மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (1) - ஈழக்கவி -
“நவாஷ், முனீரா என்ன சொல்கிறாள்?”
“Sir, மனம் பற்றி படித்து, அவளின் மனசே உடைந்து விட்டதாம்….’
“முனீரா, உங்கள் உடைந்த மனதை காட்டுங்கள்…”
இந்த உரையாடல் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைக்கான விரிவுரை அறையில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. கேள்வியைத் தொடுத்தவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள். ‘மெய்யியல் பிரச்சினைகள்’ வரிசையில் அன்றைய விரிவுரை மனம் பற்றியதாக அமைந்திருந்தது. வெண்பலகையில் எழுதியவாறு மனம் பற்றிய மெய்யியல் அணுகலை பேராசிரியர் தெளிவு படுத்திக்கொண்டிருந்தார். மெய்யியலின் அரிச்சுவடியில் அமர்ந்திருந்த எமக்கு எதுவும் தெளிவாகவில்லை. ஆனால், “உங்கள் உடைந்த மனதை காட்டுங்கள் பார்ப்போம்” என்று பேராசிரியர் உரைத்ததும் எமக்கு மெய்யியல் பற்றி கொஞ்சம் உறைக்கத்தொடங்கியது. குறிப்பாக என் தேடலுக்கான ஊக்கியாக இது அமைந்தது. பல்கலைக்கழக நூலகத்தில் மெய்யியல் பற்றிய நூல்களை ‘பார்க்க’த்தொடங்கி, மெல்ல மெல்ல படிக்கவும் ஆரம்பித்தேன். பேராசிரியர் அனஸ் அவர்களின் விரிவுரைகள் எனக்கு பிடித்தமாயிற்று. தடித்த நான்கைந்து ஆங்கில மொழிமூல நூல்களுடன் விரிவுரை அறைக்கு வருகைத் தரும் அவர். கதிரையில் அமர்ந்துகொண்டு எம்முடன் சற்று நேரம் உரையாடுவார். இது சோக்கிரடீஸ் பாணி என்பது பின்நாட்களில்தான் புரிய ஆரம்பித்தது. அதன் பின் எழுந்து வெண்பலைகையில் எழுதியவாறு எடுத்துக்கொண்ட பாடுபொருளை பிரக்ஞைப் பூர்வமாக துலக்குவார். பின்னர் குறிப்புக்களை சொல்லத்தொடங்குவார். ஆங்கில நூல்களை பார்த்தவாறு தமிழில் சொல்லிக் கொண்டே போகையில் ரயில் பறக்கும். சில சந்தர்பங்களில் நாம் எழுதுவது எமக்கே விளங்குவதில்லை. நண்பர்கள் எழுதிய குறிப்புக்களை அறைக்கு எடுத்துவந்து, நான் எழுதியதையும் வைத்துக் கொண்டு திரும்பத்திரும்ப வாசித்து தெளிவாக அந்த குறிப்புக்களை பதிவுசெய்து கொள்வேன். இதனால் குறித்த மெய்யியல் விஷயஞானம் எனக்குள் பதியமாயிற்று. என்னால் முதலாம் வருட தேர்வில் மெய்யியல் பாடத்துக்குரிய புலமைப் பரிசிலையும் (IBRAHIM JAFEERJIE MEMORIAL SCHOLARSHIP FOR PHILOSOPHY – G.A.Q Ex. 91/92; 11.05.1992) மிகச் சிறந்த சித்தியையும் பெறமுடிந்ததால், மெய்யியல் என் சிறப்புக் கற்கைத்துறையாயிற்று. பேராசிரியருடன் ஆப்தநேசத்தோடு பழகும் வாய்ப்பும் எனக்குக்கிடைத்தது.