[ 'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள் சில. பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் ]
பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45
சாப்ளின்
சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச்சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்கு காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்துபைசா கூலிதருவோம். அருமனையில் ஓலைக்கொட்டகைதான் . மழை பெய்ய ஆரம்பித்து விட்ட படங்கள்தான் அதிகமும் வரும் .பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிட பழைய படங்களைத்தான் எல்லாரும் விரும்பிப் பார்த்தார்கள். படங்கள் சாவகாசமாக இருக்கவேண்டும், கொஞ்சம் தூங்கி எழுந்தால் கூட ரொம்பதூரம் ஓடியிருக்கக் கூடாது. பன்னிரண்டுமணிக்கு தொடங்கும் ஆட்டம் காலைநான்குமணிவரை நீளவேண்டும்.ஆகவே ஓவல்டின், ரெமி முகப்பவுடர், சைபால் கால்களிம்பு முதலிய விளம்பரங்கள் முடிந்தபிறகு துண்டுபடங்கள்போடுவார்கள். லாரல் ஹார்டி நகைச்சுவை, மிக்கி மௌஸ் கார்ட்டூன் இவற்றுடன் சாப்ளின் படமும் இருக்கும். சாப்ளின் 'கோணக்கால்' என்று சொல்லப்பட்டார் . லாரல் ஹார்டி மல்லனும் மாதேவனும் என்றும் கார்ட்டூன்படங்கள் பொம்மலாட்டம் என்றும் குறிப்பிடப்பட்டன.
கொட்டகையின் சொத்தாக இருந்து அனேகமாக தினமும் காண்பிக்கப்படும் இப்படங்களை எல்லாருமே பலநூறுமுறை கண்டிருப்பார்கள். படத்தில் தெளிவாக எதுவுமே தெரியாது இருந்தாலும் ஜனங்கள் பயங்கரமாக கூக்குரலிட்டு கூவி சிரித்து ரசிப்பார்கள். நான் பார்த்த சாப்ளின் படம் ஏதோ சம்பந்தமில்லாத நிழலசைவுகளாகவே இருந்தது . அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.
பலவருடங்கள் கழித்து பெங்களூர் அரங்கு ஒன்றில் நடந்த திரைப்படவிழாவில் சாப்ளினின் எல்லா படங்களையும் பார்த்தேன். பெரும்பாலான சமகால எழுத்தாளர்களைப் போலவே நானும் கோமாளியான தத்துவ ஞானியின் ரசிகனானேன் .
என் வீட்டில் எங்களுக்கு சொந்தமாக இருக்கும் திரைப்பட சிடிக்கள் இரண்டுதான். இரண்டுமே சாப்ளின் படங்கள் . என் குழந்தைகள் அஜிதன்[9] சைதன்யா[5] இருவருக்கும் சாப்ளின் மீது மோகம் பக்தி பரவசம் எல்லாமே உண்டு.எல்லா சனி ஞாயிறுகளிலும் இருபடங்களையும் ஒரு சடங்கு போல தவறாமல் பார்த்துவிடுவார்கள். இந்த வெறி எல்லையை மீறுகிறதோ என்று எனக்கு சந்தேகம்.
மேலும் நான் மிகமுக்கியமாக ஏதேனும் செய்துகொண்டு இருக்கும்போது அந்த இசை தேவையில்லாத நடன அசைவுகளை என் உடலில் உருவாக்கி விடுகிறது .சாப்ளின் சீரியஸான ஆள் இல்லை கோமாளிதான் என்று சொல்லிப்பார்த்தேன். சைதன்யா வாஜ்பாய் கூடத்தான் சாப்ளின் மாதிரி ஆடுகிறார்சென்று சொல்லி ஒரு நாள் காட்டவும் செய்தாள். அப்போது தொலைக்காட்சி மின்னழுத்தக்குறைவால் நெளிந்து கொண்டிருந்தது. வாஜ்பாய் இடுப்பை மட்டும் நெளித்து காக்ரா நடனம் ஆடினார்.
திடீரென்று மென்பொருள் கோளாறு ஏற்பட்டு படம் பார்க்கமுடியாமலாயிற்று . ஒலி மட்டும்தான். நானும் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு சனியன்று அறைக்குள் இசைகேட்க எட்டிப் பார்த்தேன். ஒரே ஆட்டமாக இருந்தது. என்ன இங்கே என்றேன். ''சாப்ளின் ஆட்டம் அப்பா'' என்றாள் சைதன்யா. ஆரம்பத்தில் வெறுமே இசையை மட்டும் வைத்துக் கேட்டு காட்சிகளை கற்பனையில் கண்டு சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிறகு அஜிதன் சாப்ளின் ஆக நடிக்க ஆரம்பித்தான் .மற்ற அத்தனை கதாபாத்திரங்களும் சைதன்யா. ஆட்டம் கற்பனைகள் நிறைந்து படர்ந்து பல திசைகளுக்கு சென்றது . சாப்ளின் பள்ளி ஆசிரியர்களை அறவே வெறுத்தார். முதல் இடமாண்வனை குத்தினார். பிறகு இசையே வேண்டாம் என்றாயிற்று. நானும் ஆட்டத்தில் புகுந்து சாப்ளினிடம் உதை வாங்கும் குண்டுமனிதனோ போலீஸ்காரனோ ஆனேன். சாப்ளின் விளையாட்டு மேலும் நுட்பங்கள் கொண்டதாக மாறியது. எங்கும் எப்போதும் ஒரு புருவத்தூக்கலினாலோ முகச்சுளிப்பினாலோ சாப்ளினை கொண்டுவந்துவிடலாம் என்றாயிற்று. சாப்ளினுக்கு சிரிப்பூடும் நபர்கள் மட்டுமல்ல சாப்ளினே எங்கும்கண்ணில் பட ஆரம்பித்தார் .பேருந்தில் பள்ளிக்கு செல்லும் போது சைதன்யா என்னருகே உட்கார்ந்து "அப்பா இண்ணைக்கு சாப்ளின் யாரு?" என்பாள். குடை கண்டபடி மாட்டி இறங்கச் சிரமப்படும் ஆசாமி, கண்ணாடியை தூக்கிவிட்டு முகசுளிக்கும் அந்த பள்ளி ஆசிரியர்.
யார்வேண்டுமானாலும் சாப்ளினாகலாம். அக்கணமே சைதன்யா கண்டு வாயைப்பொத்தி சிரிப்பை அடக்குவாள். கண்கள் மட்டும் ஒளிவிடும். அத்தனை பேரிலும் மூடிகளை தூக்கி சாப்ளின் பொங்கிக் கசிந்துகொண்டே இருக்கிறார்.
இப்போது சாப்ளின்படங்களை பார்ப்பதில்லை. அவை சாப்ளினை ஒரு தனிமனிதராக மாற்றிவிடுகின்றன.
[சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் ரைட்டர்ஸ் நோட்ஸ் பகுதியில் வெளியானது. தமிழாக்கம் அருண்மொழிநங்கை]
- பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45 -
தேசம்
1988ல் நான் வாரங்கல் ரயில்நிலையத்தை அடைந்தபோது எனக்கு வயது 26. இந்தியாவை தானும் கண்டடையத் துடித்து கிளம்பிய தனித்த பயணி. கடலில் சம்பிரதாயமாக குளித்தபிறகு என் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். காளஹஸ்தியின் உடைந்த கோயில்களையும் திருப்பதியின் நெரிசலிடும் கூட்டத்தையும் கண்டபிறகு வடக்குநோக்கி செல்ல ரயில் பிடிக்கும்பொருட்டு வாரங்கல் வந்தேன் .என்னிடம் பணம் குறைவாகவே இருந்தது. ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி அரசு சலுகைக் கட்டணத்தில் அளித்த நேருயாத்ரி என்ற பயணச்சீட்டும் வாரங்கல் ஒப்புநோக்க சின்ன ஊர்.ஆனால் ரயில்நிலையம் மட்டும் மிகப்பெரியது. அப்போது மணி பதினொன்று, ரயில்கள் காலையில்தான் வரும் என்றார்கள். என் பயணம் முழுக்க நான் எங்குமே வாடகை விடுதியறைகளில் தங்கவில்லை.பெரும்பாலும் இரவுகளை ஓடும் ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும் ,கோயில்களிலும் ,அபூர்வமாக கடைத்திண்ணைகளிலும் கழித்தேன். ஆகவே தூசிபடிந்த ஆளற்ற அந்த ரயில்நிலையக் கொட்டகை மிக வசதியான இடமாகப் பட்டது.
என்னை விரித்துக்கொள்ள நல்ல இடம் தேடி நடந்து கண்டடைந்தேன் .தூங்க ஆரம்பிக்கும் முன்பு வினோதமான ஒலிகள் கேட்டன. குழந்தைகளின் ஒலிகள் . அருகேயிருந்த உடைந்த காத்திருப்புக்கொட்டகையில் கிட்டத்தட்ட நூறு குழந்தைகளைக் கண்டேன் . பிளாஸ்டிக் தாள்களையும் பெரிய திரைப்படச் சுவரொட்டிகளையும் படுக்கையாக விரித்து கும்பல்கும்பலாகப் படுத்திருந்தார்கள். பதினைந்து முதல் ஒருவயதுவரை வேறுபட்ட பிராயம் கொண்ட சிறுவர்கள், சிறுமிகள் .சிலர் தூங்க பிறர் ஒருவரோடொருவர் பேசியபடியும் பூசலிட்டபடியும் இருந்தனர்.
அதில் ஒரு பதிமூன்றுவயது பையன் என்னைக் கவனித்து, சிரித்தபடி வந்து " நேரமென்ன ?" என்று கேட்டான்.அவனது கரம் தற்செயலாக என் அந்தரங்க உறுப்பை தொட்டுச்சென்றது. உடனே அது மிக பயிற்சியுடன் செய்யப்பட்ட ஓர் அசைவென்று உணர்ந்துகொண்டேன்.
அவனை தள்ளினேன். அவன் புன்னகை மாறுபட்டது. அவன் குரல் தாழ்ந்தது. நான் பெண் குழந்தைகளையும் பெறமுடியும் என்று சொன்னான்.அப்போது பல குழந்தைகள் ஓடிவந்தன. ஏராளமான பிஞ்சு விரல்கள் என் நடுப்பகுதியை தீண்டத் துடித்தன. நான் அவர்களிடமிருந்து தப்பி கிட்டத்தட்ட ஓடினேன்.
குழந்தைகளின் ஒலிகள் வலுத்தன. திடீரென்று ஓரு பெரும் சண்டை வெடித்தது. நான் பாய்ந்தெழுந்து பீதியுடன் கவனித்தேன்.சில பெரிய பையன்கள் மற்ற குழந்தைகளை மூர்க்கமாக தாக்கினார்கள்.சில சின்னஞ்சிறு குழந்தைகள் இரக்கமின்றி அடிபட்டன. ஒன்றிரண்டு கொல்லப்படலாம் என்று எனக்கு தோன்றிவிட்டது. கையில் பெரிய லத்தியுடன் ஒரு ரயில்வே போலீஸ்காரன் உள்ளே ஓடினான்.
எதையுமே கவனிக்காமல் கண்மூடித்தனமாக குழந்தைகளை அடிக்க ஆரம்பித்தான்.கதறல்கள். கம்பு எலும்பில் படும் அமுங்கிய ஒலிகள். போர்க்களம்போல இருந்தது அப்பகுதி. அந்த குளிர்ந்த இரவில் ரத்தத்தின் அமில மணம் என்னை நடுங்கச்செய்தது. உடைந்த மண்டையுடன் ஒரு சிறுமி கூவியபடி என்னைத் தாண்டி ஓடினாள். தரையில் சிறு முத்துக்கள்போல ரத்த துளிகள் சிதறின.கொட்டகை காலியாயிற்று.
போலீஸ்காரர் என்னருகே வந்தார் .சிலகேள்விகளைக்கேட்டு நான் யாரென தெளிவுபடுத்திக் கொண்டு "குட்மானிங்" என்றார். அவருக்கு இயல்பிலேயே நல்ல மனிதர்களை அடையாளம் காணும் திறமை இருப்பதாகவும், அப்படி அடையாளம் கண்ட உடனேயே குட்மானிங் சொல்லிவிடுவது வழக்கமென்றும் சொன்னார். குழந்தைகளைப்பற்றி கேட்டேன். அவை விபச்சாரிகளின் குழந்தைகள் என்றார் .பிச்சை எடுத்தும், திருடியும், விபச்சாரம் செய்தும் வாழ்பவை. பகல்முழுக்க நகரிலும் ரயில்களிலும் அலைகின்றன. இரவில் இங்கே படுக்க வந்துவிடுகின்றன. அவற்றை உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பிவிடவேண்டுமென்று அவர் அதி தீவிரமாக வாதிட்டார். எப்படியானாலும் அங்கேதான் போகப்போகிறார்கள், ஏன் பெரிய குற்றம் செய்வதுவரை நாம் காத்திருக்கவேண்டும்?
அவரை தவிர்க்க நான் செயற்கையாக குரட்டை விட்டேன். அவர் என்னை எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்குமாறு சொன்னார். அவர் இருக்கும் இடத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. நான் பெருமூச்சுவிட்டேன். அடியின் ஒலி என் தலையின் மெல்லிய நரம்புகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
சற்றுநேரம் கழித்து குழந்தைகள் ஒவ்வொன்றாகத் திரும்பிவந்தன. ஒரு சிறுகுழந்தை மண்டையில் காயத்தில் தாளை ஒட்டி வைத்திருந்தது. அதன் அக்காவின் இடுப்பில் இருந்தபடி என்னை கண்ணீர் உலர்ந்த தடத்துடன் ஆர்வமாகப் பார்த்தது. மெல்ல மெல்ல சத்தம் அதிகரித்தது. பூசல்கள் வலுத்தன. மீண்டும் சண்டை. அதே போலீஸ்காரர் அதே லத்தியுடன் பாய்ந்துவந்தார். அடிகளை இம்முறை என்னால் தாங்கவே முடியவில்லை. கால்கள் தள்ளாடின. கொட்டகையின் மறுபக்கம் நாற்றமடிக்கும் பொதுக்கழிப்பிடமருகே சென்று படுத்துக் கொண்டேன். இரவு முழுக்க நான் தூங்கவில்லை. கொசுக்கடி. மூளைக்குள் அடியின் முடிவேயில்லாத அதிரல்கள்.
அதிகாலையில் எழுந்து திறந்த டீக்கடையில் முதல் டீ சாப்பிடச்சென்றேன். கொட்டகை அமைதியாக இருந்தது. தூங்கும் குழந்தைகளின் முகங்களில்நாம் அவற்றின் துக்கங்களைக் காணமுடிவதில்லை . அந்த அமுங்கிய மூக்கும் உப்பிய கன்னக்களும் அளிக்கும் களங்கமற்ற தேவதைத்தனம் மட்டுமே தெரிகிறது. அங்கே நின்று பார்த்தபோது எல்லா வகையான இந்திய முகங்களையும் கண்டேன். திராவிட, ஆரிய, மங்கோலிய முகங்கள். தமிழ் தெலுங்கு கன்னட மலையாளச் சாயல்கள் ....... ஆகவேதான் நான் எப்போதுமே இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஓட்டு போடுகிறேன்.
[ஆங்கில மூலக்கட்டுரை 'தி சண்டே எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியானது. தமிழாக்கம்: அருண்மொழிநங்கை]
- பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45 -
சில மலையாள திரைப்படப் பாடல்கள்
நாம் ரசிக்கும் எல்லா திரைப்படப்பாடல்களும் நம் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்துடன் இரண்டறக் கலந்து விடுகின்றன. ஆகவே காலம் செல்லுந்தோறும் பழைய நினைவுகளின் ஈரத்தால் அவை கனம் பெற்றபடியே வருகின்றன. திரைப்படப் பாடல்களை தவிர்த்து ஓர் இளமையை எவருமே கற்பனை செய்யமுடியாது .பாடல் கேட்டு நெகிழாத தளம் எவருக்குமே இல்லை ஆனால் மலையாளப் படப்பாடல்கள் மலையாளிகளுக்கு அளிக்கும் அனுபவம் மேலும் துக்கம் நிரம்பியது. பொதுவாகவே மலையாளப்பாடல்கள் துயரத்துக்கு அழுத்தம் தருபவை. மெலடியே அவற்றில் அதிகம். தாளக்கட்டுக்கு குறைவான இடமே அளிக்கப்படுகிறது. அப்பாடல்வரிகள் மிதமிஞ்சிய கற்பனாவாத சுவை கொண்டவை. நிலவு , மேகம், மழை , நதி , மலர்கள் என அவை கனவின் அழகுடன் உள்ளன. இயற்கை அழகு மண்டிய கேரளத்தில் பிறந்து அங்கே வாழமுடியாமல் பிழைப்புதேடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்பவர்கள்தான் கேரள மக்களில் கணிசமானோர். ஆகவே அவர்களுக்கு இப்பாடல்கள் காதல் , இயற்கை, மண் என இழந்த மகத்துவங்களின் கண்ணீரால் அடையாளமிடப்பட்டிருக்கின்றன. பாடல்கேட்டு அழும் மலையாளி ஒரு சாதாரண சித்திரமே.
மலையாள திரைப்பாடல்களை வடிவமைத்தவர்கள் மூவர். வயலார் ராமவர்மா. பி.பாஸ்கரன், ஸ்ரீகுமாரன் தம்பி . முன்னவர் மிதமிஞ்சிய கற்பனாவாதத்தை அழகிய சொல்லாட்சிகளால் முன்வைத்தவர். இரண்டாமர் நாட்டார்கூறுகளை பாடலில் கொண்டுவந்தவர். மூன்றாமர் எளிய பதங்களை கவிதைக்கு பயன்படுத்தி வழிகாட்டியவர். இப்பாடல்கள் இலக்கியங்கள் காட்டும் மலையாள மனதுக்கு வெளியே உள்ள ஒரு மனதை காட்டுகின்றன. அவர்களுடைய பலவீனமான ஓர் இடத்தை என்று சொல்லலாம்.
வயலார் ராமவர்மா
படம்: ஆ·பிஜாத்யம் .பாடியவர் :யேசுதாஸ் ,பி. சுசீலா
விருச்சிக இரவின் அரண்மனை முற்றத்தில் ஒரு
பிச்சிப்பூப் பந்தல் எழுப்பிற்று -- வானம்
பிச்சிப்பூ பந்தல் எழுப்பிற்று
[விருச்சிக இரவின்]
நாலைந்து தாரகைகள் திரைச்சீலைக்கு உள்ளே நின்று
நீலக் கண்முனைகளை எய்தபோது
கோமள வதனத்தில் சந்தனதிலகமுமாய்
ஹேமந்த நிலவு இறங்கி வந்தது
[விருச்சிக இரவின்]
இந்த அழகிய கன்னியின் மணமகன் யாரென்று
பூமியும் வானமும் நோக்கி நின்றன
திருமணம் நடக்குமா என மலரின் இதழ்களால்
மென்காற்று கேட்கிறது
[விருச்சிகம் .மலையாள மாதம், ஹேமந்தம் ஒரு பருவம்]
மூலம்:
விருச்சிக ராத்ரி தன் அரமன முற்றத்தொரு
பிச்சகப்பூ பந்தலொருக்கி -- வானம்
பிச்சகப்பூ பந்தலொருக்கி
[விருச்சிக ராத்ரி]
நாலஞ்சு தாரகள் யவனிகய்க்கு உள்ளில் நிந்நும்
நீலச்ச கண்முனகள் எறிஞ்ஞப்போள்
கோமள வதனத்தில் சந்தனக் குறியுமாய்
ஹேமந்த கௌமுதி இறங்ஙி வந்நு
[விருச்சிக ராத்ரி]
ஈ முக்த வதுவின்றெ காமுகனாரெந்நு
பூமியும் வானமும் நோக்கி நிந்நு
பரிணயம் நடக்குமோ மலரின்றெ சொடிகளில்
பரிம்ருது பவனன் சோதிக்குந்நு
[விருச்சிக ராத்ரி]
வயலார் ராமவர்மா
படம்: ஸ்த்ரீ , பாடியது எஸ் .ஜானகி
நேற்று நீ ஒரு அழகிய ராகமாய் என்
பொன்புல்லாங்குழலில் வந்து ஒளிந்திருந்தாய்
எனது நுனிவிரலும் முத்தமும் போதையேற்ற
காதல் சங்கீதமாய் நீ வந்தாய்
[நேற்று நீ ஒரு]
வானத்து மொட்டைமாடியில் நட்சத்திரப் பெண்கள் அந்த
கானத்தின் அலைகளை கேட்டு பிரமித்து நின்றனர்
நீல மாமரத்தில் சாய்ந்து நின்ற இளந்தென்றல்
தாளமிடவும் மறந்து போயிற்று
[நேற்று நீ ஒரு]
நேற்று நீ ஒரு புது வசந்தக் கனவாக
என் மனமொட்டில் விருந்து வந்தாய்
சித்திரை நறுமணத்தின் நிழற்பந்தலின் கீழே
மதியமெனும் அழகி கண்ணயர்கையில்
முந்திரிக்குலைகளால் நூபுரம் அணிந்து வரும்
சுந்தர வசந்தமெனும் அழகியைப் போல
நிறைந்த காதலின் மதுக்குடம் நீட்டி
நடன மங்கை நீ அருகே வந்தாய்
[நேற்று நீ ஒரு]
மூலம்:
இந்நலே நீ ஒரு சுந்தர ராகமாய் என்
பொன் ஓடக்குழலில் வந்நு ஒளிச்சிருந்நு
மாமக அங்குலீ சும்பன லஹரியில்
ப்ரேம சங்கீதமாய் நீ வந்நு
[இந்நலே நீ ஒரு..]
மானத்தே மட்டுப்பாவில் தாரகா நாரிமார் ஆ
கான நிர்த்தரி கேட்டு தரிச்சு நிந்நூ
நீல மாமரங்ஙளில் சாரீ நிந்நு இளந்தென்னல்
தாளமடிக்கான் போலும் மறந்நு போயீ
[இந்நலே நீ ஒரு..]
இந்நலே நி ஒரு நவ வாஸ ஸ்வப்னமாய் நீ
என் மனோ முகுரத்தில் விருந்நு வந்நு
சைத்ர சுகந்தத்தின் தால வ்ருந்தத்திந் கீழில்
மத்யான்ன மனோஹரி மயங்ஙிடும்போள்
முந்திரிக்குலகளால் நூபுரம் அணிஞ்ஞெத்தும்
சுந்தர வாசந்த ஸ்ரீ எந்ந போலே
முக்த அனுராகத்தின்றெ பான ·பாஜனம் நீட்டி
ந்ருத்த விலாஸினீ நீ அருகில் வந்நூ
[இந்நலே நீ ஒரு..]
பி.பாஸ்கரன்
படம்: அனுபவம். பாடியது ஜேசுதாஸ்
வாகைப்பூமரம் சூடும் வாரிளம் பூங்குலைக்குள்ளே
வாடகைக்கு ஒரு அறையெடுத்தது வடக்குத் தென்றல்
முன்பு ஒரு வடக்குத்தென்றல்
[வாகைப்பூமரம் சூடும்...]
வாசலில் வந்து எட்டிப்பார்த்த
வசந்த பஞ்சமி நிலாப்பெண்ணின்
வளையொலி கேட்டு சிலிர்த்து நின்றது
தென்றல் பிரமித்து நின்றது
[வாகைப்பூமரம் சூடும்...]
விரல் சொடுக்கி அழைத்தபோது
நகம் கடித்து அவள் அவள் அருகே வந்தாள்
குனிந்த முகத்துடன் தளர்வுடன் நெருங்கி நின்றாள்
நாணம் சுமந்து நின்றாள்
[வாகைப்பூமரம் சூடும்...]
பொங்கும் உணர்ச்சியுடன் தென்றல் அவளது
இதழருந்தியது
குளிர்கால தளிர்களின் மெத்தையில் தளர்ந்து சரிந்தனர்
[வாகைப்பூமரம் சூடும்...]
புலரி வந்து அழைத்தபோது
அவன் விழித்து அவளைத் தேட
அவள் அங்கில்லை எங்கோ மறைந்தேபோனாள்
[வாகைப்பூமரம் சூடும்...]
மூலம்:
வாகப்பூமரம் சூடும் வாரிளம் பூங்குலைக்குள்ளில்
வாடகைக்கு ஒரு முறியெடுத்து வடக்கன் தென்னல்
பண்டு ஒரு வடக்கன் தென்றல்
[வாகைப்பூமரம் சூடும்...]
வாதிலில் வந்நெத்தி நோக்கிய
வசந்த பஞ்சமி பெண்ணின்
வளகிலுக்கம் கேட்டு தரிச்சு நிந்நு
தென்னல் ·ப்ரமிச்சு நிந்நு
[வாகைப்பூமரம் சூடும்...]
விரல் ஞொடிச்சு விளிச்ச நேரம்
நகம் கடிச்சு அவள் அருகில் வந்நு
விது வதனயாய் விவசயாய் அவள் ஒருங்ஙி நிந்நு
நாணம் குணுங்ஙி நிந்நு
[வாகைப்பூமரம் சூடும்...]
தரள விகார லோலன் தென்னல் அவளுடெ சொடி நுகர்ந்நு
தனு அணி தளிர் ஸய்யயில் தளர்ந்நு வீணு
[வாகைப்பூமரம் சூடும்...]
புலரி வந்நு விளிச்ச நேரம்
அவன் உணர்ந்நு அவளே நோக்கி
அவள் அடுத்து இல்ல எங்ஙோ மறஞ்š போயி
[வாகைப்பூமரம் சூடும்...]
ஸ்ரீ குமாரன் தம்பி
படம்: காவ்யமேள .பாடியது ஜேசுதாஸ் ,பி.லீலா
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
நீங்கள் இந்தபூமியில் இல்லாமலிருந்தால்
அசைவற்ற ஜடம் ,சூனியம் இந்த பூமி
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
கடவுள்களில்லை மனிதர்களில்லை பிறகு
வாழ்க்கையில் இன்பமே இல்லை
அழகும் கற்பனைகளுமில்லை சௌகந்திகங்கள் மலர்வதில்லை
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
இந்திர நீலத்தால் வானில் கட்டிய கந்தர்வ ராஜசபைக்கு
சந்திரப் பொற்கலசம் வைத்த கந்தர்வ ராஜசபைக்கு
சொர்க்கத்திருந்து விருந்து வரும்
பட்டாம் பூச்சிகள் நீங்கள்
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
நான் அறியாமல் என் மனச் சாளர வாசல்
திறக்கிறீர்கள் நீங்கள்
சிற்பிகள் கட்டிய சுவர்களில்லாமலே
சித்திரங்கள் வரைகிறீர்கள்
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
ஏழல்ல எழுநூறு நிறங்கள் கொண்டு
எத்தனை வானவிற்கள் சமைக்கிறீர்கள்
கண்ணீரைக் கரைத்து எழுதியெழுதி அழிக்கிறீர்கள்
எத்தனை வண்ணப் பந்தல்களை நீங்கள்!
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
மூலம்:
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ
நிங்ஙள் ஈ லோகத்து இல்லயிருந்நெங்கில்
நிஸ்சலம் சூன்யம் ஈ லோகம்
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ
தெவங்ஙளில்ல மனுஷ்யரில்ல பின்னே
ஜீவித சைதன்யமில்ல
சௌந்தரிய சங்கல்பங்ஙளில்ல சௌகந்திகங்ஙளில்ல
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ
இந்த்ர நீலம் கொண்டு மானத்து தீர்த்தொரு
கந்தர்வ ராஜாங்கணத்தில்
சந்திரிக பொன் தாழிகக் குடம் சார்த்துந்ந
கந்தர்வ ராஜாங்கணத்தில்
ஸ்வற்கத்தில் நிந்நு விருந்நு வராறுள்ள
சித்ர சல·பங்ஙள் நிங்ஙள்
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ
ஞான் அறியாதே என் மானச ஜாலக வாதில்
துறக்குந்நு நிங்ஙள்
சிபிகள் தீர்த்த சுமருகள் இல்லாதே
சித்ரம் எழுதுந்நு நிங்ஙள்
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ
ஏழல்ல எழுநூறு வர்ணங்ஙளால் எத்ர வார்மழவில்லுகள் தீர்த்து
கண்ணுநீர் சாலிச்சு எழுதுந்நு மாய்க்குந்நூ
வர்ண விதானங்ஙள் நிங்ஙள்
வயலார் ராமவர்மா
படம்: மிடுமிடுக்கி பாடியது ஜேசுதாஸ் எஸ் ஜானகி
தொலைவில் வெகு தொலைவில் நீலவானம்
அலையடிக்கும் மேகக்கடல்
அருகில் என் இதயவானம்
அலையடிக்கும் காதல் கடல்
[தொலைவில்...]
பாடிவரும் நதியின் குளிரும்
பாரிஜாத மலரின் மணமும்
ஒன்றுள் ஒன்று கலப்பது போல
நாம் ஒன்றாய் கரைகிறோமல்லவா?
[தொலைவில்...]
நித்ய சுந்தர பரவசமாய் நீ
நிற்கிறாய் என் ஆத்மாவில்
நீயில்லையேல் இவ்வுலகமேயில்லை
நான் விழுந்து மட்குவேன் இம்மண்ணில்
[தொலைவில்]
மூலம்:
அகலே அகலே நீலாகாசம்
அல தல்லும் மேக தீர்த்தம்
அருகிலென்றே ஹ்ருதயாகாசம்
அல தல்லும் ராக தீர்த்தம்
[அகலே ]
பாடிவரும் நதியின் குளிரும்
பாரிஜாத மலரின் மணமும்
ஒந்நில் ஒந்நாய் கலரும்போலே
நம்மல் ஒந்நாய் அலியுகயல்லே?
[அகலே ]
நித்ய சுந்தர நிர்விருதியாய் நீ
நில்குகயாணு என் ஆத்மாவில்
விஸ்வம் இல்லா நியில்லெங்கில்
வீணடியும் ஞான் ஈ மண்ணில்
[அகலே ]
பி பாஸ்கரன்
படம்: இது ஞங்ஙளுடெ கத பாடியது எஸ் ஜானகி
பொன்மேகமே பொன்மேகமே
கனவு காண்பதுண்டா நீயும் ?
கனவு காண்பதுண்டா?
[பொன்மேகமே]
கண்ணீர்குடம் தலையில் ஏந்தி
விண்வீதியில் நடக்கும்போது
வண்ண சிறகுகள் சீவி ஒதுக்கி
வசந்த இரவில் கண்ணயரும்போது
[பொன்மேகமே]
மழைக்கால அந்திகள் வானவில்லால் உனக்கு
மணமாலை செய்யும்போது
மௌன வேதனையை ஏன் நீயும்
மறைத்து வைக்கிறாய் உயிருக்குள்?
[பொன்மேகமே]
மூலம்:
ஸ்வற்ண முகிலே ஸ்வர்ண முகிலே
ஸ்வப்னம் காணாறுண்டோ ?
நீயும் ஸ்வப்னம் காணாறுண்டோ ?
[ஸ்வற்ண முகிலே]
கண்ணீர்குடம் தலையில் ஏற்றி
விண்ணின் வீதியில் நடக்கும்போள்
வர்ண சிறகுகள் சீகி ஒதுக்கி
வசந்த ராத்ரியில் மயங்ஙும்போள்
[ஸ்வற்ண முகிலே]
வர்ஷ ஸந்தியா மாரிவில்லின் வரண மால்யம் தீர்க்கும்போள்
மூக வேதன எந்தினாய் நீ மூடிவெப்பூ ஜீவனில்?
[ஸ்வற்ண முகிலே]
வயலார் ராமவர்மா
படம்: அச்சாணி பாடியது ஜேசுதாஸ்
என் கனவின் தாமரைப் பொய்கையில்
வந்திறங்கிய ரூபவதி
நீலத்தாமரை விழிகள் திறந்து உன்னைப் பார்த்து நின்றது
சித்திரை உன் நீராடலைக் கண்டு நின்றது
[என் கனவின்..]
எனது கற்பனையின் சாலமரக் காட்டில்
வந்து சேர்ந்த வனமோகினி
வண்ணப் பூ தட்டங்களேந்தி
வனபுஷ்ப மரங்கள் வரிசையாக நின்றன
உன்னை வரவேற்க குலுங்கி நின்றன
[என் கனவின்..]
காதல் நினைவுகளின் தேவ வனத்தின்
பூமரங்கள் பூத்த இரவில்
உனது நடனம் காணவந்து
உன்னைக்காத்து நின்றனர்
நீல வானமும் விண்மீன்களும்
[என் கனவின்..]
மூலம்:
என்றெ ஸ்வப்னத்தின் தாமரப்பொய்கையில்
வந்நிறங்ஙிய ரூபவதி
நீலத்தாமர மிழிகள் துறந்நு
நீனே நோக்கி நிந்நூ
சைத்ரம் நின்றே நீராட்டு கண்டு நிந்நூ
[என்றெ ஸ்வப்னத்தின்..]
என்றெ ·பாவன ஸால வனத்தில்
வந்நு சேர்ந்நொரு வன மோஹினி
வர்ண சுந்தரமாம் தாலங்ஙளேந்தி
வன்ய புஷ்பஜாலம் நிரயாய் நிந்நூ
வரவேல்பினாய் ஒருங்ஙி நிந்நூ
[என்றெ ஸ்வப்னத்தின்..]
ப்ரேம சிந்த தன் தேவ நந்தனத்திலே
பூமரங்ஙள் பூத்த ராவில்
நின்றெ நர்த்தனம் காணானெத்தி
நின்னே காத்து நிந்நு சாரே
நீலாகாசவும் தாரகளும்
[என்றெ ஸ்வப்னத்தின்..]
வயலார் ராமவர்மா
படம்: நதி பாடியது ஜேசுதாஸ்
கழிநீலம் கண்ணில் விரியும்
தாமரைகள் கன்னங்களில் மலரும்
காதல் கொண்டவளே உன் உதடுகளில் இருந்து
ஆலங்கட்டி மழை பொழியும்
[கழிநீலம் கண்ணில் விரியும் ..]
பொன் ஒட்டியாணத்தை பூமிக்கு போடும்
நதியின் ஏகாந்த அலைகளில்
உன் மென் புன்னகையின் இந்திரஜாலம் கண்டு
தீரா வியப்புடன் நான் இறங்கி சென்றேன்
தோழி இறங்கி சென்றேன்
[கழிநீலம் கண்ணில் விரியும் ..]
உன்னைப்பற்றி நான் பாடிய பாடலுக்கு
எண்ணற்ற அலைகள் சுதிமீட்டின
உன் பகற்கனவின் நீலக்கடம்ப மரத்தில் நீ
என் விளையாட்டுத்தோணியை கட்டிப்போட்டாய்
தோழி கட்டிப்போட்டாய்
[கழிநீலம் கண்ணில் விரியும் ..]
மூலம்:
காயாம்பூ கண்ணில் விரியும்
கமலதளம் கவிளில் விரியும்
அனுராகவதீ நின் சொடிகளில் நிந்நு
ஆலிப்பழம் பொழியும்
[காயாம்பூ...]
பொன் அரஞ்ஞாணம் பூமிக்கு சார்த்தும்
புழயுடே ஏகாந்த புளினத்தில்
நின் ம்ருது ஸ்மேரத்தின்றெ இந்த்ர ஜாலம் கண்டு
நித்ய விஸ்மயமுமாய் ஞானிறங்ஙீ
[காயாம்பூ...]
நீன்னே குறிச்சு ஞான் பாடிய பாட்டினு
நிரவதி ஓளங்ஙள் ஸ்ருதி மீட்டீ
நின் மனோ ராஜ்யத்தின் நீல கடம்பில் நீ
என்றே ஈ களித்தோணி கெட்டியிட்டூ
சகீ கெட்டியிட்டூ
[காயாம்பூ...]
வயலார் ராமவர்மா
படம்: ராஜ ஹம்சம் பாடியது ஜேசுதாஸ்
சன்யாசினி உன் புண்ணிய ஆசிரமத்தில் நான்
மாலை மலர்களுடன் வந்தேன்
யாரும் திறக்காத முகப்புவாசலில்
அன்னியனைப்போல நின்றேன்
[சன்யாசினி..]
உன் துயரம் தேங்கிய மௌனக் கண்ணீர் தாரையில்
என் கனவுகள் கரைந்தன
அழுதபடி என் மோகங்கள் இறந்தன
உன் மனதின் கனல் விழுந்து என்
மலர்களெல்லாம் கருகின
இரவு பகலிடம் போல
விடைகேட்கிறேன் நான்
[சன்யாசினி..]
உன் ஏகாந்த நினைவுகளின் பாதையில்
என்னை என்றாவது நீ நினைப்பாய்
ஒருதடவையாவது என் காலடிசுவடுகளை அறிவாய்
அன்று என் ஆத்மா உன்னிடம் சொல்லும்
உன்னை நான் காதலித்திருந்தேன்
இரவு பகலிடம் போல
விடைகேட்கிறேன் நான்
[சன்யாசினீ£..]
மூலம்:
ஸன்யாசினீ நி புண்யாசிரமத்தில் ஞான்
சந்தியா புஷ்பவுமாய் வந்நு
ஆரும் துறக்காத்த பூமுக வாதிலில்
அன்யனெ போலெ ஞான் நிந்நு
[ஸன்யாசினீ£...]
நின்றெ துக்கார்த்ரமாம் மூக அஸ்ரு தாரயில்
என்றெ ஸ்வப்னங்ஙள் அலிஞ்š
சகத்கதம் என்றெ மோகங்ஙள் மரிச்சு
நின்றெ மனஸின்றெ தீக்கனல் கண்ணில் வீணு என்றெ ஈ
பூக்கள் கரிஞ்š
ராத்ரி பகலினோடெந்ந போலே
யாத்ர சோதிபூ ஞான்
ராத்ரி பகலினோடெந்ந போலே
யாத்ர சோதிபூ ஞான்
[ஸன்யாசினீ£...]
நின்றெ ஏகாந்தமாம் ஓர்ம தன் வீதியில்
என்னெ ஏந்நெங்கிலும் ஓர்க்கும்
ஒரிக்கல் நீ என்றெ கால்பாடுகள் காணும்
அந்நு என்றெ ஆத்மாவு நின்னோடு மந்ரிக்கும்
நின்னெ ஞான் ஸ்னேகிச்சிருந்நூ
ராத்ரி பகலினோடெந்ந போலே
யாத்ர சோதிபூ ஞான்
[ஸன்யாசினீ£...]
- பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45 -
பதிவுகள் ஆகஸ்ட் 2003; இதழ் 44
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து [பத்து கவிதைகளுடன்]
கவிதையின் இரு அடிப்படை அம்சங்கள்
எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு கவிதை மொழி பெயர்க்கப்படும் போது உலகம் முழுக்க அனைவருக்குமே அதன் சாரமான ஒரு பகுதி புரிகிறது, இதுவே கவிதையின் பொதுஅம்சம். நமக்கு நல்ல கவிதை உலகம் முழுக்க எப்படியோ நல்லகவிதையாக அடையாளம் காணப்படுகிறது. இந்த அம்சம் இருப்பதனால்தான் உலக கவிதை என்ற கருத்தே உருவாகியுள்ளது . யோசித்துப்பாருங்கள் நாம் இன்று மாபெரும் கவிஞர்களாக கருதும் பலர் நமக்கு மொழிபெயர்ப்பு மூலமே அறிமுகமானவர்கள். தாந்தேயானாலும் சரி தாகூரானாலும் சரி .
அதே சமயம் நம்மால் கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்க்கவே முடியாது என்பதை காணலாம். அப்பகுதி அம்மொழிக்கே உரிய தனித்தன்மையினால் ஆனதாக இருக்கும். அது அக்கவிதை முளைவிட்ட கலாச்சாரத்துக்கே உரியதாக இருக்கும். வேற்று மொழியில் வேற்று கலாச்சாரத்தில் இருந்தபடி அந்த அம்சத்தை புரிந்துகொள்ள முடியாது.
அந்த மொழியை படித்தாலும் கூட அன்னியக் கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரால் ஆதை முழுக்க அணுக முடியாது. ஷேக்ஸ்பியரை நாம் மூல மொழியிலேயே படிக்கிறோம் ஆனாலும் நம்மால் அக்கவிதையுலகின் குறிப்பான ஒரு பகுதியை உள்வாங்கிக் கொள்ள முடியாது. அது ஆங்கிலோ சாக்ஸன் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. அடிக்குறிப்புகள் விளக்கங்கள் மூலம் அதை நமக்குப் புரியச் செய்யலாம், ஆனால் நம் மனம் உணர்வு பூர்வமாக அதை வாங்கிக் கொள்ளாது. ஒரு சிறந்த கவிதை இவ்விரு பண்புகளையுமே கொண்டிருக்கும் என்று சொல்லலாம். அதில் மானுடப்பொதுவான கூறுகளும் இருக்கும், அக்கலாச்சாரத்துகேயுரிய தனித்தன்மைகளும் இருக்கும். ஆகவே தான் 'முற்றாக மொழிபெயர்க்க முடியாத கவிதையும் சிறந்த கவிதை அல்ல, முற்றாக மொழிபெயர்த்துவிடக்கூடிய கவிதையும் சிறந்த கவிதை அல்ல' என்கிறார்கள்.
மலையாளக் கவிதைகளை படிக்கும்போது இந்த பொதுவிதியை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளது . நாம் கேரளக் கலாச்சாரத்திலும் மலையாள மொழியிலும் முளைத்த கவிதைகளை படிக்கிறோம். நமக்கு வந்து சேர்வது இரு அம்சங்கள். கவிதையில் உள்ள அடிப்படையான மானுட உணர்ச்சிகள், மானுட விழுமியங்கள் ஆகியவை ஒரு பகுதி. கேரள , மலையாள கலாச்சாரத்துகே உரியதனித்த பண்பாட்டுக் கூறுகள் இன்னொரு பகுதி. முதல் அம்சம் நமக்கு எளிமையாக புரியும் ,மற்ற அம்சத்தை நாம் சிரத்தை எடுத்து புரிந்துகொள்ள வேண்டும்.
மரபுக்கவிதையும் நவீனக்கவிதையும்
இக்கவிதைகள் மலையாளத்தின் நவீனக் கவிதைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மரபுக்கவிதை , நவீன கவிதை என்பதற்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.நாம் அறிந்த முதல்வேறுபாடு வடிவம் சார்ந்தது. மரபுக்கவிதை யாப்பில் இருக்கும். நவீனக்கவிதை யாப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு மேலோட்டமான ஒன்றே.மேலும் ஆழமான வேறுபாடுகள் உள்ளன.
முக்கியமான வேறுபாடு கவிதையின் நோக்கத்தில் உள்ளது. மரபுக்கவிதை 'வலியுறுத்தும்' நோக்கம் கொண்டது .எதை? நெறிகளை, அறங்களை, சில அடிப்படை உண்மைகளை. இந்த அம்சத்தை நாம் பொதுவாக மரபுக்கவிதைகளிள்ல் காணலாம் . ஒரு கவிதையை எடுத்துப்பார்த்தால் அது எதைப்பற்றி பேசுகிறது, அதன் மையக்கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடலாம்.
நமக்கு பள்ளி கல்லூரிகளில் பாடமாக வைக்கப்படுவது மரபுக்கவிதையே .ஆகவே தேர்வில் கேள்விகள் 'இந்த நாலடியார் பாடலின் மையக்கருத்து யாது?' என்ற வகையில் கேட்கப்படுகின்றன.நாமும் பதில் எழுதிவிடுகிறோம். நவீனக் கவிதையில் இந்த அம்சமே கிடையாது. நவீன இலக்கியத்தில் கருத்துக்கள் சொல்லப்படுவது இல்லை. கருத்துக்களுக்கு ஆதாரமான மன இயக்கம், உணர்வுகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. கருத்துக்களை வாசிப்பின் மூலம் நாம் தான் உருவாக்கிக் கொள்கிற்றோம். ஆகவே மரபுக்கவிதையில் செய்வது போல நவீனக்கவிதையில் "இதன் மையக்கக்கருத்து யாது?" என்றெல்லாம் கேட்கக் கூடாது.அது நவீனக்கவிதையை மிகத் தவறாக மதிப்பிடுவதில் சென்று முடியும். இந்த நவீனக்கவிதை பற்றி என்ன நினைக்கிறாய், உன்னுடைய வாசிப்பு என்ன, நீ கண்டடைந்த கருத்து என்ன என்றுதான் கேட்கவேண்டும்.
அடுத்த முக்கியமான வேறுபாடு நவீனக் கவிதை எதையுமே சொல்ல முற்படுவது இல்லை , உணர்த்தவே முற்படுகிறது என்பதாகும். அது எதையுமே வலியுறுத்திக் கூற முற்படுவது இல்லை. அதற்கு நேர்மாறாக ஏற்கனவே வலியுறுத்திக் கூறப்பட்டவற்றை மறு பரிசீலனை செய்யவே நவீனக்கவிதை முற்படுகிறது. மரபான கவிதை திட்டவட்டமான முறையில் ஒன்றை சொல்ல முற்படுகிறது.அதற்காகவே அது உவமை, உருவகம் முதலிய அணிகளை பயன்படுத்துகிறது .
ஆனால் நவீனக்கவிதை அம்மாதிரி எதையுமே சொல்லிப்புரியவைக்க முயல்வது இல்லை.அது ஓர் அனுபவத்தை மட்டுமே வாசகனுக்கு கொண்டு செல்ல முயல்கிறது. ஓர் அகமன ஓட்டத்தை வாசகனுக்குள் உருவாக்க எண்ணுகிறது.அதற்காகவே அது அணிகளை பயன்படுத்துகிறது. இவ்வகையான புதிய அணிகள் வேறுபெயரில் வழங்கப்படுகின்றன.இவை மொழியுருவகம் [metaphor] படிமம் [poetic image] என்ற இரு பொது அடையாளங்களால் குறிப்பிடப்படுகின்றன.
ஒரு நிகழ்வையோ காட்சியையோ மட்டும் சொல்லி அதன் பொருளை முழுமையாக வாசகனின் கற்பனைக்கே விட்டுவிட்டால் அது படிமம் எனப்படுகிறது . அதாவது ஓர் உவமையில் எது உவமையோ அதை மட்டுமே சொல்லி உவமிக்கப்படுவதை வாசகனின் கற்பனைக்கே விட்டு அவன் மனதை அச்சித்திரத்தை விரிவாக்க முடிந்தால் அது படிமம் . வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு
[நீர்மட்டத்துக்கு ஏற்ப அல்லிமலரின் தண்டின் நீளம் இருக்கிறது . அதுபோல மனிதர்களின் உள்ளத்தின் உயரத்துக்கு ஏற்ப அவர்களின் உயர்வும் அமைகிறது]
மலர் உவமை. உவமிக்கப்படுவது தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டது - உள்ளம். தற்கால மலையாளக் கவிதைகள் நூலில் கெ ஜி சங்கரப்பிள்ளை எழுதிய பல்லி என்ற கவிதையை பாருங்கள் .உவமை மட்டுமே உள்ளது .உவமிக்கப்படுவது சொல்லபடுவதில்லை. இதுவே படிமம் என்பது. அறுந்து விழுந்த வால் பார்க்கிறது . பல்லி அதோ அமர்ந்திருக்கிறது , எந்த இழப்புணர்வும் இல்லாமல். ஒரு புதிய இரைக்காகவோ துணைக்காகவோ அமர்ந்திருக்கிறது பல்லி .
இந்த படிமத்திலி¢ருந்து அர்த்தத்தை கற்பனைசெய்துகொள்வது வாசகனின் பொறுப்பு. அந்த கற்பனையை தூண்டிவிடுவது மட்டுமே கவிஞனின் வேலை. கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்ற கேள்விக்கே கவிதையில் இடமில்லை. நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே அப்படித்தான்
அது எல்லா வாசகர்களாலும் முடியுமா என்று கேட்கலாம் .அதற்கான பயிற்சிதான் நவீனக் கவிதை வாசிப்பிற்கான பயிற்சி என்பது. இசை கேட்க , ஓவியத்தை ரசிக்க அனைத்துக்கும் பயிற்சி தேவை. பயிற்சி இல்லையேல் அவை வெறும் ஒலியாகவோ அல்லது நிறமாகவோ மட்டும் தென்படக்கூடும். பயிற்சி எப்படி வரும் ? தொடர்ந்த பழக்கம் மூலம்தான். மரபுக்கவிதையை படிக்க நாம் சிறு வயதிலேயே நாம் பழகிவிட்டிருக்கிறோம் . ஆகவே நமக்கு அது புரிகிறது. சொற்பொருள் மட்டும் தெரிந்தால் போதும். நவீனக் கவிதையில் சொற்கள் எல்லாமே தெரிந்தவை, கூறுமுறை மட்டுமே தெரிய வேண்டியுள்ளது .
இலக்கியப்படைப்பில் பல வாசிப்புகளுக்கு இடமுள்ளது. எந்த படைப்பு அதிகமான வாசிப்புக்கு இடம் தருகிறதோ அதுவே நல்ல படைப்பு. நான் வாசிப்பது படைப்பில் உள்ளுறைந்துள்ள என் படைப்பு. இதை ஆங்கிலத்தில் இலக்கிய விமரிசகர்கள் மிக விரிவாக பேசியுள்ளனர்.
தமிழில் தமிழவன் 'படைப்பும் படைப்பாளியும் ' என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளார். ழாக் தெரிதா போன்ற சில வ்மரிசகர்கள் எல்லைக்கு போய் படைப்புக்கும் வாசிப்புக்கும் நேரடையான உறவே இல்லை என்கிறார்கள். படைப்பு மீது அர்த்தம் 'வழுக்கி' சென்றபடியே உள்ளது என்கிறார்கள்.
பல்லிவால் கவிதையை நான் எப்படி படிக்கிறேன் என்று சொல்கிறேன் .இது ஒருவாசிப்புதான் . இப்படி பல வாசிப்புகளுக்கு இடமுண்டு. அதாவது இது பொழிப்புரை அல்ல. பல்லியின் வால் உயிருள்ளது .ஆனால் அது பல்லியின் ஓர் உறுப்புமட்டுமே . அதற்கென எந்த தனியடையாளமும் இல்லை .பல்லிக்கு வாலை இழப்பது ஒரு தப்பித்தல். அதற்கு வேறு வால் முளைக்கும். ஆகவே அதற்கு கவலையே இல்லை. சமூகத்தில் பிறிதொருவரை சார்ந்து வாழக்கூடிய பலரை நாம் கண்டு வருகிறோம். கணவனை சார்ந்து வாழும் மனைவிகள் மிகச்சிறந்த உதாரணம். அபூர்வமாக சகோதரர்களை சார்ந்து வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் அவ்வாறு துண்டித்து வீசப்பட்டால் அடையும் துடிப்பின் சித்திரத்தையே இக்கவிதை அளிக்கிறது. துடித்து துடித்து மரணத்தை நோக்கி செல்கிறது அந்தவால். அந்த வால் போல துடிக்கும் பலரை நான் கண்டதுண்டு என் வாழ்வில் .அப்போதெல்லாம் இக்கவிதையை எண்ணிக் கொள்வேன் .
இன்னொரு கோணத்திலும் யோசிக்கலாம். சில கொள்கைகளை, சில நிறுவனங்களை நம்பியே வெகுகாலம் வாழ்ந்து விடுபவர்கள் உண்டு . சட்டென்று அதிலிருந்து துண்டிக்கப்பட நேர்ந்தால் அப்படியே அழிந்து போய்விடுகிறார்கள் அவர்கள். கம்யூனிச இயக்கங்களை சேர்ந்த பலர் அப்படி அழிந்து போயிருக்கிறார்கள். ஏன் இப்படி யோசியுங்கள், நாற்பது வருடம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து ஒருவர் ஓய்வு பெறுகிறார் .அவரை பதினைந்து நாளில் அவ்வலுவலகம் மறந்துவிடும்.அவர் இப்பல்லிவாலின் நிலையிலிருக்கிறார் .அதாவது ஓரு உயிருள்ள அமைப்பிலிருந்து பிரிந்துபோய் தனித்தன்மை இல்லாமல் படிப்படியாக அழிய நேரும் வாழ்க்கைச்சந்தர்ப்பத்தை இக்கவிதைகனுபவமாக்குகிறது இல்லையா?
இதுதான் படிமக்கவிதையின் இயல்பு. நவீனக்கவிதையில் பெரும்பாலானவை படிமக்கவிதைகளே . படிமம் என்ற வடிவம் நவீனக்கவிதை என்ற வடிவம் எப்போது பிறந்ததோ அப்போதே பிறந்தது .நவீனக்கவிதையின் பிதாமகரான எஸ்ரா பவுண்ட் தான் படிமம் என்ற உருவத்தையும் சீர்படுத்தியவர். தற்கால மலையாளக் கவிதைகள் என்ற தொகுப்பில் குதிரை நடனம்[அய்யப்ப பணிக்கர்] ,ஒற்றையானையின் மரணம்[ என் என் கக்காடு], சிலைகள்[ கெ சச்சிதானந்தன்] முதலியவை தூய படிமக் கவிதைகள் .குதிரை நடனம் என்ன சித்திரத்தை தருகிறது? தகுதி உடையவர்களின் முன் தகுதி இல்லாத ஒருவன் ஆட வருகிறான்.தன்னுடைய தகுதியிமையையே அவன் தன் தகுதியாக ஆக்கிக் கொள்கிறான். இதை வாழ்வுடன் ஒப்பிடவேண்டுமா? வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன் அதிகாரியாகிறான். கடைசி மதிப்பெண் வாங்கும் மாணவன் அரசியல்வாதியாகி அவனுக்குமேலே அதிகாரத்தில் அமர்கிறான். இது ஓர் உதாரணம்தான்.
'ஒற்றையானையின் மரணம்' இதேபோல ஒரு படிமத்தையே முன்வைக்கிறது . ஒற்றையானை ஒரு போதும் கூட்டத்துடன் சேராது என நாம் அறிவோம். அது தன் வழியை தானே கண்டடைவது. தன்னம்பிக்கையும் தனியான தேடலும் கொண்ட மனிதர்களை அந்த யானை குறிக்கிறது எனலாம்.அது கொல்லப்பட்டு விட்டது [சுட்டுக் கொல்லப்பட்டு விட்டது] அந்த யானையின் மரண அலறலைகேட்டபடி ஒருவன் ஊரை விட்டு விலகி இடிபாடுகளி¢ன் வழியாக காடுகளை நோக்கி செல்கிறான். தன்னை வாழ அனுமதிக்காத ஊரை விட்டு செல்கிறான் என எடுத்துக் கொள்ளலாம். ஒற்றையானையின் மரணம் என்பது தனித்தன்மையின் மரணத்தை குறிக்கிறது என்று கொள்ளலாம். 1960கள் உலகம் முழுக்க மனிதனின் தனித்தன்மைக்காகவும் , சிந்தனை சுதந்திரத்துக்காகவும் கலகக் குரல்கள் எழுந்த காலகட்டம் என அறிவீர்கள்.நக்சலைட் இயக்கம் உருவான காலகட்டம் அது. அக்காலகட்டத்தின் முடிவை, அன்றைய இயக்கங்களின் வீழ்ச்சியை சொல்லும் கவிதை இது என நான் வாசிக்கிறேன். அதேபோல சிலைகள் ஒரு படிமத்தை முன்வக்கிறது . மாமனிதர்கள் எல்லாம் வரலாற்றில் வெறும் பெயர்களாக மாறிக் கொண்டிருப்பதை சித்தரிக்கும் கவிதை அது.
மொழியுருவகம் என்பது மரபுக்கவிதையில்பயன்படுத்தப்பட்ட உருவக அணியேதான். ஆனால் உருவக அணியில் உருவகித்தல் என்பது திட்டவட்டமான ஒரு கருத்தை தெளிவுபடுத்தும் ஓர் உத்தியாக உள்ளது. நவீனக்கவிதையில் அப்படி திட்டவட்டமான கருத்து இல்லை. அந்த கருத்து வாசகனின் கற்பனைக்கே விடப்படுகிறது . ஆனால் வாசகனின் கற்பனையை பலதளங்களைச்சார்ந்து விரித்தெடுப்பதற்கு உதவியாக பல மொழிக்குறிப்புகள் அளிக்கப்பட்டு உருவகம் மேலும்மேலும் விரிவு படுத்தப்படுகிறது. தொடர்புள்ள பல விஷயங்கள் அதில் கொண்டுவந்து இணைக்கப்படுகின்றன. இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் மரபான உருவகம் ஒரு காட்சியாகவோ ஒரு தருணமாகவோ இருக்கும். ஆனால் நவீனக்கவிதையில் உள்ள உருவகம் மொழிசார்ந்ததாக இருக்கும். மொழியை பயன்படுத்தும் விதம் மூலமே அது விரிவடையும். ஆகவே அதை மொழியுருவகம் என்று சொல்லலாம். [இங்கே ஒரு எச்சரிக்கை மெட்ட·பர் என்ற சொல் தத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அது அங்கே முற்றிலும் மாறுபட்ட தளத்தில் பயன்படுத்தப்படுகிறது .அதை இங்கே குழப்பிக் கொள்ளக் கூடாது.]
மலையாளக் கவிதைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கவிதை உத்தி மொழியுருவகம்தான் . ஓர் உருவகத்தை முன்வைத்து அதை மொழியின் வழியாக வளர்த்து சென்று அது குறிப்பிடும் பொருளை மிக விரிவானதாக ஆக்குவது இந்த உத்தி. பிறவி[ஆற்றூர் ரவிவர்மா] ஓர் உதாரணம் ஒரு பெரும் புயலுக்கு முந்தைய கணத்தை சொல்ல முற்படும் கவிதை பிறவி. அப்புயல் ஒரு புது யுகத்தின் பிறவியின் குறியீடு எனலாம். ஒரு மீட்பர் , ஒரு தலைவர் பிறக்கப்போகிறார் என்ற எண்ணமும் வழி தெரியாத தத்தளிப்பும் இக்கவிதையில் இருக்கிறது . இங்கே நம் கற்பனை தூண்டப்படுவதுடன் அது ஒரு 'குறிப்பிட்ட' அர்த்த தளம் நோக்கி ஆற்றுப்படுத்தப்படுகிறது. அந்த குறிப்புப்பொருள் கவிதைக்குள் திடமாக உள்ளது . ஆகவேதான் இது உருவகம்.
மரபுக் கவிதையில் நேரடியாக கருத்துக்களைச் சொல்லும் [staement]கவிதைகள் ஏராளமாக உண்டு . உண்மையில் அவை கருத்துக்களைச் சொல்லும்போது அக்கருத்துக்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளையே சொல்கின்றன. கருத்துக்காக சொல்லப்பட்ட கருத்து கவிதை அல்ல.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அற்றே
செல்வத்தை தேய்க்கும் படை
[சுரண்டப்பட்டவன் துயரப்பட்டு தாங்காது அழுத கண்ணீர் செல்வத்தை அழிக்கும் ஆயுதமாகும்] போன்ற கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். நவீனக் கவிதை இம்மாதிரி நேரடியாக பேசுவது இல்லை .ஆனால் நேரடியாக பேசுவது போன்ற ஓர் உத்தியை அது கைகொள்கிறது . அப்படிப் பேசும் போது ஒன்று அது இடக்காக உள்ளர்த்தங்களை காட்டிப் பேசுகிறது. அல்லது குறிப்பு என்ற வடிவில் சில விஷயங்களை மட்டும் சொல்லி பலவிஷயங்களை வாச்க ஊகத்துக்கு விட்டு பேசமுற்படுகிறது. இவ்விரு முறைகளுக்கும் உதாரணமாகும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
நானும் சைத்தானும் [எம் கோவிந்தன்] சக்ரட்டீஸ¤ம் கோழியும்[கெ சச்சிதானந்தன்]' இரவுணவு ' [ஏ.அய்யப்பன்] ஆகிய கவிதைகள் இடக்கான முறையில் பேசும் கவிதைகள் எனலாம். அவை எவற்றை அங்கதமாக விமரிசிக்கின்றன என்பதே முக்கியமாக கவனிக்கப் பட வெண்டும். .சாக்ரட்டீஸ¤ம் கோழியும் கவிதையில் சச்சிதானந்தன் தத்துவ சிந்தனையை எள்ளலுக்கு ஆளாக்குகிறார் .சாக்ரட்டீஸின் ஒரு கடன் கிரேக்கத்தையே கடனாளிஆக்கியது என்ற வரியில் ஒரே சமயம் பாராட்டும் சிரிப்பும் ஒளிந்துள்ளது. எள்ளல், துக்கம் போன்ற உணர்வுகளின் வழியாக நாம் அடையும் அனுபவமே இக்கவிதைகள் அளிப்பவை.
இம்மலையாளக் கவிதைகளின் ஒரு பொது அம்சத்தை சொல்ல விரும்புகிறேன். இவை 1960,70 காலகட்டங்களில் எழுதப்பட்டவை. நக்சலைட் இயக்கம் கேரளத்தில் உருவாகி ஒடுக்கப்பட்டு அழிந்த வரலாற்று தருணத்தின் பின்னணி இவற்றுக்கு உண்டு. பிறவி போன்ற கவிதைகளில் அந்த எழுச்சியையும் ஒற்றை யானையின் மரணம் போன்ற கவிதைகளில் அதன் வீழ்ச்சியையும் காணலாம். இக்கவிதைகளில் நாம் நமது கவிதை ரசனைமூலம் பொதுவாக அறியக்கூடிய அம்சங்கள் இவை. இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு கவிதைக்கும் அவற்றுக்கேயுரிய தனிப்பட்ட கலாச்சார தனித்துவம் உள்ளது. கேரள கலாச்சரக் கூறுகள் உள்ளன.அவற்றை நாம் கவிதையை கூர்ந்து படித்து உள்வாங்கிக் கொள்வதன்மூலமே அறிய முடியும். கவிதைபடிப்பதன் நோக்கங்கள் இரண்டு. கவிதை அனுபவம் ஒன்று. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் உறவு கொள்ளுத்ல் இரண்டு. இரண்டு தளங்களிலுமே வாசிப்பு நிகழவேண்டும்.
அதாவது இன்றுவரை நீங்கள் கவிதை வாசித்த முறையை இவற்றுக்கு போடாதீர்கள். கவிஞன் என்ன சொல்கிறான் என்று தேடாதீர்கள். இச்சொற்கள், படிமங்கள் உங்கள் மனதில் என்ன விளைவை உருவாக்கின என்று பாருங்கள். நீங்கள் அடைந்த அர்த்தமே இக்கவிதையின் அர்த்தம் -- உங்களைப் பொறுத்தவரை .
நானும் சைத்தானும்
தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
"எனக்குரியது எனக்கே" என.
'யார் நீ" என்றேன்
"தெரியாதோ சைத்தானை?" என்றான்
"அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்"
என்றேன்
'என்னுடையதை தந்தாய் நன்றி "
என்று சிரித்து போனான்,
சைத்தான்
- எம் கோவிந்தன் -
குதிரை நடனம்
நான்கு பெரும் குதிரைகள்
அலங்கரித்துவந்தன.
ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு.
ஒன்று கருமை ஒன்றுக்கு தவிட்டுநிறம்.
ஒன்றுக்கு நான்குகால்.
ஒன்றுக்கு மூன்றுகால்.
மூன்றாவதற்கு இரண்டுகால்.
நான்காவது ஒற்றைக்காலன்.
ஒற்றைக்கால் குதிரை சொன்னது,
மற்றவற்றிடம்
நடனத்துக்கு நேரமாயிற்று தோழர்களே
நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோம்.
நடனம் தொடங்கியது .
நான்குகாலன் நடுங்கி விழுந்தது.
மூன்றுகாலன் மூர்ச்சையாயிற்று.
ரெட்டைக்காலன் நொண்டியடித்தது.
ஒற்றைக்காலன் குதிரை மட்டும்
நடனம் தொடர்ந்தது.
- அய்யப்ப பணிக்கர் -
ஒற்றையானையின் மரணம்
ஒற்றை யானையின் பிளிறலைகேட்டபடி
கட்டிமுடியாத வீடுகளின்
அடித்தளம் மீது நடப்பவன் எண்ணிக் கொண்டான்,
காடு தொலைவிலா அருகிலா?
அந்திமீது
அடர்கானக அமைதியும் குளிரும்
படிந்துள்ளன.
ஆனால் சுற்றிலும்
கட்டிமுடிவடையா மாநகர்.
காலியான தெருக்கள்.
விரிந்தகன்ற மைதானங்கள்.
குறுக்கும் நெடுக்கும் மொட்டைமேடுகளின்
முடிவற்ற வரிசை.
எங்கோ கடலின் நினைவு.
தொலைவில்
குண்டடிபட்ட யானையின் கடைசி பிளிறல்.
கரைந்து மறைந்தது சோகம்.
துடித்துசரிந்த வானச்செம்மையை
உண்டு களித்தது இரவுக்கருமை.
நானோ
முளியான மேடுகளினூடாக
எங்கெனத்தெரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்.
பிறவி
கண்மூடினாலும் திறந்தாலும்
வேறுபாட்டு இல்லா இருளில்
சொன்னதையே சொல்கிறது
என்காதில் பெருமழை.
மழைபெய்யலாமென எண்ணாமலோ
இருண்டுவிடுமென அறியாமலோ
கிளம்பியவனல்ல நான்
எதற்கென்றா?
முழுக்க சொல்லவில்லை என்னிடம் கூட
அத்தனை ரகசியம்.
மழை ஓயக் காக்கவோ
விடியும்வரை தரிக்கவோ
முடியாத தவிப்பு.
கூவினேன் குரல்
துணையின்றி திரும்புகிறது
வாரிக்கொட்டிய இருளெல்லாம்
குன்றென குவிந்தது.
புள்ளிகள் நிறைந்த வானம் என்னுடன்
நான்குகாலில் நடந்தது.
காட்டுதீ எரிவதைபோல ஏதோ
கண்மூடினாலும் தெரிகிறது.
கடல்பொங்குதல் போலொன்று
கால்களில் அலைக்கிறது
புயல்போல பேரிரைச்சல்
காதுகளில் நிறைகிறது,.
பூமியின் பிரசவ வலி,
தீயல்ல காற்றல்ல கடலல்ல
யாதவர் குலத்திலோ
இடையர் குடிலிலோ
பூமியில் ஒரு குழந்தை பிறக்கிறது.
எங்கேஎன்று தெரியாமல்
எவ்வழி என்றும் அறியாமல்
முன்னோக்கி செல்லவும் முடியமல்
பின்னோக்கி நகரவும் முடியாமல்
கிளைகளினால் துழாவுகிறேன்.
வேர்களினால் தேடுகின்றேன்.
- ஆற்றூர் ரவிமர்மா -
சக்ரட்டீஸ¤ம் கோழியும்
உன்னையே அறிவாயாக
ஒரு மாலைநேரத்தில் விஷக்கோப்பை
அவன் காதில் சொன்னது.
வீட்டுக்குள் அனுமதிக்கா மனைவியிடமிருந்தும்
வசைபாடும் குழந்தைகளிடமிருந்தும்
தன்னை காத்த சகமனிதர்களுக்கு
நன்றிசொல்லி சிரித்தபடி
அவன் தன் கால்முதல் தலைவரை
படர்ந்த சில்லிப்பால்
மரணத்தை நிர்ணயித்தான்
அஸ்க்ளோப்பீஸ¤க்கு தரவேண்டிய
கோழியைப்பற்றி கிரீட்டோ மறந்துவிட்டான்.
பிளேட்டோவும் அரிஸ்டாடிலும்
சிண்டைப்பிடித்துக் கொண்டது அதற்காகவே
கடனுக்காகன வட்டி ஏறி எறி
கிரீஸையே விழுங்கியது
கோழிகள் என்ன அறியும்
கலாச்சாரத்தைப் பற்றி இல்லையா?
- கெ சச்சிதானந்தன் -
சிலைகள்
இன்று எங்கள் மகாகவிஞன் சிலை
இந்த தெருவழியாக சென்றது.
எழுத்துக்களும் அசைவுகளும் அற்ற
வெண்கல உதடுகள் மீது
இரு ஈக்கள் இணைசேர்ந்தன.
சுழிகளும் அலைகளும் எழுப்பிய
சுட்டுவிரலில்
ஒருகாகம் வந்தமர்ந்து மலமறுத்து திரும்பியது.
இதே தெரு வழியாகத்தான்
முன்பு எங்கள் நாட்டை ஆணிடிருந்த மன்னர்பிரானின்
கருங்கல் சிலையும் சென்றது.
இன்று அவர் கம்பீரம் குலையாமல்
நாற்சந்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்.
பிறகும் எத்தனை சக்கரவர்த்திகள்
ராஜதந்திரிகள் மக்கள் தலைவர்கள்
கவிஞர்கள் படைத்தலைவர்கள்
இந்த தெருவழியாகக் கொண்டு செல்லப்பட்டனர்
அனைவரும்
நகரத்தெருக்களுக்கு திருஷ்டிப்பொம்மைகளாக ஆயினர்.
சட்டென்று
உயிருள்ள அனைத்தையும் தொட்டு சிலையாக்கும் சூனியக்காரியாக
காலம் என் முன் வந்து நிற்கிறது.
இறப்பது என்றால்
திருஷ்டிப்பொம்மையாக மாறுவதென்று அர்த்தம்.
- கெ சச்சிதானந்தன் -
பல்லிவால்
பல்லியின் முறிந்து விழுந்த வால்
அமைதியாக திரும்பி பார்த்தது.
அதோ இருக்கிறதென் பல்லி.
ஏதும் நிகழ்ந்த சாடையே இல்லை.
பூவைப்பிரிந்த கொடி என
கண்ணீர்துளி உதிர்ந்த கவிஞன் என
அதோ இருக்கிறதென் பல்லி.
'சென்றது நினைந்து வருந்தா
பண்ணித சிரேஷ்டனாய்'
அதோ இருக்கிறதென் பல்லி.
யாரோடும் எந்தவிதமான பகையும் இல்லாமல்
பிரபலமான அந்த
'மதிப்பீட்டுச் சரிவுத்துயரம்' கூட இல்லாமல்
அதோ இருக்கிறதென் பல்லி.
பின்பக்கம் தன்னைவிட பெரிய நிழலுடன்
அதோ இருக்கிறதென் பல்லி.
புதிய இரையோ துணையோ காத்து
அதோ இருக்கிறதென் பல்லி.
- கெ.ஜி.சங்கரப்பிள்ளை -
திரும்புதல்
மியூசியமருகேபூங்காவில்
பென்ஷன் வெயில்.
முன்னாள் மந்திரி முன்னாள் நீதிபதியிடம் சொன்னார்.
'இந்த பூங்கா நான் கட்டியது.
இதோ கற்பலகையில் பெயர் .
இளஞ்சிவப்பு மலர்களுடன் இந்த பூமரம்.
நான் சமத்துவ புரியிலிருந்து கொண்டுவந்தது.
அங்கே நாடெங்கும் ந்கரமெங்கும் இந்தப்பூக்கள்தான்.
கொண்டுவரும்போது சிவப்பு.
ரத்த மலர்கள் என்றார்கள்.
தேவாலயங்கள் கோயில்கள் நிரம்பிய மண்ணின்
வெண்ணிறக்காற்றில் இவை நிறம்கரைந்தன.
காவியின் மண்ணில்
இன்று இவையும் காவி நிறம்.
- கெ.ஜி.சங்கரப்பிள்ளை -
இரவுணவு
கார்விபத்தில் இறந்த வழிப்போக்கனின்
ரத்தம் மிதித்து கூட்டம் நிற்க
செத்தவன் பையிலிருந்து பறந்த
ஐந்துரூபாய் நோட்டில் இருந்தது என் கண்.
நான் இருந்தும் தாலி அறுத்த மனைவி.
என் குழந்தைகளோ
பசியின் நினைவுப்பொம்மைகள்.
இன்றிரவு இரவுணவின் ருசியுடன்
என் குழந்தைகள் உறங்கும்.
என் மனைவிக்கும் எனக்கும் அரைவயிறு ஆனந்தம்.
செத்தவனின் பிணப்பரிசோதனையோ அடக்கமோ
இந்நேரம் முடிந்திருக்கும்.
நினைத்துக் கொண்டேன்
ரத்தம் மிதித்து நின்ற கால்களை.
வாழ்பவர்களுக்கு வாய்க்கரிசியிட்டு
செத்தவனை.
- ஏ.அய்யப்பன் -
இருப்பு
ஒரே இருப்பில் நான் பல வேலைகள் செய்கிறேன்
பொடிக்கவும் கலக்கவும் அரைக்கவும் செய்கிற
சமையல் யந்திரம் போல.
ஒரே நாவினால் பல மொழிகள் பேசுகிறேன்
காரமும் இனிப்பும் புளிப்பும் மாறி மாறி பரிமாறும்
ஓட்டல்தட்டுபோல.
நுழைந்து அமர்ந்து மறையும்
கதாபாத்திரங்கள் மீது மின்விசிறிபோல
மாறாத வேகம் நான்.
ஒரேநொடியில் எரியத்தொடங்கும் ஒளிபோல
எப்போதும் கவனமானவன்.
என் இருப்பும் பார்வையும் நடிப்பும்
கதகளி நடிகன் போல
கனகச்சிதம்.
பாத்திரத்துக்கு ஏற்ப உருமாறுவதும்
நிறமோ மணமோ ருசியோ அற்றதுமான
தூய்மை நான்.
- ஆற்றூர் ரவிவர்மா -
[தற்கால மலையாளக் கவிதைகள் என்றபேரில் தொகுப்பாக 1989ல் வெளிவந்த நூலில் உள்ள கவிதைகள் இவை. மதுரை பல்கலைகழகத்துக்கு இவை பாடமாக வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு கவிதை வாசிப்புக்கு உதவும்பொருட்டு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி தமிழ்துறையால் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில்பேசியவற்றின் பதிவு இவ்வுரை ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- பதிவுகள் ஆகஸ்ட் 2003; இதழ் 44 -
பதிவுகள்: ஆகஸ்ட் 2002; இதழ் 32
மரபிலக்கியம் இரு ஐயங்கள்
- ஜெயமோகன் - ப சரவணன் -
செவ்விலக்கியங்கள் இன்று எதற்கு?
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு . இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் " நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேஎன். என குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம் . எதற்காக நேற்று என்ன எழுதினர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்? " என்று கேட்பார்கள் . இதன் மறுபக்கமாக வாசகர்கள் "நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை.அதன் இன்றைய சிக்கல்களை .ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும் ?" என்பார்கள் . இவை முதல் பார்வைக்கு உண்மைபோலதெரியும் கூற்றுக்கள் . ஆனால் மிக ஆழமான சில அடிப்படைக் கேள்விகளை அதை ஒட்டி எழுப்பிக்கொள்ளும்போது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடக்கூடியவை.
நமது உணர்வுகளை நாம் இக்கணமே பிறந்து வந்த ஒரு புத்தம்புதிய ஊடகம் மூலம் வெளிபடுத்தவில்லை .இன்று நாம் எழுதுவது நேற்றுமுதலே இருந்துவந்த மொழியில் . நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்களும் நேற்றிலிருந்து வந்தவை . ஆகவே நேற்றுடன் அவற்றுக்கு உள்ள ஆதாரமான உறவை நாம் எவ்வகையிலும் மறைக்க முடியாது .இலக்கியம் என்பது கணந்தோறும் புதியதும் அறுபடாத காலம் கொண்டதுமான ஒரு பிரவாகம் என்பதில்தான் அதன் அனைத்து அழகுகளும் மகத்துவங்களும் அடங்கியுள்ளது .
இயல்பாகவும் தன்னிச்சையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச்சொல்லும் ஒரு இளம் கவிஞனையே எடுத்துக் கொள்வோம் . அவன் குறைந்த பட்சம் மொழியையாவது கற்றிருக்க வேண்டும். மொழி எனும் போது சொற்கள் அவற்றின் அர்த்தங்கள் இரண்டும் கொள்ளும் உறவை இங்கு உத்தேசிக்கிறோம். இந்த உறவு பலவகை நுட்பங்கள் கொண்டது .தொடர்ந்து கண்ணுக்குதெரியாமல் மாறிக் கொண்டிருப்பது . இந்த மாற்றங்களை நிகழ்த்துபவை அன்றாட புழக்கமும் ஆக்க இலக்கியங்களும் தான். அதாவது ஓர் இளம் கவிஞன் அவன் எந்த பண்டைய இலக்கியங்களையும் கற்காவிட்டால் கூட பண்டைய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையே அடைகிறான், அதையே பயன்படுத்துகிறான் . அதற்குள் தான் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.
இலக்கியம் படைக்கும்போது அவன் உண்மையில் செய்வதென்ன? ஏற்கனவே அர்த்த்ப்படுத்தப்பட்டு தன்னை வந்தடைந்த சொற்களை தன் அனுபவத்தின் இயல்புக்கும் வெளிப்படுத்தல் தேவைக்கும் ஏற்ப அவன் வேறு இரு வகையில் அடுக்கி வைக்கிறான். அதன் மூலம் இன்னொரு தளத்தை உருவாக்குகிறான் , அவ்வளவுதான் .இந்த அர்த்த தளத்தின் ஒரு பகுதியாக இருக்கையில் அதன் சொற்களில் சில மெல்லிய அர்த்த மாற்ந்த்தை அடைகின்றன . இந்த சிறு மாற்றமே உண்மையில் அக்கவிஞனின் பங்களிப்பு . அதை அவன் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்கிறான் .
உதாரணமாக பார்ப்போம் . அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் " குல நீதி " என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது . வழிவழியாக வந்ததும் தனிமனிதர்களால் மாற்றமுடியாததுமான ஒரு நியதி அது . சிலம்பு அறம் என்ற சொல்லை பெரிதும் மாற்றிவிட்டது . "அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக'' மாறும் அறம் என்பது எளிய குல நீதியல்ல . அது மனிதர்களுக்கே அப்பாற்பட்ட பேரறம். பௌத்த சமண மதங்களால் முன்வைக்கப்பட்ட மகாதர்மம் என்ற கருத்துடன் இணைத்து நாம் இதை பார்க்கவேண்டும். பிரபஞ்ச நியதியின் ஒரு பகுதியும் நம்மால் வாழ்வின் எந்த துளியிலும் பார்க்கக்கூடியதுமான ஒழுங்கு அது . வள்ளுவரின் அறம் மேலும் மாறுபட்டது . அறம் பொருள் இன்பம் என்பதில் உள்ள அறம் என்பது மானுட வாழ்வின் ஒரு நிலை மட்டுமே . ஒழுக்கம் , நீதி ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணான ஒரு அகப்புரிதல் அது .
கம்பனில் அறம் சற்று வேறுபடுகிறது . "அறத்தின் மூர்த்தியான் " என கம்பன் ராமனை நிர்ணயிக்கும்போதும் " அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் " என்று சொல்லும்போதும் அறம் என்ற சொல்லானது மாபெரும் இலட்சியக்கனவுகளின் அடையாளச்சொல்லாகவே உள்ளது . நவீன இலக்கியம் பேசும் அறம் இன்றைய வாழ்க்கைச்சூழலில் நாம் தேடும் பொதுமையும் சகோதரத்துவமும் சுதந்திரமும்தான் . அடுத்த கட்டத்தில் இன்று பேரறம் ற்றறம் என்ற பிரிவினையை பின் நவீனத்துவர்கள் செய்துள்ளனர் .பேரறம் என்பது பெரிய அதிகார அமைப்பின் பகுதியாகவே இருக்க முடியும் , அது வன்முறை மூலம் கட்டாயப்படுத்தப்படும் என்கிறார் பிரேம் [சிதைவுகளின் ஒழுங்கமைவு . காவ்யா ] ஆக இந்த ஒற்றைச்சொல் மூலமே நாம் தமிழ் கலாச்சாரத்தின் அனைத்து கட்டங்களையும் வகுத்துவிட முடியும். இதைப்போல எல்லா சொற்களையும் பகுத்துவிட முடியும் என்பதே உண்மை.
இத்தகைய சில ஆயிரம் சொற்களை வைத்து கவிதை எழுதும் ஒரு கவிஞன் அச்சொற்களைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியம் .அறியாவிட்டாலும் அவனால் கவிதை எழுத முடியும்தான் . ஆனால் மேலான கவிதை வெறும் தற்செயல்மட்டுமல்ல . போத மனதால் அபோத மனதை ஊடுருவும் முயற்சியேஅது . தற்செயலாக எழுதப்பட்ட சிறந்த படைப்புகள் அவ்வப்போது சாத்தியம்தான் .ஆனால் சிறந்த படைப்பாளிகள் ஆழ்ந்த படிப்பு கொண்டவர்களே . தமிழில் சங்க இலக்கியம் முதலான நமது மரபை அறியாத பலர் நல்ல கவிதைகளை எழுதியுள்ளார்கள்.ஆனால் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பாரதி , பிரமிள் , தேவதேவன் பெரும் பண்டிதர்கள் அளவுக்கு மரபிலக்கிய பயிற்சி கொண்டவர்கள் . நாம் ஒரு விதியை சிறந்த முன்மாதிரிகளை முன்வைத்தே பேச முடியும்.
இதையே மறுமுனையில் இலட்சிய வாசகனுக்கும் சொல்ல முடியும். ஒரு கவிதையை எளிமையாக படிக்க அதன் சொற்களின் அகராதி அர்த்தமும் சற்று கற்பனையும் போதுமானது .ஆனால் சிறந்தவாசகன் அச்சொற்கள் வழியாக அதிகபட்ச தூரத்தைக் கடந்து செல்பவன் என்பதனால் அவனுக்கு மரபின் மீதான நுட்பமான அகப்பிரக்ஞை தேவைப்படுகிறது . ஒரு கவிதை தன் புதிய சொல்லமைப்பின்மூலம் மொழியில் பொருளில் என்ன நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது என்றறிகையிலேயே கவிதையனுபவம் முழுமை கொள்கிறது.
சங்க காலத்திலிருந்து தொடங்கவேண்டியது ஏன்?
மிக வியப்பூட்டும் அம்சம் மேற்குறிப்பிட்ட எல்லா காலகட்டங்களும் சங்க காலத்தில் வேர்கள் கொண்டவை என்பதே .காப்பியங்களில் சங்க கால அழகியல் மிகத் தெளிவாகவே காணப்படுகிறது . சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவற்றின் தளர்வான ஆசிரியப்பா வடிவம் சங்கப் பாடல்களில் இருந்து பெறப்பட்டது . சிலப்பதிகாரம் அதன் இசைப்பாடல்களிலும் , சீவக சிந்தாமணி அதன் விருத்தப்பாவடிவிலும் , மணிமேகலை அதன் விரிவான நேரடி தத்துவ விவாத தன்மையிலும் துல்லியமான முறையில் சங்கபாடல்களில் இருந்து முன்னகர்ந்திருப்பது உண்மையே.ஆயினும் அவற்றின் இயற்கை சித்தரிப்பு சங்க கால திணை தரிசனத்துக்கு நுட்பமான முறையில் உட்பட்டிருந்தது . அவற்றின் அகத்துறை கண்ணோட்ட்டமும் சங்க காலகட்டத்தின் மனநிலையையே பிரதிபலித்தது . நீதி நூல்களின் அறத்தரிசனங்களை புறநாநூறின் பொருண்மொழிக்காஞ்சி திணையில் உள்ள பாடல்களுடன் ஒப்பிட்டால் வளார்ச்சி என்பது மிக நுட்பமான சிறு மாற்றம் மட்டுமே என்பதை உணர முடிகிறது .
சங்க காலத்துடன் திட்டவட்டமான விலகல் கொண்ட காலகட்டங்கள் புராணகாலகட்டமும் , அதற்கடுத்த சிற்றிலக்கிய காலகட்டமும்தான். சங்க காலக் கவித்துவத்தின் அடக்கம் நுட்பம் காணாமல் போய் கவிதை ஒரு கலைவிளையாட்டாக மாறிய காலம் இது .ஆனால் பக்திகாலகட்டத்தில் சங்க கால அழகியல் மீண்டும் உத்வேகத்துடன் திரும்பிவந்தது . நம்மாழ்வார் ஆண்டாள் பாடல்கள் அகத்துறை கவித்துவம் உச்ச கட்டத்தை அடைந்ததன் ஆதாரங்கள் .இது பாரதியில் நீட்சி பெற்றது .இன்றைய நவீன கவிதிகளி£ல் மிக தீவிரமாக மேலோங்கியுள்ளது சங்க கால கவித்துவமே என நான் பல முறை எழுதியுள்ளேன். இன்றைய புதுக்கவிதையின் அழகிய இலக்கணங்களான செறிவான சொல்லாட்சி , குறிப்புணர்த்தலை நம்பி இயங்கும் தன்மை ஆகியவை மட்டுமல்ல அவற்றைவிட முக்கியமாக இயற்கையை மனமாக உருவகித்துக் கொள்ளும்போக்கு கூட சங்க கால மரபிலேயே தன் ஆதார வேரை கண்டடைய முடியும். தேவதேவனுக்கு பிரமிள் எழுதிய புகழ் பெற்ற முன்னுரையில் [ மின்னற் பொழுதே தூரம் .] இதை அவர் துல்லியமாக அடையாளம் செய்கிறார் . புதுக்கவிதை என்பதே கூட ஆசிரியப்பாவின் இஇலக்கண வரைவுக்குள் அடக்க சத்தியமான ஒன்றுதான் என்கிறார் .
அச்சு ஊடகத்தின் தேவை நவீன வாழ்க்கைச்சுழல்களின் பாதிப்பு வெளிநாட்டு கவிமரபுகளின் தாக்கம் ஆகியவற்றால் இங்கு புதுக்கவிதை உருவாகி அதன் சிறந்த கணங்களை அடைந்துள்ளது .முற்றிலும் மாறுபட்ட கவித்துவங்களை வெளிப்படுத்தும் பிரமிள் தேவதேவன், விக்ரமாதித்யன் கலாபிரியா . எம் யுவன் ,மனுஷ்யபுத்திரன்,பிரேம், யூமா வாசுகி ஆகிய கவிஞர்கள் இவ்வடிவில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள் இன்று. இவர்களை இன்று நாம் மிக பொதுப்படையான அளவுகோல்களால் மேலோட்டமாக மதிப்பிட்டு வருகிறோம்.துல்லியமான பொதுவான அளவுகோல்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இன்று.அதற்கு முதலில் இவ்வடிவத்தின் கலாச்சார உள்ளுறைகள் அடையாளம்காணப்படவேண்டும் .அதற்கு சங்க கால அழகியல் பயிற்சி அவசியமானது .
- பதிவுகள்: ஆகஸ்ட் 2002; இதழ் 32 -
பதிவுகள்: நவமப்ர் 2002; இதழ் 35
விவாதங்கள் ஏன் ? என் எழுத்து ஏன் எளிமையாக இல்லை? இலக்கியமும் வரலாறும்
அன்புக்குரிய இராமகி அவர்களுக்கு , தங்கள் கடிதம் உற்சாகமாக யோசிக்க வைததது .நன்றி.
1. விவாதங்கள் பற்றி.
தமிழ் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் அவன் பிரபலமாக இருக்கிறான் , முக்கியமானவனாக இல்லை என்பதே ஆகவே அவனது பிரபலத்தை தட்டிப்பார்க்க பலர் விழைகிறார்கள்.ஏதோ தகுதியில்லாத காரணத்தால்தான் அப்பிரபலம் அவனுக்கு இருக்கிறது என நம்புகிறார்கள். தமிழ் மனம் பொதுவாக ஏதோ ஒரு வகையில் பணம் அதிகாரம் கொண்டவர்களையே மதிக்கிறது . என் அலுவலகத்திலும் ஊர்சூழலிலும் நான் எழுத்தாளன் என்பதையே மிக திட்டமிட்டு மறைத்து வந்தேன். ஆனந்த விகடன் கட்டுரைத்தொடருக்குப் பிறகு சிலருக்கு தெரிந்துவிட்டது . பலவகையான அவமதிப்புகள் . குறிப்பாக அலுவலகத்தில் மேலதிகாரிகள் அளிக்கும் தொல்லைகள் அவமானங்கள் பல. பல வாரங்கள் அலைக்கழித்த சிக்கல்கள்கூட உருவாயின. தமிழ் மாநாட்டுக்கு குஷ்புவையும் சத்யராஜையும் பத்திரிகையாளர்களையும் டி .வி .க்காரர்களையும் எல்லாம் தலைமைதாங்க அழைப்பவர்களே கடல்கடந்த நாடுகளிலும் இருக்கிறார்கள். தமிழின் முக்கியமான படைப்பாளிகள் அவர்களுக்கு முக்கியமாக படுவதில்லை.
இச்சூழலில் எழுத்தாளன் மனம்சீண்டப்படுவது சாதாரணமாக் நடப்பதே .இணையத்தில் அது இன்னும் அதிகமாக நடக்கி£றது . இதே ஆட்கள் வைரமுத்து என்றால் காலில் விழுவார்கள் .ஆக ஒரு விதமான "திமிரை" வளர்த்து எடுத்துக் கொண்டு அதன் பலத்திலேயே நிறக வேண்டியுள்ளது .ஜெயகாந்தன் செய்தது அதுவே. அது அவரது ஒரு தற்காப்பு பாவனை .அவரைப்போன்ற கர்வமற்ற, எளிமையான, நேரடியான ,தடைகளேயில்லாத, மனிதரை மிகக் குறைவாகவே நம்மால் சந்திக்க முடியும் .உள்ளே செல்ல சற்று பிந்தும் அவ்வளவுதான்.
ஜெயகாந்தன் பக்கத்தில் ஒரு நாள் இருந்து பார்த்தால் தெரியும் அவரது ஆணவத்தோற்றத்தின் தேவை . இது தமிழ் எழுத்தாளனின் விதி. நமது படைப்பை கவனித்து படிக்க பத்துபேர் என்றால் மட்டம்தட்ட , அவமானம் செய்ய இருபதுபேர் தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் கேள்விப்பட்ட செய்திகளே அவர்களுக்கு ஆதாரமாக இருக்கும். இந்த ·பாரத்திலேயே கடிதங்கள் வர ஆரம்பிக்கும் பாருங்கள்.அதிக பட்சம் ஒருமாதத்துக்கு மேல் இதில் நான் நீடிக்க முடியாது. ஏற்கனவே நான் எழுதிய ·பாரம் ஹப் ,திண்ணை போன்றவற்றை காணலாம்
இதழாசிரியர்கள் பிரசுர கர்த்தர்கள் பல்கலை ஆசிரியர்கள் --எங்கும் எழுத்தாளனுக்கு அவமானம் காத்திருக்கிறது . கணிசமான எழுத்தாளர்கள் மௌனமாக இருப்பார்கள் . நான் எதிர்வினை ஆற்றுவேன்.போகிற போக்கில் என்னை ஒருவர் சீண்டிவிட்டு போக அனுமதிக்க மாட்டேன் .[ஆனால் தற்போது பெரிதும் தவிர்த்து விட்டேன். வேலைகள் குவிந்துவிட்டன ] ஆக என் இமேஜ் இப்படி ஆனதற்கு காரணம் இதுவே . இ£வ்விஷயத்தில் நான் ஜெயகாந்தன் மற்றும் என் ஆசிரியர் கேரள எழுத்தாளர் பி,கெ பாலகிருஷ்ணன்ணா ஆகியோரின் வாரிசு. காலச்சுவடுக்கும் எனக்கும் இடையேயான மோதல் கூட ஆரம்பித்தது அதன் ஆசிரியர் கண்ணன் எனக்கு ஒரு விஷயத்தில் ஒற்றைவரி கடிதம் போட்டதனால்தான். என் தனித்தன்மையை சற்றும் இழக்க கூடாது என்பது என் திட உறுதி . ஆகவே சற்று கடுமையாகவே , ஆணவமாகவே பெரிய இதழாசிரியர்களிடம்கூட நடந்துகொள்வேன். தமிழில் அதுதேவை . தன் வாலைச் சுருட்டிவைத்து சிம்மாசனம் செய்த அனுமனைப்போல .
2 எளிமை பற்றி
எல்லா படைப்புகளும் எளிமையாக இருக்க முடியாது .விஷ்ணுபுரத்தின் இலக்கு என்ன? வரலாறு ஐதீகம் கருத்தியல் ,தனிப்பட்ட வாழ்க்கைகள் ,கலைகள் ,இலக்கியம் எல்லாமே ஒன்றோடொன்று பின்னி பிணைந்து உருவாகும் வாழ்க்கைச்சித்திரம் ஒன்றை அளிப்பது . அது எப்படி தொடர்ந்து மாறுவதாக உள்ளது ,எப்படி அது ஆக்கி அழிக்கப்படுகிறது என்று காட்டுவது .இதை எளிமையாக எழுதமுடியாது.அதேபோல அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் தர்மநெறிகளுக்கும் இடையேயான உறவை விளக்கும் பின் தொடரும் நிழலின் குரலையும் எளிமையாக எழுதிவிட முடியாது . ஆனால் நான் எளிமையாக ஏராளமாக எழுதியுள்ளேன். உதாரணமாக நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலை மிக எளிய வாசகர்களை கவனத்தில் கொண்டே எழுதியுள்ளேன் . பல தத்துவ விஷயங்களை மிக எளிய மொழியில் தினமணியில் எழுதியிருக்கிறேன்.இப்போது ''இந்து தத்துவ இயலில் ஆறு தரிசனங்கள்'' என்ற நூலை மிக எளிய மொழியில் எழுதியுள்ளேன் . என் கதைகளிலபல மிக எளியவையே .
தமிழிலக்கிய உலகில் நுழையும்போது முதலில் தி ஜானகிராமன் கதைகளையும் ஜெயகாந்தன் கதைகளையும் கி ராஜநாராயணன் கதைகளையும் துவக்கப்புள்ளியாக கொள்வது நல்லது . பிறகு படிப்படியாக சுந்தர ராமசாமி , அசோகமித்திரன் . அடுத்த கட்டத்தில் மௌனி ,ப சிங்காரம் . இது அறிவுத்திறன் சார்ந்த விஷயமல்ல ,பரிச்சயம் சார்ந்த விஷயம் மட்டுமே .எல்லா அறிவுத்துறைகளுக்கும் இது பொருந்தும் எல்லா கலைகளுக்கும் பொருந்தும். எந்த அறிவுத்துறையிலும் கலையிலும் திடீரென உள்ளே நுழைய முடியாது ,உதாரணமாக எனக்குமேற்கத்திய இசைக்குள் நுழையவே முடியவில்லை .பரிச்சயத்தை உருவாக்கிக் கொள்ள சில காலம் கவனம் தேவை .அதை உருவாக்கும் சூழலில் நான் வாழவில்லை . 30 வயது வரை கர்நாடக இசை எனக்கு வெறும் சத்தம்தான்.
தஞ்சாவூர்க்காரியை மணம்செய்துகொண்டேன் . கொட்டிக்கொட்டி குளவியாக்கப்பட்டு இன்று எனக்கு ஓடுகிற பேருந்திலே ஒரு வரிகேட்டால் கூட இசையை மனம் அறியும். இலக்கியத்துக்கும் தேவை இந்த பரிச்சயம்தான் .விஷ்ணுபுரம் பரிச்சயம் கொண்டாலே திறந்துவிடும் படைப்பே .
எந்த கலையும் எந்த இலக்கியமும் எந்த அறிவுத்துறையும் எல்லாருக்கும் உரியது அல்ல அல்லவா? அதை அறிய கவனமும் உழைப்பும் செலுத்த தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே உரியவை அவை அல்லவா?
தமிழில் விஷ்ணுபுரமளவுக்கு கூர்ந்து விரும்பி படிக்கப்பட்ட ஆக்கங்கள் மிக மிக குறைவே. இன்றும் கடிதப்பெட்டியில் ஒரு புதுவாசகர்கடிதமாவது கண்டிப்பாக இருக்கும் . பள்ளி மாண்வர்கள் , குடும்பதலைவிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலதரப்பட்ட வாசகர்கள் அதை வாசித்துவிரிவாக எழுதியுள்ளார்கள்சைதுவரை வந்த வாசகர் கடிதம் மட்டுமே 560 . இது தமிழில் ஒரு ரிகார்ட்தான் .
இம்முக்கியத்துவம் எனக்கும் புரியவில்லைதான். கோயில் எல்லா தமிழ் மக்களுக்கும் கண்முன் உள்ளது. அது ஒரு பிரச்சினையாக கெள்வியாக உள்ளது என ஊகிக்கிறேன் . அத்துடன் மதவிஷயம் என்னும்போது மக்கள் சற்று உ¨ந்த்து கவனமாக் படிக்க தயார இருக்கிறார்கள். பின் தொடரும் நிழலின் குரல் இலங்கை வாசகர்களுக்கு மத்தியிலேயே அத்கமாக கவனிக்கப்பட்டது . பல இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்களை சேகரித்து வைத்திருந்தேன்.
எந்த சமூகத்திலும் எளிய ஆக்கங்கள் இருக்கும் .மிக சிக்கலான ஆக்கங்கள் இருக்கும் .மௌனி மிக சிக்கலானவர். பஷீர் மிக மிக எளியவர் .யார் முக்கியமான படைப்பாளி ?இருவருமேதான். இருவருமே தேவைதான் இல்லையா?
****
அன்புள்ள கணேசன் அவர்களுக்கு ,
தங்கள் கடிதம் கிடைத்தது . விஷ்ணுபுரம் ஒரு வரலாற்று நாவல் அல்ல . அது ஒரு மிகை கற்பனை ஆக்கம். [·பாண்டஸி ] அதில் மறு ஆக்கம்செய்யப்பட்ட வரலாறும் தத்துவமுமே உள்ளது .அதாவது அதன் மூலப்பொருட்களாகவே வரலாறும் தத்துவமும் உள்ளன. சரித்திரபூர்வமாக பார்த்தால் விஷ்ணுபுரம் போன்ற ஒரு பெரும் ஆலயம் மூன்றாம் நூற்றாண்டில் இருக்க முடியாது. அதை அமைப்பதற்கான உபரி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தால் மட்டுமே சேர்க்கப்பட முடியும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போல பிற்கால பாண்டியர்களுக்கே அவ்வலிமை இருந்தது. ஆக விஷ்ணுபுரத்தில் வரலாறல்ல வரலாற்று ரீதியான ஒரு சாத்தியம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது . சிலப்பதிகாரத்திலேயே ஸ்ரீரங்கம் கோவில் பற்றிய குறிப்பு இருப்பதனால் , பல்வேறு கோட்டங்கள் கொண்ட கோவில்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதனால் விஷ்ணுபுரத்துக்கு சாத்தியம் உள்ளது, அவ்வளவுதான்.
நாவலாசிரியன் தன் வரலாற்றுக் கற்பனையை நட்டு வளர்க்க ஒரு வரலாற்றுப் பின்புலத்தை மட்டுமே வரலாற்றில் இருந்து பெறமுடியும். கறாரான வரலாற்று தகவல்களுக்காக தேடுவது அவன் வேலை அல்ல. அப்படித்தேடினால் அவனது இலக்கியவேலை நடக்கவும் நடக்காது .நான் விஷ்ணுபுரத்தின் சூழலை வரலாறு சார்ந்து உருவாக்கியுள்ளேன்,சிக்கலான இடங்களை தவிர்த்தும் நகர்ந்திருக்கிறேன் .
அப்படியானால் வரலாற்று ரீதியாக இது எந்த அளவுக்கு முக்கியமானது ? வரலாற்றின் இயங்குமுறை , அதன் உள்ளோட்டங்கள் ,அதில் தனிமனிதர்களின ஆசாபாசங்கள் பின்னி பிணைந்துள்ள விதம் , வரலாற்றை இயக்கும் கருத்தியல் மோதல்கள் ஆகியவற்றை பற்றிய என் உள்ளுணர்வு சார்ந்த புரிதல்கள் அதில் உள்ளன.
நீலகேசி என் நாவலுக்கு முக்கியமான முன்னுதாரணமாக இருந்தது உண்மையே .ஆனால் நீலகேசியில் விவாதங்கள் தரமற்று உள்ளன, இல்லையா? வடமொழி விவாத நூல்கள் சில முன்னுதாரணமாயுள்ளன.ஆனால் விவாதப் பொருள் இன்றைய சிந்தனை சார்ந்த அடிப்படைகேள்விகள் சார்ந்தே உள்ளது.பண்டைய சிந்தனைகள் அப்படி மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. அதை நூலை படித்தபிறகு விவாதிக்கலாம் .
அதாவது எல்லா இலக்கியபடைப்புகளியும்போலவே விஷ்ணுபுரமும் சமகால சிக்கல்களையே பேசுகிறது .அதைபேச ஒரு தளமாக்வே கடந்தகாலம் உள்ளது .800 வருட வரலாற்றை முன்பின்னாக அடுக்கி காட்டும் வசதிக்காக நாத்திக [லோகாயத அல்லது ஜடவாத ] நூல்கள் பல உள்ளன. பெரும்பாலான நூல்களில் மூல வரி ஜடவாதமாக /லோகாயதமாக இருக்க உரைகள் மூலம் ஆன்மவாதம் நோக்கி இழுத்திருப்பதைக் கான்ளாம் .சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் எல்லாமே அப்படி பார்த்தாம் ஜடவாதங்கல் என்பது என் எண்ணம். அதை தனி நூலாக எழுதியுள்ளேன்.
ஜெயமோகன்
[தமிழ் உலகம் இணைய அமைப்பில் எழுதிய கடிதங்கள்]
- பதிவுகள்: நவமப்ர் 2002; இதழ் 35 -
பதிவுகள்: ஜனவரி 2005; இதழ் 61
சுனாமி!
டிசம்பர் 25 அன்று சுந்தர ராமசாமி குடும்ப விழா என்று எழுத்தாளார்கள் பலர் நாகர்கோவிலுக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு அவ்ர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு . நாஞ்சில்நாடன் பாவண்ணன் கலாப்ரியா எல்லாரும். ஆகவே இந்த நாளை உற்சாகமான ஒன்றாக கொண்டாடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். கிறிஸ்துமஸ் அன்று எனக்கு தக்கலையில் மலைக்கரை சர்சின் கிறிஸ்துமஸ் நிக்ழ்ச்சியில் பேச அழைப்பு இருந்தது. அங்கு சென்றுவிட்டு இரவு திரும்பினேன். சு ரா வீட்டு நிகழ்ச்சி முடிந்ததாகச் சொன்னார்கள். நான் தொலைபேசியில் கூப்பிட்டபோது நாஞ்சில்நாடன் சூத்ரதாரி இருவரும் மறுநாள் சுசீந்திரம் தேரோட்டம் காணப் போகலாமா என்றார்கள். சரி என்றேன். மோகனரங்கன் கலாப்ரியா முதலியவர்கள் கன்னியாகுமரி போவதகாச் சொன்னார்கள்.
காலையில் சுசீந்திரம் போனோம். தேரோட்டம் நன்றாக இருந்தது. அங்கு சில வாசகர்களை சந்தித்தோம். பேசிக் கொண்டிருந்தபோது 11 மணிவாக்கில் ஒருவர் காலையில் பெரிய அலை அடித்து சென்னையில் பலத்த சேதம் என்று டிவியில் சொன்னதாகச் சொன்னார்.
அப்படியானால் கன்யாகுமரியிலும் அலை இருக்கும் போய் வேடிக்கைபார்க்கலாமே என்றேன். நாஞ்சில்நாடன் சரி என்றார். ஒருவர் பஸ் இல்லை போவது சிரமம் என்றார். யாராவது இறந்திருக்கக் கூடுமா என்று சிலரிடம் கேட்டோம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
சாதாரண அலைதான் என்றார்கள். பொதுவாக எவருக்கும் எந்த விவரமும் இல்லை. செல்போன்கள் எதுவுமே வேலைசெய்யவில்லை.
·போன்கள் என்கேஜ்டாக இருந்தன.
திரும்பும் வழியில்தான் சிக்கல் பெரிதென புரிந்தது. அப்போதும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கன்யாகுமரிக்கு காலி ஆட்டோக்கள் சென்றபடியே இருந்தன. அங்கிருந்து அடிபட்டவர்களைச் சுமந்தபடி பஸ்கள் வந்தன. சாலையில் ஒரே சிக்கல். நாங்கள் என்ன ஏது என புரியாமலேயே வெயிலில் திரும்பி நடந்துகொண்டிருந்தோம். ஆசிராமம் தாண்டியபோது நான் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்குவதைக் கண்டேன் . உயர்தர காமிரா வைத்திருந்தார். ''வெளிநாட்டு பயணி ஒருவரும் மாட்டியிருக்கிறார் போல்'' என்றேன்.
நாஞ்சில்நாடன் கவனித்துவிட்டு ''அது ரமணி. சு ரா வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் '' என்றார். ஓடி அருகே சென்றோம் ரமணி ஒரு சினிமாட்டோகிராபர். அவரும் குடும்பமும் காலையில் எட்டு மணிக்கு கன்யாகுமரி சென்றிருக்கிறார்கள். அங்கே ஏதோ அலை என்று சொல்லக்கேட்டு சரி சொத்தவிளை கடற்கரைக்குப் போகலாம் என்று சென்றிருக்கிறார்கள். சொத்தவிளை மிக அமைதியான தனியான கடற்கரை. சாலையில் இறங்கி நின்றிருந்தபோது சட்டென்று பெரிய அலைவந்து அவர்களை அடித்துச்சென்றுவிட்டது இரு குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழுபேர். இருவர் மட்டும் தப்பினார்கள். அலையில் 15 நிமிடம் அடித்துச்செல்லப்பட்டு எப்படியோ மீண்டதாகச் சொன்னார் ரமணி. இருவராலும அழ முடியவில்லை. மூக்கில் இருந்து மணல் கொட்டியது. ராம் என்று ஒரு பையன் பிழைத்துக் கொண்டதாகவும் அவனை ஏதோ ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் தெரியவந்தது என்றார். அவனை தேடுந்தாகச் சொன்னார்.
பதற்றம் அதிர்ச்சி காரணமாக சாழுகை ஏதும் இல்லாமல் முன்பின் தொடர்பில்லாமல் பேசிக்கொண்டிருந்தார் ரமணி. அந்த ஆஸ்பத்திரி தனியார் கிளினிக். அங்கே ஏராளமான ஆட்கள். பலாரும் வீடு இடிந்த காயம் கொண்டவர்கள். சாலையெங்கும் ஒரே நெரிசல். வண்டிகள் நகரமுடியாத ஓலம். சூத்ரதாரி ஒருவரிடம் கெஞ்சி அவர்களை ஒரு வண்டியில் ஏற்றி நாகர் கோவில் அனுப்பிவித்தார். அதன் பிறகு சுரா வீடு தொடர்பு கிடைத்தது. அங்கே யாருமே இல்லை. அவர்கள் காலையிலேயே கொல்லம் போய்விட்டதாக தெரிந்தது. அய்யனார் மட்டுமே இருந்தார். அவரிடம் தகவலை நாஞ்சில்நாடன் சொன்னார்.
நாகர்கோவில் வந்தபிறகுதான் என்ன நடந்தது என்பதே புரிந்தது. எல்லா ஆஸ்ப்த்திரிகளிலும் கூட்டம். காயம்பட்டவர்கள் பல்லாயிரம். அதை விட பல்லாயிரம்பேர் சர்ச் வளாகங்களில் குழுமி கிடந்தனர். கன்யாகுமரி மாவட்டத்தின் பல கடற்கரைகளில் கடுமையான அழிவு. பல இடங்களில் வீடுகள் இடிந்து சரிந்திருக்கின்றன . கடல் அரை கிமி கூட உள்ளே வந்துள்ளது என்றார்கள். குமரிமாவட்டத்தில் வீடுகளைகடலை ஒட்டிக் கட்டுவது வழக்கம். ரமணியின் குடும்பத்தில் மேலும் ஒருவர் கிடைத்து விட்டதாகச் சொன்னார்கள்.
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
·போன் செய்து விசாரித்தபோது வேறு நண்பர்கள் எவரும் அலையில் மாட்டவில்லை என்று தெரிந்தது. பாவண்ணனும் மகாலிங்கமும் காலை 8 மணிவரை சொத்தவிளை பீச்சில் இருந்திருக்கிறார்கள், தெரியாமல். 9 மணிக்கு முதல் அலை அடித்திருக்கிறது. நான் வீடுதிரும்பும் வழியில் ஒரு வேன் சாலையோரம் நின்றது. கிறிஸ்மசுக்கு வந்த ஒரு கும்பல் சங்குமுகம் கடற்கரைக்கு 11 மணிக்குபோய் அதில் நான்குபேர் கடலோடு போய்விட்டதாகச் சொன்னார்கள். பாவண்னன் தப்பியது அதிருஷ்டம்தான். குடிப்பதற்காக கன்யாகுமரி செல்வதாக இருந்த பல எழுத்தாள நண்பர்கள் கிறிஸ்துமச்கூட்டம் இருக்கும் என்று மனதைமாற்றிக் கொண்டு முந்தியநாள் இரவு குற்றாலம் போனதனால் தப்பியிருக்கிறார்கள்.
மாலையில் நான் ஆஸ்பத்ரிகளை போய்பார்த்தேன். ஏராளமான காயம்பட்டவர்கள். எந்த வித கணக்கும் இல்லை. முதலுதவிக்கு கூட அலறி கூவி கலைந்து கொண்டிருந்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிய ஒருவாரமாவது ஆகும் என்றார்கள்.
பெரும்பாலானவர்கள் இப்போது காணாமல் ஆகியிருக்கிறார்கள் அவ்வளவுதான். ஒருவரை ஒருவர் தேடி அலைபவர்கள்தான் நகரில் அதிகம். பலரிடம் பணமும் இல்லை. தொடர்புவசதிகளும் இல்லை. போலீஸ்காரர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியில் ஒன்று தெரிந்தது , தமிழ்நாட்டில் அபாயத்தவிர்ப்புக்கான எந்த அமைப்பும் எந்த மனநிலையும் அறவே இல்லை. காலை 8 மணிக்கெல்லாம் சுனாமி பற்றிய செய்தி அரசுக்கு கிடைத்தாகிவிட்டது. 12 மணிக்கு கூட எவருக்கும் எதுவும் சொல்லப்படவில்லை.
அரசாங்க எச்சரிக்கை விடப்படவில்லை. கடற்கரையோரங்களில் அதிக சேதம் மணிக்கு வந்த மூன்றாம் அலையால்தான் என்றால் ஆச்சரியப்படக் கூடாது. சொல்லப்போனால் அரசாங்கம் என்ற அமைப்பே இங்கு இருந்ததாக படவில்லை. தகவல் இல்லாமல் 11 மணிக்கெல்லாம் கடலுக்கு வேடிக்கைபார்க்கப் போய் மாட்டியவர்கள் மிக அதிகம். சுசீந்திர்ம் தேர் திருவிழா கன்யாகுமர் நாகர்கோவில் பாதையில். அங்கே பல்லாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அவர்களை ஒருவழியாக திருப்பிவிட்டு அச்சாலையை தெளிவாக வைத்திருக்க ஏற்பாடுசெய்யகூடிய ஒரு அதிகாரி இல்லை. கூட்டம் மடத்தனமாகச் சாலையை மறித்ததில் வண்டிகள் அசையாமல் நிற்க எல்லா வணிகளிலும் காயமடைந்தவர்கள் அழுதுகூவினர். அதேசமயம் கூட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது என்றே தெரியவில்லை. ஜாலியாக மிட்டாய் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது அதேசாலையில் . செல் போன்சேவையை நம்பியே அததனைபேரும் இங்கு இருக்கிறார்கள்.
அது சுத்தமாக கைவிட்டுவிட்டது. மொத்தத்தில் அறியமையும் உதாசீனமும் கலந்த ஒரு அராஜகநிலைதான் மாலைவரை நாகர்கோவிலில் நிலவியது. காலையில் ·போனில் நெய்தல் கிருஷ்ணனிடம் விசாரித்தபோது தகவல்கள் தெரிந்தன. காரில் சொத்தவிளைக்குப் போனவர்கள் சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பரான சேதுராமன் மற்றும் அவரது மனைவி மருமகள் அகிலா, இரு குழந்தைகள் கார் டிரைவர் ஐயப்பன் அவர்களுக்குத் துணையாக காமிராமேன் ரமணி . அலையில் அனைவருமே வெகுதூரம் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ரமணியும் சேதுராமனின் மனைவியும் தப்பி விட்டனர். அவர்களைத்தான் நாங்கள் சுசீந்திரம் சாலையில் பார்த்தோம். ஒரு சிறுவன் ராம் மீட்கப்பட்டுவிட்டான். கிருஷ்ணனும் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்தும் ஆஸ்ப்த்திரிகள் தோறும் தேடி பையனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பிறகு சேதுராமன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு விலா எலும்பு முறிந்து ரத்தம் கட்டி மிக ஆபத்தான நிலையில் இருந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போதும் அந்நிலையில்தான் இருக்கிறார். சிறிதுநேரம்கழித்து பிறமூவரின் உடல்கள் கண்டடையப்பட்டன. அகிலா உடல் மோசமாக காயம்பட்டிருந்தது என்றார்கள்.
நாகர்கோவில் நகரில் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் அடிபட்டவர்கள் மற்றும் பிணங்கள். நேற்று என்னை சந்திக்கவந்த ஒரு மலையாள வாசகர்குழு நான் இல்லாததனால் கடிதம் விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். அவர்கள் முட்டம் போவதாக எழுதியிருந்தார்கள். என்ன ஆனார்கள் என்று தெரியாமல் நான் அஸ்பத்திரிகளுக்கு சென்றேன். இரவில் ஒரே போர்க்களத்தோற்றம். யாரிடம் என்ன விசாரிப்பதென்று தெரியாமல் அல்லாடி திரும்ப நேர்ந்தது. விசாரிக்க ஒரு இடம் இல்லை. பொறுப்பாக எவருமே இல்லை. மருத்துவமனைகளில் வெறுமே ரத்தம் துடைத்து மருந்து போட்டுவிட்டுக் கொண்டிருந்தார்கள். மோசமான உள் அடி பட்டவர்களைக்கூட பயிற்சி இல்லாதவர்கள் சும்மா தூக்கிவந்து கொண்டு போட்டுச் சென்றார்கள். எந்த மருத்துவ மைப்பும் கண்ணுக்குத்தென்படவில்லை. இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கரையோர மீனவர்கள். அவர்களில் ஏழைகள்தான் கடலோரம் குடிசை போட்டு வாழ்வார்கள்.
மரணமும் காயமும் அரசு சொல்லும் கணக்குகளைவிட பல மடங்கு அதிகம் இருக்கும் என்பதை சாதாரணமாகவே அனுமானிக்க முடிந்தது. மரணடைந்தவர்களில் குழந்தைகள்தான் பெரும்பகுதி. குவித்துக் குவிதுப் போட்டிருந்தார்கள். அலறல்கள் கேட்டபடியே இருந்தன. இங்கே தாழ்வான பகுதியான குளச்சலில் அழிவு மிக அதிகம் என்றார்கள்.
தொட்ர்ச்சியாக 3 நாள் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என்பதனால் கன்யாகுமரி மற்றும் கடற்கரைக்கு நல்ல கூட்டம் வந்திருந்தது. சபரிமலை பக்தர்களும் மிக அதிகம். அவர்களில் எத்தனைபேர் கடலில் சென்றார்கள் என்பதெல்லாம் இதுவரை யாருக்கும் தெரியாது. ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். காணாமலானவர்கள் பற்றி பொதுவாக தகவல்கள் திரட்டப்படவில்லை. கன்யாகுமரி லாட்ஜுகளில் பலர் அறைக்குத் திரும்பவில்லை என்று சொன்னார்கள் . இதுவரை கன்யாகுமரியில் 750 குளச்சலில் 500 தேங்காய்பட்டினத்தில் 200 அளவுக்கு பிணங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. மணலில் ஏராளமான பிணங்கள் புதந்து நாற்றமெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழிவுகளில் பாதி அலட்சியத்தின் விளைவாக நிகழ்ந்தவை. காலை எட்டரைக்கே முதல் சுனாமி அலை சென்னையில் அடித்துவிட்டது . உடனே என்ன நடக்கிறது, என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்றெல்லாம் அரசுஅதிகாரபூர்வமாக எச்சரிக்கை செய்திருந்தால் மக்களை கடற்கரையிலிருந்து அகற்றியிருக்கலாம். பயணிகளை விலக்கியிருக்கலாம். காலை 11 மணிவரைக்கூட மக்கள் சாவகாசமாக கடற்கரையில் புழங்கியிருக்கிறார்கள். யாருக்கும் என்ன நடக்கிறது அதன் அபாயம் என்ன என்றெல்லாம் தெரியவில்லை. முதல் அலை 9 மணிக்கு வந்தபின் அதை வேடிக்கைபார்க்க போய் மாட்டியவர்கள்தான் சேதுராமன் குடும்பம் போன்றவர்கள். குமரிமாவட்டத்தில் 4 பெரிய அலைகளும் 3 சிறு அலைகளும் வந்துள்ளன. சென்னையில் ஒன்றோடு சரி. தினமலர் செய்தியை வைத்துப் பார்த்தால் சென்னையில் பல்லாயிரம்பேர் உடனே கடற்கரைக்குப் போய் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். தமிழினி வசந்தகுமார் கூட சென்று ஒருமணிநேரம் வேடிக்கை பார்த்ததாகவும் கடலுக்குள் இறங்கிப் பார்த்ததாகவும் சொன்னார். அங்கு இன்னொரு அலைவந்திருந்தால் மரணம் ஒருலட்சம்கூட ஆகியிருக்கும். புகைப்படங்களில் ஒரு போலீஸ் தலைகூட கண்ணில்படவில்லை. நிலநடுக்கம் முடிந்ததுமே கடல் உள்வாங்குவது போன்ற சில தடையங்கள் இருந்தன என்று சொல்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் அறிவியலாளர் தரப்பிலிருந்து அளிக்கபடவில்லை. விடுமுறை ஆதலினால் பெரும்பாலான அதிகாரிகள் ஊரிலேயேஇல்லை என்று சொன்னார்கள். இனிமேல் விளக்கங்கள் ஏராளமாக வரலாம்.
சுனாமிக்கு அலட்சியம் உரிய உதவி செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- பதிவுகள்: ஜனவரி 2005; இதழ் 61 -