- நாவல்: 1098 : மலைப்பூக்கள் - சுப்ரபாரதிமணியன். தமிழில்: 'ஷீரோ பப்ளிசர்ஸ்'. ஆங்கிலத்தில்: 'ஆதர்ஸ் பிரெஸ், நியூ டெல்கி' -
இந்தியாவில் இருக்கும் 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 2007ல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கின்றது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் மனரீதியான பாதிப்புகள் போன்றவை குழந்தைகள் சந்திக்கின்ற சில வகையான பிரச்சனைகளாகும். இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, 50 சதவீத பாலியல் வன்முறைகள் குழந்தைகளின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வகுப்புத்தோழர்கள் ஆகியோரால் நிகழ்த்தப்படுகிறது.
அரசின் POCSO (போக்சோ - பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டமானது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது. அக்குழந்தைகளைப் பாதுகாக்க பல விதிகளை நடைமுறைபடுத்துகிறது. அவ்வாறு பதியப்பட்ட வழக்குகளின் போதோ அதன்பிறகோ சம்பந்தப்பட்ட குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது, குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர் போன்றோர்அமர்த்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098 தான், இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது.
‘மிருகங்கள்: சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோர், பாலியல் வன்முறையாளர்கள், மற்றும் பிற பாலியல் குற்றவாளிகள்’ (Predators: Paedophiles, Rapists, And Other Sex Offenders) என்ற நூலில், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான அன்னா சால்டர் (Anna Salter) அவர்கள்,
“குற்றம் செய்பவர்கள் நாம் கற்பனை செய்திருக்கும் அரக்கர்களைப்போல் ஒருபோதும் இருப்பதில்லை. பெரும்பாலும், அவர்கள் பிறரின் பார்வையில் ‘அழகான மற்றும் நன்கு விரும்பப்படும்’ ஆண்கள் மற்றும் பெண்களாக உள்ளனர். சிலநேரங்களில், அவர்கள் பொதுவில் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையான மனப்பாங்கினையும் காட்டலாம், இதனால் எல்லாரும் அவர்களை மதிக்கத்தொடங்குகிறார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் குழந்தைகளுடன் ஒத்துணர்வை உருவாக்க நேரத்தைச் செலவிடுகின்றனர், மேலும் அவர்களைத் துன்புறுத்துமுன் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறுகின்றனர்”
என்கிறார். இது ஓர் எச்சரிக்கை மணியாக பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள உதவும். சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது.