை. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திருமபிச் செல்ல முடியாது பரிதவித்து உயிர் துறந்த ஒரு தாயின் பரிதாபக் கதை. இப்போட்டிக்குப் புகழ்பெற்ற தமிழக எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் முதன்மை நடுவராக இருந்தார்.
சொல்லடி உன் மனம் கல்லோடி (நாவல்) : ஆடற்கலையைக் கருப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம். கனடிய இந்திய கலைஞர்கள் பங்குபற்றித் திரைப்படமாக எடுக்கப்பட்ட இக்கதை குரு அரவிந்தனின் திரைக்கதை வசனத்தில் சிவரஞ்சனி என்ற பெயரில் வெளிவந்து பலரின் பாராட்டையும் பெற்றது. இந்த நாவல் ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ’ என்ற பெயரில் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. நாவல்கள் படமாக்கப்பட்ட வரிசையில் குரு அரவிந்தனின் சிவரஞ்சனியும் இடம் பெற்றது.
என்ன சொல்லப் போகிறாய் (நாவல்) : இந்த நாவல் மொன்றியலில் இருந்து வெளிவரும் இருசு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்களை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.
குமுதினி (குறுநாவல்) : குமுதினி என்ற படகில் சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை ஆவணப்படுத்தும் குறுநாவல். கனவுகள், கற்பனைகளோடு அந்தப் படகில் சென்ற அப்பாவிகளுக்கு என்ன நடந்தது? தமிழர்களாகப் பிறந்ததற்காக அவர்கள் பழிவாங்கப்பட்டார்களா? அந்த இழப்பிற்கு யார் பதில் சொல்வது? எஸ்.பொ.வின் பெரு முயற்சியால் வெகுவிரைவில் வெளிவர இருக்கும் ஈழத்தமிழரின் குறுநாவல் தொகுப்புக்காக எழுதப்பட்டது.
ஒரு பதிவுக்காக சில விபரங்களைப் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன் என்று பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் வ. ந. கிரிதரன் அவர்கள் பதிவுகள் இணையத்தளத்தில் கனடிய புதினங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது:
‘அமெரிக்கா’ என்ற எனது (வ. ந. கிரிதரன்) சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிக்கும். ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்று பதிவுகள், திண்ணை ஆகிய இதழ்களில் வெளியான எனது தொடர்நாவல் தற்போது பதிவுகள் இதழில் 'குடிவரவாளன் (An Immigrant) என்னும் பெயரில் மீள்பிரசுரமாகியுள்ளது. இது முழுக்க முழுக்கத் தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை விபரிப்பது. அடுத்து, ஆகஸ்ட் 2001 இதழ்-20 முதல் ஏப்ரல் 2002 இதழ் 28 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான மைக்கலின் நாவல் ‘ஏழாவது சொர்க்கம்’. இந்நாவலும் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட வேண்டியதொரு படைப்பு. அடுத்து கடல்புத்திரனின் நாவல்களான ‘வேலிகள்’ மற்றும் ‘வெகுண்ட உள்ளங்கள்’ ஆகிய நாவல்கள் தாயகம் (கனடா) சஞ்சிகையில் தொடராக வெளிவந்தவை. பின்னர் இந்நாவல்களும், சிறுகதைகளும் அடங்கிய தொகுதி ‘வேலிகள்’ என்னும் பெயரில் குமரன் பப்ளீஷர்ஸ் (தமிழ்நாடு) பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. கமலாதேவி பெரியதம்பி: தாயார் தந்த தனம் (நாவல் நூலாக வெளிவந்துள்ளது). அ.கந்தசாமி: கவிஞர் ‘கந்தசாமி’ என்றழைக்கப்படுபவர். இவரது நாவல்கள் செந்தாமரை (பின்னர் மஞ்சரி பத்திரிகைகளில் ‘நான்காவது பரிமாணம்’ ஆகியவற்றில் மிள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அக்கினித்தாமரை என்றொரு தொடர்கதை என்று ஞாபகம். – என்று குறிப்பிடுகின்றார்.
கனடிய புதினங்கள் பற்றிய தேடுதலின்போது, நூல் வடிவில் எனக்குக் கிடைத்த, கனடிய நாவல்களின் பெயர்களையும் எழுதாளர்களின் பெயர்களையும் இங்கே தருகின்றேன். 90 நாட்கள் - மனுவல் ஜேசுதாசன், லங்காபுரம் - தேவகாந்தன், விதி – தேவகாந்தன், கனவுச்சிறை - தேவகாந்தன், கதாகாலம் - தேவகாந்தன், குதிர்காலக் குலாவல்கள் - குறமகள், மிதுனம் - குறமகள், மண்ணின் குரல் (*வன்னி மண், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும், மண்ணின் குரல் & கணங்களும், குணங்களும் ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு) - வ.ந. கிரிதரன், அமெரிக்கா – வ.ந. கிரிதரன், நானும் ஒரு தமிழ் பெண்தான் - சரஸ்வதி அரிகிருஸஷ்ணன், கண்ணின் மணி நீயெனக்கு – அகில், திசைமாறிய தென்றல் - அகில், கரையைத்தேடும் கட்டுமரங்கள் - கே. எஸ். பாலச்சந்திரன், ஒரு போராளியின் நாட்குறிப்பு - செழியன், உறங்குமோ காதல் நெஞ்சம் - குரு அரவிந்தன், உன்னருகே நானிருந்தால் - குரு அரவிந்தன், எங்கே அந்த வெண்ணிலா - குரு அரவிந்தன், நீர் மூழ்கி நீரில் மூழ்கி - குரு அரவிந்தன். இதைவிட சிவநயனி முகுந்தன் என்னும் எழுத்தாளர் வேல்விழியாள் மறவன் என்ற நாவலைக் கனடாவில் வெளியிட்டிருக்கின்றார். கனடிய தமிழ் புதினங்கள் என்ற முடிவான கட்டுரையில் மேற்கூறியவற்றையும் இணைத்துக் கொள்வது சிறப்பாக அமையும்.
நேரம் கருதி இந்த நாவல்களைப் பற்றிய முழுமையான விபரங்கள் இங்கே தரப்படவில்லை. இங்கே உள்ள புதினம் எழுத்தாளர்களின் பெயர்கள் எல்லாம் தகுந்த முறையில் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்பதையும் முக்கியமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் கனடிய தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய முழுமையான, ஆரோக்கியமாக கட்டுரை ஒன்று இலக்கிய ஆர்வலர்களைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒற்றுமையாகச் செயற்பட்டால் இன்னும் பல சாதனைகளைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.
கனடிய தமிழ் இலக்கியத்தில் புதினங்களின் பங்களிப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக எனக்குக் கிடைத்த இத்தகவலை இங்கே குறிப்பிடுகின்றேன். இன்னும் சிலர் நாவல் முயற்சியில் கனடாவில் இருந்து ஈடுபட்டிருக்கலாம், குறுகிய காலத்தில் அவற்றைப் பெறமுடியவில்லை. தவறுதலாக யாருடைய பெயர்களாவது விடுபட்டிருக்கலாம், எனவே அவர்களின் பெயர்களையும் அறியத்தந்தால், கட்டுரையில் இணைத்துக் கொண்டால் இக்கட்டுரை முழுமை பெற்றதாக அமையும். இந்த வாசிப்புக்கு எனக்குச் சந்தர்ப்பம் தந்த, மாதாந்த இலக்கியக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்த ரொறன்ரோ தமிழ் சங்கத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.