அஞ்சலி: பேராசிரியர் க.அன்பழகன் - அவர் ஏன் ஓர் இனமானப் பேராசிரியாராக ஆனார்?
பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் அவரது பழைய நூலொன்றை எடுத்து மின்னல் வேகத்தில் படித்துமுடித்தேன். அந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமாகவே எனது இரங்கலை பதிய வைக்கலாம் என்று தோன்றுகிறது.
"வளரும் கிளர்ச்சி". - இன்று மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் 1953 இல், திமுகவின் வரலாற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த மும்முனைப் போராட்டம் நடந்த காலத்தில் எழுதிய ஒரு குறுநூல்.
அப்போது திராவிட நாட்டு விடுதலைக்கான வரலாற்றுத் தேவைகளை வலியுறுத்தி பல நூல்கள் எழுதப்பட்டன. அண்ணாவின் பணத்தோட்டம் முதலான நூல்கள் உருவாக்கிய ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தில், அன்பழகன் எழுதிய - இன்று பலரும் மறந்துபோன - ஒரு நூல்தான் "வளரும் கிளர்ச்சி".
திராவிட நாடு கோரிக்கைக்கான வரலாற்றுத் தேவையை இந்த குறு நூலில் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார் அன்பழகன்.
1947 க்கு முன் இந்திய விடுதலைப் போராட்டம் உருவான காலத்தை முதலில் குறிப்பிட்டு, எப்படி உலகளாவிய சூழல் மாற்றங்களாலும் இந்தியாவிலுள்ள மக்களின் விடுதலைப் போராட்டத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிப்பிடும் அன்பழகன், இந்து மதம்சார்ந்த ஆதிக்கத்துக்கு மாறாக பாகிஸ்தான் கோரிக்கை எழுந்ததையும் சுட்டிக்காட்டி 1947 இல் இரண்டு நாடுகள் - பாரதமும் பாகிஸ்தானும் - உருவானதைச் சுட்டிக்காட்டுகிறார்.