'பதிவுகள்' இணைய இதழில் அன்று பல்வேறு எழுத்துருக்களில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது தமிழ் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகும்.. அந்த வகையில் எழுத்தாளர் க.அருள்சுப்பிரமணியத்தின் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான 'நண்பன்' சிறுகதை தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் வெளியிடப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலையில் பிறந்த இவரது 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' என்ற நாவல் 1974ஆம் ஆண்டிற்கான 'சாகித்திய அகாடமி'யின் விருதினைப் பெற்றதுடன் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இலங்கைத் தமிழ் நாவலென்ற பெருமையினையும் பெறுகின்றது. 'சூரசம்ஹாரம்' என்ற இவரது நாவல் ஆனந்தவிகடனில் வார இதழில் 23 வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்டது. இவரது சிறுகதையான 'அம்மாச்சி' ' இந்தியா டுடே' வெளியிட்ட இலக்கிய மலரொன்றில் வெளியாகியுள்ளது. அத்துடன் 'வீரகேசரி', 'தினக்குரல்' போன்ற ஈழத்துப் பத்திரிகைகளின் வாராந்த வெளியீடுகளில் மற்றும் 'திண்ணை', 'பதிவுகள்' போன்ற பல இணைய இதழ்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிழக்கிலங்கை பல்வேறு துறைகளில் பிரமிள், திமிலைத் துமிலன், நிலாவாணன், நா.பாலேஸ்வரி, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி மெளனகுரு, கலாநிதி சி. சிவசேகரம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, கே.எஸ்.சிவகுமாரன், மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, கலாநிதி எம்.ஏ.நுஃமான், வ.அ.இராசரத்தினம், தமிழ்நதி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கலாநிதி இ.பாலசுந்தரம் எனப் பல படைப்பாளிகளைத் தந்து வளம் சேர்த்துள்ளது. அவர்களில் எழுத்தாளர் க.அருள்சுப்பிரமணியமும் ஒருவர். அத்துடன் இலங்கையின் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களையும் கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளது. . - பதிவுகள் -
பெரியகுளம் பச்சைக் குழந்தையாய் படுத்திருந்தது. சகாயம் வானத்தில் ஒன்றியவனாய் குளக்கட்டில் மல்லாந்து படுத்திருந்தான். பஞ்சு பஞ்சாய் திரண்ட முகிற் கூட்டங்கள் நிலாவைத் தாக்கி அழிக்க வியூகம் விரித்துப் பாய்ந்தன. நுழைந்து மறைந்து கண்ணாம்பூச்சி காட்டித் தப்பிக்கொண்டே இருந்தது முழுநிலா. மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்கிய நட்சத்திரப் புஷ்பங்கள்! வலப் பக்கமாகத் திரும்பி தலைக்கு முட்டுக் கொடுத்து எதிரே நீண்டு விழுந்திருக்கும் குளத்தைப் பார்த்தான். நிலா விரித்த வெள்ளிப்பாயின் ¦ஐ¡லிப்பு. அப்படியும் குளத்தின் அந்தக் கரை தெரியவில்லை. அவ்வளவு விசாலமான சாம்ராச்சியம். பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் - பெரியகுளம்!
கைத்தாங்கலை விலக்கி நிமிர்ந்தான். பெளர்ணமியின் பூரிப்பில் வானத்து விசித்திரத்தை விஸ்தாரமாக ரசிக்க விடாமல் வரிசை கட்டி முட்டி மோதிய நினைவுக்கணைகள் குளத்தின் அந்தக் கரைக்கப்பாலும் துளைத்து ஊடுருவிற்று.
மாதம் மும்மாரி பொழிந்து கதிர் பருத்துச் சரிந்து இடுப்பு வலி கண்ட பூமி அது. ஏழை பாழைகளுக்கும் வயிற்றுக்கு வஞ்சனையின்றி வாரிக் கொட்டிய அன்னை. அதனால்தானோ அந்தப் பக்கமிருந்து வரும் பஞ்சைப் பராரிகளுக்கும் வாய்க்குப் பஞ்சமில்லை.
”ஏனக்கா உன் மூத்த பொடியனை என்னோடு விடன், பட்டறையில் கை உதவிக்கு ஆளில்லாமல் கஷ்டப்படுகிறேன்.”
கையிலும் இடுப்பிலும் குழந்தைச் சுமையோடு வள்ளத்தில் வந்திறங்கி பட்டறையடி வேப்பமரத்து நிழலில் பஸ் ஏற அவள் காத்திருந்த போது சகாயம் பவ்வியமாகக் கேட்டான். அவள் அவன் பக்கம் திரும்பவில்லை. கையில் பால்குடிக் குழந்தை. வெளிறிப் போன சேலைத் தலைப்பைப் பிடித்தபடி ஏழு வயதளவில் மூக்கால் ஓடிய ஒரு பிள்ளை. அம்மாவை முந்திக் கொண்டு ஓடிய மூத்தவனுக்கு பன்னிரண்டு இருக்கும். பள்ளிக்கூடத்தை மிரித்தவனாகத் தெரியவில்லை - பேச்சும் பாய்ச்சலும் சகாயத்திற்குப் பிடித்து விட்டது.
சுற்று வட்டாரத்திலேயே மரவேலையில் சகாயத்தை அடிக்க ஆளில்லை. முதிரையும் தேக்கும் யாவறனையும் அவன் சொன்னபடி கேட்கும். பூக்கொத்திய வாசற் கதவுகள் நிசப்பூக்களின் கவிதை சொல்லும். நேர்த்தி சற்றும் பிசகாத வெட்டுமானம். தனிக்கட்டை. பட்டறையோடு இணைந்த பின்பக்க வீடு, பக்கத்து மாதா கோயில், தன் பட்டறை என்ற கையளவு வாழ்க்கை. ஓரேயொரு ஆசை - நெடுநாளையக் கனவு - மரம் அறுக்கும் மெசின் வாங்க வேண்டும். செலவில் கவனமாயிருந்ததில் முப்பதாயிரத்திற்கு - கிட்டத்தட்ட பதினைந்து சேர்த்தாயிற்று. புதுவருசம் பிறப்பதற்குள் எப்படியும் வாங்கி வெள்ளோட்டம் விடும் வேகம். டவுனிலிருந்து வரும் ஓடர்களை ஒரு கையால் சமாளிக்க முடியவில்லை.
”சாப்பாடும் போட்டு மூன்னு¡று ரூவாக் காசுந் தருகிறேன் அக்கா.”
அந்தத் தெருவில் கார் கீர் வராது. எப்போதாவது ஒருவன் சைக்கிளில் போவான் - மற்றப்படி து¡ங்குமூஞ்சித்தெரு. இரண்டு பிள்ளைகளும் சுதந்திரமாய் கலகலத்து ஓடிப்பிடித்து தெரு முழுக்க புழுதி அளைந்து கொண்டிருந்தார்கள். குளத்துப் பக்கம் அவர்கள் போகவில்லை. ஆனாலும் அவள் கத்தினாள். ”டேய் குளத்துப் பக்கம் போகாதீங்கடா.”
”என்னக்கா ஓமென் டு சொல்லன்.”
மரத்தடியிலிருந்து சேலைத்தலைப்பால் பிள்ளையை மூடிப் பால் கொடுத்துக் கொண்டிருந்தவள் அரிகண்டம் தாங்க மாட்டாமல் தலை நிமிர்ந்தாள்.
”எங்க ஊரில விளைஞ்சதை வெட்டுறதுக்கே ஆளில்லாம க–டப்படுறம் - மரப்பட்டறைக்கு ஆள் கேக்கிறார் மண்ணாங்கட்டி மனுசன்.”
இருப்பது ஒன்றுக்கும் வழியில்லாத பஞ்சைத் தோற்றம். அந்தப் பக்கத்துக் காணியெல்லாம் தன் பெயரில் வைத்திருப்பவள் போன்ற ஆளுமைப் பதில். வயதுகூட அவனை விட ஒன்றோ இரண்டோ குறைவாகத்தான் இருக்கும். ஆனால் கூடுதலாகத் தெரிந்தது. மூன்று பிள்ளைகளின் தாய் என்ற ஒரு மரியாதைக்காக அக்கா என்றே கதைத்தான்.
”பிள்ளை மாதிரி வைச்சுப் பாப்பனக்கா. இங்க பார் அவன் உடுப்பை. புது உடுப்பெல்லாம் நான் தைச்சுக் குடுப்பன். கிறிஸ்மஸ¤ம் வருகுது.”
ஒரு உளி தேவையென்றாலும் வேலையை குறையில் விட்டு எழுந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வாய் வெற்றிலை போடுவதற்கும் அவன்தான் அசைய வேண்டும். இந்தப் பிள்ளை மட்டும் பக்கத்தில் இருந்தால்! .. .. .. நினைக்கவே ஆறுதலாயிருந்தது.
”என்னக்கா சொல்றாய்? ”
அவளுக்குப் பொத்துக்கொண்டு வந்தது.
”இதென்ன ஆக்கினையாக்கிடக்கு. தகப்பன் சரியில்லை. வெள்ளாமைக் கூலியை குடிச்சு அழிக்கிறான். என்ர பிள்ளையள் இப்படியா இருக்கும். நீ ஒன்டும் தைச்சுக் கிழிக்க வேணாம். நாலு நாளைக்கு களை புடுங்கப் போனாப் போதும். பெரிசாப் பேச வந்திற்றார்.”
பிடி கொடுக்காமலே பேசினாள். அவனும் தன் பிடியை விடுவதாக இல்லை.
”இராப்பள்ளியில் விட்டு படிப்புச் சொல்லிக் குடுப்பேனக்கா. தொழிலையும் சுத்தமாச் சொல்லிக் குடுப்பன். பிறகு பாரன் அவன்ர நடப்பை. என்ர பட்டறையே அவனுக்குத்தான்.”
அவன் ஆசை காட்டவில்லை. சத்தியமாகத்தான் அதைச் சொன்னான். அவனுக்கென்று பெஞ்சாதியா பிள்ளையா. வயது நாற்பது தாண்டி விட்டது. பாதர் §ஐ¡சேப்பு கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார். ஒண்டிக்கட்டையாகவே இருந்துவிட முடிவு.
சகாயம் சொன்னதில் பொடியனுக்கே ஒரு மயக்கம். ஓடித்திரியாமல் அம்மாவிற்குப் பக்கத்தில் நின்று நிதானமாகக் கவனித்தான்.
”நீ ஒன் டும் இஞ்ச புடுங்க வேண்டாம். எங்களுக்கு எங்கட மண் இருக்குது.”
பஸ் வர - கூடிய கவனத்துடன் பிள்ளைகளின் கை பிடித்துக் கூட்டிக் கொண்டு ஏறினாள். சனத்தோடு மல்லுக்கட்டி சீற்றில் ஆறுதலாக இருந்த பின் பிள்ளைபிடிகாரனைப் பார்ப்பது போல சகாயத்தைப் பார்த்தாள்.
எப்படி இவளுக்கு இவ்வளவு கொழுப்பு வந்தது! எல்லாம் அந்த மண் கொடுத்த கொழுப்பு.
பட்டறையிலிருந்து பார்த்தால் து¡ரத்தில் அந்த ஊரின் அசைவுகள் துணியில் மூட்டைப்பூச்சி ஊர்வது போல மெலிதாகத் தெரியும். இரண்டு ஊரையும் பிரிப்பது பெரியகுளந்தான். தெருவால் சுற்றிப் போவதென்றால் ஜந்து மைல். இப்போது தெருவில் அடிக்கொரு சோதனைச்சாவடி!
அந்த மண்ணில் போன வாரம் வரை குண்டுமாரி பொழிந்தன. கண்மூடித் திறப்பதற்குள் ¦ஐட் விமானங்கள் குண்டைப் போட்டுவிட்டுப் புகை கக்கிப் பறந்தன. இராட்சத ஹெலிகள் சரமாரியாய் இறக்கி விட்டுப் போயின. எத்தனை இருக்கோ எத்தனை போச்சோ!.............ஒருவருக்கும் ஒன்றும் தெரியாத நிலை. அந்தச் சூனியப் பிரதேசத்துள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை.
கதிரெல்லாம் வெட்டாமல் அப்படியே அழுகிப்போச்சு. முக்கால்வாசி வீடும் சரி. கோயில் நிரம்பி மணக்குது. சனம் பட்டினியில் அந்தரிக்குது. பச்சைப் பிள்ளையளுக்குப் பாலில்லை. வயிற்றால் போய்ச் சாகுது என்றெல்லாம் காற்றிலே கலந்த செய்திகள் காதிலே வந்து கனத்தன.
மாதாவே!
குளத்தில் விட்டெறிய கல்லொன்றை எடுத்தான் சகாயம். அசந்து படுக்கும் குளத்தை குழப்ப மனம் வரவில்லை. பின்பக்கம் பச்சைப் பற்றைக்குள் எறிந்தான். நெஞ்சு விறைத்துக்கொண்டே வந்தது. அந்தப் பிள்ளைகுட்டிக்காறி மனதில் வந்தாள். இருக்கிறாளோ இல்லையோ. ஆறு மாதம் ஆகியிராத பாலகனுக்கு பாலுக்கு எங்கே போவாள்! தாயின் இடுப்பில் இருந்து கொண்டு குழந்தை ஒன்றுக்குப் போன அழகு கண்களுக்குள் வந்தது. இரவு சாப்பிட்ட பானும் பருப்புக்கறியும் வயிற்றில் பொருமிக் கேட்டது.
சகாயம் தீர்மானமாக எழுந்தான். “ஒருவருக்கும் தெரியாமப் போய் குடுத்திற்று வரவேனும்.“
பச்சைப்புல்வெளி கடந்து பட்டறைக்குள் வந்ததும் ஐன்னலால் குளத்தைப் பார்த்தான். எனக்கொன்றும் தெரியாது என்றது போல் அது ஆழ்ந்த சயனத்திலிருந்தது. எப்படிப் போவது? குளக்கட்டில் ஏற்றியிருந்த §ஐக்கப்பின் வள்ளம் உதவிக்கு நானிருக்கிறேன் என்று கூறிற்று. பயத்தில் ஒரு மாதமாக §ஐக்கப் மீன்பிடிக்க குளத்தில் இறங்கவில்லை.
ஒன்று மட்டும் உதைத்தது. அந்தக் குளம்! அதன் கரையோரக் கட்டுகள் பராமரிப்பில்லாமல் து¡ர்ந்து போய் கால் வைத்த இடமெல்லாம் ஆளை மூடும் ஆழம். அவனுக்கு நீச்சலும் தெரியாது. உதவிக்கு ஒரு கையிருந்தால் நம்பிப் போகலாம்!
பொழுது விடிந்த கையோடு அவன் டவுனுக்குக் கிளம்பினான். பால்மா சீனி பருப்பு தேயிலை.. .. .. மலர்ச்சியோடு பெரிய பில் போட்ட கடை முதலாளி சங்கரப்பிள்ளை கேட்டார். சேர்ச்சில என்ன விசேசம்? நான்கு பெரிய பச்சைத்தாளை நீட்டியதும் அவர் காரணத்தை மறந்து காரியத்தில் மூழ்கினார்.
ஆட்டோவில் திரும்பி வரும் போது இரும்புக்கடையில் முன்னர் பார்த்து வைத்த மரம் அறுக்கும் மெசீன் கண்ணில் பட்டது. சனமெல்லாம் சாப்பாடில்லாமச் சாகுது. மெசின் கேக்குதாம் கண்டறியாத மெசின்.
வழியில் நாலைந்து இடங்களில் இறக்கிப் பார்த்தார்கள். கம்பி விட்டுக் குத்திப் பார்த்தார்கள். கேள்வி கேட்டார்கள். மாதா கோவில் பெயரைச் சொல்லி ஒருவிதமாக மாறிக் கொண்டு வந்தாயிற்று. பட்டறை வாசலில் வந்து இறங்க டவுன் நண்பன் பரமானந்தம் சிரித்துக் கொண்டு நின்றான். ”கடவுளைக் கண்ட மாதிரி இருக்கு சகாயம். உன்னட்டைத்தான் வந்தனான்.”
”என்ன விசயம்? ”
”ஒரு 500 ரூவா அவசரமாத் தேவைப்படுது சகாயம் சம்பளத்தோட தந்திருவன்.”
பரமானந்தம் முன்னரும் ஜஞ்சு பத்தென்று பல தடவைகள் காசு மாறியிருக்கிறான். இந்த முறைதான் இவ்வளவு கேட்கிறான். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் திருப்பிக் கொடுத்து விடும் நாணயம் இருந்தது. ஜந்நு¡றுக்கு வந்த அவசரம் என்ன என்ற விளக்கம் கேட்காமல் சட்டைப் பையிலிருந்த மிச்சக்காசில் எண்ணிக் கொடுத்துவிட்டு மூட்டையை இறக்கி பக்கமாக வைத்தான்.
”சாமானெல்லாம் தடபுடலாயிருக்கு ஆர் பொம்பிளை? ”
”உனக்கு ஒரே பகிடிதான். வாவன் சொல்றன்.” .. .. .. சகாயம் ஆட்டோவை அனுப்பிவிட்டு விசயம் சொன்னான்.
”ஒரு ஆள் உதவிக்கு வந்தா லேசாயிருக்கும். அதுதான் யோசிக்கிறன்.”
”உனக்குச் செய்யாம வேற ஆருக்குச் செய்யிறது. நான் வாறன் சகாயம்.”
பரமானந்தத்தின் கை பற்றி கண்களில் ஒற்றினான் சகாயம். இரவு ஒன்பது மணிக்கு ஆயத்தமாக இருக்கும்படி சொல்லிவிட்டுப் புறப்பட்டான் பரமானந்தம். இருட்டு குளத்துக்கரையை மூடத் தொடங்கிற்று. இருட்டை மூடி பனி பெய்யத் தொடங்கிற்று. தவளைகள் சங்கீத ஆலாபனை தொடங்கி வெகு நேரமாயிற்று. சகாயம் மணிக்கூட்டைப் பார்த்தான். ஒன்பதரை. தொங்கலை பிடித்து இழுக்க - ஏற்கனவே தயாராக இருந்தது போல பள்ளத்தில் இலேசாக வழுக்கி வந்தது வள்ளம். மூட்டையை ஏற்றிவிட்டுக் காத்திருந்தான். மேகம் கறுத்திருந்தது. சந்திரன் எங்கே என்று வானத்தைப் பார்த்தான். காணவில்லை. மழை வரப்போகிறதோ! பன்னிரண்டாயிற்று - பரமானந்தம் வரவில்லை. வழியில் என்ன நடந்ததோ! குடுத்திட்டு விடியிறதுக்கு முன் திரும்ப வேனுமே. அவன் வள்ளத்தைத் தள்ளி குளத்தில் இறக்கி தனியாக இருட்டில் நுழைந்து மறைந்தான்.
விடிந்து ஏழு மணி போல் டவுன் மார்க்கட்டில் கதைத்தார்கள்.
”மரக்காலை சகாயத்தை விடியப்பறம் ஜஞ்சு மணிக்கு குளத்தங்கரையில வைச்சு பொலிஸ் பிடிச்சதாம். §ஐ¡சப் பாதர் போய் கதைச்சு கூட்டி வந்திற்றாராம். இனிமே குளத்தில வள்ளம் விடக்கூடாது என்டு உத்தரவாம்.”
சுடச்சுட அரிசிமாப்புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமானந்தம் மனைவியிடம் சொன்னான். ”மடையன்ர பேச்சைக் கேட்டு நானும் போயிருந்தா எனக்கும் இந்தக் கெதிதான்.”
மனைவி மனந் தாளாமல் கேட்டாள்.
”நேத்து ஏன் வரேல்லையென்டு சகாயண்ணன் கேட்டா? ”
”எங்கட ஏரியாவில ராத்திரி ரவுண்ட் அப் என் டு சொன்னாப் போச்சு!”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'பதிவுகள்' பெப்ருவரி 2004 இதழ் 50