
1.
அதிகாரம் யார் யாரின் கைகளில் இருந்திருக்கின்றதோ அவர்கள் காலங்காலமாக சாமானிய மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்பதை காலந்தோறும் எழுதப்பட்டிருக்கின்ற சமூக வரலாறுகள் எமக்கு உணர்த்தியிருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு வண்ணங்களிலும் வெவ்வேறு வடிவங்களிலும் இது தொடர்ந்து கொண்டிருப்பதை ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் யாவரும் அறிவர்.
இந்த வரலாற்றுத் தொடர்ச்சியை பஞ்சமர் வரிசை நாவல்களை எழுதிய மக்கள் எழுத்தாளர் டானியல் பதிவுசெய்து வைத்திருக்கிறார். தலைமுறை தலைமுறையாக சாதியப் பிரச்சினைகளால் ஒடுக்குதல்களுக்குள்ளான மக்களின் வாழ்வை எழுதியதால் சமகாலப் பிரச்சினை குறித்து எழுதவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது,
‘’சமகாலப் பிரச்சினையிலிருந்து விலகி நான் மிகவும் முற்பட்ட காலக் காரியங்களில் எனது பேனாவைப் பிரயோகிக்கிறேன் என்று சொல்பவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். சமகாலப் பிரச்சினை என்று தமிழர்களுக்குள்ளேயே இன்றுவரை நடைமுறையில் இருப்பவைகளைச் சமகாலப் பிரச்சினைதான் என்பதை வெளிக்கொண்டுவர இந்தப் பஞ்சகோணங்களுடன் பஞ்சமர் வரிசையில் ஐந்து நாவல்கள் பிறந்துவிட்டன. ஒரு அடிக்கருத்தை வைத்து இதுவரை இப்படிப் பிறப்பிக்கும் என்னிடம் இன்றைய தமிழர் பிரச்சினையை வைத்து எழுதும்படி, இங்கு வற்புறுத்துபவர்கள் இலங்கையில் உள்ள மற்றைய படைப்பாளிகளைப் பார்த்து இப்படிக் கேட்காதது விந்தையானதல்ல. ஏனெனில் இவர்கள் விரும்புவதெல்லாம் தாழ்ந்தவர்களின் - வஞ்சிக்கப்பட்டவர்களின் - அன்றாடங் காய்ச்சிகளின் - அடிமைப்பட்டவர்களின் - வயிற்றுச் சோற்றுக்காக ஆலாய்ப் பறப்பவர்களின் பக்கம் நின்று எழுதுவதிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதுதான். இவர்கள் சொல்வதுபோல, இன்று காண்பவைகளை இன்றே எழுத்தில் கொடுப்பதற்கு நான் ஒரு பத்திரிகை நிருபர் அல்ல. சரியும் பிழையும் நடைமுறையிலும் தீர்க்கமான பார்வையிலும்தான் தெளிவாகப் புலனாகும்.'’ (கே. டானியல், பஞ்சகோணங்கள், முன்னுரை ப.5)
ஒடுக்குதலுக்குள்ளான மக்கள் அதிகார வர்க்கத்தினரால் பல்வேறு சுரண்டல்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். கோயில்களில் உள்நுழைந்து வழிபடத் தடை, சமபந்திப் போசனம் தடை, மேலாடை உடுக்கத் தடை முதலானவை அவற்றுள் சில. இன்றைய இளஞ் சந்ததியினருக்கு இப்படியெல்லாம் நடந்தன என்று இவற்றை எடுத்துக் கூறினால் தங்கள் முன்னோர் இந்தக் காரியங்களுக்குத் தடை விதித்தார்களா என்று வியப்பாகவும் ஏளனமாகவும் நோக்குவார்கள். ஆனால் இன்று எவ்வளவோ மாற்றங்களைக் கண்டுவிட்டாலும், (சில விதிவிலக்குகளைத் தவிர) இன்னமும் சாம்பலுக்குக் கீழ் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பைப்போல, தற்காலத்திலும் சாதியத்தின் சில கூறுகளை மாற்ற முடியாததாகவே இருக்கிறது. இதனாற்தான்,
'’விளிம்புநிலைச் சமூகங்கள் தமது அகம் சார்ந்ததும், புறம் சார்ந்ததுமான செயல்கள் குறித்து ஆழ நோக்கவேண்டியிருக்கிறது. அதேவேளை, சமூக சமத்துவத்திற்கு எதிரான சமூக ஒடுக்குமுறைகள் சார்ந்தும், கையாளப்படும் சூட்சுமங்கள் நிறைந்த பொறிமுறைகள் குறித்தும் மிகுந்த விழிப்புப் பெறவேண்டும்.'’ என்று ஏ.ஜி. யோகராஜா குறிப்பிடுகிறார். (2020, எழுவோம் நிமிர்வோம் திரள்வோம்)
2.
இந்நாவலின் கதைக்கள நிகழ்ச்சிகள் 1968 - 1979 ஆண்டுகளைக் கொண்டதாகவும் இந்நாவலை டானியல் 1984 இல் எழுதி முடித்தார் எனவும் அ. மார்க்ஸ் பஞ்சகோணங்கள் நாவலுக்கு எழுதிய முன்னுரையால் அறியப்படுகிறது. தமிழ் ஈழ இயக்கங்கள் தோன்றிய ஐந்தாண்டுகளில் நடந்த மாற்றங்கள் நாவலில் காட்டப்படுகிறது. ஆனால் இந்நாவல் டானியல் மறைந்த பிற்பாடு 1994 ஆம் ஆண்டுதான் நூலுருப்பெற்றது. பொருத்தமான வெளியீட்டாளர் கிடைக்கவில்லை என்பதற்கும் அப்பால் அந்நாவல் வெளிப்படுத்தும் உள்ளடக்கமுங்கூட காரணமாக இருந்திருக்கக்கூடும். இவ்வாறான படைப்புக்கள் காலந்தாழ்த்தி வெளிவந்த வரலாறுகள் பல எமக்கு முன்னுதாரணங்களாக இருந்திருக்கின்றன.
இந்நாவல், ஒடுக்குதலுக்குள்ளாகிய உழைக்கும் மக்கள் தமக்கு மேலே இருந்த அதிகார வர்க்கத்தினரிடம் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய அன்றாடக் காரியங்களுக்காக எவ்வளவு இன்னல்களை எதிர்கொண்டார்கள் என்பதைத்தான் உள்ளடக்கமாகச் சொல்கிறது. அக்காலங்களில் நிலவிய வரலாற்றுக் களநிலைகளும் உணர்த்தப்படுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல தமிழ் ஈழ இயக்கங்கள் தோற்றம் பெற்று மக்களிடையே தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் எடுத்தியம்பும் வகையில் இயங்கிய காலமாக இருந்துள்ளது.
தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்யும் ஒடுக்குதலுக்கு உள்ளாகிய உழைக்கும் மக்களுக்கு சிரட்டைகளில் தேநீர் கொடுத்தல், சட்டிகளில் வழங்கப்படும் உணவு, ஆலய நுழைவு மறுப்பு போன்றவற்றுக்காகத் தம்மை அதிகாரம் செய்த வர்க்கத்தினரிடம் காலங்காலமாக மாற்றத்துக்கான கோரிக்கையை முன்வைத்தபோது அவர்கள் புறக்கணிக்கப்பட்டும் ஏளனம் செய்யப்பட்டும் வன்முறைகளின் ஊடாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டும் அலைக்கழிக்கப்பட்டார்கள். அவர்களின் உன்னதமான வாழ்வு அதிகார வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
அதிகார வர்க்கத்தினருக்கு உதாரணமான பாத்திரங்களாக கிறேசர் இளையதம்பி, நிலவுடைமைக்காரரான இராசரத்தினம் ஆகியோரையும் உழைக்கும் மக்களின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இயங்கும் பாத்திரங்களாக வாத்தியார், கந்தையர் ஆகியோரையும் மறுபுறத்தில் ஒடுக்குதல்களுக்குள்ளாகிய மக்களின் குரல்களாக வெளிப்படும் பூதி, செல்லி ஆகிய விவசாயக் கூலிப் பாத்திரங்களும் கிட்டிணர் திருப்பதி, லோகேஸ்வரன் முதலான சமூக விடுதலை விரும்பும் செயற்பாட்டாளர்களையும் பாத்திரங்களாக இந்நாவலில் டானியல் உலாவவிட்டிருப்பார்.
தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதாரணர்களைக் கொலை செய்யவும் சில திட்டமிட்ட காரியங்கள் ஊடாக அவர்களின் கோரிக்கைகளை எச்சரிக்கவும் திரைமறைவில் பல வேலைகளை இளையதம்பியும் இராசரத்தினமும் செய்கின்றனர். இளையதம்பியின் கிறேசரில் வேலை செய்த மலையக வேலைக்காரச் சிறுவனுக்கு உள்விவகாரங்கள் தெரியவந்ததால் அடித்துக் கொலை செய்து கிறேசர் வளவுக்குள் புதைத்தமை, ஒடுக்குதலுக்குள்ளான மக்களுக்கு ஆதரவாகச் செயற்படும் வாத்தியார் போன்றவர்களை ஆட்களை வைத்து அடித்துப் போடுதல், விவசாயக்கூலியான பூதியின் வீட்டை எரித்தல் முதலானவை நாவலில் வரும் சில உதாரணங்கள் ஆகும்.
'’பஞ்சகோணங்களின் கதை நிகழ்களங்களாக புன்னாலைக்கட்டுவன், கட்டுவன், உரும்பிராய், சுன்னாகம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நாவல்களின் கதை நிகழ்களங்களைப் போலவே நிகழ்கால எல்லைகளும் விரிவானவையாகும் பஞ்சமர் நாவல் நிகழ்வுகள் 1956-1969 காலப்பகுதிக்குரியன. இக்காலப் பகுதியை அடுத்து தமிழின விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவான காலம் வரையான ஆண்டுகளில் ஏறத்தாழ 1970-1980 களில் - பஞ்சகோணங்கள் கதை நிகழ்கின்றது என்பது அந்நாவலின் முன்னுரையால் உய்த்துணரப்படுவது. பஞ்சகோணங்கள் மட்டுமே பஞ்சமருக்குப் பிற்பட்ட நிகழ்வுகளுக்கு எம்மை இட்டுச்செல்கிறது. எனவே அடிநிலை மாந்தரின் விடுதலை என்ற மையச் சரட்டில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கால சமூக வரலாற்றுப் போக்கை இலக்கியமாகப் பதிவு செய்வது டானியல் அவர்களது நோக்கம் என்பது புலனாகின்றது.’’ (பேராசிரியர் நா. சுப்பிரமணியன், மல்லிகை, 1994 மே)
3.
இந்நாவல் மேற்குறித்த அன்றாடக் கோரிக்கைகள் மட்டுமன்றி வேறு ஒரு வகையிலும் முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம். அக்கால கட்டத்தில் ஒடுக்குதலுக்குள்ளான மக்களின் விடுதலைக்காக சமூக மட்டத்தில் உள்சுற்றாக சந்திப்புக்கள் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. அவற்றில் பஞ்சம மக்களின் பிரதிநிதிகளுடன் முற்போக்கான எண்ணமுடையோரும் இணைந்து செயற்பட்டிருக்கின்றனர். அவ்வாறுதான் இந்நாவலில் வாத்தியார், கந்தையர் ஆகிய பாத்திரங்களை ஆசிரியர் கொண்டு வருவார். கிட்டிணர், திருப்பதி, லோகேஸ்வரன் முதலான பாத்திரங்களும் இந்த உரையாடல்களில் பங்கெடுப்பதும் காட்டப்படுகிறது. இவர்கள் அக்காலத்தில் சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மை மாந்தர்களாக அறியப்படுகிறது.
இடையீடாக வருகின்ற முதன்மையான ஒரு வரலாற்றுக் கட்டத்தையும் நாங்கள் நோக்கவேண்டும். அக்காலத்தில் இயங்கிய தமிழ் ஈழ இயக்கங்களின் அரசியல் நிலைப்பாட்டையும் இந்நாவலில் டானியல் பதிவு செய்துள்ளார். அவ்வியக்கங்கள் தோன்றிய ஐந்தாண்டுகள் என்று நாவலில் அறியப்படுகிறது. கதைக்களங்களில் அவர்களின் உலாவல்கள் காட்டப்படுகின்றன. உரையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன.
பஞ்சமர்களின் விடுதலைக்கான கோரிக்கை மற்றும் போராட்டம் பற்றியும் தமிழ் ஈழ இயக்கங்கள் அப்போது அறிந்திருக்கின்றனர். ஒடுக்குதலுக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காதவரையில் பொது எதிரியின் முன்னால் நாங்கள் எவ்வாறு ஒன்றுபட்டு நிற்பது என்ற கோரிக்கை வரும்போது - தமிழ் ஈழ இயங்கங்களின் கருத்தாக,
'’இந்த நேரத்திலை உது பிரதான வேலைதானா எண்டுதான் யோசிக்க வேண்டியிருக்கு. ஒரு எதிரியோடை போராட வேண்டிய வேளையிலை இதை இருமுனைப் போராட்டமாக மாத்திறது பிழை எண்டுதான் நினைக்கிறம் நீங்களும் யோசித்துப் பாருக்கோ! அதாவது நாங்க சொல்லுறது எண்னெண்டால் உதிலை நாங்கள் மினக்கெட்டமெண்டா தமிழரிலை கன பேர் எங்களோட சேராயினம்! எங்களை எதிர்ப்பினம் நாங்கள் நினைச்ச காரியத்தைச் செய்து முடிக்கேலாமல் போயிடும்.'’ (பஞ்சகோணங்கள் ப.183)
இது இயக்ககாரரின் கருத்தாக இருக்கிறது. இந்த உரையாடலில் வாத்தியார் ஒடுக்குதலுக்குள்ளானவர்களின் பிரதிநிதியாக ஒரு வினாவை எழுப்புவார்.
‘'பக்கத்திலை அடிப்படலைக்கை கிடக்கிற கடவுளுக்குக் கிட்டப் போக விடுகிறியளில்லை. வலு தூரத்திலை இருக்கிற இலக்குக்கு எப்பிடித் தம்பி ஆக்களைக் கொண்டு போகேலும்? ஆயிரம் வருஷ காலம் உங்கடை தொண்டு துரவு செய்து, உங்கடை வாழ்வு சாவு எல்லாம் பாத்த சனங்களை உங்கடை கண்ணுக்குத் தெரியேல்லை. உலகத்திலை அடிமைப்பட்டவங்கள்தான் உங்கடை கண்ணுக்குத் தெரியுது, உப்ப உந்தச் சனங்களின்ரை காரியத்திலை தலையிட்டா நாளைக்கு ஆட்சியைப் பிடிக்கிற சங்கதி குழம்பிப் போமெண்டு நீங்கள் நினைக்கிறியள்! சரி நாளைக்கு ஆட்சியைப் பிடிச்சிட்டியள் எண்டு ஒரு கதைக்கு வைச்சுக் கொள்ளுவம். அதற்குப் பிறகும் நீங்கள் அமைக்கிற ஆட்சியிலை இவைக்கும் பங்கு குடுக்க நீங்கள் சொல்லுற மற்றத் தமிழர் விடாயினம்! அப்ப என்ன செய்யப் போறியள்?'’(பஞ்சகோணங்கள் ப.184)
இந்நேரத்தில் 'தமிழர் எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும்' இந்த சமூக ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகள் எங்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்பதே அவர்களின் தீர்க்கமான பதிலாக இருந்திருக்கின்றது.
4.
தனது நாவல்களில் நூற்றாண்டுகள் முன்னே சென்று இரண்டு மூன்று தலைமுறைகளாக ஒடுக்குதலுக்குள்ளாகிய மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைச் சமூக வரலாற்று நாவல்களாகத் தந்த டானியல் அவர்கள் பஞ்சகோணங்களில் சமகால நிகழ்வுகளையும் தமிழ் ஈழ இயக்கங்களின் அரசியல் நிலைப்பாட்டையும் ஒன்றிணைத்து இந்நாவலைப் படைத்திருக்கின்றார்.
சமூக ஒடுக்குதல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவதால் விடுதலை கிடைத்துவிடும் என்று எண்ணுவதற்கு மாற்றாக அம்மக்கள் ஒன்றுசேர்ந்து அதிகார வர்க்கத்தினரின் மனங்களை மாற்றுவதன் ஊடாகவே சில மாற்றத்தையாவது கொண்டுவரமுடியும் என்பதையும் இந்நாவலில் டானியல் எடுத்துக் காட்டியுள்ளார். சமூக முன்னோடிகள், சமூக விடுதலை விரும்பிகளின் தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவும் கல்வி மற்றும் பொருளாதார எழுச்சிகளின் ஊடாகவும்தான் இன்று மக்கள் மாற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். ஆனாலும் மாற்றமுறவேண்டிய களங்கள் நிரம்பவே உள்ளன என்பதும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல.
இவ்வகையில் சமூக மாற்றத்தைக் கோரும் படைப்பாக, ஒடுக்குதலுக்குள்ளாகிய மக்களின் விடுதலைக்கான குரலாகவே டானியலின் பஞ்சகோணங்கள் நாவல் அமைந்துள்ளது என்பதை வரலாறு மீளவும் மீளவும் பதிவு செய்து கொண்டேயிருக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









