- கேரளத்தின் துஞ்சன்பறம்பில் 2018 டிசம்பர் 21-23 நடந்த மகாபாரத சர்வதேச மகாநாட்டில் கவிஞர் சோ.பத்மநாதன் ஆற்றிய உரை. -
மகாபாரதம் என்பது என்ன? வியாசரால் சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்ட ஃ எழுதப்பட்ட ஒரு கதை. அரசுரிமை பற்றி தாயாதிகளிடையே எழுந்த தகராறு கொடிய போராய் விளைந்து பேரழிவில் முடிந்ததை இக்கதை கூறுகிறது. கி.மு 1000 அளவில் இன்றைய தில்லிக்கு அண்மையில் இருந்த அஸ்தினாபுரமே இக்கதைக்குக் களம். பல நூற்றாண்டுகளாக உபகண்டத்தின் பல பகுதிகளில் வாய்மொழியாக வழங்கியதாதலின், என்ன தான் வரலாற்றடிப்படை இருந்தாலும், மகாபாரதம் புனைவாகவே எம்மை வந்தடைந்துள்ளது எனக் கொள்வது தவறாகாது.
பாரதக் கதையைச் சொன்னவர்கள் சூதர்கள். இக்கதை சொல்லிகள் சொன்னவை 'ஜெய கதைகள்' எனப்பட்டன. சைவசம்பாயனர், உக்கிரசிரவஸ் முதலிய புகழ்பெற்ற கதை சொல்லிகளோடு பேரறியாக் கதை சொல்லிகள் பலர் நாடுமுழுவதும் திரிந்து பாமர மக்களுக்குப் பாரதக் கதை சொன்னார்கள்.
தன் தந்தை பரீக்ஷித்து பாம்பு தீண்டி இறந்ததால், பாம்பினத்தையே பழிவாங்குதற்காக, ஜனமேஜயன் ஒரு ஸர்ப்பயாகம் செய்யத் தொடங்குகிறான். அவனுக்கு வைசம்பாயனர் பாரதக் கதையைச் சொல்கிறார்.
மகாபாரதம் வாய்மொழி மரபுவழி வந்து பிற்காலத்தில் எழுத்துருவம் பெற்றது என்பது வெளிப்படை. கதை சொல்லியான வியாசர் (கிருஷ்ண துவைவபாயனர்) ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்.
மகாபாரதத்தைத் தமிழ் செய்யும் முயற்சிகள் மிகப்பழைய காலத்திலிருந்து நடைபெற்று வந்துள்ளன. 'மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்பது கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குரிய சின்னமனூர்ச் செப்பேடு. 9ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தேவனாருடைய பாரதவெண்பா – முழமையானதாய் இல்லாதபோதும் - தமிழில் கிடைக்கும் மகாபாரதங்களுள் காலத்தால் முந்தியது.
வில்லிபாரதம் என வழங்கும் வில்லிபுத்தூராழ்வார் பாரதம் 15ஆம் நூற்றாண்டில் வந்தது. செய்யுள்களால் அமைந்த இந்நூலை அச்சுவாகனமேற்றியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்.
மகாபாரதத்தின் நாயகியாகிய பாஞ்சாலி (திரௌபதி)யை மையப்படுத்தி சூதாட்டத்தில் அவள் பணயமாக வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதையும் அவள் சபதத்தையும் ஐந்து சருக்கங்களில், எளிய நடையில் ஒரு நவீன காவியமாகப் பாடியவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். பாஞ்சாலிக்கு நேர்ந்த அடிமை வாழ்வையும் அவமானத்தையும் அந்நியர் ஆட்சியில் பாரதநாட்டுக்கு நேர்ந்த இழிநிலையாக, பூடகமாகச் சுட்டி, தேசவிடுதலைக் குரலாக தன் படைப்பை ஆக்கியது பாரதியின் சாதனை எனலாம்.
மகாபாரதத்தை மீளக்கூறும் முயற்சிகள் நெடுங்காலமாக நடைபெற்று வந்துள்ளன. என் பார்வைப் பரப்புக்கெட்டியவற்றுள் மிகப் பழைய மீள்கூறல் ஐராவதி கார்வேயினுடையது (1967) இது மராத்தியில் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பென்ஸில்வேனிய பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட காலத்தில் (1969) இப்பெண்மணி 'யுகாந்தா' என்னும் தலைப்பில் இதை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் மேலும் பல மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டது.
திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியாவது வேண்டும் என்றே செய்யப்பட்டதல்ல என்றும், குந்தி உள்ளே இருக்க வெளியே பாண்டவரும் நிற்க, 'அம்மா, ஒரு கனி கொண்டு வந்தோம்!' என்று யுதிஷ்ரன் சொன்னான் என்றும், 'நீங்கள் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று குந்தி சொன்னதாகவும், தாயின் கட்டளையைப் பாண்டவர்கள் நிறைவேற்றியதாகவும், காலம் காலமாகக் கதை சொல்லப்பட்டு வந்தது. இதைப் புறந்தள்ளி, பாண்டவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக, குந்தி செய்த சூழ்ச்சியாக இதை கார்வே காட்டுகிறார். 'தன் மக்கள் மூவரை மட்டுமன்றி மாத்ரியின் மக்களையும் பிரிக்க முடியாதபடி குந்தி பிணைத்தாள்'
திருதராஷ்டிரன் பாண்டவர்களையும் குந்தியையும் வாரணாவதம் அனுப்புகிறான். அரக்கு மாளிகையில் வைத்து அவர்களை எரிக்க, புரோசனன் என்றொருவன் ஏற்பாடு செய்யப்படுகிறான். இச்சதியை முன்கூட்டியே அறிந்த விதுரன், யுதிஷ்டிரனை எச்சரித்ததுமன்றி, அவர்கள் தப்பும் மார்க்கத்தையும் சொல்லி இருந்தான். வாரணாவதத்தில் வசித்த காலத்தில், தன்னோடு நெருக்கமாகப் பழகிய ஒரு வேட்டுவப் பெண்ணுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் உணவும் மதுவும் கொடுத்து உறங்கச் செய்தபின், சுருங்கை வழியே குந்தியும் பிள்ளைகளும் தப்பிச் செல்ல, வேட்டுவப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அரக்கு மாளிகையில் எரிந்து ஒழிந்தனர்.
இவ்வுபகதையை மகாஸ்வேதா தேவி என்ற வங்காளி எழுத்தாளர் எடுத்து, ஒரு புனைகதையாக்கியுள்ளார். யுகவநச முரசரமளாநசவய என்ற நூலில் முரவொi யனெ வாந Niளாயனin என்ற அச்சிறுகதை வருகிறது. குருஷேத்திரப் போர் முடிந்த பின் திருதராஷ்டிரனும் காந்தாரியும் வனம்போக முடிவு செய்தனர். கண் தெரியாத அவர்களுக்குச் சேவை செய்வதற்காக குந்தியும் கூடச் செல்கிறாள். அங்கு, சில நாளாக இவளைத் தொடர்ந்து அவதானித்து வரும் நிஷாதி (வேட்டுவிச்சி) ஒருத்தி, ஒரு நாள் குந்தியை எதிர்கொள்கிறாள். 'அரக்கு மாளிகை எரியூட்டப்படும் என அறிந்து, அங்கு ஓராண்டு காலம் வாழ்ந்தாய் - உன் மக்களுடன், உங்களுக்கு தோலும் தந்தமும், மானிறைச்சியும், தேனும், மூலிகைகளும் தர அவர்கள் வருவது வழக்கம். பண்டமாற்றாக, அரிசியும் உப்பும் ஆடைகளும் பெற்றுச் செல்வர். அவர்கள் சிறிது மதுவருந்தி, பாடியும் ஆடியும் மகிழ்வதுண்டு, அல்லவா?'
'ஆம்'
'முதிய ஒரு நிஷாதியையும் அவள் ஐந்து மகன்களையும் உனக்கு நினைவிருக்கிறதா?'
'ஆம்!'
'எத்தனையோ பிராமணர்களுக்கு விருந்தளித்தீர்களே, நிஷாதி, கிராத், சபர், நாகவர்ஷினி போன்ற காட்டு வாசிகளுக்கு முன்பு விருந்தளித்ததுண்டா, மது பரிமாறியதுண்டா?'
'இல்லை!'
'ஒரே ஒரு முறைதானே அத்தாழ்த்தப்பட்டோரை அழைத்தீர்கள்?'
'ஆம்!'
'நிஷாதித் தாயையும் அவள் ஐந்து மகன்களையும், மது மயக்கத்தில் கிடக்கவிட்டு, நீங்கள் சுருங்கை வழியே தப்பிச் சென்றீர்கள்?'
'ஆம், அது நீயல்ல!'
' அவள் என் மாமி!'
அவ்வேளை காட்டுத்தீ மூண்டு பரவுகிறது. காட்டு வாசிகள் தப்பிவிடுகிறார்கள். கண் தெரியாத இருவரும் முதுமையில், குற்ற உணர்வால் குறுகிய குந்தியும் காட்டுத் தீயில் மூழ்கி உயிர் விடுகின்றனர்.
பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதிய மகாபாரத மீள் கூறல் 'இனி நான் உறங்கட்டும்' (1972) திரௌபதியின் கோணத்திலிருந்து நிகழ்த்தப்படுகிறது. அவள் துயரம் ஒட்டு மொத்தப் பெண்ணினத்தின் துயரமாகச் சித்திரிக்கப்படுகிறது.
திரௌபதி துகிலுரியப்பட்;டபோது, பல நற்பண்புகளையுடைய கர்ணன், ஏன் அவளை இகழ்ந்து நிந்தித்தான் என்பது புரியாத புதிர். 'தாஸி இவளை வழிக்குவரச் செய் துச்சாதனா!' என கர்ணன் அட்டகாசமாகச் சிரிக்கிறான். துரியோதனனுக்கு திரௌபதியைப் பழிவாங்கக் காரணமிருக்கிறது. கர்ணனுக்கு அவள் மேல் என்ன பகை? இதற்கு பாலகிருஷ்ணன் விடையளிக்கிறார்.
'நற்பண்புள்ள ஒரு ராஜ மகள் சபை நடுவில் துகிலுரியப்பட்டு அவமதிக்கப்படும் நேரத்தில் நகைத்துக் கை தட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று கண்டகாட்சி சத்தியமானது. ஆனால் அது உண்மையின் ஒரு துளி மட்டுமே... விதியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தியிருக்கும் அபாக்கியவான்களின் விநாசம் விதியால் வரையறுக்கப்பட்டது தான். தர்மியாகிய சூரிய புத்திரனது மாற்றமுடியாத விநாசத்திற்கு – துகிலுரியும் அந்த நாளில் - அவனது சிரிப்பு முத்திரை குத்தியது!'
குருஷேத்திரத்தில் மாண்டவர்களுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து திரும்பிக்கொண்டிருக்கும் அன்னையர் மற்றும் விதவைகளைப் பார்த்தபடி பாண்டவரும் திரௌபதியும் நிற்கையில், தர்மன் மூத்தோனாகிய கர்ணனைக் கொன்றுவிட்டேனே என்ற கவலைப்படுகிறான். பாண்டவர்கள் தனக்கு நேர்ந்த இழிவை மறந்துவிட்டார்கள் என்ற கவலையில் மூழ்கியிருக்கும் திரௌபதியை தேற்று முகத்தால் கண்ணன் கூறும் விளக்கம் இது.
இதற்கு மேல் ஒரு சம்பவத்தை – யாரும் அறியாத ஒன்றை - திரௌபதிக்குச் சொல்லுகிறான் கிருஷ்ணன். பாண்டவர்க்காய்ப்போன தூது தோல்வியடைந்து திரும்பும்போது, கர்ணனைத் தன்னோடு ரதத்தில் ஏற்றி, வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவன் பிறப்பை உணர்த்தி, பாண்டவர் பக்கம் சேருமாறும், சேர்ந்தால் அவன் முடி சூடலாம் என்று தான் உறுதி கூறியதும், கர்ணன் அதை உறுதியாக மறுத்ததையும் சொல்லுகிறான்.
இந்த அத்தியாயத்தில் கர்ணனுடைய உளவியலை விரிவாக ஆராய்கிறார் பாலகிருஷ்ணன். அவன் காயப்பட்ட ஒரு பிறவி. 'துரியோதனனை இகழத் தைரியமில்லாதவர்கள் அவனுக்குப் பிரியமானவனாகிய என்னைப் பழித்து ஆத்ம திருப்தி கொண்டனர்'.
'கிருஷ்ணா, அவமானப்படுத்தப்பட்ட, ஆதரவற்ற ஓர் அரச குல நங்கையை அல்ல நான் கண்டது... சபை நடுவே நின்றிருந்த பீமார்ஜூனர்களது வீரம் சிதிலமாகிப் போவதைத் தான் கர்ணன் கண்டான்.... யாரைக்கண்டு நான் நரிபோல் பயந்து ஓடுவேன் என்று பீஷ்மர் சொன்னாரோ, அந்த அர்ஜூனன் தன் மனைவி ஆடையிழந்து நிற்பதைக் கண்டு செயலற்று நிற்கும் காட்சி கண்டுதான் அன்று நான் சிரித்தேன்... இன்று அதற்காக நான் வெட்கப்படுகிறேன் கிருஷ்ணா. இந்த ஆயுட்காலத்தில் - நிவாரணம் காண இயலாத வண்ணம் - என் புகழிலும் மனதிலும் களங்கம் சேர்த்திட்ட ஒரு நிகழ்ச்சியாக அதை நான் அறிகிறேன்...
திரௌபதி நீளச் சிந்திக்கிறாள். பதிவிரதா தர்மத்தில் ஈடிணையற்ற காந்தாரிக்கு – பெற்ற பிள்ளைகளுள் - நீர்க்கக்கடன் செய்ய ஏன் ஒருவன் கூட இல்லை? சீர் சிறப்புக்களையெல்லாம் துரியோதனனுக்கு வாரிவழங்கிவிட்டு, தருமனுக்கு துக்கங்களை மட்டும் தரும் விதி என்ன விதி? கர்ணனுக்கு குந்தியின் கன்னிகா கர்ப்ப பாத்திரத்தில் இடமளித்த விதி, துரியோதன துச்சாதனர்களுக்கு ஏன் காந்தாரியின் கருப்பாத்திரத்தைத் தேர்ந்து வைத்தது? தர்மாத்மாவாகிய யுதிஷ்டிரனுக்கு வாழ்வே சித்திரவதை, துரியோதனனுக்கு வீர சொர்க்கம்! பிதாமகர் பீஷ்மருக்கு அம்புப்படுக்கைளூ சகுனிக்கு வீர சொர்க்கம்!
'திரௌபதியின் விசாரம் இறுதிப்பகுதியில் எதிரொலிக்கிறது. 'பிரதாபமிக்க பாஞ்சால மன்னன் மகளாக யாகாக்கினியில் பிறந்தேன். பாரில் சிறந்த அழகி என்ற பாராட்டைக் கேட்டு வளர்ந்தேன். உலகின் ஐந்து பெரும் வீரர்களைக் கணவர்களாக அடைந்தேன். ஆயினும், கேவலம் அனாதைபோல ஜடாசுரன் பிடித்துத் தோளில் ஏற்றிக் கொண்டு போனான். மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள விராடனின் ராஜசபையை நோக்கி ஓடியபோது கீசகன் பறந்தலையும் என் கூந்தலை எட்டிப் பிடித்தான்... மன்னவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். (தான்) மாறுவேடத்தில் இருப்பவன் என்ற தார்மீக உணர்வை இந்த நேரத்திலும் யுதிஷ்டிரன் மறக்கவில்லை... கபட வேஷதாரியாக கழித்திட இனியும் காலம் உள்ளதென்பதை பீமசேனன் கூட மறக்கவில்லை... ஆணிடமிருந்து பெண் எதிர்பார்க்கும் அன்பு பெண்மைக்கே உரிய அனைத்து அபிமான உணர்விற்கும் அடிப்படையான அன்பு, தனக்கு, தனது ஐந்து கணவர்களிடமிருந்து ஒரு போதும் கிட்டியதில்லை...'
அந்தியும் பகலும் கண் துயிலறியாத இந்த மகாபாரத நாயகி, யுதிஷ்டிரனைப் பார்த்து 'இனி நான் உறங்கட்டே?' என்று கேட்கும்பொழுது வாசகன் மனம் உருகிவிடுகிறது.
ஜெயமோகனுடைய 'பத்மவியூகம்' (குறுநாவல்) குருஷேத்திரத்தில் மாண்டவர்களுக்கு அவர்களுடைய அன்னையரும் மனைவியரும் நீர்க்கடன் செய்ய ஆயத்தமாகும் கட்டத்தில் தொடங்குகிறது. நடந்து முடிந்த பேரழிவு சுபத்திரையின் கோணத்திலிருந்து மதிப்பிடப்படுகிறது. தன் மகன் அபிமன்யு எதிரிகளால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த காட்சியை மீள நினைந்து நடுங்குகிறாள் அவள். இந்த இழப்புக்குக் காரணம் திரௌபதி என்று இதுவரை குமுறியவள், அவள் போர்முடிவில், தன் ஐந்து புதல்வர்களையும் இழந்தாள் என்ற செய்தி வந்தபோது ஒரு குரூர திருப்தி அடையவே செய்தாள்.
யாதவ தேசத்திலிருந்து அர்ச்சுனனோடு ஓடிவந்த நாளை நினைத்துப் பார்க்கிறாள். 'இனி இது தான் உன் தேசம்!' என்று சொல்லி அர்ச்சுனன் அவளை அஸ்தினாபுரத்து அரண்மனைக்குள் கூட்டிச் செல்கிறான். அவள் இனி இளையராணி.
இப்பொழுது கங்கைக் கரையில் சுபத்திரை வியாஸரைக் கேட்கிறாள் : 'இதெல்லாம் எதற்காகத் தாத்தா? யாருடைய லாபத்திற்காக இந்தக் கங்கை முழுக்கு?'
'பத்மவியூகத்தில் நுழையும் வழியைக் கற்றுத் தந்த இவர் (கிருஷ்ணன்) வெளியேறும் வழியைக் கூறாமலேயே விட்டுவிட்டார்! இவருக்குப் பந்தமில்லை, பாசமில்லை, தர்மம் என நம்பும் ஒன்றை நிறைவேற்றுவது தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை!'
பொழிந்து தள்ளுகிறாள் சுபத்திரை.
'மனிதர்களால் போரைத் தொடங்க மட்டுமே முடியும். பிறகு எல்லாம் விதியின் தாண்டவம்!' என்று பெருமூச்சு விடுகிறார் வியாசர்.
சுபத்திரை வியாஸரோடு வாதாடி, அபிமன்யுவை ஒருகால் பார்த்து அவனுக்கு, மீளும் வழியை, கற்பிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பாடு செய்யும்படி கெஞ்சுகிறாள். பிறவிகளின் சுவரைத் தாண்டிப் பார்க்கக் கூடிய ஒரு ரிஷியின் உதவியை வியாசர் பெற்றுத் தருகிறார். பார்க்கிறாள். தாமரைப் பூவின் மலர்ந்த பீடத்தில் நெளியும் இரு வெண்புழுக்களுள் ஒன்றாக அபிமன்யு! இன்னும் சற்று நேரத்தில் பார்த்திவப் பரமாணுவோடு இணைந்துவிடும். கூட இருக்கும் மற்றப் புழு, இதனுடைய இரட்டை. முற்பிறவியில் அபிமன்யுவால் கொல்லப்பட்ட எதிரி! 'மகனே, கவனமாக இரு!' கூவுகிறாள் சுபத்திரை. பத்மவியூகத்திலிருந்து மீளும் வழியைச் சொல்லத் தொடங்குகிறாள். தாமரை கூம்பி விடுகிறது. 'இப்போது கூட, வெளியேறும்வழி தெரியாதவனாக அபிமன்யு போகிறானே!' – தேம்புகிறாள் சுபத்திரை. கண்ணன் அவள் தோளை ஆதரவாகப் பற்றுகிறான்.
குருஷேத்திரத்துக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளைப் புனைந்து எழுதப்பட்ட அற்புதமான கதை இது.
எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய 'ரண்டாம் மூழம்' என்ற மலையாள நாவல் பீமனை மையமாக வைத்து – அவனது நோக்கில் - மகாபாரதத்தை மீள்கூறல் செய்கிறது.
தருமனுடைய ஆட்சி முடிந்து, துவாரகையும் அழிந்து கிருஷ்ணனும் மறைந்தபின் பாண்டவர்களும் திரௌபதியும் மகாபிரஸ்தானம் புறப்படுகின்றார்கள். இந்த இறுதிப் பயணத்தில் எது நடந்தாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்பது விதி. தொலைவில் இமயச் சிகரங்கள் தென்படுகின்றன. யுதிஷ்டிரன் முன்னே நடக்கிறான். அழுகுரல் கேட்கிறது. 'அண்ணா திரௌபதி விழுந்து விட்டாள். நில்லுங்கள்!' என்கிறான் பீமன். தருமன் நிற்கவில்லை. அர்ச்சுனனும் நிற்கவில்லை. நகுலனும் அவர்களைக் கடந்து செல்கிறான். சகாதேவன் மீது ஒரு தாய், மகன்மேல் பாசத்தைப் பொழிவதுபோல், அன்பு செலுத்தியவள் திரௌபதி. அவனும்கூட திரௌபதியை விட்டுவிட்டுப் போகிறான். ஈற்றில், பீமன், சாஸ்திரங்களை ஒதுக்கிவிட்டு, திரும்பிவந்து, திரெபதியின் அருகே மண்டியிட்டு அவளை அழைக்கிறான். அவள் கண்கள் சுழல்கின்றன. 'நான் தான் இருக்கிறேன்!' என்கிறான் பீமன். அவள் கண்கள் ஈரமாகின்றன.
இப்படி அற்புதமாகக் கதையைத் தொடங்குகிறார் வாசுதேவன் நாயர்.
சூதாட்டத்தில் தருமன் ஒவ்வொருவராக, தம்பியரை இழந்து, தன்னையும் இழந்து, பின் திரௌபதியையும் தோற்க, அவளைக் கொணரும்படி துரியோதனன் ஆணையிடுகிறான். அப்பொழுது திருதராஷ்டிரனை நோக்கி விதுரன் சொல்வான்:
'இந்த மைந்தன் பிறந்தபோது நம் அரண்மனை முற்றத்திற்கே குள்ள நரிகள் வந்து ஊளையிட்டனவே, அந்தச் சம்பவம் நினைவிருக்கிறதா, அரசே? ஆதற்குப் பலன்தான் இனிமேல் நடைபெறப்போகிறது... இந்த அஸ்தினாபுரமே சுடுகாடாக மாறப்போகிறது. இந்தக் குருவம்சமே அழியப்போகிறது'.
திரௌபதியை அழைத்துவரப்போன பிரதிகாமி திரும்பி வந்தான். 'மன்னர் முதலில் தன்னைப் பணயம் வைத்தாரா, அல்லது ராணியை இழந்தபின் தன்னைப் பணயம் வைத்தாரா? என்று அவள் அறிய வேண்டுமாம்!' என்ற செய்தியைக் கொண்டு வந்தான். அதன் பின் துச்சாதனன் சென்று 'அவிழ்ந்து கிடக்கும் கூந்தலைத் தன் கையில் சுருட்டிப் பிடித்து, யாக பலிக்குக் கொண்டு வரும் பசுவைப் போல், நழுவிவிழும் ஓராடையைப் பற்றியிருந்த திரௌபதியைக் கொண்டு வந்து நிறுத்தினான்'
'இந்த நிலையில் என்னை இந்தச் சபையின் நடுவே இழுத்து வந்து நிறுத்தியிருப்பது சரி தானா? என்பதை பீஷ்மபிதாமகரும் மேதை விதுரரும் அடங்கியுள்ள இந்தச் சபையே தீர்ப்புக் கூறட்டும்' சபையில் யாரும் பதிலளிக்கவில்லை.
பீமன் தான் எதிர்வினையாற்றுகிறான்.
'வேசித்தெருவிலும் சூதாடிகள் இருப்பார்கள், ஆனால் அந்தத் தூர்த்தர்கள் கூடத் தங்கள் சொந்த மனைவிகளைப் பணயம் வைக்கமாட்டார்கள்! சகதேவா, நீ போய்த் தீக்கட்டையை எடுத்துவா! என் கையை நானே பொசுக்கிக் கொள்ள வேண்டும். என்னை நானே தண்டித்துக் கொள்ளமட்டும் தான் இப்போது என்னால் முடியும்!'
இது வியாஸரில் இல்லாதது. தன் நூலை (பாஞ்சாலி சபதம்) 'வியாஸ பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதலாம்' என்று கூறிய பாரதி,
'இது பொறுப்பதில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரைவைத் திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்!'
என்று பீமன் சொல்வதாகப் பாடுகிறான். அண்ணன் கையை எரிப்போம் என்பதை ஏற்காத எம்.டி.வி, அண்ணன் செய்த பிழைக்காகத் தன்னையே தண்டிக்கும் பாத்திரமாக பீமனை முன்னிறுத்துவதன் மூலம், அவனை மேலும் ஒரு படி உயர்த்துகிறார் எனலாம்.
'இரண்டாம் இடம்' விதுரனைப் பற்றிய சில செய்திகளை முன்வைக்கிறது. பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் அடுத்து அரசராக வேண்டியவர். அவர் பெயர் பரிசீலிக்கப்படாதது ஏன்? தாதிக்குப் பிறந்தவர் என்பதாலா? கௌரவர்கள் தாயின் குலத்தையும் ஜாதியையும் பார்ப்பதில்லையே! விசித்திரவீரியனின் தாய் ஒரு செம்படவப் பெண் தானே?
பாரத சமூகத்தில் சூதர்கள் வகித்த இடம் என்ன? அவர்கள் கதை சொல்லிகளாகவும் சாரதிகளாகவும் விளங்கினார்கள். சாதியில் வைசியருக்கும் சூத்திரருக்கும் இடையிலான அந்தஸ்து அவர்களுக்கு. கதை சொல்லும் திறமைக்காகக் கொண்டாடப்பட்டாலும், ஏனைய சந்தர்ப்பங்களில் அவர்கள் இழித்துரைக்கப்பட்டமைக்கு பாரதம் பல உதாரணங்கள் தரும். பீமன் கர்ணனைப் பல தடைவ 'அடே சூதபுத்திரா!' என்று பழிப்பதைக் காணலாம்.
'பாண்டவர்களோடு சேர்ந்து அரசனாகலாம் வா! என்று குந்தி அழைத்தபோது, கர்ணன் கூறும் பதிலில் வாணாளெல்லாம் பட்ட அவமானம் ஏற்படுத்திய கசப்புணர்வு வெளிப்படுகிறது.
'நான் இனி ஷத்திரியனாக வேண்டியதில்லை. சூதர்கள் தான் என்னை வளர்த்தார்கள். என் மனைவியும் மக்களும் கூடச் சூத குலத்தைச் சேர்ந்தவர்கள் தான்!'
வாசகன் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுவது இயல்பு, 'ஓரூரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்துதித்தோரில் ஒருவனாக்கி தேரூரும் அவர் மனைக்கே வாழ்ந்த என்னை செம்பொன் மணி மூடி சூட்டி....' என்று கர்ணன் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகுவதற்குப் பின்னால், அழிக்க முடியாத சாதி அடையாளம் இருக்கவே செய்கிறது. துரியோதனனால், கர்ணனுக்கு ஓர் அரசகுமாரியை மணஞ்செய்து வைக்க முடியவில்லை! சிறந்த வில்லாளியாகிய கர்ணனைத் துணைக்கொண்டு, அர்ச்சுனனை வீழ்த்த துரியன் தந்திரம் செய்ததாகக் கொள்ளலாமே தவிர, ஒத்த சிந்தையராகிய இருவருக்கிடையே ஏற்பட்ட நட்பாக அவ்வுறவைக் கொள்வதற்கில்லை.
மேலும் ஒரு உதாரணம் தரலாம். 17ஆம் போர் கர்ணனை முற்றுமுழுதாக நம்பியிருக்கிறான் துரியோதனன், சல்லியன் எனக்குச் சாரதியாக வந்தால், நிச்சயம் வாகை சூடுவேன் என்கிறான் கர்ணன். துரியோதனன் தன்னை அவமதிப்பதாகக் கருதும் சல்லியன், 'சூதனுக்குத் தேரோட்டும்படி பணித்து என்னை அவமதிக்கிறாய்!' என்று வெகுளுகிறான்.
வனவாசமும் அஞ்ஞாதவாசமும் முடிந்தபிறகு, போருக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதே முறை. சஞ்சயன் மூலம் திருதராஷ்டிரன் அனுப்பிய செய்தி நம்பிக்கை தருவதாயில்லை.
'பாதி நாடு கிடைக்காவிட்டால் ஐந்து கிராமங்களைக்கூட ஏற்றுக் கொண்டு வரப்போகும் அழிவைத் தடுக்கலாம்!' என்று தருமன் சொல்லவே, பீமன் வெறுத்துப்போய், தன் படுக்கைக்குப் போகிறான். அவனைப்போல் அதிருப்தியுற்றிருந்த திருஷ்டத்துய்மனோடு சேர்ந்து மதுவருந்துகிறான்.
ஈற்றில் கிருஷ்ணனைத் தூதாக அனுப்புவதாக முடிவு செய்கிறான் தருமன். தம்பியருடைய கருத்தைக் கேட்கிறான். 'பாரத வம்சம் அழியாமல் பாதுகாப்பது தான் நமக்கு இப்போது பெரிது... அதற்காக, துரியோதனுக்கு ஏவல் செய்யக்கூடத் தயார்!' என்று கோபத்தை வெளிக்காட்டாது பீமன் சொன்ன வார்த்தைகளை கிருஷ்ணன் நம்பவில்லை.
'இவை ஆண்மை அற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள்'
'ஆண்மையற்ற பாண்டுவின் பிள்ளைகளிடமிருந்து இதைவிட அதிகம் எதிர் பார்த்தீர்களானால் அது தங்கள் தவறு!'
'பீமனின் வாத்தைகளைக் கேட்டுச் சகோதரர்கள் நடுங்கினார்கள்' என்கிறார் எம்.டி.வி
அர்ச்சுனன் கருத்தைக் கேட்கிறான் தருமன். ஆச்சாரியர்கள் எதிரணியில் நிற்பது சங்கடம் தருகிறதாம். தூது வெற்றி பெற்றால் நல்லது தான் என்கிறான் அவன். நகுலனும் அக்கருத்தோடு ஒத்துப்போனான்.
யாரும் கேட்காமலே தன் கருத்தைச் சொல்கிறான் சகாதேவன். 'துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்ததை மரம்போல நின்று பார்த்தவன் நான். எந்த ஒரு கணவனும் பார்த்துக் கொண்டு நிற்கமுடியாத காட்சி அது. போரில் அவர்கள் அழிந்தால்தான் என் ஆத்திரம் அடங்கும். அந்தச் சகுனியை என் கைகளாலேயே நான் கொல்வேன்....'
அவன் சொற்களைக் கவனத்திற் கொள்ளாமலே 'கிருஷ்ணன் பயணம் மேற்கொள்ளட்டும்!' என்கிறான் தருமன்.
திரைமறைவிலிருந்து ஒரு மெல்லிய குரல். திரௌபதியினுடையது. 'நில்லுங்கள், இன்னும் ஒரு வார்த்தையும் உண்;டு!'
மந்திராலோசனையில் பெண்களுக்கு இடமில்லை என்கிறான் தருமன். திரௌபதி சொல்லும் பதில் வாளாக வீசுகிறது.
'குருவம்சத்தில் பெண்கள் வாழ வேண்டுமானால் ஒன்று குருடர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஊமைகளாக இருக்க வேண்டும்!' என்றவள் 'துச்சாதனன் பிடித்து இழுத்துவந்தபோது அவிழ்ந்த இந்தக் கூந்தலை இன்னும் நான் முடிக்கவில்லை... உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை என் கண்ணீரால் அணையவிடாமல் இந்தப் பதின்மூன்று ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறேன். கௌரவர்கள் அனைவரையும் ஒருவராகவே கொல்வதாகச் சபதமிட்டவர்கூட இப்போது தருமவானாக மாறியுள்ளார்'
ஈற்றில், குந்தி கண்ணனிடம் தனிப்படச் சொன்ன செய்தியோடு, உள்ளக் கருத்து அறியும் கட்டம் நிறைவடைகிறது.
பாரதப் போரில் நிகழும் மிகப் பெரிய சோகம் அபிமன்யுவின் மரணம். மகாரதர்;கள் அறுவர் சேர்ந்து, ஆயுதம் இழந்து எந்தச் சகாயம் வரும் வாய்ப்பும் இல்லாமல், தனித்துப் போன ஒருவனை வஞ்சகமாகக் கொன்ற கறை படிந்த அத்தியாயம் அது. எஞ்சிய நாள்களில் யுத்த நியமங்கள் மீறப்படும் வேளைகளில், திரும்பத்திரும்பக் குறிப்பிடப்படும் சம்பவம் அது. ஆனால் அது பற்றிய இறுதித் தீர்ப்பைக் கடோத்கஜனைக் கொண்டு சொல்ல வைக்கிறார் எம்.டி.வி :
'எங்கள் காட்டுவாசிகளைவிட ஆச்சாரியர்கள் மோசமானவர்கள்!'
தன் சாரதியாகிய விசோகன் மூலம் கர்ணனுடைய பிறப்பின் ரகசியத்தை பீமன் அறிகிறான்.
இரவுப் போர் பயங்கரமாக நடக்கிறது. கடோத்கஜனே ஆதிக்கம் செலுத்துகிறான். கௌரவர் அணி சிதறி ஓடுகிறது. கர்ணன் ஒருவனே கடோத்கஜனை எதிர்த்து மலைகிறான். வேறு வழியின்றி அர்ச்சுனனைக் கொல்வதற்காக வைத்திருந்த வைஜயந்தி என்ற வேலை வீசி, கர்ணன் கடோத்கஜனைக் கொல்கிறான்.
கூடாரத்தில் பாண்டவர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். 'நம் துணைக்கு வந்த குழந்தை அவன். பாண்டவர்களின் முதற் சந்ததி!' என அழுகிறான் யுதிஷ்டிரன்.
அங்கு வந்த கிருஷ்ணன் கேட்கிறான். 'ஏன் துக்கம் கொண்டாடுகிறீர்கள்? அர்ச்சுனன் தப்பித்துக்கொண்டான் என்று குதூகலம் அடையுங்கள்!'
பீமன் வெளியேறியதை யாரும் கவனிக்கவில்லை. கிருஷ்ணன் தொடர்ந்து கூறுவது அவன் காதில் விழுகிறது. 'பீமன் மகன் என்றாலும் காட்டுமிராண்டி தானே! யாகத்தின் எதிரி அவன். நான் அவனைக் கர்ணனுக்கு முன்னால் முன் யோசனை இல்லாமல் அனுப்பவில்லை!'
பீமன் தன் மகன் வீழ்ந்து கிடக்கும் இடத்துக்குப் போகிறான். கடோத்கஜன் மார்பில் நிலை குத்தி நிற்கும் வேலின் முனையில் அமர்ந்திருக்கும் கழுகு பிணத்தை ஆவலுடன் நோக்குகிறது. காட்டுவாசிகளுக்கு வீரசொர்க்கம் இல்லை. தகனமும் இல்லை. பீமன் கூடாரம் திரும்புகிறான். அன்றிரவு அவன் உறங்கவில்லை. இது எம்.டி.வி பாய்ச்சும் ஒளி. அவர் இப்படி ஒளி பாய்ச்சும் கட்டங்கள் - அல்லது வியாக்கியானங்கள் - ஆங்காங்கே உள்ளன. 'நான் இக்கதையமைப்பில் சுதந்திரம் எடுத்துக் கொண்ட பகுதிகளுக்கு வியாஸருடைய மௌனங்கள் தாம் ஆதாரம். அவை பிற்காலத்தில் வருபவர்களுக்காக, அவர் விட்டுவைத்த பொருள் மிக்க மௌனங்கள்...' என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார் எம்.டி.வி.
விதுரரே யுதிஷ்டிரனின் தந்தை என்பது மகாபாரத நிறைவில் வன பருவத்தில் - அவிழ்க்கப்படும் மற்றொரு முடிச்சு. ஐராவதி கார்வேயைப் பின்பற்றி எம்.டி.வியும் விதுர – குந்தி உறவை வெளிப்படையாகப் பேசுகிறார்.
மகாபிரஸ்தானத்தில் தொடங்கிய, இரண்டாம் இடம் மகாபிரஸ்தானத்தோடு முடிகிறது. பீமன் மடியில் திரௌபதி உயிர்விடுகிறாள். அவனுக்கு எப்போதும் இரண்டாம் இடம்தான்.
ஈழத்தைச் சேர்ந்தவரும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவருமாகிய தேவகாந்தன் 'கதாகாலம்' என்ற மீள்கூறலை 2016இல் வெளியிட்டார். வியாஸர் 24,000 சுலோகங்களில் சொன்ன பாரதக் கதையை வெறும் 152 பக்கங்களில் அவர் சொல்லியிருக்கிறார். விளிம்பிலிருந்து மய்யத்தை நோக்கி நகரும் இன்னொரு மகாபாரதப் பிரதி இது என்கிறார் தேவகாந்தன்.
'ஆதிக் கதை சொல்லிகளான சைவம்பாயனன், உக்கிரசிரவஸ் மற்றும் எண்ணற்ற பெயரறியாக் கதை சொல்லிகள் ஊடாக விரிந்த மகாபாரதத்தை இக்காலத்திய சிந்தனைகளோடு சில பாத்திரங்களை மய்யப்படுத்தி இன்னொரு பிரதியாக கதாகாலத்தை முன்வைக்கிறேன்' என்கிறார் தேவகாந்தன்.
தேவகாந்தனுடைய கதாகாலத்தில் இளைஞனான கதை சொல்லி சொல்கிறான் : 'அத்தினாபுர அரண்மனை பல பெண் இதயங்கள் வெளிப்படுத்திய துக்கங்களதும் விரகங்களதும் கோபங்களதும் குமுறும் நிலைக்களனாயே காலத்துக்குக் காலம் இருந்து வந்திருக்கிறது. ஒருபோது சத்தியவதி, அம்பிகை, அம்பாலிகா, பின்னாளில் காந்தாரி, குந்தி, அதன் பிறகு துரியோதனன் மனைவி பானுமதி. திருதராஷ்டிரனே இன்னும் முடிசூடாத அரசனாய் அத்தினாபுரத்தில் இருந்து கொண்டிருந்தான். அதனால் தன்னை வலுவுள்ளவளாய் காந்தாரி ஆக்கிக் கொண்டிருந்தமை சுலபமாய் முடிந்தது...' பானுமதி கூட துரியோதனனுடைய அன்பை முழுமையாகப் பெறவில்லை.
ஜெயக்கதையின் அச்சு சூதாட்டம். திரௌபதியைத் துகிலுரிய துச்சாதனன் முயல்வதை தேவகாந்தன் வேறொரு கோணத்தில் பார்க்கிறார்.
'துச்சாதனன் அவளது ஆடையை இழுத்தான்.... அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம்புரண்டு கிடந்த கூந்தல் மேலிருந்து கீழ், புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது... வெறிபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டுவிட்டு அவளது கூந்தலைப் பிடித்து இழுத்தான். கீழிருந்து மேல், புரியாய், துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப, அவள் துகில் பற்றி இழுக்கக் கூந்தலும், கூந்தல் பற்றியிழுக்கத் துகிலும். அவள் செந்நிறமேனியை யார் கண்ணும் காணாது மறைத்துவர, மவுனித்திருந்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அது அச்சமடைய ஆரம்பித்தது'
திரௌபதியைச் சாந்தப்படுத்திய திருதராஷ்டிரன், அவளுக்கு மூன்று வரங்கள் தர முன்வருகிறான். முதலாம் வரமாக தன் சுதந்திரத்தையும், இரண்டாம் வரமாக தன் கணவருடைய சுதந்திரத்தையும் மூன்றாவதாக மறுபடி சூதாடும் ஒரு வாய்ப்பையும் திரௌபதி கோருகிறாள். அவள் ஏன் தமக்குரிய இந்திரப்பிரஸ்தத்தைக் கோரவில்லை? காமியவனம் நோக்கி நடக்கும் சகாதேவனை இக்கேள்வி அரித்துக் கொண்டிருந்தது. அதற்குத் தேவகாந்தன் அளிக்கும் விடை: 'அவள் சூதாட்டக் களத்தில் நிறுத்தப்பட்டபோதே மாறிவிட்டிருந்தாள்' இனி அவள்தான் தாயமுருட்டுவாள்.
பாண்டவர்களுள், திரௌபதிக்கு சகாதேவனைப் பிடிக்கும். பெண்மை கலந்த அழகன் அவன். அவனது அறிவு அவனுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. சகாதேவனுடைய உளவியல் வித்தியாசமானது தன் தந்தையின் சிதைமீது பாய்ந்து தன் தாய் தன்னை மாய்த்த காட்சியை, சிறுவனாக அவன் பார்த்திருக்கிறான். நெடுநாள் கழிந்தும் தன் அகத்தெழும் அக்காட்சியால் வதைபட்டுக் கொண்டிருக்கிறான் அவன். அஞ்ஞாதவாச காலத்தில் அவனை ஆசுவாசப்படுத்தி அவன் கலக்கத்தைப் போக்குகிறாள் திரௌபதி.
பாண்டவர்கள் வெளிப்பட்ட பின் முதலில் உலூகனைத் தூது அனுப்பினர். பிறகு சஞ்சயனைத் தூதனுப்பினர். இரண்டுமே பயனளிக்கவில்லை. கடைசி முயற்சியாக கிருஷ்ணன் தூதுபோக இருப்பதாக அறிந்த திரௌபதி துடித்துப் போனாள். கிருஷ்ணனிடம் போய் 'தூது போக நீ எப்படிச் சம்மதிக்கலாம்?' என்று வெடித்தாள். 'போர் பெரும் அழிவுகளுடன் கூடியது... நீ கண்டு கேட்டறியாத பெரும்போராய் அது இருக்கும்.... போரின் பின் வரப்போகும் பூமி சபிக்கப்பட்டதாயிருக்கும்!'
'அது தான் உன் யோசனையா?'
'என் யோசனைக்கு இதில் எங்கே இடமிருக்கிறது? ஐந்து ஊர் இல்லையேல், ஐந்து வீடுகளாவது கேட்கச் சொன்னவன் யுதிஷ்டிரன்... என்னை நீ சீறுவதில் அர்த்தமில்லை....'
'அப்போ நான் உனக்கு எதுவுமில்லையா? தங்கை தங்கை என்று ஓடிவந்து, எனக்கு உடன்பிறந்தாள் இல்லாத குறையைத் தீர்த்து வைத்தாய் என்று கொண்டாடினாயே, அதெல்லாம் பொய்யா?... உன்னாலோ யுதிஷ்டிரனாலோ, பெண்ணை, அவள் அங்கங்களாகவன்றி இதயமாய்.... ஒரு மனித ஜீவனாய்ப் பார்க்க என்றுமே முடிந்ததில்லையா?....தானமாகக் கிடைக்கும் ஐந்து ஊர்களில் என்னால் வாழ்ந்து விடமுடியுமா?..... அவமானம் என் உடம்பில் எழுதியிருக்கிறதே, அதை யாருமேன் யோசிக்கவில்லை?' குமுறினாள் திரௌபதி. கண்ணீர் பெருக்கெடுத்தது. கலங்கிப் போனான் கிருஷ்ணன்.
'அழாதே சகோதரி....யுதிஷ்டிரனுக்காகவேதான் இப்போது தூது போகிறேன். என்னளவில் தூது ஒரு போலி. யுத்தமே நிச்சயம்!'
திரௌபதி திரும்பி நடந்தாள். கூந்தல் அவளைச் சிறைப்படுத்தியுள்ளதை கண்டு கொண்டிருந்தான் கிருஷ்ணன்.
கதாகாலத்தில் ஓர் ஒரு பாத்திர ஓரங்க நாடகம் வருகிறது. அதன் நிகழிடம் ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணம் அதன் காலம் 20ஆம் நூற்றாண்டின் பிற்பாதி. இந்நாடகத்தின் முக்கியத்துவன் என்ன? போர்க் காலத்தில் வல்லுறவுக்காளான - கொல்லப்பட்ட – தமிழ்ப் பெண்களை திரௌபதிகளாகக் காட்டும் ஒரு குறிப்புப் பொருள் பொதிந்துள்ளது.
கோபாவேசங் கொண்டவளாய், சகாதேவனிடம் போகிறாள் திரௌபதி
'எந்த அர்த்தத்தில், துரியனுக்கு நீ யுத்தம் துவங்க நல்ல நேரம் குறித்துக் காட்டினாய்?...
'பஞ்சணையும், ஒரு போது பன்பாயும் உன்னோடு பகிர்ந்த நாளெல்லாம் எனக்கு அருவருப்பாய் நினைவாகிறது, சகாதேவா!'
அவன் பதிலுக்குக் காத்திராமல் திரௌபதி போய்விட்டாள். நாடகம் சகாதேவனின் தனியுரையோடு நிறைவடைகிறது:
'யுத்தத்தை நீ விரும்பினாய்
உனக்காக வீமன் விரும்பினான்
தனக்காக அர்ச்சுனன்
அவனின் எஞ்சியுள்ள எதிரி கர்ணன்
தனக்காக யுதிஷ்டிரன்
தனக்காகவே குந்தி...
சத்தியவதி உருட்டி, பீஷ்மன் உருட்டி
குந்தி உருட்டி, பிறகு நீ உருட்டிய காய்
வேகவேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது, துரோபதி...
ஒரு பெரும் நாசத்தின் கதை நிகழப்போகிறது
நாசம், நாசம், நாசமே விளையும்!'
கதாகாலத்தின் கதைசொல்லி இறுதிப்பகுதிக்குள் நுழைகிறான். பதினெட்டாம் நாள் போர். பகலோடு முடியவில்லை. முக்கியமான பகுதி இரவிலேதான் நடக்கவிருந்தது.
அஸ்தினாபுரம் சோகத்தின் காடாயிற்று. பானுமதி விழுந்து கதறினாள். காந்தாரி தான் எடுத்த நெருப்பை விழுங்கி எரிந்து கொண்டிருந்தாள். அசுவத்தாமனின் மனதில் அக்கினி சுவாலித்துக் கொண்டிருந்தது... காட்டில் ஓடி மறைந்திருந்த அசுவத்தாமன், தன் திட்டத்தை கிருபன், கிருதவர்மன் இருவருக்கும் விபரித்தான். மகாபாரதப் போரை முடித்து வைக்கும் பொறுப்பு தங்கள் மூவர் மீதும் சுமத்தப்பட்டிருப்பதாகச் சாதித்தான்.
மூவரும் மறைந்து மறைந்து பாண்டவர் பாசறைக்குப் போயினர். அன்று பெரிய கட்டுக் காவல் இல்லை. முன்னிரவில் நடந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் போதையேறிய காவலர் ஆழ்ந்த உறக்கத்தில். 'அசுவத்தாமனின் வாள் ஏறி இறங்கியது. முதற்பலி திருஷ்டத்துய்ம்னன், பஞ்சபாண்டவர் ஐவரும் அங்கில்லை. அவர்களுடைய புதல்வர்கள் - போரில் பங்குபற்றாதவர்கள் - தூக்கக் கலக்கத்தோடு எழுந்தனர். அவர்களை வெட்டிச் சாய்த்தான் அசுவத்தாமன். மகாபாரதப் போரின் முடிவு திசை மாறியது.'
'ஷத்திரியையாய் வென்று தாயாய்த் தோற்றுப்போன திரௌபதி துடித்துக் கொண்டிருந்தாள்'.
கிருஷ்ணன் அசுவத்தாமனைச் சபித்தான்: 'மரணமற்ற ஜீவனாய் இந்நிலவுலகில் அலைந்து கொண்டிருப்பாய்!' என.
வியன் பெருநகராய், தேவதச்சன் அமைத்த இந்திரப் பிரஸ்தம் ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறார் தேவகாந்தன். போரை நடத்தியவர்களின் குறி அஸ்தினாபுரமாகவே இருந்திருக்கிறது.
யுத்தத்தை நடத்தியவர்கள் பெண்கள் என்கிறார் தேவகாந்தன். பாண்டவர் பெற்ற வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்தவள் குந்தி. கர்ணனுடைய பிறப்புக் குறித்த ரகசியத்தை வெளியிடாமல் அதைச் சாதித்தாள் அவள்.
யுதிஷ்டிரன் ஆட்சி பீடமேறிப் பதினைந்து வருடம் கழிய திருதராஷ்டிரனும் காந்தாரியும் வனம்போக முடிவு செய்கிறார்கள். கண் பார்வையற்ற இருவருக்கும் பணிவிடை செய்ய குந்தியும் கூடச் செல்கிறாள். அங்கிருக்கும் காலத்தில் மூண்ட காட்டுத்தீக்கு மூவரும் இரையாகிறார்கள்.
அஸ்தினாபுரத்தில் அபிமன்யு மகன் பரீஷpத்துவுக்கு பட்டாபிஷேகம் செய்தபின் பாண்டவர்களும் திரௌபதியும் மகாபிரஸ்தானம் தொடங்குகிறார்கள். காடுகள், பேராறுகள், மலைகள் கடந்து மரணத்தின் கைகளில் தங்களை ஒப்படைக்கும் பயணம் அது. வியாஸர், வாசுதேவன் நாயர் வழியில் தேவகாந்தன் கதாகாலத்தை நிறைவு செய்கிறார்.
கேரளம் பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய சேரநாடு. தமிழரும் மலையாளிகளும் மொழியாலும் பண்பாட்டாலும் மிகவும் நெருக்கமானவர்கள். எழுத்தச்சன் பிறந்த - உலாவிய – துஞ்சன்பறம்பில் நிகழும் மகாபாரத மாநாட்டுக்கு என்னை அழைத்து, எம்.டி.வாசுதேவன் நாயர், கவிஞர் சச்சிதானந்தன் உள்ளிட்ட பெரியோர் முன் உரையாற்றும் வாய்ப்பைத் தந்த விழாக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத்தாளர் சோ.பத்மநாதன் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு:
"சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் (1993-1996) அதிபர். இவர் ஆபிரிக்க மற்றும் சிங்களக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் இலங்கை அரச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. கல்வி : சிறீ வைத்திலிங்க வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. இவரது நூல்கள்: காவடிச் சிந்து, வடக்கிருத்தல், ஆபிரிக்கக் கவிதைகள், தென்னிலங்கைக் கவிதை & நினைவுச் சுவடுகள்"