எதிர்வினை: பதிவு செய்யப்படாத சில சங்கதிகள்! - ஆசி .கந்தராஜா -
மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர் நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.
எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையை வாசிக்க விரும்பின் இணைப்பை அழுத்தவும்
கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களை முழுமையாக்கும் நோக்கில் சில உண்மைகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது. காரணம் வரலாறு மறைக்கப்படவும் திரிவுபடவும் கூடாது என்பதற்காக.
சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்
இவ் அமைப்பு முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ அவர்களால் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'பவர்' என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற, 'கொடி கொண்டு முன்னெடுத்துச் செல்லல்' என்பதைக் குறிப்பது. அறியப்பட்ட இந்திய எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்கள், முன்னாளில் 'பவர்' என்னும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி 'பவர்' அமைப்பில் நானும் ஒரு ஸ்தாபக அங்கத்தவராக அயராது உழைத்தவன் என்பது தற்போது பலருக்கும் தெரியாத உண்மை. இதுபற்றி முருகபூபதி தனது கட்டுரையில் ஏனோ தொட்டுச் சென்றிருக்கிறார். 'பவர்' இன்றுவரை ஒரு பதிவு செய்யப்படாத இலக்கிய அமைப்பு, யாப்பு இல்லாதது. இதனால் தனிப்பட்ட முறையில் இதன் பெயர் எவருக்கும் சொந்தமில்லாதது, உரிமை கோரமுடியாதது.