ஈஸ்டர் தாக்குதல்: மூன்று ஆண்டுகள் ! நீதியற்ற தேசத்தில் நாதியற்றவர்கள் !! - முருகபூபதி -
“ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? “ யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.
தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்? “ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப் போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது. அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.
“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக் குண்டைப்போட்டார் மைத்திரியார். இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.