பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
* பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11. அதனையொட்டி வெளியாகும் கட்டுரை!
புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும் , மானமும், ரோஷமும் , உணர்ச்சியும் , அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும் அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.
எந்த நாடென்றாலும் எந்த மொழியென்றாலும் காலத்தின் போக்குக்கு இணங்கவே இலக்கியம் அமைகிறது எனலாம். 19 ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியத்துக்கும் 20 ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியக்கியத்துக்கும் பல நிலைகளில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிகிறது எனலாம். முந்தைய நூற்றாண்டு இலக்கியம் வரட்சியைக் காட்ட பின்னர்வந்த நூற்றாண்டு இலக்கியப் போக்கு வளமுள்ளதாக அமைந்ததற்கு காலமே காரணமெனலாம். இலக்கியம் என்பது காலத்தின் கருத்தாகாவே மலர்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அமிசம் ஆகும்.
அரசர்களும், பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை பொதுமக்கள் பெறும் நிலை இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட காரணத்தால் இலக்கியமும் அதன் படைப்புகளும் பொதுமக்களை மையப்படுத்தியே அமைவதைக் கண்டு கொள்ளுகிறோம். பொதுமக்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களது முன்னேற்றத்துக்கு குறுக்காக நிற்கும் சாதிக் கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு, என்பவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதுப்பாதையில் பயணிக்கும் இலக்கியம் பழைய இலக்கிய மரபுகளைவிட்டு விடுதலை பெறவேண்டியதாயிற்று.அந்த விடுதலையை இக்கால இலக்கியத்துக்கு அளித்தவராக பாரதியார் விளங்குகிறார் எனலாம். பழைய இலக்கிய மரபுகளை விடுதலை அடையச் செய்த பாரதி பழமையின் சிறப்பினை விட்டுக் கொடுத்தாரில்லை என்பது முக்கியமாகும். பழமையின் சிறப்பினை பாரதியார் எடுத்துப்பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் - இந்தியரின் - பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.