விசுவாசம் மிக்க போராளி: 'ஆனந்தி' (சுப்பிரமணியம் சதானந்தன்)!
சிலர் தாம் சார்ந்த அமைப்புக்கு அல்லது நிறுவனத்துக்கு விசுவாசமாக இறுதிவரை வெளிச்சத்துக்கு வராமல் இயங்கிக்கொண்டிருப்பார்கள். எவ்விதத்தேவையற்ற பிரச்சினைகளிலும் சிக்காமல் , எல்லோருடனும் அன்புடன் பழகும் இவர்கள் கடமையே கண்ணாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வகையான மனிதர்களில் ஒருவராகவே அண்மையில் மறைந்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அமைப்புகளில் இயங்கிக்கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சதானந்தன் (ஆனந்தி) அவர்களை நான் அறிந்துகொண்டிருக்கின்றேன். புரிந்துகொண்டிருக்கின்றேன். இவரைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் எவற்றையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஆரம்பத்தில் இவர் காந்திய அமைப்பிலும் இயங்கிக்கொண்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. பழகியதில்லை. ஆனால் ஒருமுறை இவரிடமிருந்து இயக்க இலச்சினை பொறிக்கப்பட்ட நன்றிக்கடிதமொன்றினைப் பெற்றிருக்கின்றேன். 86-89 காலகட்டம். இவர் தமிழகத்தில் இயக்கத்தளப்பொறுப்பாளராக இயங்கிக்கொண்டிருந்தாரென்று நினைக்கின்றேன். கனடாவில் வெளியான 'புரட்சிப்பாதை'க் கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான எனது 'மண்ணின் குரல்' நாவல் நூலுருப்பெற்றபோது அனுப்பியிருந்தேன். அதற்கு நன்றி தெரிவித்து வந்த கடிதம் அது. தட்டச்சு செய்யப்பட்டிருந்த கடிதத்தில் 'ஆனந்தி' என்று கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார். அது இன்னும் என்னிடமுள்ளது.