1
ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இருபத்துமூன்று பெண் படைப்பாளிகளின் நாற்பத்திரண்டு கதைகள் அடங்கிய இத் தொகுப்பு, அதன் தொகுப்பாகிய தேவை விதந்துரைக்கப்பட்ட அளவுக்கு, அதன் உள்ளுடன் விசாரிக்கப்படவில்லை. அது தொகுப்பின் சிறுகதைகள் சமகால இலக்கிய கட்டுமானம் சார்ந்ததும், விஷயம் சார்ந்ததுமான காத்திரத்தன்மை அற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.
இலங்கைப் படைப்புகள் குறித்து விசேஷ கவனம் எனக்கு இருந்தவகையில் ஏப்ரலில் நூல் கையில் கிடைத்ததுமே வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பில் அதன் மொழி சார்ந்ததும், கட்டுமானம் சார்ந்ததுமான கூறுகளின் பின்னடைவு இருந்தபோதும், தொகுப்பு குறித்து எழுதவேண்டுமெனத் தென்பட்டது. ஆயினும் எழுத காலம் தாழ்ந்ததில் நான் மதிப்புரை செய்த பல நூல்களுக்கும்போல ஓர் இரண்டாம் வாசிப்பைச் செய்ய நேர்ந்தது. அப்போது அடைந்த வாசிப்புச் சுகம் அலாதியானது. கட்டாயம் அதை எழுதவேண்டுமென்ற தூண்டுதல் மேலும் வலுத்தது.
2
இந்த இரட்டை வாசிப்பென்பது சிலசமயம் ஒரு விமர்சகனைப் பொறுத்தும், சிலசமயம் ஒரு பிரதியைப் பொறுத்தும் முக்கியமான விஷயமாகிவிடுகிறது. ஒரு ஒற்றை வாசிப்பு சில பிரதிகள்பொறுத்து தரநிர்ணயத்தில் சறுக்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. உண்மையில் நேர்த்தியான தொகுப்பொன்றுக்கு அது எவ்வகையிலும் நியாயம் செய்ததாகாது. மௌனங்கள் ஒருவகையில் எதிர்த் திசையை வலு கொண்டவையாக மாற்றிவிடுகின்றன.
ஒரு பிரதியின் அர்த்த, வடிவ பரிமாணத்தைப்போலவே அதன் மதிப்பாய்வில் வாசிப்புச் செயற்பாடானதும் வலுபான பாத்திரத்தை வகிக்கின்றது. அதில் முந்திய வாசிப்பிலிருந்த பிரதிக்கும், தற்போது வாசிப்புக்குள்ளாகியிருக்கும் பிரதிக்கும் இடையிலான நடை, மொழி, பொருள், கருத்துநிலை குறித்த ஒத்திசைவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எப்போதும் ஒரு பிரதியின் வாசிப்புத் தருணம் ஒன்றுபோல் இருப்பதில்லைதலால், இந்த ஒத்திசைவின் மாறுபாடு தரத் தீர்மானத்தில் தவிர்க்கமுடியாத ஆற்றலோடு செயற்படுகின்றது. அதனால்தான் பெரும்பாலான சமயங்களில் பெரும்பாலான பிரதிகள் மேலும் மேலுமான வாசிப்பை மதிப்பாய்வுச் செயற்பாட்டில் அவசியமாக்குகின்றன.
ஒரு பிரதிக்குள் நுழைந்து மேற்கொள்ளப்படும் மதிப்பாய்வானது திறனாய்வுரீதியாகவும் ஆய்வுரீதியாகவுமென இரு பெரும் பகுப்புகளில் சீர்தூக்கப்படுகின்றது. தன் கால இலக்கியப் போக்குடனும் பிரதிகளுடனும் ஒப்புநோக்கிய தர நிர்ணயத்தை திறனாய்வுப் பார்வை மேற்கொள்கையில், அதை வரலாற்றினடியிலானதாக ஆய்வுரீதியான பார்வை புரிகிறது. இதில் இன்னொரு பாங்கும் செயற்படுவதைக் கவனிக்கவேண்டும். எழுதப்படா ரசனை விதிகளினை இந்த முதற் பகுப்பு முக்கியமானதாகக் கருதுகையில், எழுதப்பட்ட ஆய்வு விதிகளுக்கமையவும், கருதுகோள்களுக்கு அமையவுமாக தன் வினையை இரண்டாம் பகுப்பு புரிகின்றது என்பதேயது.
‘மலையகா’வின் மதிப்பாய்வில் இந்த இரண்டுவிதமான பார்வைகளுமே முக்கியமானவை. அதன்படியே செயற்படுத்தவும் பட்டுள்ளன.
3
பொதுவாக இவ்வாறான தொகுப்புகளை கால அடிப்படையில் செய்வார்கள். கதைகள் எடுத்துக்கொண்ட பொருள்களின் அடிப்படையிலும் செய்யப்படுவதுண்டு. ‘மலையகா’ தொகுப்பு எந்த அடிப்படையில் செய்யப்பட்டதென்பதற்கான எந்த சூசகமும் பிரதியில் இல்லை. ஆனால் கதைகளின் அடியில் வரும் வெளியீட்டுக் காலம் (ஒரு கதை தவிர்ந்து) ஆய்வுரீதியான பார்வைக்கு உதவுகின்றது.
மலையக பெண் படைப்பாளிகளின் தொகுப்பென்பதால் மலையகத்தின் பல்வேறுபட்ட படிநிலைகளிலுள்ள பெண்ணினத்தின் குரலின் பதிவாக இதைக் கொண்டுவிடக் கூடாது. மாறாக, இது சமூகத்தில் உயர்நிலையிலுள்ள பெண்கள் பார்வையில் மலையக வாழ்வு காணப்பட்ட வழிப் புனைவுகள். அவற்றுள் பலவும் குடும்பப் பெண்கள் எதிர்கொள்ளும் ஆண்களின் போதைப் பழக்கத்தையும், பிள்ளைகளின் கல்வியில் கரிசனமற்ற போக்குகளையுமே விமர்சிக்கின்றன.
குடும்ப வாழ்வுக்குத் தேவையான அம்சங்களில் குவிக்கப்பட்ட கவனமளவு, அவற்றுக்கு மூலமான தொழிற்சங்கரீதியானவோ அரசியல்ரீதியானவோ காரணங்கள் கதைகளில் விசாரிக்கப்படவில்லை. குடும்பரீதியாகவும் சமூகரீதியாகவும் பாதிப்படைந்த தனிமனித சிக்கல்களும், அகவுணர்வுப் போராட்டங்களும் தொகுப்பில் பதிவாகவில்லை. இதையொரு குறைபாடாகக் கூற முடியாவிடினும், தொகுப்பின் தன்மையை இது வெளிப்படக் காட்டிவிடுகிறது. இங்கிருந்துதான் கதைகளின் தரத்தை எடைபோட ஒரு விமர்சகன் முயலவேண்டும்.
இத் கொகுப்பிலுள்ள இருபத்து மூன்று படைப்பாளிகளில் இருபது பேர் ஆசிரியைகள். அது அறிவுறுத்தல் அல்லது போதனை சார்ந்ததாய், ஓங்கிய குரல்கொண்டதாய் தொகுப்புக் கதைகள் அமைந்திருக்கலாமோவென்ற எண்ணத்தை ஒரு வாசகர் சந்தேகப்படவே செய்வார். ஆனால் தொண்ணூறு வீதமான கதைகள் அவ்வாறில்லையென்பது ஆச்சரியமான விஷயம்.
புறவுலகின் அநியாயங்களினால் தொழிலாளர் அடையும் மனக் கொதிப்புகள், காலகாலமான தொடர் அனுபவங்களின் நம்பிக்கையீனத்தால் நீர்த்துப் போவதையே பல கதைகளின் பொதுப்பண்பாகவும் காணமுடிகிறது.
இவற்றிலிருந்துமே, தம் ஆரவாரமற்ற யதார்த்த நடையின்மூலம் சில கதைகள் உச்சமடைகின்றன. அதையே தொகுப்பின் வெற்றியாகவும் நான் கருதுகிறேன்.
முதலில் பொதுப்பண்புக் கதைகள்பற்றிப் சிறிது பார்த்துவிட்டு, பின்னால் மற்றவற்றைக் கவனிக்கலாம்.
4
தொகுப்பின் இரண்டாவது கதையான ரோஹிணி முத்தையாவின் ‘சட்டி சுட்டுவிடும்’ என்ற கதையில் இப் பொதுப்பண்பின் ஆழ் தடத்தைக் காணமுடியும்.
பாம்பு கடித்து விஷமேறிய தோட்டத் தொழிலாளி கன்னையா, உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல வாகன வசதியில்லாததால் மரணிக்க நேர்கிறான். அவ்வாறான அடிப்படை வசதிகளைக்கூட செய்துகொடுக்க முடியாத தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தோட்டமே திரண்டெழுகிறது. வேலைநிறுத்தம் செய்வதென தீர்மானமெடுக்கிறது. ஆனால் எழுச்சிகளின் கடந்தகால தோல்விகளினடியாக தோட்டத் தொழிலாளி மாணிக்கம் எடுக்கும் முடிவானது தோட்டத் தொழிலாளிகளின் தீர்மானத்துக்கு எதிரானதாகயிருக்கிறது.
‘இதெல்லாம் அந்தநேரத்துக்கு எழும்பும் கொதிப்பு. அது உடனே அடங்கிவிடும் அல்லது அடக்கப்பட்டுவிடும் என்பது புரிந்தவனாய் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருக்கும் கூட்டத்தினின்றும் விலகி நடக்கிறான் மாணிக்கம்’ என்று கதையின் முடிவில் வரும் வரிகள் அவனது மனநிலையைத் தெளிவாகக் காட்டிவிடுகின்றன.
அது, வாழ்வில் மனிதன் அடையக்கூடாத அவநம்பிக்கையைக் காட்டுவதாயினும், நடப்புகளின் எதார்த்த நிலைமையை விளக்கமாய் வௌிப்படுத்திவிடுகிறது. அதனால் சிறுகதையும் சொல்லவேண்டியதைச் சொல்லி ஒரு முழுமையை அடைகிறது
தொகுப்பிலுள்ள பாலரஞ்சனி சர்மாவின் ‘பசி’ கதையும் ஏறக்குறைய இவ்வாறானதே. ரோஹிணி முத்தையாவின் கதை ‘சட்டி சுட்டுவிட, கை விட்டுவிடும்’ என்ற தரிசனத்தைப் பேசியதுபோல், ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்ற நடைமுறையை ஆதாரம்கொள்கிறது இக் கதை.
பிரமிளா பிரதீபனின் ஐந்து கதைகள் இத்தொகுபிலுள்ளன. அவற்றில் ‘சஞ்சும்மா’வும், ‘பக்கி’யும் குறிப்பிடக்கூடியன. ‘சஞ்சும்மா’ ஒரு பசுவினதும், ‘பக்கி’ ஒரு நேர்த்திக்குவிட்ட கோழியினதும் கதைகள். சிறுவர்களின் வளர்ப்புப் பிராணிகளின் மேலான அன்பை இரண்டு கதைகளும் அழகாக படம்பிடித்துக் காட்டுகின்றன. தொகுப்பின் பல அர்த்த பரிமாணத்திற்கு வலுவும் சேர்க்கின்றன.
அவரது ‘கூலி’ கதை இன்னொருவகையானது. அடங்கி ஒடுங்கிப் போகும்படியான மனநிலை வார்பட்டுப் போனவர்களில் ஒரு புதிய தலைமுறையினரின் எதிர்ப்பை சலசலப்பற்றுக் காட்டுகிறது.
காட்டில் விறகு வெட்டிக்கொண்டுபோய் நாட்டுக்குள் கொடுத்து பணம் வாங்குவது அந்தச் சிறுவர்களின் வேலை. அவர்கள் அன்று வெட்டிய விறகுகளைக் கொண்டுபோய் பியதாச வீட்டில் போடுகிறார்கள். விறகில் நொட்டை சொல்லி கூலியை குறைத்துக் கொடுக்கிறாள் பியதாச மனைவி. ஒரு சிறிய மனத்தால் அதை ஏற்க முடிவதில்லை. தனக்கு காசு வேண்டாமென்றுவிட்டு விலகிப் போகிறது அது.
அதுமாதிரியான தார்மீகக் கோபங்கள் முக்கியமானவை.
அந்தக் கோபம் ரௌத்திரம் பழகிய தலைமுறையின் கோபம்.
இவற்றிலிருந்து தொடரும் புனைவுக் கோலம் பல்வேறு வகைப்படுகிறது.
இனக் கலவர காலத்தில் தமிழரின் வீட்டைக் காக்க முயற்சிக்கும் சிங்கள இளம்பெண், தன் இனத்தாரையே எதிர்க்க நேர்வதில் வீட்டோடு சேர்த்து அவளும் எரியூட்டப்படும் கொடுமையைச் சொல்லும் ‘நினைவில் நீங்காதவள்’, மற்றும் சுனாமிப் பேரலைக் காலத்தில் விளைந்த சோகத்தை விளக்கும் ‘சமவெளிச் சிகரம்’போன்ற கதைகளும் தொகுப்பிலுள்ளன.
இவ்வாறு காலத்தைப் பதிவாக்குவதுபோல், அரிய வரலாற்றுத் தகவல்களையும் சில கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன. ‘வேண்டும் ஒரு பதில்’ சிறுகதையில் ஒரு முக்கியமான பதிவுண்டு. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இலங்கையில் ஜப்பானியரின் குண்டு வீச்சைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளிலிருந்த பலர் மலையகத்தில் சென்று குடியேறினார்களென்றும், அவ்வாறு குடியேறிய ஒரு குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைக் குடும்பமே நெய்னா மம்மது குடும்பமென்றும் கூறுகிறது அது (பக்: 137).
ஆக முந்தியதாக 1978க்கும் ஆகப் பிந்தியதா 2015க்கும் இடைப்பட்ட முப்பத்தேழு ஆண்டுக் கால கதைகளின் ஒரு தொகுப்பில் கலைத்துவ வீச்சற்றவையானாலும் சில கதைகள் பதிவாக இடம்பெற்றுவிடுகின்றன. இவை பிரதியின் நடை மற்றும் அர்த்த வியாபகத்தில் பழைமையாய் தேங்கிநிற்கின்றன. ரசனை அதில் காண்கின்ற வேளையில், வளர்ச்சியின்மையின் அடையாளமாகவும் தென்படுவதை மறுப்பதற்கில்லை.
இனி முக்கியமானவையாக எனக்குத் தென்பட்ட இரண்டொரு கதைகளைப் பார்க்கலாம்.
5
அரபா மன்சூரின் ‘வேண்டும் ஒரு பதில்’ (1994) கதை தொகுப்பில் முக்கியமானது. அதிலும் காட்டப்படுவது கோபத்தில் விளையும் ஒரு எதிர்ப்புச் செயற்பாடுதான். அதில் அந்தக் கோபம் ஒரு குடும்பப் பெண்ணிடத்தில் விளைகிறது. அதிலும் அவள் ஒரு முஸ்லீம் பெண்ணாகயிருக்கிறாள்.
செலயம்மா- மைமூன்- நெய்னா மம்மது ஆகிய மூன்று பாத்திரங்கள்கொண்ட ஒரு குடும்பத்தின் உணர்ச்சி வெடிப்பு இந்தக் கதை. சரியாகச் சொன்னால் இது செலயம்மாவென்ற அக் குடும்பத் தலைவியின் கதையே.
கதை ஒருநாள் காலையில் தொடங்கி மறுநாள் காலையில் முடிவடைகிறது. நெய்னா மம்மது ராசப்பு எனவும் அயலில் அறியப்படுவான். அவன் அன்று விடிந்ததும் கவ்வாத்துக் கத்தியுடன் வேலைக்குப் புறப்படுகிறான். இனி அவனது வரவு இரவில்தானிருக்கும். நிறைபோதையில் வருவான். படிக்கும் மகள் மைமூனின், மனைவி செலயம்மாவின் வசதி வசதியீனங்களை மட்டுமல்ல, பசி பட்டினியைக்கூட கவனத்திலெடுக்காத ஆள் அவன்.
அதுபற்றி செலயம்மாகூட அல்ல, மைமூனே தன்னுள் குறைபட்டுக்கொள்வாள். ஆயினும் ராசப்பா எதையும் பொருள்செய்வதில்லை.
அன்றிரவு ராசப்பா நிறைபோதையில் வருகிறான் வழக்கம்போல.
தூரத்திலிருந்து அவனது போதைப் பாட்டு கேட்கின்றது.
செலயம்மாவால் பொறுக்கமுடியவில்லை. என்ன நினைத்தோ, சடாரென வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்தி தாழிடுகின்றாள்.
ராசப்பா வந்து திண்ணையில் நின்று கதவைத் தட்டுகிறான்.
கதவு திறக்கவில்லை.
இதுதான் ‘வேண்டும் ஒரு பதி’லின் கதை.
இது பெண்ணிய கோஷமாக இங்கே ஒலிக்கவில்லை என்பதுதான் கதையின் சிறப்பே. வாழ்வின் அழைப்புக் குரலுக்கு செலயம்மா கொடுத்த பதிலிது. மிகச் சாதாரணமான சொற்களிலும், மிகச் சாதாரணமான நடையிலுமாய் யதார்த்த பாணியில் விரிந்து சென்று தன் தடம் பதிக்கிறது கதை.
முடிவதற்கு முன்னால் கதையில் வரும், ‘செலயம்மா போர்க்கோலம் கொள்கிறாள்’ என்ற வார்த்தைகள் மேலதிகம். அவையில்லாமலே செலயம்மாவின் யுத்த முழக்கத்தை ஒரு வாசகரால் கதையில் கேட்டிருக்க முடியும். சிறப்பான கதை.
இன்னொரு கதை ரூபராணி ஜோசப்பின் ‘சப்பாத்து’ (1997). மிகச் சிறியகதை. ஆனாலும் காத்திரமானது. குமார்மூர்த்தியின் ‘சப்பாத்து’போலவும், டொமினிக் ஜீவாவின் ‘பாதுகை’போலவும் இல்லாவிட்டாலும், ஒரு சிறுவனின் மிகச் சின்ன ஆசையொன்று எரிந்து கரியாவதை ஆடம்பரமற்ற வார்த்தைகளில் காட்டுகிறது.
சிறுவன் சுப்புவுக்கு படிக்க ஆசை. அவனது அப்பனுக்கோ அவனை கொழும்பு வீட்டில் வேலைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க ஆசை. அதனால் கொழும்பிலே வேலைக்குப் போனால் சப்பாத்து போடலாம், நல்ல நல்ல உடைகள் அணியலாமென மகனுக்கு ஆசை மூட்டுகிறான். அந்த வார்த்தைகளில் இசைவுபடும் சிறுவன் கொழும்பு வீட்டிலே வேலைக்குச் செல்கிறான். அவன் எண்ணியபடி எதுவும் நடப்பதில்லை. அங்கே தன் வயதளவான வீட்டுக்காரச் சிறுவனின் சப்பாத்துகளைக் காண்பவன் ஒருநாள் அவற்றிலொன்றை அணிந்துபார்க்கையில் வீட்டுக்காரியிடம் அகப்பட்டு காலிலே நெருப்புக் கொள்ளியினால் சூடு வைக்கப்படுகிறான்.
மலையகத்தில் தோட்டத் தொழிலில் கிடைக்கும் ஊதியப் பற்றாக்குறை வெகு நெடுங்காலமாகவே தோட்டக் குடும்பங்களை அவ்வாறுதான் தம் பிள்ளைகளை யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் வீட்டு வேலைக்காய் அனுப்பும் கொடுமையைச் செய்யவைக்கின்றது. இதை உரத்த வார்த்தைகளின்றிப் பதிவாக்கும் நேரத்தில், தன்னை ஒரு சிறந்த சிறுகதையாகவும் நிமிர்த்திக் கொள்கிறது.
இதுபோல் நிறைய சிறுகதைகள் தொகுப்பில் இல்லையென்றாலும், வாசிப்புச் சுகம் தரும்படியான பல கதைகளைக் கொண்ட தொகுப்பாக இது இருக்கின்றது. பேரிரைச்சலற்ற நீரோட்டம்போல ஆரவாரமற்ற மொழியில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியற் புனைவிது என்பது மிகையான கூற்றல்லை.
6
முடிப்பதற்கு முன்பாக, இதிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.ஜெயசீலனின் முகவுரையது முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டாக வேண்டும். ‘மலையகா’வின் பின்புலத்தை மட்டுமன்றி, இருநூறாண்டுக் கால மலையகத் தமிழிலக்கிய வளர்ச்சியின் பருவரைத் தோற்றத்தையும் அது கொண்டிருக்கிறது.
அண்மையில் வெளிவந்த முக்கியமான தொகுப்பு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.