(இன்னிசை வெண்பா மாலை)

இரவி தெருவினில் இட்டிடும் கோலம்
உரவாய் நுழைந்து உவந்து களித்துப் 
பரவிடும் காலையில் பக்கலில் நின்று
வரமாய்க் கறந்திடும் பால். 

ஓட்டைக் குழலூத ஓலை சலசலக்க
சுட்ட அடுப்பில் சமைத்து அடங்கிட
விட்டம் அடுக்கிய விறகு பார்த்திடும்
கொட்டில் பரண்மேல் இருந்து.   

சட்டிச் சுவையுடன் சாதமோ பொங்கிட
வெட்டிய வாழை விருந்து படைத்திட
கட்டிக் கரும்பாய் கரைந்து உருகியே
ஒட்டி உறவாடும் வீடு.

அக்கா பிழிந்த அழகான வற்றலுக்கு
காக்காய் விரட்டக் குடையினை ஏந்தியே
பக்கத்து மாமரம் பார்த்த பரணியுள்
துக்கமாய்க் காயும் வடு.   
 
சில்லென் றழைத்து சிலிர்ப்பினை ஊட்டியே
பால்பண்ணை கொண்டிட்ட பேருந்து நிற்பிடம்
பால்நிறைத் தொட்டி பனிக்கட்டி சொல்லிடும்  
இல்லத்தே சாறு அருந்து.  

நல்வகைப் பண்டமும் நாற்சந்தி முக்கிலே 
பல்லரும் இல்லரும் பாங்காய்ச் சுவைத்திடு
அல்வா தருபவன் ஆமவன் சூரியனே
எல்லை இலாத நெகிழ்வு. 
    
பல்லை இளித்துப் பெறுவோம் தினமுமே
நல்மனத் தாத்தா நறுக்கித் தருவதோ
சில்லுடன் தேங்காய் சிறுதுண்டுக் கீற்றுடன்
வில்லின் வளைவது போல்.
    
பண்டிகை வாழ்த்து பொலிவுறும் அட்டையை
விண்ணின் வழியே விரிப்பான் நடராசா 
கொண்டவர் கண்டு களிப்புறு இன்பமோ
கண்டிட ஒண்ணாத பேறு. 

ஓர்கடை ஜெமினியோ ஒரூர் அடக்கிடும்
தேர்ந்த பொருளும் தரமாய் அதனுளே
பார்த்திட ஈர்க்கும் பலப்பம் தொடங்கியே
ஓர்ந்திடு எல்லாமும் கொண்டு.

மணியாய் எழுதிடும் மஸ்தான் கடையில்
கணிப்பான் இலாதே கணித்துத் தருவான்
அணியாய்த் திரண்டு அனைவர் குவிந்திடினும்
கோணிச் சுளித்திலா னவன்.

கொத்தாகப் பூத்த பலவகைப் பூஉதிர்ந்து 
தத்தியே தாவி அரசன் தனைநாடி
புத்தாடை பூவாடை பாவாடை மேலேறி
பத்திரமாய் அமர்ந்த அழகு. 

அருவாய் மகிழ்ந்து அரசனும் கண்டிட
ஊருணி நீரினுள் ஊறிக் குளித்த
கருநல் எருமைமேல் குட்டிப் பையனின்
உருநகை உள்ளக் களிப்பு. 

மாடியில் காய்ந்திடு பொன்னனை நெல்லது
தேடியே தாவிக் குதித்திடச் சொல்லிடும்
ஆடிடு வேளையில் தட்டிய கனியோ
ஓடிடு என்றே விரட்டும்.

நல்லோர் செழிக்க நலமுடை நான்குஏரி
பல்லோர் கழனிப் பயிர்வளம் கூட்டியே
இல்லாமை என்றுமே இல்லென ஆக்கிடும்
எல்லைஇல் சீர்புகழ் பெற்று. 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்