2016இல் காலச்சுவடு வெளியீடாக வந்த 'நட்ராஜ் மகராஜ்' தீவிர வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நாவல்களில் ஒன்றாக அப்போது இருந்தது. அதன் வாசிப்பும் வாசிப்பின் மேலான விமர்சனங்களும் இன்னும் ஓயவில்லையென்றே படுகிறது அல்லது இன்னும் ஓய்ந்துவிடக்கூடாத அவசியத்தோடு இருக்கிறது.
முதல் தடவை 2016லேயே நாவலை வாசித்திருந்தபோதும், 319 பக்கங்களினூடாகவும் உள்ளோடியிருந்து தன்னை வெளிப்படக் காட்டாதிருந்த அந்த ஒற்றைச் சரடை என்னால் காணக்கூடவில்லை. நாவலிலிருந்து ஒரு இழையை இழுக்கிறபோது அது கழன்று ஒரு துண்டாக வந்து விழுந்துவிடுவதாய் இருந்தது. இன்னொரு இழையை இழுக்கிறபோதும் நிலைமை அவ்வாறாகவே இருந்துவிட்டது. இழைகள் வெளியே வந்து விழுந்திருந்தாலும் மறுபடி புதிதாக அந்த இடத்தில் அவை முளைத்துக்கொண்டே இருந்துவிட்டன. அது தவிர்க்கவியலாதது. ஏனெனில் அதுவும் நாவலின் பாகமாகவே இருந்தது. அதனால் 319 பக்கங்களினூடாகவும் இழைந்தோடிய இழையை என்னால் காணவே முடியாது போய்விட்டது. அது எனக்கு ஒரு அதிசயமாகவே இருந்தது.
என்னில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நூல் குறித்தும் நான் நண்பர்களுடன் உரையாடாமலோ எழுத்தில் பதிவிடாமலோ இருந்ததில்லை. ஆனால் மனத்துள் பாதிப்பை ஏற்படுத்திய 'நட்ராஜ் மகராஜ்'பற்றி எதையும் செய்ய முடியாமல் நான் வெறிதே விட்டிருந்தேன். அதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு இரண்டாம் முறையாகவும் நாவலுள் பிரவேசித்தேன். அதன் வாசிப்பு எனக்கு அலுத்திருக்கவில்லை. சரியான இழை அப்போது தட்டுப்பட்டதுபோலிருந்தது. ஆனால் எனது 'கலிங்கு' நாவல் என் முழு கவனத்தையும் நேரத்தையும் தனக்காகக் கேட்டுக்கொண்டிருந்ததில் நான் இதற்கான நேரமொதுக்க முடியாதுபோய்விட்டேன். இப்போது சாவகாசமான நிலையில் ஒரு மூன்றாவது வாசிப்பைச் செய்தபோது அந்த 319 பக்கங்களிலும் உள்ளோடியிருந்த இழையை என்னால் கண்டடைய முடிந்தது. அது உண்மையில் பல இழைகள் சேர முறுக்கப்பட்ட ஒரு கயிறே.
நவீன யுகத்தின் அவசரங்களும் அவசங்களும் பதினெட்டு வருஷங்களுக்கு முந்தியிருந்த அந்த இருபதாம் நூற்றாண்டுபோலக்கூட இல்லாமல் வெகுவான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது மனிதனில் விழுத்தியிருக்கும் அவாக்கள் விரக்திகள் பேதலிப்புகள் யாவும் மனித மனநிலையின் மாறுபாடும் பிறழ்ச்சியுமாய் எதிர்வினை செய்கின்றன. அவ்வாறான மனநிலை கொண்ட மனிதர்கள் வாழ்வியலில் மிக இயல்பாக எங்கும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை மிக இலகுவாக டிப்றெஷன் எனக் கூறிவிட்டு, அந்த மனநிலையோடேயே நம்மோடு உறவுகொண்டுள்ள பலரை நாம் கவனித்திருக்க முடியும். அல்லது அவ்வாறான மனநிலையுடையவர்களாக அவர்கள் நம்மைக் கணித்திருக்கக் கூடும். அவதி மனங்களின் மனநிலையென்பது பயித்தியத்தின் ஒரு ஆரம்பக் கூறுதான். மருத்துவம் இன்றிக்கூட இந்த மனநிலையாளர் இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாக இருக்கமுடியும். ஏதோவொரு பொழுதிலும் ஏதோவொரு வகையிலும் அவரவரும் உணர்ந்திருக்கக்கூடிய இந்த மனநிலை சமூகத்துக்கில்லாவிடினும் அவருக்கே தீங்கானதென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அது அவரை அழுத்தும் விஷயத்தின் அளவும் விசையும் சார்ந்ததாகவிருக்கும்.
அந்தத் தீங்கை அவனே அறியாமலும், எவரும் அறியாமலும் சிறிது சிறிதாக தன்னுள் விளைத்துக்கொண்ட ஓ என்னும் பெயருடைய சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் வசிப்பவனும், தாவெனும் சிற்றூரிலுள்ள ஒரேயொரு மேல்நிலைப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளருமாகிய நவின் கதைதான் 'நடராஜ் மகராஜ்' நாவல். ஆனால் இது நவின் கதை மட்டுமேயில்லை. வ என்னும் அவனுடைய மனைவியினதும் கதைதான். இருபத்தைந்துக்கு மேற்பட்ட பாத்திரங்கள் கபந்தமாக ஒரு நிச்சயத்தோடும், ஒரு மர்மத்தோடும், ஒரு பயமுறுத்தலோடும் வந்து கதையை நகர்த்தியிருந்தாலும் இது நவினதும், வவினதும் கதையென்று சொல்லத்தக்க அளவு விரிந்திருக்கிறது. அதேவேளை இது ஒரு சமூகத்தினது கதையும் கூட. அதனால் சராசரி எந்தக் கிராமத்தினதும், தனி மனிதனினதும் கதையும்கூட ஆகும் இது.
மனநிலைச் சிதைவு குறித்து முதன்மையான கரிசனத்துடன் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் மிக அபூர்வம் அல்லது இல்லை. நகுலனின் 'நினைவுப் பாதை' குறிப்பிட்ட ஒரு எல்லைவரை இந்த விஷயத்தை எடுத்துச் சென்றிருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. ஆங்கிலத்தில் இவ்வாறான நாவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நவீன யுகத்தின் மன, உடல்ரீதியான அலைவுறுதலை மிகக் கவனமாகப் பதிவுசெய்யும் முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவை பெரிதான சமூக அக்கறைக்குரியனவாக இங்கே கணிக்கப்படவில்லை. ஆனால் காஃப்காவின் 'விசாரணை' மற்றும், விளாடிமிர் நபகோவின் 'மனவுளைச்சல்', கிரஹம் கிறீனின் 'பிறைட்டன் பாறை', சார்த்தரின் 'அறை', ஜோசஃப் கொன்றாட்டின் 'மனவிருள்' போன்றவை ஆங்கில இலக்கிய உலகில் மிகவும் பெயர்பெற்றவை. இவற்றினுடனான அல்லது இவற்றுள் ஒன்றுடனான ஒரு ஒப்பீடு இந்த நாவல் குறித்துச் செய்யப்படவே வேண்டும்.
அப்போது, இந்த நாவலை இதுவாகவே பார்க்கவேண்டுமேயல்லாது வேறொன்றுடனான ஒப்பீடு அவசியமில்லாததென ஒரு கருத்து முன்மொழியப்படலாம். அது சாத்தியமில்லை. ஏனெனில் எந்த ஒரு ரசனையிலும் உள்ளோடியாவது ஒரு ஒப்பீடு இருக்கவே செய்யும். இல்லாவிட்டால் நல்லது… நல்லதில்லையான அடைமொழிகள் அர்த்தமற்றவையாகிவிடும். இவ்வாறு சொன்னாலும் எதனுடனுமான நேரடி ஒப்பீடு மிகமிக அவசியமான இடங்களிலன்றி இங்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
'நவை முன்னிருத்திச் சொல்லப்படும் நாவல் அவனைவிட்டு விலகுவதே இல்லை' என முன்னுரையில் கவிஞர் சுமாரன் சொல்வது சரியானதே. அதுபோலவே 'நவின் பிரதி விளைவுகளிலிருந்தே பிற பாத்திரங்களை வாசகர் தெரிந்துகொள்கிறார்' என்பதும் மிகச் சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நாவலில் வரும் குழப்பம் அல்லது எழுச்சி என்பனவெல்லாம் நவினுடையதாகவே உருவெடுத்து நிற்கிறது. ந சாதாரண மனிதனேயெனினும் கிராமத்தின் வகைமாதிரியான சாதாரணன் அல்ல. அவன் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சிபெற்ற, தட்டச்சு பயின்ற, இளங்கலை பட்டப்படிப்பு பயில சிலகாலம் முயன்ற ஒருவன். அவனது வாழ்நிலை, அவனது தகுதிகள் அனைத்தையும் விழுங்குவதற்குப் போதுமான வலு கொண்டிருந்தனவெனினும், ஒரு சாதாரணனாய் அவன் அவற்றின் பெறுபேறாகக்கூடிய நம்பிக்கை, முயற்சி, விளக்கம் போன்றவற்றை தன்னில் தக்கவைத்தே வந்திருந்தான். அவனுக்குக் கிடைத்த சத்துணவு அமைப்பாளர் வேலை அவனது பொறுப்பென்கிற அந்த மய்யத்திலிருந்தே கண்டெடுக்கப்படுகிறது.
ஆனாலும் குழந்தை பிறந்து குடும்பம் விரிவடைய ஆரம்பிக்கும்போது வேலை நிரந்தரமாய் நிற்குமாபோன்ற அச்சங்கள் அவனில் முளைக்கின்றன. அப்போதுதான் 'தான் வசித்துக்கொண்டிருக்கும் பாழடைந்துபோய்விட்ட அந்த அரண்மனையைப் பற்றிய யோசனைகளில் மூழ்க' (பக்கம்:41) அவன் தொடங்குகிறான். ஏனெனில் அவன் வசித்துவந்த அரண்மனை, அரண்மனையாக அல்ல, வீடாகக்கூட உண்மையில் இருக்கவில்லை. இருநூறடி சதுர பரப்புடைய காவல் அறைகள் இரண்டினுள் அவன், அவனது மனைவி, இரண்டு பிள்ளைகள் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரண்மனையின் இடிபாடுகளிடையேயும், அதனுள் வளர்ந்த புதர்களினூடேயும் வசித்த விஷ ஜந்துக்களும், பறவைகளும், மற்றும் மிருகராசிகளும் அவனுக்கு அச்சத்தையும் வசதியீனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. தன்னை அந்த பாழடைந்த அரண்மனையின் ராஜாவாகப் பார்க்கமுடியாவிட்டாலும், அந்த விஷ ஜந்துகளின் பயம்மட்டும் இல்லாதிருந்தால் அங்கே வாழ்வதில் திருப்திப்பட்டிருக்க அவனால் முடிந்திருக்குமென்றே படுகிறது. அயலில் குடியிருப்புக்கள் இருந்திருந்தாலும் அணுக்கத்தில் வீடுகள் இல்லாத, அரண்மனையின் விசாலித்திருக்கக்கூடிய நிலப்பரப்பில் ஒருவகையான தனித்த, தான்தோன்றியான வாழ்க்கையையே ந பயில்வுசெய்துகொண்டிருந்தான் எனக் கொள்வதில் தவறில்லை. அந்தத் தனிமை அதுமாதிரியான ஒரு உன்மத்த வாழ்வை சந்தேகமில்லாமல் அவனுக்கு அளித்தேயிருக்கும்; எவருக்கும் அளித்தேயிருக்கும்.
அதனால்தான் நவுக்கு இரவிலே சிதைந்துபோன குதிரை லாயத்திலிருந்து குதிரைகள் கனைக்கும் சத்தங்கள் கேட்கின்றன. இதுதான் அவனது மனநிலையில் ஏற்படும் திரிபின் ஆரம்பம். மனத்தினடியில் அதை அரண்மனையாகவும், குதிரை லாயத்தில் குதிரைகள் கனைப்பதாகவும் கேட்பதெல்லாம் மனம் தளும்ப ஆரம்பிப்பதின் நோயான அறிகுறிகள். குதிரைகளேயில்லாத ஊரிலிருந்து கேட்ட குதிரைக் கனைப்பு ராஜா காலத்து குதிரைகள் இன்னும் யாருடைய கண்ணிலும் படாமல் அங்கே ஒளிந்திருப்பதாகவே அவனை எண்ணவைக்கிறது.
அதனால்தான் தான் குடியிருக்கும் அந்த பாழடைந்த அரண்மனைக்கு தன்னிடத்தில் பட்டா இல்லையென தெளிவாகிய கணத்தில் அவன் அதிர்ந்துபோகிறான், அரண்மனை தனதில்லையென்று தெரிந்திருந்தாலும், அதை வேறுயாரும் ஆர்ஜிதம் பண்ணாதவரையில் அவனுடையதான பாவனையே அவனிடத்தில் இருந்தது என்பதுதான் அதன் காரணம்.
அப்போது ஏழைகளுக்கான இலவச வீட்டுத் திட்டமொன்றை அரசு அறிவித்திருந்த நிலையில், அதிலொன்றைப் பெற்றுக்கொள்ளும் தீவிர முயற்சியிலிறங்கிவிடுவதை உந்திவிடுவதற்காகப்போல ஒருநாளிரவு சிதைந்துபோன அந்தக் காவல் கூண்டுக்குள் நாகமொன்று நுழைகிறது. ஒரு சிறிய வீடுபற்றி கனவிலிருந்த ந, அத்தோடு அதில் தீவிரமாகிப்போகிறான். அந்த முயற்சிக்கே ஒரு கம்பீரம் வேண்டுமென்பதுபோல் தனக்கு தலைச்சாயம் பூசி எல்லா ஆயத்தமும்கூட செய்துகொண்டு நெடுமுயற்சி செய்கிறான்.
நீண்ட அந்த முயற்சிகளின் பின் அவனுக்கு அந்த அரசு இலவச வீட்டுக்கான ஒதுக்கீடு கிடைக்கவே செய்கிறது. கட்டுமானமும் தொடங்குகிறது. அப்போதுதான் பூ எனப்படும் வரலாற்றாய்வாளரும், அவரது உதவியாளினியான ஸ்சும் அங்கே தோன்றுகிறார்கள்.
ஒரு விஷயம் அழுத்தமாக இங்கே பார்க்கப்படவேண்டும். ஒன்று நிஜம். இன்னொன்று பிரமை. வரையறுப்பு நீருருபோல் எழுந்துநிற்கும் இந்த நாவலில் அவற்றின் திண்ணமான வரையறுப்பு சாத்தியமில்லை. நிஜமாக இருக்கிறபட்சத்தில் பூவினுடனான நவின் அணுகுமுறை அவ்வாறன்றி வேறுவிதமாகவே இருந்திருக்க முடியும். அரண்மனையின் ஆய்வுபற்றிய முடிவை அவர் சொல்லும்போது ந மட்டுமே அதை விளங்கிக்கொள்கிறான். அவனது மனைவி வ அவர்கள் வந்தது கண்டாள்; அவர்களுக்கு வரக்காப்பி கொடுத்தாள்; போனது கண்டாள்; அவ்வளவுதான் அறிந்திருந்தாள். பின்னாலேதான் தன் கணவனை வ கேட்கிறாள், அவர்கள் எதற்காக வந்திருந்தார்களென. ந சொல்வதிலிருந்தே வ உண்மையை அறிந்து கேலியாக உணர்ந்துகொள்கிறாள். அதாவது ந என்பவன் சாதாரண நவோ, ந எனும் சத்துணவு அமைப்பாளரோ அல்ல, அவன் ஓபோன்ற பல கிராமங்களை உள்ளடக்கியிருந்த ஒரு அரசை ஆண்ட காளிங்க நட்ராஜ் மகாராஜாவின் வாழும் ஒற்றை வாரிசான நட்ராஜ் மகராஜ் என்பதாக.
அரண்மனையின் உள்காண பேராசிரியர், உதவியாளினி, ந ஆகியோர் செல்கிற சமயம் பேராசிரியர் தனியே முன்னால் ஏகிவிட ஸ்ஸோடு தங்க நேர்ந்துவிடும் ந, உறக்க மஞ்சக் கூடத்திற்குச் சென்றவளவில் கனவுவாஸியாகிவிடுகிறான். அவனது முதுகுக்குப் பின்னால் அவனை உரசிக்கொண்டு ஸ் நிற்கிறபொழுதில் 'அவளது சருமத்திலிருந்து வீசிக்கொண்டிருந்த நறுமணம் அவனைக் கிறக்கமூட்டுவதாயிருந்தது. அவளது சுவாசத்தின் வெதுவெதுப்பை தன் புறங்கழுத்தில் உணர்ந்த சீக்கிரத்திலேயே அங்கிருந்து போய்விட வேண்டுமென ந நினைத்தான். அதற்காகப் பின்வாங்கியபோது அவளது மிருதுவான முலைகள் அவனது தோள்களில் அழுத்தமாகப் பதிந்து விலகின. ந நிலைகுலைந்து போனான் (பக்கம்: 153).' இது நவின் இயல்பில்லை. அவனது குணவிஸ்தாரமில்லை.
ஆனாலும் அதை அவன் சுகிக்கவே செய்கிறான். தொடர்ந்து ஸ் பேசும் பேச்சுக்கள் யாவும் நட்ராஜ் மகாராஜின் மூதாதையரின் வாழ்க்கையின் களிநிலைகள்பற்றியதாக இருக்கின்றன. அங்குள்ள பிரமாண்டமான கட்டிலின் சட்டங்களில் செதுக்கப்பட்டிருந்த புணர்ச்சியின் பல்வேறு நிலைகளையும் அவன் காண நேர்கிறான். மேலே அவளது ஸ்திதிகள் சூரியனின் செம்மஞ்சள் ஒளியில் சந்தன சிற்பமாக அவனுக்குத் தோன்றுகின்றன. அந்த நிலையில் அவள் தன்னை அந்தக் கட்டிலில் புரண்டிருக்கக்கூடிய ஒரு ராணியாகப் பாவித்து மேலேயேறிப் புரள்கிறாள்; உன்மத்தம்கொண்டு சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பு அவனைக் கொன்றுவிடுகிறது. ஆம். அவ்வாறான எண்ணங்களைத்தான் நாவலின் வரிகள் மனத்தில் செதுக்குகின்றன. 'அவளது அந்தப் புன்னகையையும் புரண்டு துடிக்கும் பேரழகையும் கைவிடப்பட்டுக் கரையான்களின் கைகளுக்குள் அடைக்கலமாகிவிட்ட உறக்க மஞ்சக் கூடத்தின் தனிமையையும் எதிர்கொள்ளத் திராணியற்றவனாக இருந்தான் ந. அவனுக்குக் கைகள் நடுங்கின. காமிராவிலிருந்து கண்களை விலக்கிக்கொண்டு அவளுடைய பேரழகை நேரடியாகக் காண முற்பட்டான். (பக்கம்: 159)' இது உண்மையில் ந அல்ல. நவின் பிறழ் மனநிலையே.
நவின் வாழ்காலம் அந்தப் பாழடைந்த அரண்மனையில் அவனது சின்ன வயதிலிருந்தே, பிறப்பிலிருந்தே இருந்திருக்கிறது. அவன் அது பாழடைந்ததோ இல்லையோ அதையே பூர்வீகமான வாழிடமாகக் கொண்டவன். அவனுக்கும் சின்ன வயதில் ராஜாபற்றிய எண்ணம் வருகிறது. ராஜா என்ன செய்வார், எப்படி நடப்பார் என்பனவெல்லாம்பற்றி தன் அப்பாரய்னிடம் கேட்டுத் தெரிந்திருக்கிறான். பள்ளிப் பருவத்திலும் வாலிப பருவத்திலும் அவனுக்கு அந்த ராஜாக் கனவு வரவில்லையென யார் சொல்லமுடியும்? ஆக, நவுக்கு ராஜாக் கனவு இதயத்தின் ஆழத்தில் எப்போதும் உறங்குநிலையில் இருந்தே வந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்த எடுக்கும் மனஉத்திதான் பேராசிரியர் பூவினதும், அவரது உதவியாளினி ஸ்ஸினதும் வருகையாக இருக்கிறது. அவர்களது உறுதிப்பாடான வார்த்தைகளால் ந ராஜாவாகிவிடுகிறான். அதாவது அவனது மனத்துள் கிடந்த ராஜா உறக்கத்திலிருந்து வெளியேறி வருகிறார்.
சரிந்த கட்டில் உடைந்து புற்றுகளும் உடைய கிளம்பும் கறையான்களால் கடிபட்ட ஸ்ஸை காப்பாற்ற பெரும் பிரயத்தனம் செய்யவேண்டி நேர்கிறது. அப்போதும் அவளது வேதனை குறையாததில் பேராசிரியர் பூவும் அவரது உதவியாளினி ஸ்சும் கிராமத்திலிருந்து உடனடியாகவே வெளியேறுவதோடு நவின் நிஜ உலகம் திறக்கிறது.
அப்போதுதான் தனது கட்டிமுடிக்கப்படாத இலவச வீடு குறித்து அவன் அதிகமும் எண்ணுகிறான். மனித மனத்தில் எழும் இணைவிழைச்சு ஈர்ப்புக்கூட அவனில் கசப்பைச் செய்கிறது. மனம் அந்தக் கணத்தில் அவனுக்கு வெறுமையாக இருக்கிறது. எதையாவது யோசிக்க நினைக்கிறான். தன் மனைவியைப்பற்றி, அவளுடனான பன்னிரண்டாண்டு தாம்பத்தியத்தைப்பற்றி யோசிக்க விழைகிறான். அதுவும் அவனுக்குக் கசந்துவிடுகிறது. 'இந்த வாழ்க்கையிடம் முற்றாகத் தோல்வியடைந்துவிட்ட குமைச்சல் ஏற்படுகிறது' (பக்கம்:189) அவனுக்கு.
எதிலே அவன் தோல்விகண்டான்? சத்துணவு அமைப்பாளர் வேலையிலா? இலவச வீடு கட்டும் திட்டத்திலா? அவனது தோல்வி எதில் இருக்கிறது? ராஜாவாவதில். அதையே தன் வாழ்க்கையின் தோல்வியாக அவன் கருதிக்கொள்கிறான். அதை அவன் எங்கும் சொல்லாவிடினும்கூட அதுவே அவனது மனநிலையை உருவாக்கும் பெரும் காரணியாக உள்ளிருந்து செயல்படுகிறது.
இவ்வளவு அவநம்பிக்கைக்குப் பிறகும் நவுக்கு தான் ராஜா இல்லையென்ற முடிவு மனத்துள் விழவேயில்லை. வம்ச வரைபடத்தை வைத்துக்கொண்டிருப்பது அதனால்தான் நேருகிறது. ஒருபோது தன் மனைவியுடனான தகராறுக்குப் பிறகு, அந்த கோப மனநிலை ஒழிந்த கணத்தில், வவும் நவும் தம்மை ராஜா ராணியாகவே கேலி பண்ணிக்கொள்கிறார்கள். அதுவொரு கனவு என நூலிலே சுட்டப்படுகிறது. 'அந்தக் கனவு இந்த எல்லையோடு முற்றுப்பெற்றிருந்தால், சீக்கிரத்திலேயே முடிந்துபோகிற அவர்களுடைய கொண்டாட்ட மனநிலையின் சிறியதொரு பகுதியாக மட்டும் இருந்திருந்தால் எப்போதும்போல் புணர்ச்சியின் களைப்பில் இருவராலும் உறக்கத்தில் மூழ்க முடிந்திருந்தால் அவர்களுடைய அந்த எளிய, போராட்டங்கள் நிரம்பியதேயானாலும் அற்புதமான அந்த வாழ்க்கை எந்தக் குறுக்கீடுமற்றதாய்த் தொடர்ந்துகொண்டிருந்திருக்கும் (பக்கம்: 193)' என்றும், 'ந என்னும் பெயரையுடைய அந்த சத்துணவு அமைப்பாளரும், வ என்னும் பெயரையுடைய அவனுடைய மனைவியும் கனவுகாண விரும்பினார்கள் (பக்கம்: 194)' என்றும் சொல்லப்படுவதிலிருந்து ஒன்றை நிச்சயம்செய்ய முடியும். அவர்கள் இருவருமே கனவுகாண விரும்பினார்கள். அவர்களுக்கு கனவும் வந்தது. அந்தக் கனவு சொர்க்கமேறுவதற்கான கனவல்ல, குடியிருப்பதற்குத் தகுந்த ஒரு வீடு தேவையென்ற கனவு. 164 சதுர அடிகள்கொண்ட சின்ன ஒரு வீட்டின் கனவு.
'ந கனவுகளின் சதுப்புக் குழிக்குள் மூழ்கிக்கொண்டிருந்தான் (பக்கம்: 195).' அதுபோலவே அக்கனவின் விளைவாக 'வவின் நடத்தைகூட மாறிக்கொண்டிருந்தது' (பக்கம்: 200). வவுக்குமே பாழடைந்த அரண்மனையின் பிறின்சஸ் பற்றிய கனவு அவ்வப்போது அவனிலிருந்து தொற்றிக்கொண்டிருந்தாலும், அதிலிருந்து நழுவி மிகச் சாதாரணமாக வாழவே அவள் விரும்பியிருந்தாள். ஆனால் ந கொண்டதோ காளிங்க நடராஜ மகாராஜாவினது நேரடி வாரிசாக இருப்பதில் உண்டாகின்ற கனவு. அது வாழ்வின் இச்சா விருத்திகளிலிருந்தே கிளர்ந்திருந்தாலும், ஏமாற்றம் நம்பிக்கையிழப்பு, பொருளாதாரத் தாழ்நிலைகளால் ஏக்கமாகவே உருவெடுத்திருந்தது. நம்பிக்கையிழப்பின் மறுகணத்தில் சிதைவை ஏற்படுத்தக்கூடிய ஏக்கமாக அது இருந்தது. பிறழ்வுக்கும் பிரக்ஞைக்கும் இடையிலிருந்தது ஒரேயொரு கண்ணிதான். அது கழன்றால் பயிததியம். மாற்றிவிடமுடியாத நிச்சயத்தோடிருந்த பயித்தியநிலை.
கட்டத் தொடங்கிய வீடு சிதிலமடையத் தொடங்குகிற நிலைக்கு வந்துவிட்டது. நவுக்கு இயல்பான சந்தேகங்கள் மறுபடி தோன்றி, அவனைக் குழம்பும்படி செய்கின்றன. வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் 'மனப் பிறழ்வுக்கு உள்ளாவதிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள அவன் அதிகம் போராடவேண்டியிருந்தது' (பக்கம்: 213). 'அவர்களைச் சூழ்ந்திருந்த மிக ஆபத்தான அந்தக் கனவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அன்றாடங்களின் எளிய சுமைகளை ஏற்று' (பக்கம்: 215) வவும் வாழப் பழகிக் கொள்கிறாள். அப்போது 'பூ என்னும் பெயரையுடைய அந்தப் பேராசிரியரையும் ஸ் என்னும் பெயரையுடைய அந்தப் பேரழகியையும் ஆபத்தான அந்தக் கனவின் பிம்பங்களாகவே' (பக்கம்:215) அவள் உருவகித்துக்கொள்கிறாள்.
ஆனால் வவுக்கு இல்லாவிட்டாலும் நவுக்கு இந்த மனோநிலையும் நிலைப்பதில்லை. தன்பற்றிய செய்தியும் படமும் வெளிவந்ததாகக் கிடைத்த தகவலினால் அதைத் தேடியெடுக்கும் முகமாக அந்த பிரபலமான பத்திரிகையின் வார இதழைத் தேடி அவன் நூல்நிலையம் செல்கின்றான். சுண்டெலிகள் ஓடுகின்றன தாறுமாறாக; புத்தகங்கள் தாமாக அசைகின்றன. அவன் புத்தகங்களாலேயே பல சுண்டெலிகளைக் கொல்கிறான். அப்படி அங்கே பெரிய கூத்தே நடக்கிறது. அவனது பேதலிப்பு மேலும் அதிகரித்துவிட்டதையே அது வெளிப்படுத்துகிறது.
மாறி மாறி நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஏமாற்றமும் அவமானமுமாக ஆகிறபோது ஒரு மனத்துக்கு எதுவும் நடக்கும். 'நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் சத்துணவு அமைப்பாளராக தன் பணிகளைத் தொடரும் முடிவோடு' ந அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்பியபோது அங்கேயும் விதி அவனோடு விளையாடிவிடுகிறது. மீண்டும் காளிங்க நடராஜ மகாராஜாபற்றிய எண்ணங்களை மீட்கும்படியான நிகழ்வுகள் நவுக்கு அங்கே நேர்ந்துவிடுகின்றன.
நாவல் கொண்டிருக்கும் நான்கு பகுதிகளில் முதல் மூன்று பகுதிகளையும் கொண்டு நோக்குகிறபோது, இந்த யதார்த்த முறையிலான புரிந்துகொள்ளலில் செய்யப்படும் விமர்சனம், சாஸ்திரரீதியாக அமையமுடியும். ஆனால் நாவலை யதார்த்தம் மீறிய நிலைக்கு உயர்த்துவது அதன் நான்காம் பகுதியேயாகும். அது பூ என்ற பெயரையுடைய வரலாற்றுப் பேராசிரியரும் அவரது உதவியாளினி ஸ்சும்போன்ற இருவர் ஓ என்னும் பெயரையுடைய அந்தச் சிறிய, மிகச் சிறிய கிராமத்துக்கு வருவதோடு ஆரம்பிக்கிறது. இங்கிருந்து யதார்த்தரீதியான அர்த்தம்கோடல் இடம்பெறின் நாவலின் மிக முக்கியமான பகுதியின் முழு அர்த்தத்தையும், அதன் தோற்ற நியாயத்தையும்கூட, நாம் புரிந்துகொள்ளாமல் போகக்கூடும். அபத்தம் என்கிற மிகச் சுலபமான சொல்லாடல்மூலம் இதை அர்த்தப்படுத்திவிடக்கூடாது. நிழலையும் நிஜத்தையும் பிரித்தறிவதற்கான ஒரு எடுகோள், மீஅபத்தம்போல ஒன்று, தேவையாகவிருக்கிறது.
இங்கே மனநிலையை மீறி நிஜத்தில் நடக்கும் காட்சிகளின், படிமங்களின் உள்ளே நுழைந்தாகவேண்டும். அதற்கு தயாரில்லாத வாசகன் தன்னை பாதிப் பயணத்தில் நிறுத்தவே நிர்ப்பந்திக்கப்படுவான். யதார்த்த, நேர்கோட்டு ரீதியில் அமைந்த முந்திய மூன்று பாகங்களும் சொல்லப்பட்ட நிலையில், நான்காவது பாகம் மீஅபத்த வகையினதாக வெளிப்படுத்தப்பட்ட படைப்பின் நோக்குநிலையும் கவனிக்கப்படவேண்டும்.
தன்னை ஒரு பின்நவீனப் பிரதியாக உருமாற்றிக்கொள்ள அது ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டிருந்தது. அதனால்தான் வாசக அவதானிப்பை மிகவும் வற்புறுத்துவதற்காக தன் பாத்திரங்களின் பெயரிடலில் ஒரு சூசகத் தன்மையைக் கொண்டுவர நினைத்தது. 'விசாரணை' நாவலில் காஃப்கா கொண்டுவரும் பிரதான பாத்திரம் கே என்பதாகவே இருந்தது. ஆனால் 'நட்ராஜ் மகராஜ்' தன் அனைத்துப் பாத்திரங்களுக்கும் (ஒன்று தவிர. அது திரு.மூர் என்ற பெயர். 285ஆம் பக்கத்தில்) ஓரெழுத்துப் பெயரையே சூட்டியிருந்தது. பாத்திரங்களினது மட்டுமல்ல, ஊர்களினதும் கூட ஓரெழுத்துப் பெயர்களாகவே இருந்துவிட்டன. நவும் வவும் தவிர்ந்த எந்த ஓரெழுத்துப் பாத்திரமும் வேகத்தின் தடைக்கற்களாகத்தான் வாசகனுக்கு செயற்பட்டிருக்கமுடியும். அதன்மூலம் இன்னொரு சாத்தியம் அடையப்பட்டது. அது கூட்டிலைபோல் அவை பல்வேறு மனிதர்களையும் குறித்துநின்றன. ந ஓரெழுத்துப் பாத்திரமேயெனினும் அது இடையில் அதன் முழுப்பெயரால் குறிக்கப்படுவதால் தனியிலையாயும், கூட்டிலைபோல் தனியன்களின் தொகுப்பாயும் ஆகிவிடுகிறது.
இதற்குமேலே வரலாறும், அரசியலும் நேரடியாகக் களமிறங்குகின்றன. எந்த வடிவில் அமைத்திருந்தாலும் முரண்களற்ற வெளியில் நாவலைக் கொண்டுசெல்ல சாத்தியப்பட்டிருக்காது. இந்த இக்கட்டிலிருந்து படைப்பாளியை மீட்டெடுக்கிறது பின்நவீனத்துவம். எந்த வரலாற்றின் எந்த உரையாடலையும், எந்த அரசியலின் எவ்வகைச் செயற்பாட்டையும் கேள்விப்படுத்த மிக வாய்ப்பான வெளியை இது படைப்பாளிக்கு அளிக்கிறது. இது யுக்தி மட்டுமல்ல, நாவல் வெளிப்பாட்டின் உத்தியுமாகிவிடுகிறது.
பாழடைந்த அரண்மனையின் பாத்தியதைகாரனாக நவைக் கொண்டிருக்க முடிந்தது, ஆனால் மறைந்திருந்த வரலாற்றின் வெளிப்படுகையோ, நவை முற்றுமாகப் புறக்கணித்துவிடுகிறது. மறைந்திருந்த வரலாற்றின் கண்டுபிடிப்புகளை கதையாடலாக விரிக்கும் பேராசிரியரரின் உதவியாளினியும் பேரழகியுமான ஸ்போன்றவளின் விளிப்பு, ந அருகிலேயே இருந்தபோதும் மொத்த சமூகத்தையும் நோக்கியதாகவே இருந்து அவளின் இலக்கை துலாம்பரமாகவே காட்டிவிடுகிறது. காளிங்க நடராஜ மகாராஜின் இறுதிக் கால கும்பெனியுடனான யுத்தம் முதலான சம்பவங்களை அவளே ஜனத்திரளின் முன் வெளிப்படுத்துகிறாள். ஊரின் பெருமைகளை, அதனருகே ஓடும் ஆற்றின் புராதன சிறப்பை அவளே எடுத்துரைக்கிறாள். அப்போது அதற்கான எதிர்மறைக் கருத்துக்கள் ஜனங்களின் மத்தியிலிருந்து கிளர்ந்தபொழுது ந அந்த ஜனங்களின் ஓரங்கமாககூட இருக்கவில்லை. எங்கோ வரலாற்றின் மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கிறான்.
ஆக, வரலாற்றினைக் கண்டடைதல் என்பதும் அதன் மீட்டுருவாக்கம் என்பதும் மொத்தமாகவே தொடர்பில்லாத ஒரு அமைப்பிடம் சென்று சேர்ந்துவிடுவதைத்தான் நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. வரலாறு தொடர்புடையவர்கள் மட்டுமன்றி, சமூகமும்கூட வெளியிலேயே விடப்பட்டுவிடும் என்பதுதான் சூசனம். வரலாற்றில் சமூகத்தின் பாத்திரம் தக்கவைக்கப்பட்ட பொழுதில், சமூகத்தில் வரலாற்றின் பாத்திரம் கைகழுவிவிடப்படட்ட ஒன்றாகவே இருக்கின்றது.
இதற்கு மேலே அரசியல் யதார்த்தம். அது நாவலின் இரண்டாம் பகுதியிலேயே வெளிப்படத் துவங்கிவிடுகிறது. இலவச வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் நவின் முயற்சிகள் அவனுக்கான ஒரு வீட்டை ஒதுக்கப்படும்வரை முழுவதும் நடைமுறை அரசியலின் பின்னணியிலேயே சம்பவிக்கின்றன. ஆனாலும் உப்பமைந்தற்று என்கிறமாதிரியில் அது அளவாகவே தன்னை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் நான்காவது பகுதியில் அது வரலாற்றின் அமைப்புகளுடன் சேர்கிறபோது அது விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. வரலாறும், அரசியலும், இதற்கப்பாற்பட்ட வாழ்க்கையுமாக அது குழம்பி தெளிவற்று விடுகிறது. அதுவே நடைமுறையாக, யதார்த்தமாக, கண்படும் சாட்சியமாக இருக்கிறது.
நான்காவது பகுதியில் மிகுந்த கவனத்தில் பட்ட சில முக்கியமான அம்சங்களைப்பற்றிக் குறிப்பிடவேண்டும். ஒன்று, முகமூடி மனிதர்கள். ஒன்றுபோல் அணிந்துவிடும் இம்முகமூடி மனிதர்கள் உண்மையில் அரசியலின் அங்கங்கள்தான். எனினும் அவை மிகச் சாதாரண பாத்திரமேற்று சமூகத்தில் உலாவிவருகின்றன. இந்த மருட்கை அரசியலுக்கு எப்போதும் தேவையான பங்களிப்பைச் செய்துகொண்டே வந்திருக்கிறது.
இரண்டாவதாக, கலைக்கூடமாக இயங்குகிற அரசு அலுவலகம் ஒரு முக்கியமான குறியீடு. அரச அலுவலகங்களின் செயற்பாடு எப்போதும் அவ்வாறேதான் இருந்திருக்கிறது என்பதே அதன் அர்த்தமாக வெளிப்படுகிறது. அரசியல் சார்ந்து இயங்கும் இந்த அரசு நிறுவனங்களின் செயற்பாட்டை இக்குறியீடு தெளிவாகவே வாசகன் முன் வைத்துவிடுவதாகச் சொல்லவேண்டும்.
மூன்றாவது, வவுக்கு நேரும் அடையாளச் சிக்கல். முண்டியடித்து முன்னேறும் ஜனங்களோடு தன்னிரு குழந்தைகளையும் பக்கத்துக்கொருவராகக்கொண்டு தானும் முன்னேறுகிற வ, எதிரே தன் பார்வையெட்டிய தூரத்தில் தன்போலவே உருவமும் தன்போலவே இரண்டு பிள்ளைகளை இரண்டு பக்கங்களிலும் கொண்டு முன்னேறும் ஒரு பெண்ணைக் காண்கிறாள். பின்னே செல்லும் ஆண் அவளை பாலியல் இம்சைக்கு உட்படுத்துகிறான். தனது விரைத்த குறியால் அவளது புட்டத்தைத் துளைத்துக்கொண்டிருந்த பொழுதில், கையால் அவளது முலையைக் கவ்வவும் அவன் முயல்கிறான். அவளால் தடுக்க முடியாதபடிக்கு ஜன நெரிசலாகயிருக்கிறது. பாலியல் இம்சைசெய்வோன் இறுதியில் தன் கருத்தில் வெற்றியீட்டிய பொழுதில், அவர்களை மிகுந்த பிரயத்தனத்தில் அணுகிவிட்ட வ, சிறிதுநேரத்தில் காண்கிறாள் இம்சைக்குள்ளான பெண்ணின் நெற்றியில் தோன்றிய வேர்வையின் துளிகளை. ஆனால் அவளுக்கு அவை களிப்பின் துளிகளென துல்யமாகத் தெரிகிறபோது அவள் அதிர்ச்சியாகிப்போகிறாள். இம்சைக் களிப்புக்கான விருப்பார்வத்தை இது குறிக்கிறதென்று தயங்காமல் கொள்ள, குழந்தைகளும் அந்தப் பெண்ணும் இம்சை புரிந்தவனுமே சிறிதுநேரத்தில் மாயமாக மறைந்துபோவதிலிருந்து கொள்ள முடிகிறது.
அந்தக் குறியீட்டின் விளக்கம் இதுவெனில், இன்னொரு காட்சி வாசகனை அதிரவைக்கிறது. இம்சைப்பட்டவளாக வவே ஆகிவிடுவதுதான் அது. 'வ தன் கலைந்த ஆடைகளைச் சரிப்படுத்திக்கொண்டாள். ஈரம் படர்ந்த முலைகளை ஆடைக்குள் தள்ளி மறைக்க முயன்றபோது கன்றிப்போன காம்புகளின் வலியைப் பொருட்படுத்தாமல் தன் இரு குழந்தைகளோடும் அந்த மேடையை அடைந்து கணவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்' (பக்கம்: 283) என்ற விவரிப்பு பாதிக்கப்பட்டவள் அவளே என்பதைத் தெரிவித்துவிடுகிறது.
இந்த அடையாளச் சிக்கலை, முந்திய பகுதிகளில் கண்ட மனப்பிறழ்வின் குணங்களாக வாசகன் கொண்டுவிடக்கூடாது. அது சிதைவுறும் மனநிலையின் வெளிப்பாடாக இருந்தது. இங்கே பாதிக்கப்பட்டவளாக வவே ஆகிவிடுவது, யாரும் எந்தவிதமான பாதிப்பிலிருந்தும் தனியாகத் தப்பிவிட முடியாதென்பதின் உள்ளக அர்த்தமாக மாறிவிடுகிறது.
ரசம்போன கண்ணாடியின் முன் நின்று தன் ஒப்பனையை ந சரிபார்த்துக்கொள்வதும் ஒரு குறியீட்டு வெளிப்படுத்துகைதான். அர்த்தங்கள் மறைந்துபோன காலத்தின் காட்சிப்படுத்துகையன்றி அது வேறல்ல.
ஜனங்கள் சிதறிப்போயிருக்கிறார்கள். ந அந்த ஜனக்கூட்டத்தினிடையே நின்று திக்குமுக்காடுகிறான். அவனை ஒருபோது காவல்துறை அதிகாரி தூக்கி ஜனங்களிடையே வீசுகிறான். அவனை அந்த பலசாலியான, முன்பொருமுறை ஸ்ஸை கறையான்கள் கடித்து அலறி விழுந்தவேளையில் அவளைத் தூக்கிச்சென்ற இளைஞன் காப்பாற்றி தூக்கிக்கொண்டு ஜனக்கூட்டத்தை விலக்கியபடி ஓடுகிறான். மரப்பல்லியைப் போல் அவனைப்பற்றியபடியிருக்கும் ந, தனது நல்லூழின்மீது மீண்டுமொரு முறை நம்பிக்கை கொள்கிறான்.
வலுவான கரங்களின் பாதுகாப்பிலிருந்துகொண்டு ந கொள்ளும் நல்லூழின்மீதான நம்பிக்கைபோல், தாங்கும்வலுவான கரங்களின்றியிருக்கும் சமூகமும் இந்த அரசியல், வரலாற்றுப் பகைப்புலதத்தில் தன் நல்லூழின்மீது மட்டுமே நம்பிக்கைகொள்ளவேண்டிய துர்ப்பாக்கியம் கொண்டிருக்கிறதென்றே நாம் கருதவேண்டிக் கிடக்கிறது.
நீரலைபோல் ஒன்று பிறிதாக, பிறிது குறிப்பிட்ட ஒன்றாக என அலைந்துகொண்டிருக்கும் நாவலின் கருத்துவெளியில் ஒன்றை வாசகன் நினைவுகொள்ளமுடியும். சர்லெற் ப்றொன்ரேயின் நாவல் 'வில்லெற்' மயக்கமூட்டும்படியும், வாசகன் முடிவில் பங்குகொள்ளும்படியுமாய் அமைந்த நாவலெனப்படுகிறது. இறுதி நிலையில் தன்னில் மயக்கத்தை ஏற்படுத்தி இவ்வாறாகத் தப்பிப்பதை அடையாளப்படுத்தும் நாவல்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் 'வில்லெற்' இங்கேயும் ஞாபகமாகச் செய்கிறது,
தேவிபாரதியின் எழுத்துக்கள் ஊடான பரிச்சயம் எனக்கு 'நிழல்களின் தனிமை' நாவலிலிருந்தே தொடங்கியது. உருவமொன்றின்றேல் நிழல் உருவாகமுடியாத நிஜமிருக்க, நிழலுக்கே தனிமை கண்ட அந்த நாவலின் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. விருப்பார்வத்தோடு தொடங்கிய அந்த வாசிப்பு மிக்க அருமையான வாசிப்புச் சுகத்தைத் தந்திருந்தது. பலி, வீடென்ப, பிறகொரு இரவு ஆகிய அவரது சிறுகதைத் தொகுப்புகளைப் பின்னால்தான் வாசித்தேன். 'நிழலின் தனிமை' நாவல் தேவிபாரதியின் மொழிப் பெட்டகத்தின் தேர்ந்த சொல்களால் இயன்றிருந்தவேளை, 'நட்ராஜ் மகராஜ்' உரையாடலுக்கான மிகச் சாதாரணமான மொழியில் புனைவைச் செய்திருக்கிறது என நான் நினைக்கிறேன். அந்தளவு இலகு சொற்களில் அடையப்பட்ட கனத்த அர்த்தத்தின் வெளிப்பாடு மிக அருமையாக நாவலில் பொதிந்திருக்கிறது. நடையும் அர்த்தத்திற்கேற்ப அவர் தேர்ந்துகொண்ட ஒரு நடையாகவே எனக்குத் தென்பட்டது.
நட்ராஜ் மகராஜ் பல் தளங்களில் வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான ஒரு பிரதி. மாமூலாக ஒரு விமர்சனத்தில் பிரதியின் குறைகளும் சொல்லப்படவேண்டுமென்ற வழக்கத்தை இதில் நான் மீறியிருக்கிறேன். குறைகளேயில்லாத பிரதியில்லை. அதன்படி இதிலும் சொல்ல குறைகள் சில உள. அவை செல்லக் குறைகளென்பதால் அவற்றை இங்கே நான்அடையாளப்படுத்த தேவையில்லையெனக் கருதுகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.