புனைவுசார்ந்த எழுத்துக்களில் நாவல், குறுநாவல், நெடுங்கதை, சிறுகதை ஆகிய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால பகுப்புகள் இன்று அவ்வளவு வீச்சான ப ரிசோதனையில் இல்லை. நாவல், சிறுகதை என்கிற இரண்டு கூறுகளில் இன்றைய வாசிப்பின் தளம் இவற்றை பொதுவாக உள்ளடக்கிவிடுகிறது. ஆக, ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை விமர்சிக்க வரும் இன்றைய ஒரு விமர்சகனுக்கு நிச்சயமாக இவற்றின் பகுப்புபற்றி ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இமையத்தின் படைப்புகள்பற்றிய ஒரு அறிமுக வியாசம்கூட இச் சிக்கலை எதிர்கொண்டே தீரும்.
பதிப்பக பகுப்புகளின் ஊடாகவன்றி தனியான ஒரு பகுப்பில் தன் பயணத்தை மேற்கொள்வது இந்தவகையில் சிரமமாகுமென்ற புரிதலுடன்தான் இவ்வாண்டு (2019) கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் இமையத்தின் படைப்புகள் பற்றி ஒரு அறிமுக வியாசத்தை இங்கு பதிவாக்க முனைகிறேன்.
இமையத்தின் கோவேறு கழுதைகள் ( நாவல்-1994), ஆறுமுகம் (நாவல்- 1999), மண்பாரம் (சிறுகதைகள்- 2004), செடல் (நாவல்- 2006), வீடியோ மாரியம்மன் (சிறுகதைகள்- 2008), கொலைச் சேவல் (சிறுகதைகள்- 2013), பெத்தவன் (கதை - 2013), சாவு சோறு (சிறுகதைகள்- 2014), எங் கதெ (நாவல்- 2015), நறுமணம் (சிறுகதைகள்- 2016), செல்லாத பணம் (நாவல்- 2018), நன்மாறன் கோட்டைக் கதை (சிறுகதைகள்- 2019) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இமையத்தின் புதிய படைப்புகளையும் பழைய படைப்புகளின் மீள்வாசிப்பையும் செய்தபோதுதான் அவரது எழுத்தின் வீச்சை, கலாபூர்வமான நடையின் வசீகரத்தைக் காண முடிந்திருந்தது. அவரது கருத்தியலை சரியாக இனங்கண்டு முன்வைக்க முனைகிற அதே வேளையில், அந்த நடையின் வசீகரத்தையும் ஓரளவேனும் பதிவாக்க இவ்வியாசத்தில் நான் முயல்வேன்.
அம்பேத்கர் நூற்றாண்டுடன் தமிழகத்தில் வீச்சுப்பெற்று தலித் இலக்கியம் தன் செல்நெறியில் வளர்ந்துசென்ற வேளையில், அதுபற்றிய காரசாரமான விவாதங்கள் தமிழ்ப்பரப்பில் உருவாகின. அது மராட்டியத்திற்கும் கன்னடத்திற்கும் உரியதானதுபோன்ற தோரணையில், உச்சாலியா, மற்றும் உபார ஆகிய நூல்களை நினைவில் வைத்து, பேச்சுக்கள் எழுந்தன. அதேவேளையில் அது தமிழக முற்போக்கு அணியினர்க்கும் பெரிய உவப்பானதாக இருக்கவில்லை எனத் தெரிந்தது. ஆனால் அது அழகரசன், என்.டி.ராஜ்குமார், பாமா, விழி.பா.இதயவேந்தன், சிவகாமி, அன்பாதவன், ராஜ்கௌதமன் போன்றவர்களின் எழுத்துக்கள் அதை வலுவாக புனைவு மற்றும் கருத்தியல் தளங்களில் தன்னை நிறுவிக்கொண்டது. தி.க.சிவசங்கரபோன்ற முற்போக்காளர்கள்கூட தலித்திலக்கியத்திற்கு ஆதரவாக குரகொடுத்தனர். தலித் இலக்கியம்பற்றி அவ்வேளையில் தி.க.சி. இலக்கு சஞ்சிகையில் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ விளிம்பு நிலை மக்களின் கதையைப் பேசியதானாலும், தலித் கருதுகோள் சார்ந்தும், அதன் சித்தாந்தம் சார்ந்துமான எழுத்துமுறையை முன்வைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுதலையில் விமர்சகர் வெ.சாமிநாதன் அந்நாவலை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைத்துகொள்ளல் தகும். ஆக, சாதீயம் காரணமாய் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்முறையை, அக் காலகட்டத்தில் வெளிவந்த இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவல் வெளிப்படுத்தியிருந்தாலும், தலித்திய பாதையில் நடந்துசெல்ல முயலவில்லை. அது சமூக அக்கறை கொண்டவர்களுக்கு வியப்பாகவிருந்தது.
ஐந்து ஆண்டுகளின் பின்னால் 1999இல் இமையத்தின் இரண்டாவது நாவல் ‘ஆறுமுகம்’வெளிவந்தது. அதுகூட தலித்திலக்கியத்தின் அடிசார்ந்து இருக்கவில்லை. மாறாக அதில் இன்னும் கூடுதலான தலித்திய கருத்தியலின் மறுப்பே தென்பட்டது. இதனால் ராஜ்கௌதமன் போன்ற தலித் இலக்கிய விமர்சகர்களின் கடுமையான தாக்குதலுக்கும் அது உள்ளானது. அடுத்து ஏழு ஆண்டுகளின் பின் வெளிவந்த ‘செட’லிலும் அதன் பின்னால் வெளியாகிய ‘எங் கதெ’யிலும் சரி இதுகுறித்த இமையத்தின் வழி தனி வழியாகவே இருந்தது. தலித் கருத்தியல் இமையத்தின் படைப்புகளிலிருந்து வெகுதூரம் விலகியே நின்றிருந்தது. இது தெளிவாக ஒன்றைப் புரியவைத்தது. திராவிட இயக்க சார்பாளரான இமையம், விளிம்பு நிலை மக்களினதும் சாதீயத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களினதும் கதையையே எழுதினாலும், தனக்கென்று ஒரு தனி வழியில் இச்சமூகப் பிரச்னையை முன்வைத்தார் என்பதே அது. இமையத்தின் சமூக அக்கறை, தான் கண்டும் கேட்டும் உணர்ந்துமான அனுபவங்களின் அடியாக கலா பண்பு சார்ந்தும் தன் நியாயங்களின் நிலைப்பாடு சார்ந்தும் உருவாகிறது என்பதைப் புரியமுடிகிறது. அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சாதீய சமூகம் தன் வாழ்முறையை மாற்றுவதன் மூலம் கல்வி கற்றவர்களாகவும் அதன்வழி தொழில் வாய்ப்புக்கள் பெறுபவராகவும் ஆகி தன் விடுதலையின் வழியைக் கண்டடைய முடியும் என்பதில் இமையம் பூரண நம்பிக்கை கொண்டிருந்தாரென்பதே உண்மையாக இருக்க முடியும்.
‘சாவுசோறு’ சிறுகதையில் வரும் பூங்கோதை இடைச் சமூகத்தைச் சேர்ந்தவள். தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவனோடு அவளது மகள் ‘ஓடி’ விடுகிறாள். அதையெண்ணி அத் தாய் படும் பாடுகள் அத்தனை வலுவான மொழியிலும், அழகிய நடையிலும் எழுதப்பட்டிருக்கும். தாழ்ந்த சமூகத்தவரோடு மணவுறவு வைத்துக்கொள்ளும் உயர்ந்த அல்லது இடைச் சமூகத்தவர் பொறுத்து, அச் சமூகங்கள் கைக்கொள்ளும் தண்டனை முறைகள் மிகப் பயங்கரமானவை. நாவலில் இவை குறித்து வரும் இடங்கள் வாசகனை அதிரவே வைத்துவிடுகின்றன.
தாழ்ந்த சமூகத்தோடு ஓடிவிட்ட அத் தாயின் மகளுக்கு இறுதிக் கிரியைகள் முடித்து அத் தாயுமே முண்டிமாக்கப்படுகிறாள். அத்தனை வன்மம் அச் சமூகத்திலும் அவளது குடும்பத்திலுமாக இருக்கின்றது. அந்த மகளைத் தேடித்தான் அத் தாய் கணவனுக்கோ மகன்களுக்கோ தெரியாவண்ணம், மகளின் கல்வித் தகைமைச் சான்றிதழையும், அவள் விட்டுவந்த நகைகளையும் தன் மகளிடம் சேர்ப்பிக்க மட்டுமன்றி, தன் மகளிடம் தன் சமூகத்தவரினதும் குடும்பத்தவரினதும் அவளது முலையரிந்துவிடும் தண்டனையைக் கூறி அதிலிருந்து தப்பும்படியான எச்சரிக்கையை விடுக்கவுமே அவளது தேடல் அமைந்திருக்கிறது. சாதீயத்தை மீறி மனிதர்களுள் இருக்கும் பாசங்களையும் தாய்மையையும் தெளிவாகக் காட்டுகின்றது நாவல். இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால் கல்யாணி என்கிற இடை சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியின் தாழ்ந்த சமூகத்தனொருவனுடனான தொடர்பு சமூகத்திற்கு தெரியவர, செங்கல் சூளையில் அவளைச் சுட்டுவிடும் தங்கள் நியாயத் தீர்ப்பைச் சொல்லி, அவளையே தண்டனையை நிறைவேற்றச் சொல்லிவிடும். வீடெல்லாவற்றையும் சூறையாடி கடைசியில் தன்னையும் சூளையில் அவர்கள் சுட்டுவிடாமல் கல்யாணியே தன்னைத் தானே சூளையில் சுட்டெரிப்பதையும் அவர்களது வன்மத்தின் அளவையும் பூங்கோதை சொல்லுகிறபோது, வாசகன் அதிரவே நேர்ந்துவிடுகிறது. இதில் இன்னும்கொடுமையான விஷயம் என்னவெனெில் அவ்வாறு சூளையில் வெந்து சாம்பரானவளை மானங்காத்த சாமியென்று பெயர் சூட்டி அவளுக்கு கோயில் கட்டி அச்சமூகம் கொண்டாடியதுதான்.
அத்தனைக்கு வலுவானமொழியும், அத்தனைக்கு வலுவான நடையும், அத்தனைக்கு தெளிவான காட்சிப்படுத்தலும் இருந்தாலும், ஓரளவு பூங்கோதைக்கும் கல்லூரிப் பணிப்பெண்ணான கமலாவுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் சற்றே நீளமானதாக அமைந்திருந்து ஒரு அயர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பாகிறது. அவ்வயர்ச்சியை இமையத்தின் கலாபூர்வமான எழுத்து வாசகனை அணுகவிடுவதில்லை.
‘துயர வாழ்க்கையில் அழுந்திய பெண்களின் முறைப்பாடுகளையும், தொலையாத ஓலங்களையும் மீட்டெடுக்கும் இமையம்’ என க.காசிமாரியப்பன் ‘தலித் இலக்கியம்: விளிம்பின் சரிவும் மையத்தின் ஏற்றமும்’ என்ற கட்டுரையில் (காலச்சுவடு, ஜன. 2010) இமையத்தின் எழுத்துக்கள்பற்றித் தெரிவித்திருப்பது, சாதியையும் மதத்தையும் ஆணாதிக்க மய்யமான குடும்பத்தையும் உடைப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமென்ற வரையறைக்குள் அவரது எழுத்துக்கள் அடங்காதவரையில், மிகச் சரியானதேயாகும்.
பூங்கோதையின் மறைக்கப்படாத ஓலமும், ‘எங் கதெ’யின் கமலாவுடைய நீண்ட மௌனத்தின் பின்னாலுள்ள நெடிய ஓலமும் அதை ருசுப்பிக்கின்றன.
‘பெத்தவன்’ கதை ஏறக்குறைய இதே தொனி கொண்டதுதான். ‘சாவு சோ’ற்றில் ஒரு தாயின் தன் மகள்மீதான அவலம் காட்டப்படுகிறதெனில், ‘பெத்தவன்’ கதையில் தாழ்ந்த சமூகத்தவன் ஒருவனுடன் பலமுறையும் ‘ஓட’ முயன்ற தன் மகள்மீது தன் கொலைகாரச் சமூகம் விதித்திருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தையிடத்திலேயே ஒப்படைக்கப்படுகிறது. தன் மகளின் மரணத்தை துன்பமில்லாதவகையில் நிறைவேற்ற அவளுக்கு நஞ்சு கொடுக்கத் தயாராகிறான் அந்தத் தந்தை. ஆயினும் தன் மகள்மீதான பாசத்தால் இறுதிக் கணத்தில் தன் வாக்கை மீறுகிறான். மகளை தன் காதலனுடன் சேர அனுப்பிவிட்டு தான் தற்கொலை செய்துகொள்கிற ஒரு பாசத் தந்தைபற்றிய கதை அது.
சமூகம் ஒட்டு மொத்தமாக மாறாவிட்டாலென்ன, இமையத்தின் நாவல்களில் சமூக மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை இதுவே இமையத்தின் உடைப்பெடுத்த நதியின் அணைக்கு தன் பங்குக்கான கல்லை எடுத்துவைக்கும் எழுத்து முயற்சியாகவும் இருக்கலாம். சாதிச் சங்கங்களும் சாதிக் கட்சிகளுமாய்ப் பெருகிகொண்டிருக்கும் சூழ்நிலையில் எங்கும் சாதீயக் கொலைகளும் குத்து வெட்டுகளுமாக ஆகியிருக்கும் வேளையில், சாத்வீகமான இந்த முடிவு அதற்கான மாற்றாக இல்லாவிடினும், ஆசுவாசத்துக்கானதாக வாசகனால் பாவிக்க முடிகிறது.
கிராமத்தைவிட்டு நகரம் சென்று தாம் அதுவரை அடைபட்டிருந்த ஒரு வாழ்வுக்கு விடிவுகாண முனையும் தனபாக்கியத்தினதும் அவளது ஏழு வயதான ஆறுமுகத்தினதும் கதைதான் ‘ஆறுமுகம்’ நாவல். மாற்றங்கள் கிராமத்திலும் விழுகின்றன. மண் வீடுகள் கல் வீடுகளாகின்றன. கூரை வீடுகள் ஓட்டு வீடுகளாகின்றன. தனது நித்திய தரித்திரத்தை நீக்கவும், தனது மகனுக்கு கல்விக் கண் கொடுக்கவும் ஏழு வயதான ஆறுமுகத்துடன் நகரம் நோக்கி ஓடுகிறாள் தனபாக்கியம். விதிவிட்ட இடத்தில் குத்தென இருந்து அழிந்து போக எந்த ஜீவன்தான் விரும்பக்கூடும்? ஊடு கண்டவிடமெல்லாம் ஓடவே அது நிர்ப்பந்திக்கப்படுகிறது. தனபாக்கியத்தின் ஓட்டத்தை, ஒரு சமூக ஆற்றுப்படுத்தலாக இல்லாமல், ஒரு ஜீவனின் வாழ்வு தேடிய ஓட்டமாகவே காணவேண்டும். அவ்வாறு காணும்படி செய்கிறது நாவல்.
ஆனால் தேடிய வாழ்வாக அது அவர்களுக்கு சித்திப்பதில்லை. அங்கேயும் வேறுவகையான அடக்கியொடுக்குதல்கள். அது எங்கெங்கும் வெவ்வேறு வடிவங் கொண்டு இருக்கிறதுதான். தனபாக்கியத்தின் சரீரார்ப்பணம் தொழிலுக்காக அவள் அதில் பட்ட அடிதான். மகனே அந்த அசிங்கத்தை நேரில் காணநேர்ந்து அவனை வீட்டைவிட்டுத் துரத்துகிறது. இது என்ன வாழ்வு? இது எதற்கான ஓட்டம்? ஆனாலும் இப்படித்தான் பெரும்பாலானாரின் வாழ்வு அங்கே இருக்கிறது. இதற்கான தீர்வு என்ன? தீர்ப்பை படைப்பாளி சொல்லவில்லை. மனிதர்களின் வாழ்க்கை அவதியை, வாழ்வின் மனித இச்சைகளையே படைப்பாளி பேசுகிறான். இமையம் இங்கே செய்வது, மனித அவலத்தை கலாபூர்வமாக வெளிப்படுத்தியதுதான். கலைப் படைப்பொன்று அதற்குமேல் செல்வது அபத்தம். அதைச் செய்யெனச்சொல்வதும், செய்யவில்லையெனக் குற்றம் சொல்வதும் அதைவிட அபத்தங்கள்.
இமயத்தின் இந்த வழி வேறு ஒப்புவமை இல்லாதது; தனி வழி. பிரச்னைகளுக்கான தீர்வை இதுசொல்வதில்லை. மாறாக, பிரச்னையை அணுகுகின்ற வழியாக இது இருக்கிறது. அது தனித்துவமானதாக இருக்கிறது. ‘கோவேறு கழுதைக’ளில் தொடங்கிய இமையத்தின் இந்த ஓட்டம் ‘பெத்தவன்’ வரை நிற்கவேயில்லை. அதன் கலாம்சமும் மிகுந்துகொண்டேதான் செல்கிறது. ஆனாலும் சில நாவல்களில் மெதுவான தழும்பல்கள் உண்டு. வாசக இன்பத்தின் உச்சிக்கு அதன் முன்பாதிவரை வாசகனை இழுத்துகொண்டு செல்லும் ‘எங் கதெ’ நாவல், பின்பாதியில் நொநொதுப்பாகிவிடுகிறது. ஆயினும் ‘பெத்தவன்’ சிறுகதை தன் விகாசத்தை முழுவதுமாய் வாசக தரிசனமாக்குகின்றது. அது நெடுங்கதையென நூலட்டையில் அடையாளமிடப்பட்டிருக்கிறது. நீண்ட கதையாக, தனிநூலாக வந்திருந்தால்தான் என்ன, தன் வடிவமைப்பினாலும் வீறுகொண்டும் அடங்கிய உணர்வுகளினாலும் என்னளவில் அது ஒரு சிறுகதையாகவே தென்படுகிறது. Jeffery Archerஇன் First Miracle என்ற சிறுகதையும் இதுபோலவேதான் தனிநூலாக வந்திருந்ததையும், இதுபோல் வேறு சில படைப்பாளிகளின் நீண்ட ஆங்கிலச் சிறுகதைகள் தனிநூல்களாக வந்திருந்ததையும் நிறைய நான் கண்டிருக்கிறேன். அதுபோல் ‘எங் கதெ’ ஒரு நாவலின் முழுப் பரிமாணத்தையும் கொண்டிராததைக் கருதவேண்டும்.
நாவல்கள் சிறுகதைகளாக இமையத்தின் பன்னிரண்டு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. ஒரு மொழியின் நவீன இலக்கியத்தில் இத்தனை குறைந்த எழுத்துக்கள் தமக்கான ஒரு வழியைச் சமைத்துக்கொண்டு வீச்சாக வளர்ந்த விஷயம் இலக்கிய சரித்திரங்களில் புதுமையானது. இதை அறுதிப்படுத்துவதைப் போலத்தான் ‘பரியேறும் பெருமாள்’ சினிமா அடிநிலை மக்களின் உய்வுக்கான வழியை இதையொட்டிக் காட்சிப்படுத்துகிறது.
இமையத்தின் சிறுகதைகளும் வாசிப்புச் சுகம் செய்பவை; கருத்துநிலை மாறாதவை. ஆயினும் நாவல்களின் உச்ச அடைவுகள் அவரது சிறுகதைகளில் இல்லை. அவை மிக நீண்டவையாகவும் இருக்கின்றன. அயர்ச்சியை வாசகன் அடையாவண்ணம் தன் கலாநேர்த்தியால் ஈடுசெய்ய இமையத்துக்குத் தெரிந்திருக்கிறது. ஆயினும் உச்ச பட்சமான அடைவுகளாக பல கதைகள் இல்லை.
சிறுகதைகளினைவிட நாவலே இமையத்தின் இலக்கியச் செயற்பாட்டின் சிறந்த களமெனக்கொண்டால், ‘கோவேறு கழுதைகள்’ அவரின் மிகச் சிறந்த நாவலென தயங்காமல் சொல்லமுடியும். சுந்தர ராமசாமி சொன்னதுபோல், ஒருநூற்றாண்டில் ‘கோவேறு கழுதைகள்’போல் ஒரு நாவல் தமிழில் தோன்றவில்லையென்பதை ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையில் அதற்கு எப்போதும் ஒரு இடமுண்டு. மேலும் ‘செடல்’கூட சிறந்த நாவல்தான். அதன் முக்கியத்துவம் அது எடுத்துக்கொண்ட கருப்பொருளாலும், காலம் களம் இவற்றினாலும் ஏற்படுகின்றது. தேவதாசி மரபில்வரும் ஒரு பாத்திரத்தை முன்நிறுத்தி தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகின்றது நாவல். தமிழ் நாவல்களில் மிக அபூர்வமாகப் பாவிக்கப்பட்ட புதிய பிரதேசம் அது. வாசகனை சிந்திக்கவும், ரசனையின்பம் எய்தவும் வைக்கக் கூடிய நாவல். அதற்கொரு சாதுர்யமான நடை இயல்பாக வந்து வாய்த்திருக்கிறது இமையத்திற்கு.
இமையத்தின் நடைக்கு உதாரணமாக ‘எங் கதெ’யிலிருந்து சில வரிகள்: ‘நல்லாப் படின்னு சொல்லிச்சு, நான் கேக்கல. கல்யாணம் கட்டிக்கன்னு சொல்லிச்சு, ரெண்டு புள்ளெ பெத்தவகூட போவதன்னு சொல்லிச்சு; காடு, வீடு, வேல, பொண்டாட்டி புள்ளைன்னு இருன்னு சொல்லிச்சு; அதோட கவலையெல்லாத்தயும் கண்ணுத் தண்ணியா மாத்தி எங்காலுல ஊத்திச்சு. நான் கேக்கல. வேலக்கிப்போன்னு சொல்லல. காட்டுக்குப் போன்னு சொல்லல. பணஞ் சம்பாரின்னு சொல்லல. எதயுமே எங்கம்மா வாயால கேக்காது. கண்ணால கேக்கும். கண்ணுத் தண்ணியால கேக்கும். இப்பயும் அப்படித்தான் கேக்குது. நான் பேசல.’
‘ஆறுமுக’த்திலும் ஒரு இடம் வருகிறது. தாயை புதுமையாய்க் கண்டு தனயன் தன் மனத்துக்குள்ளாக முதல் சந்தேகக் கேள்வியை எழுப்பும் சந்தர்ப்பம் அது. அதற்கு பின்னொரு சந்தர்ப்பத்தில் கிடைக்கும் பதிலும் சுவையான வரிகளில்தான் அமைந்திருக்கிறது.
‘அவள் முன்போல் இப்போதெல்லாம் களைத்துச் சோர்ந்துபோய் வருவதில்லை. உடம்பில் சதை கூடி நிறமும் ஏறியிருந்தது. முக்கியமாக ஆரோவில்லிலிருந்து வரும்போதெல்லாம் அவளிடமிருந்து கற்பூரம்போன்றதொரு வாசனை எப்படி வருகிறது என்பதுதான் ஆறுமுகத்திற்கு வியப்பாக இருக்கிறது.’
‘ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்து வீட்டுக்குள் போனபோது, இவன் படுக்கிற இடத்தில் மூடப்படாத தனபாக்கியத்தின் கொழுத்த உடம்பும் அதனுடன் இணைந்த வெள்ளையான உடம்பும் கண்ணில் பட்டன.’
சுயமான ஒரு நடையினைக் கொண்டிருந்தபோதும் கருத்துக்கேற்ற விதமாக அதை ஏற்ற இறக்கமாக வனைந்துசெல்ல இமையத்தால் முடியும். அதை தனது எல்லா நாவல்களிலும், சிறுகதைகளிலும் கூட, நாம் அடையாளம் காண முடியும். நடையென்பது கட்டிடத்திற்கேற்ற கல்போன்றதுதான். வடிவமைப்பே நாவலில் முக்கியமான அம்சம். அவ்வாறாயின் இமையத்தின் சாதனைகள், அவர் வடிவச் சோதனைகளில் இறங்காதபோதும், அவரது நாவல்களிலேயே முகாம்கொண்டிருக்கிறது என்பது ஒரு சரியான கூற்றாகவே அமைகிறது. அதனால் இயல் விருது ஒரு திறமையான படைப்பாளிக்கே சென்று சேர்ந்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.