பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” (2023) நூல் ‘அடையாளம்’ (Adaiyaalam India) பதிப்பக வெளியீடாக 256 பக்கங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்துள்ளது. 'சோக்ரடீஸ் சிந்தனைகளை தமிழ்ப் பண்பாட்டு மரபில் இணைத்த பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும்' இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் ஐ முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். Philosophy என்பது தமிழில் மெய்யியல், தத்துவம் எனப்படுகின்றது. ஈழத்து தமிழ்ச்சூழலில் மெய்யியல் என்ற சொல்லே உபயோகத்தில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தத்துவம் என்ற சொல்லே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. ‘க்ரியாவின் தமிழ் அகராதி’ Philosophy என்பதை ‘தத்துவம்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சாமிநாத சர்மா. ரி.எம்.பி. மகாதேவன் போன்றவர்கள் தந்துள்ள நூல்களுக்கு இந்திய தத்துவம், கிரேக்க தத்துவம், மேற்கத்திய தத்துவம் என்றே பெயரிடப்பட்டுள்ளன. மெய்யியல் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா தன்னுடைய ‘விமரிசன முறையியல்’ (1989) நூலின் இந்திய பதிப்பிற்கான (1992) முன்னுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். “விமரிசன முறையியல் என்ற பெயரில் இரண்டாம் பதிப்பாகத் தமிழகத்திலிருந்து வெளிவரும் இந்நூலின் பூர்வநாமம் “விமரிசன மெய்யியல்” என்பதாகும். மெய்யியல் என்பதற்கு முறையியல் என்றதொரு விளக்கம் உண்டென்பதாலும், தமிழக வாசகர்களுக்கு மெய்யியல் என்ற பதப்பிரயோகம் அதிக பரிச்சயமற்றதென்பதாலும் பெயர் மாற்றம் செய்யவேண்டியதாயிற்று.” பேராசிரியர் அனஸ் இன் “மெய்யியல் - கிரேக்கம் முதல் தற்காலம் வரை” (2006) என்ற நூலின் இரண்டாம் பதிப்பு (2013) இந்தியாவில் (அடையாளம் பதிப்பகம்) வெளியானபோது, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” என்பதே இந்நூலினதும் நாமமாக இருக்கின்றது. தத்துவம் எனும் போது அது வெற்றுப்பேச்சு, விதண்டாவாதம் அல்லது வறட்டுச் சிந்தனை அல்லது விளங்கா வியாக்கியானம் என்பதாகவே கவனக்குவிப்புப் பெறுகின்றது. Philosophy என்பது வறட்டுச் சிந்தனைகளின் தொகுப்பல்ல; அது வாழ்க்கை நெறிகளின் பகுப்பும் தொகுப்பும் ஆகும். சோக்ரடீஸ் இன் மெய்யியல் இதனையே உணர்த்தியுள்ளது.
‘மனித வாழ்வும் வாழ்வின் பொருளும் சோக்ரடீஸ் இன் விவாதப் பொருள்கள். மெய்யியல் மனித வாழ்வை ஆராயலாமா என்று, அன்று எழுப்பப்பட்ட கேள்வியை சோக்ரடீஸின் சிந்தனைகள் உடைத்தெறிந்தன. சிசரோ கூறியிருப்பதைப் போல, மெய்யியலை விண்ணிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்தவர் சோக்ரடீஸ்தான்’ (2023: முன்னுரை). மெய்யியல் (Philosophy) என்பது மனித கலாசாரத்தின் வரலாற்று ரீதியான உற்பத்தியாகும். கலாசாரம் என்பது மனித நடவடிக்கைகளின் மொத்த விளைவுகள் எனலாம். இதனை ‘மெய்யியல் – கிரேக்கம் முதல் தற்காலம் வரை’ (2006: 7) என்ற நூலில் பேராசிரியர் அனஸ் பின்வருமாறு விளக்கியுள்ளார். “வரலாற்று வளர்ச்சியின் உற்பத்தி என்ற வகையில் மெய்யியல் (Philosophy) மனித கலாசாரத்திற்கு உரிமை உடையது. அத்துடன் பல்வேறு துறைகளுடன் அதற்குத் தொடர்புகள் உள்ளன. அவற்றின் இடைத்தொடர்புகள் , அவற்றின் உள்முக முரண்பாடுகள், பரஸ்பர செல்வாக்குகள் என்பவற்றிலிருந்து அது பிறக்கிறது.” பிற இயல்கள் ஜனிப்பதற்கு முன்னரே மெய்யியல் ஜனித்திருக்க வேண்டும். ஏனெனில், மனித சிந்தனைத் தொடக்கமே மெய்யியல்தான்! தொன்மைக்கால மெய்யியலாளர்கள் அனைத்துத்துறைகளிலும் வல்லவர்களாக இருந்தனர். சோக்ரடீஸ் கேள்வி கேட்காத துறைகள் உண்டா? அரிஸ்டோட்டில் எழுதாத துறைகள் உண்டா?
மேலைதேய மெய்யியலின் சின்னமாகவும் உலகின் முதல் மெய்யியலாளராகவும் கொண்டாடப்படும் சோக்ரடீஸ் (Socrates), கி.மு. 470இல் ஏதென்ஸ் நகரில் பிறந்தார். 2500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சோக்ரடீஸ். இவரது தந்தை ஒரு சிற்பி; தாய் ஒரு மருத்துவச்சி. தந்தையைப்போல் சோக்ரடீஸ் துணிவும் நேர்மையும் மிக்கவராக விளங்கினார். முன்னைய மெய்யியல் சிந்தனைகளின் அறிமுகம் அவருக்கிருந்தது. தியோ பிராஸ்ட்டஸின் கருத்துப்படி அனெக்ஸிகோரஸ் இன் வாரிசான சேலஸ் இன் பள்ளியில் சோக்ரடீஸ் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளார். தந்தையின் தொழிலான சிற்ப வேலையைச் செய்துவந்த போதும் மிக இளமையிலேயே தனது தொழிலைக் கைவிட்டு தனது வாழ்வின் முக்கிய குறிக்கோளான மெய்யியல் சிந்தனைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். இருபது வயதில் இருந்து சிந்தனைப் பணியை சோகரடீஸ் எதென்ஸ் நகரில் ஆரம்பித்தார். நாட்டின் படத்தின் மீதான தனது பற்றுறுதியை நிலைநாட்டுவதற்காக விஷம் அருந்தி மரணத்தை தழுவும் வரை இப்பணியை அவர் தொடர்ந்தார். சோக்ரடீஸ் தன்னுடைய மெய்யியலை எழுத்தில் வடிக்கவில்லை. பிளேட்டோவின் மெய்யியல் சிந்தனையின் பிரதான தூண்டும் சக்தியாக சோக்ரடீஸ் இருந்தார். பிளேட்டோவின் “குடியரசு” படைப்பின் பிரதான சோக்ரடீஸ் பாத்திரம். வரலாற்று சோக்ரடீஸ் இன் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் பிரதிபலிப்பின் வடிவமே என ஜோன் பேணற் கருதுகிறார். சோக்ரடீஸ் இற்கு முந்திய மெய்யியல் சிந்தனைகள் யாவும் ‘Pre- Socratic’ அதாவது சோக்ரடீஸ் இற்கு முந்திய மெய்யியல் என்று கூறப்படுகின்றது. கிரேக்க மெய்யியலில் சோக்ரடீஸ் இற்கு உரிய அறுதியான இடம் இதன் மூலம் தெரிகிறது. சோக்ரடீஸ் மெய்யியலில் புதிய நகர்வை அல்லது “மாற்றுவகை முறை” (Shift) ஒன்றை நிகழ்த்தினார். வேறு வார்த்தைகளில் கூறினால் மெய்யியலில் அவரது சிந்தனை ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. அனக்ஸி மாந்தர், அனக்ஸி கோரஸ் வரை கிரேக்கத்தில் வளர்ச்சி பெற்றிருந்த பிரபஞ்சத்தையும் இயற்கையையும் பற்றிய ஆய்வை மனிதன் பற்றியதாக மாற்றி அமைத்தார். சோக்ரடீஸ் இன் மெய்யியல் சிந்தனைகள் அவரது உரையாடல்கள் மூலம் வெளிவந்தவை. உரையாடல் அவரது சிந்தனையின் வாகனமாகச் செயற்பட்டது. அவர் பெரிய கூற்றுக்களையோ கோட்பாடுகளையோ முன்வைத்து தனது உரையாடல்களை அமைக்கவில்லை. ஆனால், அது சோக்ரடீஸ் இன் மெய்யியல்மய மாக்கம் (Socrates Philosophizing) ஆகும். “எனக்குத் தெரிந்திருப்பதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான்’ என்ற அவரது சொந்தக் கூற்றின் அடிப்படையிலிருந்து அவரது உரையாடல் இயக்கப்பட்டது (சோக்ரடீஸ் இன் மெய்யியலை பிரக்ஞை பூர்வமாய் அறிய பார்க்க, எம்.எஸ்.எம் அனஸ்; ‘மெய்யியல் – கிரேக்கம் முதல் தற்காலம் வரை’; 2006: 30-41). உண்மையை உரையாடல் மூலமாக உணரக்கூடிய ஒரு வழிமுறைக்கு உயிர் கொடுத்த பெரும் மெய்யியலாளராக பரிமளித்தவர் சோக்ரடீஸ். எனவேதான் சோக்ரடீஸ் ஐ மெய்யியலின் பெரும் கனவாக பார்த்துள்ளார் பேராசிரியர் அனஸ்!
ஈழத்து பாடசாலை கல்வியில் சோக்ரடீஸ் பற்றி அறியும் வாய்ப்புக்கள் இல்லை. ஆனால், நூலாசிரியர் பாடசாலை காலத்திலேயே சோக்ரடீஸ் ஐ பற்றி அறிந்திருக்கிறார். ‘எமது பாடசாலைக் காலத்தில் ஏழாம் எட்டாம் வகுப்புக்களில் இரு பெரும் சிந்தனையாளர்கள் அறிமுகமானார்கள். ஒருவர் சோக்ரடீஸ், இன்னொருவர் கார்ல் மார்க்ஸ். இந்த இருவரின் சிந்தனைகளுக்கும் பாடசாலைப் பாடத்திட்டத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை. அப்போது நான் கல்விகற்ற ஊரான கல்பிட்டியின் அறிவுச் சூழலும் இலக்கியச் சூழலும் அரசியல் சூழலும்தான் அதற்கு முக்கிய காரணம். 1950களில் பெரியார் சிந்தனைகளும் திமுக அரசியலும் இலங்கையின் பல நகரங்களில் செல்வாக்குச் செலுத்தின். அந்த நகரங்களில் கல்பிட்டியும் ஒன்றாகும். திமுக பிரசுரங்களையும் ஈ.வெ. ராமசாமி, சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்றோரின் எழுத்துகளையும் கல்பிட்டி இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் ஆர்வத்துடன் படித்தனர். மு. கருணாநிதியின் கல்லக்குடிப் போராட்டமும் சோக்ரடீஸ் திரைநாடகமும் அங்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியர் சக்காப் மௌலானா மு. கருணாநிதியின் சோக்ரடீஸ் நாடகத்தை மீண்டும் மீண்டும் ஓரங்க நாடகமாக நடித்து அந்த நாடகத்தையும் சோக்ரடீசையும் பாடசாலையில் புகழ்பெறச் செய்தார். மாணவர்களை நடிக்க வைத்துக் கருணாநிதியின் நாடகத்தை மேடையேற்றினார். சோக்ரடீசாக எம். எச். எம். ராசிக்கும் மெலிட்டசாக எஸ். சுபைர்தீனும் நடித்த அந்த நாடகக் காட்சிகள் இன்றும் நினைவில் உள்ளன. அறிவைத் தூண்டும் சோக்ரடீஸ், சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி கருத்துகளால் கல்பிட்டி இளைஞர்கள் பெரிதும் கவரப்பட்டனர். கருணாநிதியின் சோக்ரடீஸ் திரைநாடகம் பற்றி மட்டுமல்ல தமிழகச் சூழலில் சோக்ரடீசின் சிந்தனை, பகுத்தறிவுவாதம் என்பவற்றின் தாக்கங்களையும் படிப்படியாக நாங்கள் அறிந்து கொண்டோம்’. ஏழாம் தரத்திலேயே சோக்ரடீஸ் ஐ அறிந்துக்கொண்ட அனஸ் அவர்கள், மெய்யியல் பேராசிரியராகி, மெய்யியலின் பெரும் கனவான சோக்ரடீஸ் ஐ ஒரு உயர்ந்த ஆய்வு நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
மெய்யியல் என்பது அறிவுபூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ணாய்வாகும். அதாவது யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப்பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. பகுப்பாய்வு, விமர்சனம், விசாரணை, முறையியல், தர்க்கம். வரலாற்றுப் பார்வை முதலியன அதன் ஸ்தூல தன்மைகளாகும். இத்தகைய நுட்பங்களின் அணுகுமுறையிலேயே ‘மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்’ என்ற பிரதி ஆக்கப்பட்டுள்ளது. மெய்யியல் மயத்துக்குள்ளிலிருந்து மெய்யியலின் பெருங்கனவான சோக்ரடீஸ் ஐ பற்றி நூலாசிரியர் எழுதியுள்ளார். ‘இங்கு பேசப்படுவன ஒரு மெய்யியற் சார்புள்ளவனின் விளக்கங்களும் கருத்துக்களுமாகும்’ என்று ‘விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும் – ஒரு முறையியல் நோக்கு’ (1996:6) என்ற நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து இந்நூலுக்கும் பொருந்துவதாகும். ‘ஒரு மெய்யியல்/ தத்துவ நூல் வாசிப்பு தரும் சோர்வை இது தராது. புனைவு மொழியின் சுவை கலந்த நடையில், வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நூலை அமைத்துள்ளார்’ என்கிறார் சிராஜ் மஷ்ஹுர். ‘அவருடைய பார்வை மிகவும் விசாலமானது. ஏனெனில், அவர் தனது பரப்புக்குள் மட்டும் நில்லாது பல்வேறுபட்ட அறிவைப்பயன்படுத்தி இந்நூலை உருவாக்கியுள்ளார்’ என்று பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் (சரிநிகர்; ஜன.29 பெ.11, 1998; பக். 18) ‘இஸ்லாத்தின் தோற்றம்’ நூலுக்கு தெரிவித்த இக்கருத்து இந்நூலுக்கும் சாலப்பொருந்துகிறது.
முன்னுரையில் நூலாசிரியர் தன்னுடைய ஆய்வு வெளிப்படுத்தும் பொருண்மைகளை நுண்மைமாக தெளிவு படுத்தியுள்ளார். அவற்றினை ஐந்து வினாக்களாக்கி அவதானிப்பது, ஆய்வை உணர்வுபூர்வமாய் உள்வாங்க உறுதுணையாகின்றது.
நூலின் சாரம் என்ன?
கிரேக்கத்தில் நடந்த, ஆனால் உலகத்தையே உலுக்கிய மரண தண்டனையும் அதைச் சூழ நடந்த நிகழ்வுகளும்தான் இந்த நூலின் சாரம். தண்டனை வகைகளில் மன்னிக்க முடியாததும் கொடூரமானதும் மரண தண்டனைத்தான். சோக்ரடீஸ் அதற்கு முகம்கொடுத்தார். சட்டம், நீதி, அரசு, மனிதவுரிமை, ஒழுக்கம், சார்ந்த பல கேள்விகளை அந்த நிகழ்வு இன்றும் எழுப்பி வருகின்றது. கிரேக்க நாகரிகத்தின் உன்னத மனிதனுக்குக் கிரேக்கம் வழங்கிய தண்டனையின் கதை இது. ஆனால், அங்கு நடந்தது என்ன?”
நூலின் முதன்மை பேசு பொருள் என்ன?
சோக்ரடீஸ் உடைய பேச்சுகளில் அரசியல் விமர்சனங்கள் இருந்த தாகவும் அரசியல் மாற்றங்களுக்காக மக்களை அவர் தூண்டுவதாகவும் அரசியல்வாதிகள் அஞ்சினர். கடவுளர் பற்றிய அவருடைய மரபு கடந்த சிந்தனைகள் சமயவாதிகளிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில்தான் சோக்ரடீஸ் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றார். இது பற்றிய விசாரணைதான் இந்த நூலின் முதன்மைப் பேசு பொருள்.
எத்தகைய கேள்விகளை நோக்கி இந்நூல் நகர்கின்றது?
நேரடியாக வினாக்களை எழுப்புவதாயின் சோக்ரடீஸ் ஒரு குற்றவாளியா, அவரைக் குற்றவாளியாக்கி, கிரேக்கம் பெரும் தவறை இழைத்துவிட்டதா என்ற கேள்விகளுக்கு நாம் செல்ல வேண்டும். எதிரிகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பலியிடப் பட்டாரா, சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட்டனவா, சோக்ரடீஸ் தற்துணிவோடு சட்டத்தையும் நீதியையும் காப்பாற்றுவதற்காக, தம்மை மரண தண்டனைக்கு அர்ப்பணித்தாரா அல்லது அவருடைய மரணம் ஒரு 'தற்கொலையா', மேலும் அவரை வழிநடத்திய அரசியல், உளவியல் சூழ்நிலைகள்தாம் என்ன என்ற கேள்விகளை நோக்கியும் இந்த நூல் நகர்கின்றது.
எத்தகைய மோதல்களை இந்நூல் விரிவாகக் கவனப்படுத்துகிறது?
சோக்ரடீஸ் இன் மெய்யியல் போதனைகளை நாம் இங்கு அதிகம் பேசவில்லை. ஆனால் மரண தண்டனைக்கு ஆளாகும் அளவுக்கு அரசியல், சட்டம், மெய்யியல் ஆகியவற்றுக்கிடையில் இருந்த மோதல்களை இந்த நூல் விரிவாகக் கவனப்படுத்துகிறது.
இந்நூல் எதனை விவாதப்பொருளாக்கி, எதனை முழுமூச்சுடன் வெளிப்படுத்துகிறது?
சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் உருவான அரசியல் போட்டியையும் ஒரு விவாதப் பொருளாக்கி இருக்கிறது. அந்த வகையில் அரசியல் - மெய்யியல் மோதலை முழுவீச்சுடனும் வெளிப்படுத்துகிறது.
ஆய்வு பன்னிரண்டு இயல்கலாக விரிவடைந்துள்ளது. ஒவ்வொரு இயல் தொடக்கத்திலும் மினிகுறிப்பாக சோக்ரடீஸ் இன் மெய்யியல் கூற்றொன்றினை முன்வைத்துள்ளார். இயலுக்கு முன் கூற்றை அல்லது எடுப்பை வாசிக்கையில் ‘ஹைக்கூ’ கவிதை ஒன்றினை படிக்கும்போது எற்படுகின்ற தேடல் உணர்வு உண்டாகின்றது. இயல்களில் பொதிந்துள்ள கருத்துக்களின் மையப்பொருள் மாத்திரம் இங்கு சுருக்கமாக அவதானிக்கப்படுகின்றது.
உசாத்துணைகள்
அனஸ், எம்.எஸ்.எம்., 2022, மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ், அடையாளம், புத்தாந்தம்.
அனஸ், எம்.எஸ்.எம்., 2006, மெய்யியல் கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை, குமரன், கொழும்பு.
அனஸ், எம்.எஸ்.எம்., 2001, தற்கால இஸ்லாமிய சிந்தனை, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
அனஸ், எம்.எஸ்.எம்., 1996, விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானங்களும் – ஒரு முறையியல் நோக்கு, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
கிருஷ்ணராஜா, சோ, 1982, விமரிசன முறையில், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
மர்லின் பீரிஸ், டி.பி., பொன்னம்பெரும, 1999, சோக்ரடீஸ் ஜீவன சரிதய (சிங்களம்), கொழும்பு.
சரிநிகர், 1998 பெப். 11
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.