மணிமேகலையில் இராசமாதேவியின் நடத்தை ஆளுமை! - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் ,இராசரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ) -
மணிமேகலைக்காப்பியத்தில் இடம்பெறும் இராசமாதேவி மாவண்கிள்ளியின் பட்டத்தரசி ஆவாள். அவள் மாவலி மரபைச் சார்ந்த அரசமரபில் பிறந்தவள். உதயகுமரனின் தாய். இராசமாதேவி மகனின் இழப்பால் கயமை குணம் உடையவளாகவும், மணிமேகலையை அடிமைப்படுத்தும் தன்மையுடையவளாகவும் மாற்றம் பெறுகிறாள். இறுதியில் தன்னுடைய தவறினை உணா்கிறாள். அவளது பண்பு நலன்களுக்கான மாறுபாட்டினை, இராசமாதேவியின் நடத்தை ஆளுமையை உளவியல் காரணங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
உளவலி
உள்ளத்தில் துன்பம் மிகும் போது மனம்மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறது; இதனையே உளவியலாா் உளவலி என்பர். இந்த உளவலி உளஇயக்கங்களையே ஒட்டுமொத்தமாகப் பாதிக்கிறது எனலாம். “உடல்வலி போல மனவலி சாதாரணமானதல்ல. உடல்வலி உடலியக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது போல உளவலி உளஇயக்கங்களையே பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. உளஇயக்கங்கள் பாதிப்பிற்குள்ளானால் உடல் வழிச் செயல்கள் அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே உள்ளத்தில் ஏற்படுகின்ற வலி வலிமைமிக்கதாக விளங்குகிறது.”1 என்பர். இராசமாதேவி தன் மகன் இறந்தான் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுடையவளாகவும், தன் ஒரே மகன் இறந்தான் என்ற நிலையில் ஆழ்ந்த உளவலி மிக்கவளாவும் மாற்றம் பெறுகின்றாள்.