
கட்டுரையாளர் : முனைவர் அ .கல்பனா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை -
முன்னுரை
சங்ககாலம் மனித வாழ்வின் முக்கிய இடத்தை பெறுகிறது . சங்ககாலமும் தமிழ் மொழியும் பிரிக்கமுடியாதது உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது.
சங்கம்
சங்கம் என்ற பெயரை முதலில் ஆராய்வோம். சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. கி.பி.400 வாக்கில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். பிறகு சமணத் துறவிகள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர். அந்தச் சொல்லைத் தான் பிற்கால இலக்கிய ஆசிரியர்கள் கி.பி.200க்கு முன் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர்.
சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். இதனை பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனவும், சங்கமருவிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கையின் நிலைகள் சங்க இலக்கியங்களில் மிகவும் அழகாக கூறியுள்ளார்கள். இவை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அகம் என்பது இல்லற வாழ்க்கை பற்றிய செய்திகளை கூறும் புறம் என்பது கொடை, போர், வீரம், ஆட்சி போன்ற செய்திகளை கூறும்.
அதுமட்டுமின்றி தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் நூலக இந்த சங்க இலக்கியங்கள் அமைகின்றது.
அறம் என்பது தனிமனித ஒழுக்கம், நேர்மை, பிறருக்கு உதவுதல் மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்ல நடத்தைகளின் தொகுப்பாகும். இது அறநெறி, வாய்மை, கருணை, மற்றும் பிறன் பழிப்பில்லாத வாழ்க்கையை வலியுறுத்துகிறது
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது என கூறும் வள்ளுவர்
அகப்பாடல்கள்- அறம்
ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதலிப்பது, காதலைத் தோழி மூலம் செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கு மெல்லத் தெரியப்படுத்துவதும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளன. இவ்வாறு காதலைத் தெரியப்படுத்துவதற்கு அறத்தொடு நிற்றல் என்ற பெயரும் உண்டு. பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத சூழலில் காதலனும் காதலியும் ஊரை விட்டு வெளியூர் சென்று விடுதல் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர். அக்காலத்தில் காதலித்த பெண்ணை மணந்து அவளோடு இன்பத்துடன் வாழ்ந்து வரும் தலைமகன் வேறு பெண்களை நாடிச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்குப் பரத்தையிற் பிரிவு என்று பெயர். அதனால் தலைவி அவனிடம் சினம் கொண்டு ஊடல் கொள்ளுதலும் பழக்கமாக இருந்துள்ளது. அகப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனைப் பாடல்களாக இருந்தாலும், அக்கால மக்களின் காதல் வாழ்க்கையை முழுமையாகவே வெளிப்படுத்துகின்றன.
அறத்தொடு நிற்றல்
சங்க இலக்கியங்களில், குறிப்பாக அகத்திணை பாடல்களில், தலைவன்-தலைவியின் களவு ஒழுக்கத்தை (திருமணத்திற்கு முந்தைய காதல்) தோழி அல்லது செவிலித்தாய், உரிய பெரியோர்களிடம் (அன்னை) அறவழியில் உண்மையைக்கூறி, அவர்களை மணம்புரியச் செய்யச் செய்யும் முறையாகும். இது காதல் நிலைத்திருக்கவும், அறவழியில் மணம் முடியவும் உதவும் ஒரு முக்கியமான அகத்துறை நிகழ்வாகும்.
புறநானூறு சங்க இலக்கியத்தில் புறம் சார்ந்த நூல். இதில் அரசர்களின் ஆட்சி நெறி, நீதிச் செயல், சமூக பொறுப்பு ஆகியவை அறமாக எடுத்துரைக்கப்படுகின்றன.
நீதியான ஆட்சி
குடிமக்களின் உயிர், பொருள் பாதுகாப்பு
ஏழைகளுக்கு உதவி
விருந்தோம்பல்
பகைவரிடமும் மனிதநேயம் அரசன் தனக்காக அல்ல,
மக்களுக்காக வாழ வேண்டும் என்று புறநானூறு வலியுறுத்துகிறது
ஏழைகளை காப்பது
விருந்தோம்பல் செய்வது
துன்புற்றவர்களுக்கு உதவுவது
இவை அனைத்தும் அரசரின் அறமாகக் கூறப்படுகின்றன.
சங்க காலக் கடையேழு வள்ளல்கள் (பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நள்ளி) ஈகை மற்றும் அறநெறிக்கு பெயர் பெற்றவர்கள். முல்லைக்கு தேர், மயிலுக்குப் போர்வை, பாணர்களுக்குப் பரிசுகள் எனத் தன்னிடம் உள்ளவற்றை முகம் சுளிக்காமல் ஈந்து, மக்கள் நலனே அறம் என வாழ்ந்தனர்.
கடையேழு வள்ளல்கள் செய்த அறங்கள்
பாரி: முல்லைக் கொடி படர்வதற்குத் தான் ஏறி வந்த தேரையே பரிசாக அளித்தார்.
பேகன்: குளிரில் நடுங்கிய மயிலுக்குத் தன் போர்வையைத் தந்தார்.
அதியமான்: தனக்குக் கிடைத்த சாகாவரம் தரும் நெல்லிக்கனியை, தமிழ் மூதாட்டி ஔவையாருக்குக் கொடுத்து, தமிழ் வளர்த்தார்.
காரி: பாணர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தன்னுடைய குதிரைகளையும், மலையமா நாட்டையும் பரிசாக வழங்கினார்.
ஓரி: கொல்லிமலைப்பகுதியில் யாழ் மீட்டும் பாணர்களுக்குத் தன் நாட்டின் பெரும் பகுதியை அளித்தார்.
ஆய் அண்டிரன்: நீலநாகம் தந்த உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்ததோடு, பாணர்களுக்குப் பரிசுகள் அளித்து மகிழ்ந்தார்.
நள்ளி: தன்னைக் நாடி வந்தவர்களுக்குப் புகலிடமும், செல்வமும் அள்ளி வழங்கினார்.
மனிதன் தனியானவன் அல்லன். அவன் என்றால் சமூகக் கடலின் ஒருதுளி. அவனுக்குள்ளே சமூகம் - சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும்.
சங்ககாலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க கால அறங்கள் இயல்பானவை. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார். அந்த வகையில் சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன. சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்' என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.
முடிவுரை
சங்ககாலம் தரும் இலக்கியங்களில் அறத்தன்மை என்பது எப்பொழுதும் போற்றும் நிலையிலே உள்ளது.
அகம் சார்ந்த நிகழ்வுகளும் தனிமனிதன் சமூகம் சார்ந்த அரகத்துக்கள் எதிர்காலவாழ்க்கைக்கு பயன் தருகிறது.
எனவே அகம் புற இலக்கியங்களில் அறம் வரலாற்றில் நிறைத்து உள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









