பதிவுகள்: நவமப்ர் 2002; இதழ் 35
விவாதங்கள் ஏன் ? என் எழுத்து ஏன் எளிமையாக இல்லை? இலக்கியமும் வரலாறும்
அன்புக்குரிய இராமகி அவர்களுக்கு , தங்கள் கடிதம் உற்சாகமாக யோசிக்க வைததது .நன்றி.
1. விவாதங்கள் பற்றி.
தமிழ் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் அவன் பிரபலமாக இருக்கிறான் , முக்கியமானவனாக இல்லை என்பதே ஆகவே அவனது பிரபலத்தை தட்டிப்பார்க்க பலர் விழைகிறார்கள்.ஏதோ தகுதியில்லாத காரணத்தால்தான் அப்பிரபலம் அவனுக்கு இருக்கிறது என நம்புகிறார்கள். தமிழ் மனம் பொதுவாக ஏதோ ஒரு வகையில் பணம் அதிகாரம் கொண்டவர்களையே மதிக்கிறது . என் அலுவலகத்திலும் ஊர்சூழலிலும் நான் எழுத்தாளன் என்பதையே மிக திட்டமிட்டு மறைத்து வந்தேன். ஆனந்த விகடன் கட்டுரைத்தொடருக்குப் பிறகு சிலருக்கு தெரிந்துவிட்டது . பலவகையான அவமதிப்புகள் . குறிப்பாக அலுவலகத்தில் மேலதிகாரிகள் அளிக்கும் தொல்லைகள் அவமானங்கள் பல. பல வாரங்கள் அலைக்கழித்த சிக்கல்கள்கூட உருவாயின. தமிழ் மாநாட்டுக்கு குஷ்புவையும் சத்யராஜையும் பத்திரிகையாளர்களையும் டி .வி .க்காரர்களையும் எல்லாம் தலைமைதாங்க அழைப்பவர்களே கடல்கடந்த நாடுகளிலும் இருக்கிறார்கள். தமிழின் முக்கியமான படைப்பாளிகள் அவர்களுக்கு முக்கியமாக படுவதில்லை.
இச்சூழலில் எழுத்தாளன் மனம்சீண்டப்படுவது சாதாரணமாக் நடப்பதே .இணையத்தில் அது இன்னும் அதிகமாக நடக்கி£றது . இதே ஆட்கள் வைரமுத்து என்றால் காலில் விழுவார்கள் .ஆக ஒரு விதமான "திமிரை" வளர்த்து எடுத்துக் கொண்டு அதன் பலத்திலேயே நிறக வேண்டியுள்ளது .ஜெயகாந்தன் செய்தது அதுவே. அது அவரது ஒரு தற்காப்பு பாவனை .அவரைப்போன்ற கர்வமற்ற, எளிமையான, நேரடியான ,தடைகளேயில்லாத, மனிதரை மிகக் குறைவாகவே நம்மால் சந்திக்க முடியும் .உள்ளே செல்ல சற்று பிந்தும் அவ்வளவுதான்.
ஜெயகாந்தன் பக்கத்தில் ஒரு நாள் இருந்து பார்த்தால் தெரியும் அவரது ஆணவத்தோற்றத்தின் தேவை . இது தமிழ் எழுத்தாளனின் விதி. நமது படைப்பை கவனித்து படிக்க பத்துபேர் என்றால் மட்டம்தட்ட , அவமானம் செய்ய இருபதுபேர் தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் கேள்விப்பட்ட செய்திகளே அவர்களுக்கு ஆதாரமாக இருக்கும். இந்த ·பாரத்திலேயே கடிதங்கள் வர ஆரம்பிக்கும் பாருங்கள்.அதிக பட்சம் ஒருமாதத்துக்கு மேல் இதில் நான் நீடிக்க முடியாது. ஏற்கனவே நான் எழுதிய ·பாரம் ஹப் ,திண்ணை போன்றவற்றை காணலாம்
இதழாசிரியர்கள் பிரசுர கர்த்தர்கள் பல்கலை ஆசிரியர்கள் --எங்கும் எழுத்தாளனுக்கு அவமானம் காத்திருக்கிறது . கணிசமான எழுத்தாளர்கள் மௌனமாக இருப்பார்கள் . நான் எதிர்வினை ஆற்றுவேன்.போகிற போக்கில் என்னை ஒருவர் சீண்டிவிட்டு போக அனுமதிக்க மாட்டேன் .[ஆனால் தற்போது பெரிதும் தவிர்த்து விட்டேன். வேலைகள் குவிந்துவிட்டன ] ஆக என் இமேஜ் இப்படி ஆனதற்கு காரணம் இதுவே . இ£வ்விஷயத்தில் நான் ஜெயகாந்தன் மற்றும் என் ஆசிரியர் கேரள எழுத்தாளர் பி,கெ பாலகிருஷ்ணன்ணா ஆகியோரின் வாரிசு. காலச்சுவடுக்கும் எனக்கும் இடையேயான மோதல் கூட ஆரம்பித்தது அதன் ஆசிரியர் கண்ணன் எனக்கு ஒரு விஷயத்தில் ஒற்றைவரி கடிதம் போட்டதனால்தான். என் தனித்தன்மையை சற்றும் இழக்க கூடாது என்பது என் திட உறுதி . ஆகவே சற்று கடுமையாகவே , ஆணவமாகவே பெரிய இதழாசிரியர்களிடம்கூட நடந்துகொள்வேன். தமிழில் அதுதேவை . தன் வாலைச் சுருட்டிவைத்து சிம்மாசனம் செய்த அனுமனைப்போல .
2 எளிமை பற்றி
எல்லா படைப்புகளும் எளிமையாக இருக்க முடியாது .விஷ்ணுபுரத்தின் இலக்கு என்ன? வரலாறு ஐதீகம் கருத்தியல் ,தனிப்பட்ட வாழ்க்கைகள் ,கலைகள் ,இலக்கியம் எல்லாமே ஒன்றோடொன்று பின்னி பிணைந்து உருவாகும் வாழ்க்கைச்சித்திரம் ஒன்றை அளிப்பது . அது எப்படி தொடர்ந்து மாறுவதாக உள்ளது ,எப்படி அது ஆக்கி அழிக்கப்படுகிறது என்று காட்டுவது .இதை எளிமையாக எழுதமுடியாது.அதேபோல அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் தர்மநெறிகளுக்கும் இடையேயான உறவை விளக்கும் பின் தொடரும் நிழலின் குரலையும் எளிமையாக எழுதிவிட முடியாது . ஆனால் நான் எளிமையாக ஏராளமாக எழுதியுள்ளேன். உதாரணமாக நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலை மிக எளிய வாசகர்களை கவனத்தில் கொண்டே எழுதியுள்ளேன் . பல தத்துவ விஷயங்களை மிக எளிய மொழியில் தினமணியில் எழுதியிருக்கிறேன்.இப்போது ''இந்து தத்துவ இயலில் ஆறு தரிசனங்கள்'' என்ற நூலை மிக எளிய மொழியில் எழுதியுள்ளேன் . என் கதைகளிலபல மிக எளியவையே .
தமிழிலக்கிய உலகில் நுழையும்போது முதலில் தி ஜானகிராமன் கதைகளையும் ஜெயகாந்தன் கதைகளையும் கி ராஜநாராயணன் கதைகளையும் துவக்கப்புள்ளியாக கொள்வது நல்லது . பிறகு படிப்படியாக சுந்தர ராமசாமி , அசோகமித்திரன் . அடுத்த கட்டத்தில் மௌனி ,ப சிங்காரம் . இது அறிவுத்திறன் சார்ந்த விஷயமல்ல ,பரிச்சயம் சார்ந்த விஷயம் மட்டுமே .எல்லா அறிவுத்துறைகளுக்கும் இது பொருந்தும் எல்லா கலைகளுக்கும் பொருந்தும். எந்த அறிவுத்துறையிலும் கலையிலும் திடீரென உள்ளே நுழைய முடியாது ,உதாரணமாக எனக்குமேற்கத்திய இசைக்குள் நுழையவே முடியவில்லை .பரிச்சயத்தை உருவாக்கிக் கொள்ள சில காலம் கவனம் தேவை .அதை உருவாக்கும் சூழலில் நான் வாழவில்லை . 30 வயது வரை கர்நாடக இசை எனக்கு வெறும் சத்தம்தான்.
தஞ்சாவூர்க்காரியை மணம்செய்துகொண்டேன் . கொட்டிக்கொட்டி குளவியாக்கப்பட்டு இன்று எனக்கு ஓடுகிற பேருந்திலே ஒரு வரிகேட்டால் கூட இசையை மனம் அறியும். இலக்கியத்துக்கும் தேவை இந்த பரிச்சயம்தான் .விஷ்ணுபுரம் பரிச்சயம் கொண்டாலே திறந்துவிடும் படைப்பே .
எந்த கலையும் எந்த இலக்கியமும் எந்த அறிவுத்துறையும் எல்லாருக்கும் உரியது அல்ல அல்லவா? அதை அறிய கவனமும் உழைப்பும் செலுத்த தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே உரியவை அவை அல்லவா?
தமிழில் விஷ்ணுபுரமளவுக்கு கூர்ந்து விரும்பி படிக்கப்பட்ட ஆக்கங்கள் மிக மிக குறைவே. இன்றும் கடிதப்பெட்டியில் ஒரு புதுவாசகர்கடிதமாவது கண்டிப்பாக இருக்கும் . பள்ளி மாண்வர்கள் , குடும்பதலைவிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலதரப்பட்ட வாசகர்கள் அதை வாசித்துவிரிவாக எழுதியுள்ளார்கள்சைதுவரை வந்த வாசகர் கடிதம் மட்டுமே 560 . இது தமிழில் ஒரு ரிகார்ட்தான் .
இம்முக்கியத்துவம் எனக்கும் புரியவில்லைதான். கோயில் எல்லா தமிழ் மக்களுக்கும் கண்முன் உள்ளது. அது ஒரு பிரச்சினையாக கெள்வியாக உள்ளது என ஊகிக்கிறேன் . அத்துடன் மதவிஷயம் என்னும்போது மக்கள் சற்று உ¨ந்த்து கவனமாக் படிக்க தயார இருக்கிறார்கள். பின் தொடரும் நிழலின் குரல் இலங்கை வாசகர்களுக்கு மத்தியிலேயே அத்கமாக கவனிக்கப்பட்டது . பல இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்களை சேகரித்து வைத்திருந்தேன்.
எந்த சமூகத்திலும் எளிய ஆக்கங்கள் இருக்கும் .மிக சிக்கலான ஆக்கங்கள் இருக்கும் .மௌனி மிக சிக்கலானவர். பஷீர் மிக மிக எளியவர் .யார் முக்கியமான படைப்பாளி ?இருவருமேதான். இருவருமே தேவைதான் இல்லையா?
****
அன்புள்ள கணேசன் அவர்களுக்கு ,
தங்கள் கடிதம் கிடைத்தது . விஷ்ணுபுரம் ஒரு வரலாற்று நாவல் அல்ல . அது ஒரு மிகை கற்பனை ஆக்கம். [·பாண்டஸி ] அதில் மறு ஆக்கம்செய்யப்பட்ட வரலாறும் தத்துவமுமே உள்ளது .அதாவது அதன் மூலப்பொருட்களாகவே வரலாறும் தத்துவமும் உள்ளன. சரித்திரபூர்வமாக பார்த்தால் விஷ்ணுபுரம் போன்ற ஒரு பெரும் ஆலயம் மூன்றாம் நூற்றாண்டில் இருக்க முடியாது. அதை அமைப்பதற்கான உபரி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தால் மட்டுமே சேர்க்கப்பட முடியும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போல பிற்கால பாண்டியர்களுக்கே அவ்வலிமை இருந்தது. ஆக விஷ்ணுபுரத்தில் வரலாறல்ல வரலாற்று ரீதியான ஒரு சாத்தியம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது . சிலப்பதிகாரத்திலேயே ஸ்ரீரங்கம் கோவில் பற்றிய குறிப்பு இருப்பதனால் , பல்வேறு கோட்டங்கள் கொண்ட கோவில்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதனால் விஷ்ணுபுரத்துக்கு சாத்தியம் உள்ளது, அவ்வளவுதான்.
நாவலாசிரியன் தன் வரலாற்றுக் கற்பனையை நட்டு வளர்க்க ஒரு வரலாற்றுப் பின்புலத்தை மட்டுமே வரலாற்றில் இருந்து பெறமுடியும். கறாரான வரலாற்று தகவல்களுக்காக தேடுவது அவன் வேலை அல்ல. அப்படித்தேடினால் அவனது இலக்கியவேலை நடக்கவும் நடக்காது .நான் விஷ்ணுபுரத்தின் சூழலை வரலாறு சார்ந்து உருவாக்கியுள்ளேன்,சிக்கலான இடங்களை தவிர்த்தும் நகர்ந்திருக்கிறேன் .
அப்படியானால் வரலாற்று ரீதியாக இது எந்த அளவுக்கு முக்கியமானது ? வரலாற்றின் இயங்குமுறை , அதன் உள்ளோட்டங்கள் ,அதில் தனிமனிதர்களின ஆசாபாசங்கள் பின்னி பிணைந்துள்ள விதம் , வரலாற்றை இயக்கும் கருத்தியல் மோதல்கள் ஆகியவற்றை பற்றிய என் உள்ளுணர்வு சார்ந்த புரிதல்கள் அதில் உள்ளன.
நீலகேசி என் நாவலுக்கு முக்கியமான முன்னுதாரணமாக இருந்தது உண்மையே .ஆனால் நீலகேசியில் விவாதங்கள் தரமற்று உள்ளன, இல்லையா? வடமொழி விவாத நூல்கள் சில முன்னுதாரணமாயுள்ளன.ஆனால் விவாதப் பொருள் இன்றைய சிந்தனை சார்ந்த அடிப்படைகேள்விகள் சார்ந்தே உள்ளது.பண்டைய சிந்தனைகள் அப்படி மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. அதை நூலை படித்தபிறகு விவாதிக்கலாம் .
அதாவது எல்லா இலக்கியபடைப்புகளியும்போலவே விஷ்ணுபுரமும் சமகால சிக்கல்களையே பேசுகிறது .அதைபேச ஒரு தளமாக்வே கடந்தகாலம் உள்ளது .800 வருட வரலாற்றை முன்பின்னாக அடுக்கி காட்டும் வசதிக்காக நாத்திக [லோகாயத அல்லது ஜடவாத ] நூல்கள் பல உள்ளன. பெரும்பாலான நூல்களில் மூல வரி ஜடவாதமாக /லோகாயதமாக இருக்க உரைகள் மூலம் ஆன்மவாதம் நோக்கி இழுத்திருப்பதைக் கான்ளாம் .சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் எல்லாமே அப்படி பார்த்தாம் ஜடவாதங்கல் என்பது என் எண்ணம். அதை தனி நூலாக எழுதியுள்ளேன்.
ஜெயமோகன்
[தமிழ் உலகம் இணைய அமைப்பில் எழுதிய கடிதங்கள்]
- பதிவுகள்: நவமப்ர் 2002; இதழ் 35 -