கவிஞர் சோ.பத்மநாதனின் தொகுப்பிலும் மொழிபெயர்ப்பிலும் வெளிவந்துள்ள 'தென்னாசியக் கவிதைகள்' என்ற இந்த நூலே அகண்ட பிராந்தியம் சம்பந்தமாக வெளிவந்த முதல் தமிழ் நூலாக இருக்கமுடியுமெனத் தோன்றுகிறது. அந்த வகையில் இதுபற்றி சரியான ஒரு மதிப்பீட்டைக் கொள்ளுதல் தொடர்ந்தேர்ச்சியான இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒழுங்கமைந்த வழிகாட்டியாக இருக்கமுடியும்.
SAARC என சுருக்கமாக அழைக்கப்படும் South Asian Association for Regional Corporation என்ற இந்த அமைப்பு 1985ஆம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பூட்டான், நேப்பாளம், மாலைதீவுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைமையகம் நேப்பாளின் காத்மண்டுவில் இருக்கிறது. வர்த்தகத்துக்கான முன்னுரிமைகளைக் கருத்தில்கொண்ட அமைப்பாகத் தொடங்கப்பட்டாலும், அதற்கும் மேலான இணக்கப்பாடுகளை இலக்கியமூடாக உள்வாங்கும்படியாக ஆரம்ப காலம்தொட்டே இதன் நடைமுறைகள் இருந்துவருகின்றன. அதன்படி தென்னாசிய நாடுகளின் ஆளுமைக்கான விருது உட்பட இலக்கியச் சாதனைக்கும் மற்றும் இளைஞர் சாதனைக்குமான விருதுகள் வழங்கலுமென திட்டங்கள் பலவற்றை இது தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவற்றில் 25000 டொலர் மதிப்பான தென்னாசிய நாடுகளின் ஆளுமை விருதானது முதல் தடவைக்குப் பின்னால் எப்போதும் வழங்கப்படவில்லை. ஆனால் இலக்கியச் சாதனை விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டே வருகின்றன. மகாஸ்வேதாதேவி, மார்க் ரலி, சுமன் பொக்றெல் மற்றும் சீதாகாந்த் மஹாபத்ர உட்பட பல தெற்காசியாவின் முக்கிய இலக்கியவாதிகள் இப்பரிசினைப் பெற்றிருக்கிறார்கள்.
சார்க் நாடுகளின் கவிஞர்களது ஒன்றுகூடல்களில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து 'தென்னாசியக் கவிதைகள்' என்ற இந்நூல் தொகுக்கப்பெற்றிருக்கிறது. இந்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிக் கவிதைகளுடன் சிங்களம், நேப்பாளம் ஆகிய மொழிகளின் கவிதைகளும் இவற்றின் ஆங்கிலவாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு ஆகியிருக்கின்றன. நேரடியாக தமிழிலிருந்து தேரப்பட்ட ஒன்பது கவிதைகளுட்பட அறுபத்தைந்து கவிஞர்களின் எண்பத்தேழு கவிதைகள் இத்தொகுப்பிலுண்டு. ஒட்டுமொத்தமான எண்பத்தேழு கவிதைகள் மேலுமான ஒரு கண்ணோட்டத்தைச் செய்திருந்தாலும், முப்பத்தைந்து கவிதைகளின் தேர்விலிருந்து நல்ல கவிதைகளாக பதினேழு கவிதைகளையும் சிறந்த கவிதைகளாக இரண்டினையும்கொண்டு இந்த நூலின் விசாரணையைத் தொடங்கவிருக்கிறேன்.
மூன்றாம் உலகநாடுகளென பொருளாதார அரசியல்ரீதியில் பொதுவாகக் குறிக்கப்பெற்ற நாடுகளின் வறுமை, வேலையின்மை, வாழ்க்கைத் தரம், சுகாதார விருத்தியின்மை ஆகியன ஒரே தரத்தனவாகத்தான் இருக்கின்றன. அந்தவகையில் தென்னாசிய அமைப்பைச் சேர்ந்த இந்த நாடுகளின் தரமும் பெரிதான வித்தியாசங்கள் அற்றவையே. ஆயினும் இவை ஒவ்வொன்றினுள்ளும் உள்ளோட்டமாய் இவற்றின் தனித்துவமான உணர்வுகள் இருந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. அவற்றை இங்கே முழுமையாகக் காணமுனைவது அனுசிதமான செயற்பாடு. அதனால் ஒட்டுமொத்தமான இவற்றின் உணர்வுகளை மய்யப்படுத்திக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் கவிதைகளில் எழும் குரல்களின் தேடல்களையும், திசைகளையும் கணிப்பதோடு கவிதைரீதியிலான இவற்றின் மதிப்பீட்டு முயற்சியையும் செய்வதே இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு வளர்முக நாடுக (Developing Countries) ளென இவை குறிக்கப்படுவதாலேயே இவை பின்தங்கிய நாடுகளென அழைக்கப்பட்ட காலத்து தரத்திலிருந்து பெருமளவில் வேறுபட்டுப்போகவில்லை. இங்கே முக்கியமாகவும் முதன்மையாகவும் சட்டத்தின் ஆட்சி வலுப்பட்டிருக்கவில்லை என்பதில் நம் கவனத்தைக் குவிக்க முனைந்தால், அதிலிருந்து தொடர்புடைய பல விஷயங்களும் தாமாகவே மேலே எழுந்துவிடும். இந்த நாடுகளில் ஜனநாயக உரிமைகளின் பயில்வினையும், பத்திரிகைத் துறையின் சுயாதீனத்திற்கு விளையும் இடைஞ்சல்களையும் இங்கிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
மொழி இனம் மதம் ஆதியவை காரணமாய் தூண்டிவிடப்படும் உயிரச்சம் மிகுந்த கலவரங்கள் அடிக்கடி கிளர்தெழுந்துகொண்டிருக்கின்ற நாடுகளாக இவை இன்றளவும் இருந்துகொண்டிருப்பதை தகவல் தொடர்பூடகங்கள் நினைவுறுத்திக்கொண்டே இருக்கின்றன. இருந்தும் அவற்றிற்கு எதிரான குரல் நிஜத்தில் இந்த நாடுகளிலிருந்து மிகவும் சன்னமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அதனாலேயே இவற்றைப் பின்னணியில்கொண்ட கவிதைகளேதும் இத்தொகுப்பிலே பெருமளவில் காணப்படாதது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆயினும் வேறு அம்சங்களை, உதாரணமாக வறுமையும், அதன் காரணமாக உந்துதல்பெறும் பாலியல் தொழிலுமெனவும், வளர்ந்துவரும் கல்வி நிலைமையினாலான மாற்றுச் சிந்தனைகளும் அதனால் காலகாலமாக இறுகிக் கட்டிபட்டுப் போயிருக்கும் சமூக நிலைமைகளுக்கான எதிர்க்குரல்களுமெனவும் சில கவிதைகளில் ஒலிப்பதை ஒரு வாசகன் கேட்கவே செய்கிறான். பெண்ணிலை சார்ந்த கவிதைகள் சில இடம்பெற்றிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
தொகுப்பின் முதலாவது கவிதையான 'பெயரில்லாத மகள்' என்பதிலேயே பாலியல் தொழில் புரியும் ஒரு தாயின் வாழ்வவலத்தின் குரல் ஒலிக்கத் துவங்கிவிடுகிறது. டபிள்யு.ஏ.அபேசிங்கவின் சிங்கள மொழி மூலத்திலிருந்து ஆங்கிலமூடாக மொழிபெயர்ப்பாகியிருக்கும் கவிதை இது.
'கொத்தனாரும் வீதியும்' கவிதையில், தஞ்சாவூர் பெரியகோயில் கட்டுமானத்தில் விளைந்த கொடுமைகளுக்கெதிராக ஒரு காலத்தில் ஒலித்த கவிஞர் இன்குலாப்பின் கலகக்குரலை நாம் கேட்கமுடியும்.
'தாமெல் வீதிக்கு மேலே \
எழும்பும் கட்டிடத்தின் \
நெற்றிமுட்டான விளிம்பில் \
குந்தியிருந்து வேலைசெய்கிறான் அவன் …
'சுற்றுலாப் பயணிகளின் கண்களில் \
காத்மண்டுவின் கிறங்கவைக்கும் காலம் மின்னுகிறது…
'அவனுடைய நிச்சயமற்ற அடிபோல \
அவனுக்கும் எனக்கும் இடையே \
காலம் நடுங்குகிறது …
'இவ்வாறு நிச்சயமின்றித்தான் \
சுற்றுலாத் தலமாகிய தாமெலில் \
நேபாளத்தின் \
கிறுக்குப் பிடித்த கனவைக் கட்டியெழுப்புகிறான்…'
என்ற கவிதையிலுள்ளது கவிஞர் இன்குலாப்பினதுபோன்ற கலகக் குரலேதான். எழுபதுகளின் இறுதியில் மிகக் காத்திரமான பாதிப்பை தமிழ்க் கவிதைப் பரப்பில் இது செய்தது. நேபாள மொழி மூலத்திலான அபி என்.சுபேதியின் இக் கவிதையும் அதனாலேயே கவனம் குவிக்கப்படவேண்டியது ஆகின்றது.
'தந்தையின் கொலையாலும் \ தகாத உறவாலும் \ எங்கள் இனம் \ மகிழ்ச்சிக் களங்கம் எய்துகிறது' என்ற இலங்கை வரலாற்றைக் கேள்விக்குட்படுத்தும் தயா திசநாயக்கவின் சிங்களமொழிக் கவிதையையும் இப்பகுப்பில்வைத்தே நோக்கவேண்டும்.
அஜந்தாவின் தெலுங்கு மூலக்கவிதையான 'உறக்கம்' வாழ்க்கையையே தத்துவ விசாரணைப்படுத்துகிறது. அது வந்தடைகிற முடிவு வாழ்க்கையில் விரக்தியையே உருவாக்குகிறதெனினும், அதைவிட சாதாரணர்களுக்கு வேறு மார்க்கம் இல்லையென்ற உண்மையையும் பலமான கவிதை மொழியில் இது சொல்கிறது. இது விரக்தியின் வேதாந்தப் புலம்பலாக உருமாறிவிடாமல் அதை நகைச்சுவையுணர்வின் ஒரு எல்லைக்கே எடுத்துச் சென்று வாசகனையாவது சிந்திக்கச் செய்கிறது. சமகாலம்மீதான இந்த விரக்தி கோபமாக உருக்கொள்ளாமல் மடைமாறுவது சமூக அக்கறை சார்ந்து பலஹீனமான அம்சமெனினும், கவிதை சார்ந்து பார்க்கையில் பலமான அம்சமாகவே தோன்றுகிறது. 'மனிதர்களிடையே முள்வேலிகள் இல்லை \ இப்பொழுது யாரும் சாவுக்குப் பயப்படுவதில்லை \ எல்லோரும் உறக்கத்தின் பிடியில்' என விரக்திக்கு மனிதனின் உறக்கத்தை வடிகாலாய்த் தரும் இக்கவிதையின் முடிவு வியப்பூட்டுகிறது; ரசனை பிரமிப்பூட்டுகிறது.
பெண்ணிலைபற்றி பேசுவனவாய் சில கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.ஆனாலும் இவற்றின் உரம் குறிப்பிடக்கூடிய அளவில் உயர்ந்து செல்லவில்லை. தமிழ்க் கவிதையில் இவ்வகைப் பெண்ணியக் குரல் குட்டி ரேவதியின், பெருந்தேவியின், ரிஷியின், மாலதி மைத்ரியின் கவிதைகளில் மிகவுயரந்த எல்லையைத் தொட்டிருக்கிறது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குரிய பெண் நலக் குரல்களையே இந்தத் தொகுப்பில் நாம் கேட்கின்றோம். 'இது பூமியாய் இருக்கிறபடியால்' என்கிற அனூப்குமாரின் இந்தி மொழிக் கவிதை, 'பெண்' என்கிற பனித்ரா கிரியின் நேபாள மொழிக் கவிதை போன்றவற்றில் மெல்லென இழையும் பெண்ணிலைக் கருத்துக்கள் உள்ளனதான். எனினும் வீறார்ந்து ஒலிப்பனவாக அவையில்லை.
அது ஏன் இவ்வாறென்றெல்லாம் நாம் கேள்வி தொடுத்துவிட முடியாது. முஸ்லீம் நாடுகளாய்ச் சில இருப்பதனால் அவ்வாறாயிருக்கலாமென சமாதானமடையவும் முடியாது. ஏனெனில் ஈரானில் அதன் மதவாதக் கட்டுப்பாடுகளை மீறியெழுந்த முயற்சிகளினாலேயே உலகத்தரம் வாய்ந்த சினிமாக்களை அதனால் உருவாக்க முடிந்திருந்தது. ஆக, இந்தக் கவிதைகள் தொகுப்பில் இவ்வாறிருக்கின்றன என்பதுதான் பதிலாகமுடியும்.
ஆங்கில மூலத்தில் எழுதப்பெற்ற சாத் அஷ்ரப்பின் பாகிஸ்தான் கவிதையொன்று அழகிய மொழியில் ஒரு காதலனின் உடைந்த இதயத்தைச் சொல்கிறது. 'அறியவொண்ணா அப்பாலுக்கப்பால் \ கடைசி அடியை எடுத்துவைக்கு முன் \ இருளிலும் அமைதியிலும் \ நான் நெடுநாள் காத்திருந்தேன்…' என்கிறது அந்தக் கவிதை. எடுத்துரைப்பு சிறப்பாகவுள்ள கவிதை இது. 'தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியுடன் என்று' சொன்ன காதலி வராது சென்றதில் உள்ளம் சிதறிக்கூவும் பாரதியின் கவிதை வீச்சை ஏறக்குறைய நிகர்த்ததாய் இருக்கிறது இக்கவிதை.
'விலைமாது தன் மகளுக்குச் சொன்னது', 'பைத்தியங்கள்' ஆகிய கே.சச்சிதானந்தனின் மலையாளக் கவிதைகள், 'இஸிதஸி' என்கிற சரத் அமுனுகமவின் சிங்களக் கவிதை, சம்சுர் ரஹ்மானின் வங்காளிக் கவிதையான 'நான் போகமாட்டேன்' என்பன தொகுப்பில் கருத்திறுக்கம்கொண்ட முக்கியமான கவிதைகள். கருத்தினால் மட்டுமின்றி, வெளிப்படுத்தும் உணர்வாலும், கவிதைத் தன்மையின் செறிவாலும், மொழியமைப்பாலும்கூட இக்கவிதைகள் உயிர்த்துவம் பெற்றவையாக இருக்கின்றன.
இவற்றுள்ளும் 'நான் போகமாட்டேன்' என்பதை இன்னும் முக்கியத்துவமுள்ள கவிதையாக நான் காண்கிறேன். உள்நாட்டுக் கலகங்கள் பயங்கரவாதிகளாலும், ராணுவ பயங்கரவாதத்தினாலும் கிளர்ந்தெழுகிறபோது எப்போதும் ரத்தம் சிந்தும் நிலமாக இருக்கிற பூமி வங்காளம். அங்கே ஜாதி காரணமாக நடக்கும் கொடுமைகளும் கணக்கிலடங்காதவை. அந்த இடதுசாரிச் சிந்தனை மிகுந்த மண்ணில் பல்வேறு காரணங்களால் நடக்கும் கொடுமைகளிலிருந்து உயிர் பிழைக்க பொதுஜனங்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்கவே செய்கிறார்கள். எல்லை கடந்தும் ஓடுகிறார்கள். ஆனால் ஒரு இதயம்மட்டும், எவ்வளவு கொடுமைகள் நடப்பினும் 'இது எனது மண், இங்கிருந்து நான் ஓடமாட்டேன்' என பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. மண்ணின் மரபார்ந்த மகத்துவம் பேசுவதானாலும், அது இக்கவிதையின் அழகியல் உணர்வுடன் கலந்து அழகிய மொழிகளில் வெளிவந்து இதை ஒரு சிறந்த கவிதை ஆக்குகிறது.
அதுபோல நல்லவொரு கவிதைக்கு உதாரணமாக துவாரகனின் 'அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்' தமிழ்க் கவிதையையும் சொல்லமுடியும். 'அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்' என்ற துவாரகனின் தொகுப்பிலேயே சிறந்த கவிதையும் இதுதான்.
இவ்வளவிருந்தாலும் மொழிபெயர்ப்பினதும் கவிதையினதும் வலிமையை இரண்டு மலையாளக் கவிதைகளினூடாகவே காண இதில் முடிந்திருக்கிறது. முதலாவது என்.பாலாமணி அம்மாவின் 'கோடரியின் கதை'. மற்றது சங்கர குறுப்பின் 'ஆசாரி'. இரண்டுமே மிக நீளமான, நீளமான கவிதைகள்.
பரசுராமனின் கதை சொல்கிற முதலாவது கவிதையிலும் சரி, ஒரு முதிய தச்சனின் அனுபவ மீட்புகளையும், இயலாமையின் அவதியையும், அவனது கனவுகளையும் எடுத்துச் சொல்கிற 'ஆசாரி' கவிதையிலும் சரி மொழிபெயர்ப்பாளரின் அருமையான மொழியாட்சியைக் காணமுடிந்திருந்தது. சிறந்த தமிழ்க் கவிஞர்களால் புனையப்பட்ட கவிதைகள்போலவே அவை பரவசம் செய்தன.
மலையாளம் பேச்சு பாங்கில் தமிழுக்கு மிக அணித்தாக வரக்கூடிய மொழிதான். ஆனால் மொழியின் வரி வடிவம் தமிழுக்குச் சேய்மையானது. அத்துடன் அவற்றில் எடுத்தாளப்பெற்ற விஷயங்களும் மிக்க கனதியானவையாக இருந்தன. இருந்தும் மொழிபெயர்ப்பெனத் தெரியாதபடி அவற்றுள் வாசகனால் ஆழமுடிந்திருந்தது. பல மொழிபெயர்ப்புக் கவிதைகளில் வாய்க்காத இந்த அனுபவத்தை சோ.ப.வின் மொழிபெயர்ப்பில் இங்கே அனுபவிக்க முடிந்தது.
இவை மலையாள வாசகப் பரப்பிலேயே மிக வலுவான தாக்கத்தைச் செலுத்திய கவிதைகள். மிக மூத்த இரண்டு மலையாளக் கவிஞர்களால் எழுதப்பெற்றவையும்கூட. எழுத்தச்சன் பரிசு, சாகித்ய அகடமி பரிசு, வள்ளத்தோள் பரிசு, ஞானபீட பரிசுகள்பெற்ற கவிஞர்களாகவும் இவர்கள் இருந்தார்கள். இருவரும் ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றி, இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரையும் (சங்கர குறுப்பு மட்டும் எழுபத்தெட்டிலேயே மறைந்துவிடுகிறார்) உயிர் வாழ்ந்தவர்கள். அவ்வளவு வலுவான இரண்டு மலையாள மூலக் கவிதைகளின் அழகையும் அர்த்தத்தையும் சிக்கெனப்பிடித்துவந்த மொழிபெயர்ப்புக்காக சோ.ப.வைப் பாராட்ட முடியும்.
சோ.ப.வின் கவிதைகளுக்கான மொழிபெயர்ப்புப் பங்களிப்பு நீண்டகாலமாகவே தமிழ்மொழியை வளம்படுத்தி வருகிறது. 'தென்னாசியக் கவிதைகள்' தொகுப்பைக் கண்டபோது எனக்கு 2003இல் தூண்டி வெளியீடாக வந்த 'தென்னிலங்கைக் கவிதை'யினை நினைவுகொள்ள முடிந்திருந்தது. அதுவும் மிக்க காத்திரமானதும், பெறுமதியானதுமான மொழிபெயர்ப்பே.
'தென்னாசியக் கவிதைகள்' ஒரு அடையாளம், தமிழிலும் தென்னாசிய இலக்கிய உலகிலும். இதுவே உன்னதமல்லவெனினும் இன்னும் சிறப்பான தொகுப்பினை நாம் எதிர்பார்க்க முடியுமென்ற நம்பிக்கையைத் தருகின்ற தொகுப்பு இது. தமிழிலேயே மிக அற்புதமான கவிதைகள் வடக்கு வன்னி கிழக்கு மலையகமென இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பல்லின நாடான இலங்கையிலும் இவ்வாறான தொகுப்புகளுக்கான உந்துதல் இங்கிருந்து கிளரவேண்டும். அதற்காக வாசகன் சோ.ப.போன்ற கவிஞர்களாயும் மொழிபெயர்ப்பாளர்களாயும் இருப்போரைக் காத்திருக்கின்றான்.
0
தென்னாசியக் கவிதைகள், (தேர்வும் மொழிபெயர்ப்பும்: சோ.பத்மநாதன்)
வெளியீடு: எஸ்.கொடகே (சகோதர்கள்) பிரைவேட் லிமிட்டட்)
675 பீ.டீ.எஸ்.குலரத்ன மாவத்த, கொழும்பு 10
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.