[சேது சமுத்திரத் திட்டமென்றதும் நினைவுக்கு வருவது உருவாகிக் கொண்டிருக்கும் சேதுக்கால்வாய்த் திட்டம்தான். உண்மையில் மாகவி பாரதியின் கனவு இத்தகைய கால்வாய் பற்றியதாகவிருக்கவில்லை. அவர் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான, சேதுவை மேடுறுத்தி அமைக்கும், பாலம் பற்றியதாகவேயிருந்தது. அதனால்தான் அவர் 'சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!' என்று பாடினார். இது பற்றி பதிவுகள் இணைய இதழ் 39, மார்ச் 2003லொரு நேர்காணல் வெளிவந்திருந்தது. கனடாவில் வசிக்கும் கடற்துறைப் பொறியியலாளர் விஸ்வலிங்கம் வரதீஸ்வரனுடனான நேர்காணலே. அதிலவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை. பாரதியின் கனவை நனவாக்கும் அதே சமயம் கால்வாயையும் அமைப்பது பற்றியது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிப்பது பற்றியது. பதிவுகளைப் பொறுத்தவரையிலும் சேதுக்கால்வாயை அமைக்கும் அதே சமயம் இரு நாடுகளையும் இணைக்கும்வகையில் பாலத்தினையும் அமைக்க வேண்டுமென்பதே இரு நாட்டு மக்களனைவருக்கும் நல்லதாகப் படுகிறது.. இவ்விதமாக அமைக்கப்படும் பாலமானது இரு நாடுகளையும் தரைவழியில் இணைப்பதுடன், இரு நாட்டு மக்களுக்குமிடையில் கூடுதலான பிணைப்பினையும், இணைப்பினையும் அதிகரிக்கவல்லதாகவிருக்கும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும். மேலும் பாரதியின் கனவு நனவாகவேண்டுமென்றால் இதுவொன்றே சரியான வழியாகவிருக்க முடியும். மேற்படி 'பதிவுகள்' இதழ் 39இல் வெளிவந்த நேர்காணல் 'பதிவுகளில் அன்று' பகுதிக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. - ஆசிரியர்]
பதிவுகள்: இதழ் 39; 2003.
அண்மைக்காலமாக மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட ஆரம்பித்துள்ளன. அண்மையில் இலங்கை அரசு மிகவும் தந்திரமாக 'அனுமான்' பாலத்தினை இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கட்ட ஆலோசனை கூறியிருப்பதாகவும், இந்திய மத்திய அரசு கூட சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தினை சிறிய கப்பல்கள் மட்டும் செல்வதற்குரிய திட்டமாக ஆரம்பிக்க ஆலோசிப்பதாகவும் இதனை சிறையிலிருக்கும் மறுமலர்ச்சித் திமுக தலைவர் திரு.வைகோ எதிர்த்துக் கருத்து வெளியிட்டதாகவும் செய்திகள் தமிழகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இது பற்றி பல வருடங்கள் இலங்கை மற்றும் கனடாவில் கடற் தொழில் பொறியியலாளராகக் கடமையாற்றிய திரு.வரதீஸ்வரன் விசுவலிங்கத்தை அணுகியபோது அவர் தெரிவித்த கருத்துகளைப் பதிவுகள் இங்கே பகிர்ந்து கொள்கிறது. அவரது கருத்துகள் திரு.வைகோவின் பயத்தினை போக்குவதற்கான மாற்றுத்திட்டங்களைத் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெளியான திரு.வைக்கோவின் 'அனுமான் பாலம்' பற்றிய வெளிவந்த கருத்துகள் பற்றி அவரிடம் கேட்கப் பட்ட போது அவர் தெரிவித்த கருத்துகளாகப் பின்வரும் விடயங்களைக் கூறலாம்.
'திரு.வைக்கோவின் பாலம் பற்றிய பயத்தினைப் போக்குவதற்கு இரு நாட்டு அரசுகளும் பின்வருமாறு செயற்பட முடியும். அதாவது பாலமானது இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார நடவடிக்கைகளை மிக அதிக அளவில் அதிகரிக்க உதவும். வட அமெரிக்காவின் இரு நாடுகளான கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலுள்ள தரைவழித் தொடர்பே இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் அதிகரித்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான காரணம். ஏற்கனவே இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் சுதந்திர வர்த்தகம் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இந்நிலையில் பாலம் அமைப்பதானது சந்தை வாய்ப்புகளை மிக அதிக அளவில் அதிகரிக்கச் செய்வதோடு பொருட்களைக் காவிச்செல்லும் செலவினையும் மிக அதிக அளவில் குறைத்து விடுகின்றது. அத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் அதிக அளவில் உல்லாசப் பிரயாணம் நடைபெற உதவுகின்றது.'
இவ்விதம் கூறிய வரதீஸ்வரனிடம் 'ஆனால் இலங்கை அரசின் இந்தப் பாலத்திட்டமானது இலங்கை அரசுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளதாக வை.கோ.குற்றஞ்சாட்டியுள்ளாரே. இந்திய அரசும் சிறிய கப்பல்கள் மட்டும் செல்லும் வகையில் சேதுக் கால்வாய்த்திட்டத்தினை உருவாக்க முயல்வதாகவும் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளதில் நியாயமிருப்பதாகத் தெரிகிறதே' என்று கேட்டதற்கு அவரது பதில் பின்வருமாறிருந்தது.
'என்னைப் பொறுத்த வரையில் பாலமும் முக்கியம். சேது சமுத்திரக் கால்வாயும் முக்கியம். உதாரணமாக ஒரு பெரிய சரக்குக் கப்பலொன்று செல்வதற்கு குறைந்தது 15 மீற்றர் ஆழமுள்ள கால்வாயானது தேவைப்படும். சிறிய கப்பலென்றால் 10 மீற்றர் ஆழமான கால்வாயே போதுமானது. இங்கு கனடாவில் டொராண்டோவிலிருந்து நயாகரா செல்லும் வழியில் அமைந்துள்ள ஹமில்டன் பாலம் போல் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் இடையில் கப்பல்கள் செல்லக் கூடிய வகையில் பாலம் அமைக்கலாம். மேலும் கால்வாய் கிண்டுதலென்பது மிகப்பெரிய வேலை. செலவு அதிகமானது. ஆரம்பத்தில் செலவைக் கருதி சிறிய கப்பல்கள் செல்லும் விதத்தில் கால்வாய் அமைக்கலாம். பின்னர் அதனை காலப் போக்கில் பெரிய கப்பல்கள் செல்வதற்குரிய வகையில் அதன் ஆழத்தினை அதிகரிக்கலாம். அத்துடன் இன்னுமொரு முக்கியமான விடயம். முதலில் பாலத்தினைக் கட்டி விட்டுக் கால்வாயினை அமைப்பது அதிகச் செல்வினை ஏற்படுத்தும் அதற்குப் பதிலாக முதலில் கால்வாயினை வெட்டி விட்டு அவ்விதம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் கற்களைப் பாலம் அமைப்பதற்குப் பயனபடுத்தலாம். மேலும் இக்கால்வாயினைப் பாவிக்கும் கப்பல்களிடமிருந்து அறவிடப் படும் வரியினை இரு நாடுகளும் பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
இவ்விதம் பாலத்தினைக் கட்டும் போது பாலத்தின் தூண்களில் காற்றாடி இயந்திரங்களை (Wind Mill) அமைப்பதன் மூலம் மின்சாரத்தினைப் பெறுவது நல்லதொரு முயற்சியாக அமையுமென்பது என் எண்ணம். பாலம் அமைக்கும் போது மோட்டார் வாகனங்களுடன் புகையிரதத்திற்கும் சேர்ந்த்து அமைப்பது தொலை நோக்கில் நல்லது. இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையில் இருப்பதைப் போல் சுரங்கப் பாதை அமைப்பது மிகவும் செலவானதால் செலவு குறைந்த தரைக்கு மேற் செல்லும் பாதையினை அமைப்பதே நல்லது.
இவை தவிர பாலம் அமைப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிற நன்மைகளாவன. இரு நாட்டு மக்களுக்குமிடையில் கூடிய தொடர்புகள் ஏற்படும். ஒரு சாதாரண தொழிலாளி கூட சைக்கிளில் பயணிப்பதற்கு முடியும் சூழல் உருவாகும். மேலும் பாலத்தின் நடுவில் வாகனத் தரிப்பிடம், உண்டிச் சாலை, ஹொட்டல் போன்றவற்றை அமைப்பதன் மூலம் உல்லாசப் பிரயாணத்துறையின் வாய்ப்பு அதிகரிக்கும்.'
இவ்விதமான திரு.வரதீஸ்வரனின் கருத்துகள் பல உண்மைகளைச் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கின்றன. திரு.வைகோவின் பயத்திற்கான காரணங்களுக்குரிய சரியான விடைகளை திரு.வரதீஸ்வரனின் பதில்கள் தருகின்றன. இரு நாடுகளுக்குமிடையில் பாலத்தினை அமைக்கும் போது அதனைக் கனடாவிலுள்ளது போல் கப்பல்கள் அதன் கீழ் செல்லும் வகையில் அமைக்கலாம். இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களினை அடிக்கலாம். பாலத்தினையும் கால்வாயினையும் ஒன்றாக வரதீஸ்வரன் கூறியது போல் அமைப்பதே நல்லதொரு மாற்றீடாகத் தெரிகிறது.
- ஊர்க்குருவி -
பதிவுகள்: இதழ் 39; 2003.
http://www.geotamil.com/pathivukal/vaikoonsethu.html