கட்டுரையாளர்: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 


முன்னுரை

தமிழ்மொழி எளிமையானது. இனிமையானது. தொல்காப்பியம் உள்ளிட்ட பல இலக்கணநூல்களைத் தன்னகத்தே கொண்டது. சங்கஇலக்கியம் முதலாக பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டது.பல செய்திகளை உள்ளடக்கியது என்றாலும் சில செய்திகளைக் கம்பரே தம் இராமாயணத்தில் முதன் முதலில் கூறியுள்ளார். அவற்றுள் சுவையான சில செய்திகளை மற்ற இலக்கியங்களில் காணப்படாத, கம்பரே கூறிய செய்திகளைக் கண்டு நாம் வியப்போம்.கம்பர் கூறிய வியப்பான சில செய்திகளை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

முதல் விவாகரத்து

கம்பரே முதன் முதலில் விவாகரத்து குறித்துக் கூறியுள்ளார். கைகேயி, தசரதனிடம் பரதன் நாடாளவும், இராமன் காடாளவும் வரம் கேட்டதால் மனமுடைந்த தசரதன், வசிஷ்டரிடம் இவள் என் மனைவி அல்லல் இவளை மனைவி எனும் நிலையிலிருந்து முற்றிலும் நீக்கிவிட்டேன். அரசனாக வரப்போகும் அந்தப் பரதனையும் இனி என் மகன் என்று கருத மாட்டேன். அவன் என் இறுதிச் சடங்கு செய்வதற்கு உரிமை உடையவன் ஆக மாட்டான் என்றான்.

“இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அவ் பரதன்தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்”
(நகர் நீங்கு படலம் 341)

விவாகரத்து குறித்த அரச ஆணையை நடைமுறைப்படுத்தல்(உயில்)

பள்ளிப்படைப் படலத்தில் கேகய நாடு சென்று திரும்பிய பரதனிடம், கோசலை உன் தந்தைக்குரிய ஈமக்கடனைச் செய்வாய் என்று கூறினாள். அப்போது, உடனே வசிஷ்டர், பரதனை நோக்கி, தசரதன் உன் தாய் செய்த கொடுஞ்செயலால் நேர்ந்த மிகுந்த துயரத்தால் முன்னரே மகனுக்கு உரிய உரிமைக்குத் தக்கவன் அல்லன் என்று உன்னை நீக்கிய பிறகே அவன் இறந்தான் என்று கூறினான்.

“என்னும் வேலையில் எழுந்த வீரனை
அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே என முனிவன் கூறினான்”
(பள்ளிப்படைப் படலம் 912)

ஒருவர் எழுதிவைத்த உயில் அவர் இறந்த பின்பே உயிர்ப் பெறும். எழுத்தாக எழுதாவிட்டாலும் மன்னனின் வாய்மொழி உத்தரவான சொல் உயிலானது. அவன் இறந்தபின்பு செயல்பட்டது.

பொதுவழக்கறிஞர் அதிகாரம்

கையடைப்படலத்தில் விசுவாமித்திரர் வேள்வி காக்க கரியசெம்மலைத் தந்திடு என்று கேட்டபோது தசரதன், இராமன் சிறுவன் படைநடத்திச் சென்று பழக்கமில்லை. நானே வந்து வேள்வி காக்கிறேன் என்றபோது விசுவாமித்திரர் சினம் கொள்ள, வசிட்டர் அவரை அமைதிப்படுத்திவிட்டு தசரதனிடம், இராமனுக்கு அளவற்ற வித்தைகள் வந்து சேரும் காலம் இது என்றவுடனே தசரதனும் ஒப்புக் கொண்டு, இலட்சுமியின் கணவனான இராமனை இங்கு அழைத்து வாருங்கள் என்று தசரதன் ஆணையிட்டு அவனும் வந்தான். தம்பி இலட்சுமணனோடு தன்னருகே வந்த இராமனைத் தொன்மையான நான்கு வேதங்களில் வல்லமை பெற்ற முனிவனுக்குக் காட்டி எம் ஐயனே இச்சிறுவர்களுக்கு உற்ற தந்தை நீயே, ஒப்பற்ற தாயும் நீயே இவர்களை உன்னிடம் அடைக்கலமாக ஒப்படைத்து விட்டேன், இவர்களுக்குத் தகுந்த நன்மைகளைச் செய்க என்று தசரதன் கூறினான். விசுவாமித்திரரே, இவர்களுக்கு இயைந்தது நீயே செய்க என்றுஅதிகாரப்பூரவமாக அனுமதியும் அளித்ததை பவர் ஆஃப் அட்டேனி (பொதுவழக்கறிஞர் அதிகாரம்) ஆக நாம் கொள்ளலாம்.

பவர் ஆஃப் அட்டேனி என்பது ஒரு நபர் முதன்மை தனது சொத்துகள் நிதி, அல்லது மருத்துவ விவகாரங்களை நிருவகிக்க மற்றொரு நபருக்கு முகவர் அல்லது வழக்கறிஞர் எழுத்துப் பூர்வமாக அதிகாரம் அளிக்கும் சட்ட ஆவணமாகும்.

“வந்த நம்பியைத் தம்பி தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி நல்
தந்தை நீ தனித் தாயும் நீ இவர்க்கு
எந்தை தந்தனென் இயந்த செய்க என்றான்”
(கையடைப்படலம் 332)

என் சாவுக்கு காரணம் நீ

கைகேயி, தசரதனிடம் இராமன் காடு செல்லவும்,பரதன் நாடாளவும் என்ற இரு வரங்களைக் கேட்டாள். மனமுடைந்த அவன், அவளிடம் அவ்வாறு கேட்காதே என்று பலவாறாக கேட்டபோது கைகேயி நீ கூறியபடியே இரு வரங்களையும் இன்றே தரவேண்டும் இல்லையெனில் என் சாவுக்கு நீ தான் காரணம் என்று உன் மீது பழியை வைத்து தான் இறந்து போவேன் என்கிறாள்.

“ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி
பூழிப் பொன் தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிஇர் மாய்வென்
பாழிப் பொன் தார் மன்னவ என்றாள் பசை அற்றாள்”
(கைகேயி சூழ்வினைப் படலம் 223)

முதல் மிமிக்ரி

மாரீசன் வதைப் படலத்தில் இராமன் அம்பு செலுத்த மாரீசன் இதயத்தில் பொருந்தப் பாய்ந்தது. அப்பொழுதே அந்த மாரீசன் பிளவு கொண்ட தனது வாயினால் எட்டு திக்குகளிலும் அதற்கு அப்பாலும் சென்று ஒலிக்கும்படி சீதா, இலட்சுமணா, என்று இராமனது குரலில் உரத்த ஒலியை வெளியிட்டு ஒரு மலையைப் போல தனது சுய வடிவத்தில் கீழே விழுந்தான்.

“நெட்டிலைச்சரம் வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன்”
(மாரீசன் வதைப்படலம் 797)

பர்ண சாலையைப் பெயர்த்தல்

ஒரு வீட்டை ஒரு இடத்திலிருந்து அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த இடத்தில் வைக்கமுடியும் என்பது இன்றையக் காலகட்டத்தில் முடியும். ஆனால் அன்றே கம்பர் தம் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜடாயு உயிர் நீத்த படலத்தில் இராவணன், பிரம்மன் முன்னர் இட்ட சாபத்தை நினைத்து சீதையைத் தொடவில்லை. ஆனால் தூண்கள் என்று சொல்லத்தக்க தன்னுடைய தோள்களின் வலிமையால் சீதை இருந்த அந்த இடத்தின் கீழேயும், பக்கங்களிலேயும் ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.

“ஆண்டு ஆயிடைத் தீயவன் ஆயிழையைத்
தீண்டான் அயன் முன் உரை சிந்தை செயா
தூண் தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழ்ப்புடையே”
(ஜடாயு உயிர் நீத்த படலம் 874)

சூளாமணிப் படலத்தில் அனுமனுக்கு, சீதை கூறும் போது இவளைத் தொட்டால் தான் ஒரு நொடியில் இறப்பேன் என்று எண்ணியே அவன் தனது வலிய கையினால் நிலத்தைப் பெயர்த்து அந்நிலத்தோடு என்னை எடுத்துக் கொண்டு போனான். அந்தத் தண்டக்காரண்யத்திலிருந்து நிலத்தை இராவணன் பெயர்த்து எடுத்து வந்து, இந்த இடத்தில் வைத்துள்ளான். இது இலட்சுமணன் அமைத்த பெரிய பர்ணசாலையுடனே இன்னும் நிலைத்து நிற்கிறது. ஐயனே உண்மையை உணர்ந்த உன் கண்களால் இப்பர்ண சாலையைப் பார்ப்பாயாக என்றாள்.

“ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலை நின்றது
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால்”
(சூளாமணிப் படலம் 628)

இரவு வேலை

ஊர் தேடு படலத்தில் அனுமன் இலங்கையைக் காணும் போது அரக்கர்கள் இயங்குதல் குறித்துக் கூறியுள்ளார். தெய்வங்களும், அசுரர்களும், செங்கண் பெற்ற நாகர்களும், இயக்கர்களும், வித்யாதரர்களும் இன்னும் உள்ள தேவகணத்தார் பலரும் தவறுதல் இல்லாத தன் வேலைகளை முறைப்படி செய்வதற்காக, அவ்விருளில் வானத்தே திரண்டனர். அவர்தன் உடல்களின் ஒளியினாலே இருள் அழிந்தது சித்திரப்பாவை போலச் சென்று கொண்டிருந்த தேவர்கள் இருள் வந்து நேரமாகிவிட்டது காலம் தாழ்த்திச் செல்கிறோம். அதனால் இராவணன் கோபிப்பான் என்று அஞ்சி தன் முத்து மாலைகளும், முடியில் சூடிய மலர் மாலைகளும், மேலாடைகளும் சரிந்து கீழே விழும்படி ஓடினார்கள்.

“சித்திரப்பத்தியின் தேவர் சென்றனர்
இத்துணைத் தாழ்த்தனம் முனியும் என்று நம்
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையின்
உத்திரீயங்களும் சரிய ஓடுவார்”
(ஊர் தேடுபடலம் 145)

அனைத்து உலக பெண்களுக்கும் வேலை

பொன்னகரமான தேவலோகத்து பெண்கள், வித்யாதர மகளிர், நாக நங்கையர், இயக்கர் பாவையர் ஆகியோர் அரக்கர்கள் நினைக்கும் வேலைகளைக் குறிப்பால் உணர்ந்து முறைப்படி செய்து முடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அவர்கள் மின்னல் கூட்டம் நெருங்கியதைப் போல விண்வெளியில் விரைந்து சென்றனர்.

“பொன் னகர் மடந்தையர் விஞ்சைப் பூவையர்
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணி முறை மாறி முந்துவார்
மின் இனம் மிடைந்தென மிடைந்து மேற்செல்வார்”
(ஊர் தேடுபடலம் 143)

அரக்கியருக்குப் பணிப்பெண்கள் தேவ மங்கையர்

ஊர் தேடு படலத்தில் இலங்கையில் உள்ள மரங்கள் அனைத்தும் கற்பக மரங்கள், மாளிகைகள் அனைத்தும் பொன் மாளிகைகள் இங்கு வாழும் அரக்கியருக்குப் பணிப்பெண்கள் தேவ மங்கையர். தேவர்கள் தம் வலிமை ஒடுங்கி அந்நகரத்தில் பணி செய்து துன்புறுகின்றனர். இத்துணை சிறப்பு ஒருவர் இயல்பாய் பெறக்கூடியது அன்று. யாவும் இராவணன் செய்த தவத்தினால் வந்தவை ஆகும்.

“மரம் அடங்கலும் கற்பகம் மனையலாம் கனகம்
அர மடந்தையர் சிலதியர் அரக்கியருக்கு அமரர்
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால்”
(ஊர் தேடுபடலம் 103)

தெய்வ மகளிர் அரக்க மகளிரை நீராட்டுதல்

ஊர் தேடுபடலத்தில் அனுமன் பற்பல நிலைகளில் உள்ள அரக்கர்களைக் காணும்போது சேர்த்து வைக்க விரும்புவோர் தவத்தைச் சேர்த்து வைத்தால் பயனடையலாம். செல்வம் முதலிய பிறவற்றைச் சேர்த்து வைப்பதால் பலன் இல்லை. இதனை விதிக் கடவுள் காட்டிவிட்டார். இதைக் காண விரும்புகிறவர்கள் வந்து காணுங்கள்.

கச்சணிந்த முலைகளின் பாரத்தைத் தாங்காத நுண்ணிய இடை நீர்க்குடம் சுமந்து வந்த, தெய்வ மகளிர் அந்நீரைக் கொண்டு நீராட்ட, அரக்க மகளிர் நீராடுகிறார்கள் என்று வியந்தான் அனுமன்.

“ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா
பூட்டுவார் முலைபொறாத பொய் இடை நைய பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர்”
(ஊர் தேடுபடலம் 198)

நீளமான தெரு

ஊர் தேடுபடலத்தில் அரக்கர்கள் உடல் அளவினால் பெரியவர்கள். அளவில்லாத வீரம் பெற்றவர்கள். உலகத்தை அழிக்கத் தயாராக இருப்பவர்கள். கணக்கற்ற வரம் பெற்றவர்கள். எவராலும் உணர முடியாத மாயம் வல்லவர்கள். இத்தகைய ஊர் வாழும் இலங்கை நகரின் சிறப்புக்கு எங்கேயும் எல்லை இருக்க முடியுமா? இது நகரத்தின் தெருக்கள் மிகவும் நீண்டவை. ஒரு தெருவில் இருந்து, அடுத்தத் தெருவுக்குச் செல்லுதல் ஒரு நாட்டினர், அடுத்த நாட்டிற்குச் செல்வது போல் இருக்கும்.

“மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர்
தேய்த்தார் தேயம் சேறல் தெருவில் ஓர் தெருவில் சேறல்”
(ஊர் தேடுபடலம் 129)

சந்திரகாந்த கல்லிலே மண்டபம்(குளீரூட்டப்பட்ட அறை)

மிதிலைக்காட்சிப்படலத்தில் இராமனைக் கண்ட சீதை அந்திப் பொழுதில் வருந்தினாள். அவளது துன்பத்தைக் கண்ட அவளது தோழியர் அக்கன்னி மாடத்தில் குளிர்ச்சி பொருந்திய சந்திர காந்தக் கல்லால் அமைந்த மேடையில் நெய்யால் எறியும் பேரொளி கொண்ட விளக்குகள் வெப்பம் உடையன என்று கருதி அவ்விடத்திலிருந்து அவற்றை நீக்கினர்.(மிதிலைக் காட்சிப்படலம் 552)

சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலத்தில் இராவணன் கொண்ட காமநோயால் துன்பப்பட்டான். பணியாளர்களை அழைத்து கறந்தது போல நீரைத் தாரைத் தாரையாகச் சொரிகின்ற சந்திர காந்த கற்களாலே, சிறப்புற்று விளங்கும் ஓர் அழகிய மண்டபத்தை அமைக்கவேண்டும் என்று தெய்வச்சிற்பிக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்.

“அம் தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண”
(சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 707)

விசுவகர்மன் காலத்தை உணர்த்தும் நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனது ஒளி இல்லாமல் அமுதத்தின் துளிகளை உமிழ்வனவாகிய சந்திரகாந்த கற்களை அம்மண்டபத்தின் மேலும் கீழும் பரப்பி வைத்தான். மலர்களின் மணத்தோடு வரும் தென்றல் காற்று உள்ளே நுழைந்து உலாவுவதற்காகச் சன்னல்கள் அமைத்தான்.அழகினை ஏந்தி நிற்கும் கற்பகமரங்கள் நிறைந்த குளிர்ந்த சோலை ஒன்றையும் அம்மண்டபத்தைச் சுற்றிலும் அமைத்தான்.

“காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின்
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான்”
(சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 708)

சந்திரக்காந்த கல்லின் தன்மை

இந்தக் கற்களைச் சுழற்றும்போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தக் கல் பார்ப்பதற்கு வெண்மையாகவும்,குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று கூறப்படுகிறது.இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். இதன் பயன் என்னவென்றால் மனம் உற்சாகமாகவும், தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.

இரவில் சூரியன் உதித்து பகல் ஆனது

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இராவணன் எனது கட்டளையின் வலிமையால் இரவிலே சூரியன் உதித்ததை, உதித்து பகலானதை நினைத்துப் பார்க்கும் தெளிவு அற்றவர்களாய் கற்றுத் தேர்ந்தவர்கள் இயற்றிய அழுகை முதலியவற்றை அறிவுறுத்தும் சிறப்பு அமைந்த கணித நூல்களின்படி காவல் என்பது காலத்தை நுணுகி அறிந்து உணர்த்தும் கால கணக்கர்களும் பொழுது விரிவதை உணர்த்த கூவும் கோழிகளும் தூக்கத்தை மேற்கொண்டனர்.

“ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்
நாவலர் இயற்றிய நாழி நாமநூல்.
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டனவே“
(சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 680)

பெண் தேரோட்டி

முதல் பெண் தேரோட்டியாகக் கைகேயியைக் கம்பர் தம் இராமாயணத்தில் படைத்துள்ளார்.

தேர் மீது அமர்ந்து போர் செய்யும்போது தேரைச் செலுத்தும் பாகன் தேர்ப்பாகன் எனப்படுவான்.தேரில் ஏறிய தலைவனின் குறிப்பறிந்து தேரினைச் செலுத்துதல் தேரோட்டியின் கடமையாகும்.தேரில் ஏறிப் போர் செய்பவர் கருத்தும், குதிரையின் உள்ளமும், பகைவர் மனமும், கால நிலையும்,காரிய சாதனையும் அறிந்து நடக்கவேண்டும். போர் செய்பவர் தடுமாறும்போது, உண்மை நிலையை உணர்ந்து எடுத்துக்கூற வேண்டும்.தேரில் ஏறி போர் செய்பவர் தளர்ச்சியுற்றால், தொடர்ந்து போர் செய்ய இயலாத நிலையில், அவருடைய உயிரைக் காக்கவேண்டும்.எதிரிகள் தேர்ப்பாகனையே முதலில் வீழ்த்துவர். ஏனெனில் அப்போது தான் பகைவர் தேர் ஓடாது என்பதால் முதலில் தன் உயிர்க்கே ஆபத்து என்று தெரிந்தும் தன் தேரில் ஏறுபவரைக் காக்கவேண்டும். போரில் வெற்றிபெற தேரோட்டி மிகவும் வல்லவனாக இருக்கவேண்டும்.தசரதன், சம்பராசுரனுடன் போர் புரியும்போது கைகேயியே அவனுக்குத் தேரோட்டினாள்.போரின்போது தேரின் அச்சாணி விழுந்து விட்டது அவள் தன் கையையே அதற்குப் பதிலாக வைத்து புத்திசாலித் தன்மையுடன் தைரியத்துடன் தேரைச் செலுத்தி தசரதனை வெற்றிபெறச் செய்தாள். அதற்காக மனம் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு இரு வரங்களைத் தருவதாககக் கூறினான். அப்போது தேரோட்டியாக ஆண்களே செயல்பட்ட காலத்தில் ஒரு பெண், அதுவும் சக்கரவர்த்தியின் காதல் மனைவியே தேரோட்டினாள் என்று கூறப்பட்டுள்ளது.

“பஞ்சி மென்தளிர் அடிப்பாவை கோல்கொள”
(மந்திரப்படலம் 18)

ஒருவர் உருவில் மற்றொருவர் வருதல்

மாயாசனகன் படலத்தில் மருத்தன் சனகனாக வந்தது, மாயா சீதைப்படலத்தில் இந்திரசித் மாயா சீதையை உருவாக்கி அவளை அனுமன் கண் முன் வெட்டியது. அமைச்சர் மகோதரன் இந்திரன் வடிவில் வந்தது இவையெல்லாம் மாயமாக நடந்த செயல்களாகக் கம்பராமாயணத்தில் கம்பர் கூறுகிறார். போரில் நடைபெற்ற செய்திகளை வண்டு உருவில் தூதர்கள் வந்து இராவணனிடம் கூறியது. மாயா சீதை இறந்த செய்தியைக் கண்ட வீடணன் அதை நம்பாது அது அரக்கர்கள் செய்த மாயமாக இருக்குமோ என்று ஐயப்பட்டு, வண்டு உருவில் அசோகவனம் வந்து சீதை நலமாக இருப்பதைக் கண்டு வந்து இராமனிடம் கூறியது. இதுவும் ஒருவர் வேறு உருவில் வந்த மாயாசாலமாகும். இராவணன் முதலில் சீதைக் காண வரும்போது வயதான தள்ளாடும் முதியவர் வேடத்தில் வந்தான். பின்பு சீதையில் பேச்சால் கோபமடைந்து தன் சுய உருவில் வந்தான்.

இதில் மருத்தன் மாயாசனகனாக மாறினான் என்றாலும்,அவனை இராவணன் சிறையில் அடைக்கும்படியாக உத்தரவிட்டான். வீடணன் வண்டு உருவாக மாறி சீதையைக் கண்டு பின் வீடணன் உருவையே அடைந்தான். ஆனால் மாயா சீதையாக வந்தவள் இந்திரசித் கையால் வெட்டுப் பட்டு இறந்துவிட்டாள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.சூர்ப்பணகை இராமனைக் காணச் சென்ற போது தன் அரக்க உறவை விட்டு அழகான பெண்ணின் தோற்றத்துடன் சென்றாள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

ஒற்றர்களைக் கண்டுபிடித்து விட்டால் அவர்களைக் கொன்றுவிடுவது மரபு. ஆனால் கம்பராமாயணத்தில் குரங்குப்படைகளுக்கிடையே சுகன்,சாரன் என்று இரு அரக்கர்கள் குரங்கு உருவில் ஒற்றர்களாகச் செயல்பட்டதை வீடணன் அறிந்து வானரப்படையினரிடம் கூற, அவர்கள் மாணைக்கொடியால் கட்டி இழுத்து வந்து இராமன் முன் நிறுத்தினர். விசாரணையின் போது அவர்கள் ஒற்றர்கள், குரங்கு உருவில் வந்துள்ளனர் என்பதை நிரூபிக்க வீடணன் ஒரு மந்திரத்தை உச்சரித்த அளவில் செம்பின் மேல் பாதரசம் பூசியது வெள்ளி போல் அளித்த தோற்றம் முற்றிலும் நீங்கி பழையபடி செம்பானது போல் அரக்கர் உருவம் பெற்றனர்.(ஒற்றுக் கேள்விப் படலம் 716)

சேது பாலம் கட்டுதல்

கடலின் நடுவே அணை கட்டப்பட்டுள்ளது என்பதைக் கம்பரே தம் இராமாயணத்தில் கூறியுள்ளார்.சேதுபந்தனப்படலத்தில் இராமனும் மட்டுமல்ல வீரர்களும் இலங்கை செல்ல சேது பாலம் கட்ட வேண்டும் என்று எண்ணி சுக்ரீவன், நளனிடம் கூறினார். ஆயிரம் கோடி கணக்குடைய வானரங்கள் பெரிய பெரிய மலைகளைத் தன் தோளிலும், தலையிலும், வாலிலும், கையிலும் தூக்கி வந்து தந்தனர். நளன் கடலில் ஆயிரம் யோசனை ஆழமும் நிரம்பும் படியாக அணையைக் கட்டினான்.

அணையானது நன்கு அமைய, சிந்தித்து நோக்கிய தன்மை கொண்ட நளன், கற்கள் மேடு பள்ளம் இல்லாமல் ஒரே சீராக அமையும்படி முறித்து நெருங்கி ஒன்று சேர்த்தான். மலைகளை நேராக அடுக்கினான். அவற்றின் மேலே மணல் பொருந்தவும் சேர்த்து, உச்சிகள் தனிப்படத் தெரியாமல் நேராகுமாறு பெரிய கைகளால் நிரவிச் சமப்படுத்தினான்.(சேதுபந்தனப்படலம் 661)

கடலில் அணையானது மூன்று நாட்களில் இலங்கையைப் போய் சேர்ந்த்து. ஒரு நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் உடைய அணை கட்டப்பட்டது.

“எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறு இவை
ஐயிரண்டில் அகலம் அமைத்திடச்“
(சேதுபந்தனப்படலம் 686)
பத்துத் தலை இராவணன்

ஒருவனுக்குப் பத்துத் தலைகள் இருந்தன என்று கம்பர் கூறுகிறார்.இரு நிலைகளில் முதலாவதாக அரண்மனையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இராவணன். இரண்டாவதாக மகனை இழந்த நிலையில் துயரத்தின் எல்லையில் இருக்கும் இராவணன்.

இராவணன் இலங்கை அரண்மனையில் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் நிலையை விளக்கும்போது அவனுடைய பத்து தலைகள் குறித்தும் அவை என்னென்ன செய்து கொண்டிருந்தன என்பது குறித்தும் கம்பர் குறிப்பிடுகிறார். அடுத்து இந்திரசித் இறந்ததால் துயரத்தின் உச்சியில் இருந்த அவனுடைய ஒவ்வொரு தலையும் ஒவ்வொன்றாகச் சொல்லிப் புலம்பின என்றும் கம்பர் குறிப்பிட்டுள்ளார். ஒருவனுக்குப் பத்து தலைகள் இருந்தன என்பதே புதுமை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்தன என்று குறிப்பிடுவதும், ஒவ்வொரு தலையும் ஒவ்வொன்றைச் சொல்லிப் புலம்பின என்று கூறுவதும் முதல் முறையேயாகும்.

வெட்டின தலை மீண்டும் முளைத்தல்-தவம்.

போர்க்களத்தில் இவ்வுலகத்தில் இறந்த உயிரானது தான் செய்த வினையின் மிகுதியால் உடனே உடலெடுத்துப் பிறந்ததைப் போல, வெட்டின அத்தலையானது மறவாமல் தன்னிடத்திலே மடித்த வாயொடு முளைத்தது. உலகத்தில் தவப்பயனாய் இவ்வாறு செயல் நிகழ்வதன்றி வேறு வகையால் உண்டாகுமோ. இறந்தோர் உயிர் உடன் கருமத்து ஈட்டினான்

உடலைப் பதப்படுத்துதல்

இறந்தவர்களின் உடலைக் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தி வைக்கலாம் என்பதைக் கம்பரே முதலில் தம் இராமாயணத்தில் குறிப்பிடுகின்றார்.

கம்பராமாயணத்தில் இறந்த தசரதனின் உடலைத்தைலத் தோணியிலிட்டுப் பாதுகாத்த செய்தியினை,

“செய்யக்கடவ செயற்கு உரியசிறுவர் ஈண்டையார் அல்லர்
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா என்ன இயல்பு எண்ணா
மையற் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன
தையற் கடல் நின்று எடுத்து அவனைத் தயிலக் கடலின் தலைஉய்த்தான்”
(தைலமாட்டுப் படலம் 598)

என்று தசரதன் உடல் தைலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த செய்தியினை அறியமுடிகிறது.

செய்வதற்குரிய இறுதிக்கடமைகளைச் செய்வதற்கு உரிமை உடையவரான புதல்வர்கள் இங்கே இருக்கவில்லை. நடக்க வேண்டிய செயல் நடக்காமல் நிற்காது. இப்போது செய்ய வேண்டிய இயல்பான செயல் என்ன? என்று அமைச்சர்கள் ஆலோசித்தனர். "மயக்கும் திறமை பெற்ற, கொடியவளான கைகேயியின் மகன் பரதன் இங்கு வந்து சேர்ந்த பின்பு, ஈமக்கடன் முடிப்போம்" என்று முடிவு செய்தனர். அதனால் மகளிர் என்னும் கடலில் நடுவே இருந்த தசரதனை 'தைலம்' என்னும் கடலில் இட்டனர்.

இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி பாதுகாத்தல் என்பது பழங்காலத்திலேயே பழந்தமிழர் பயன்படுத்தினர் என்பதும், கம்பரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அயோத்தியா காண்டத்தில் ஒரு படலமாக ’தைலமாட்டுப் படலம்' என்று தலைப்பிலேயேக் கொடுத்துள்ளார்.

கேகய நாடு சென்றிருந்த பரதன் திரும்பி வந்து, ஈமச் சடங்குகள் செய்ய 7 நாட்கள் ஆகும் என்பதால் தைலத்திலிட்டுப் பாதுகாத்தனர்.

“மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள்மேனியை
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்”
(பள்ளியடைப்படலம் 905)

தந்தையின் உடலைக் (7 நாட்கள் கடந்து பின்) கண்டவுடன் தரையில் விழுந்து கதறி அழுத பரதன், பெருமை மிகுந்த ஆணைச்சக்கரத்தை உடையவனாக இந்த உலகத்தை ஆண்ட தசரதனது எண்ணெயில் இடப்பட்ட பொன் போன்ற அழகிய உடம்பைத் தன் கண்ணிலிருந்து பெருகிய நீரால் கழுவி, நீராட்டி னான், என்றே கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து தைலத்தில் இடப்பட்ட உடலானது 7 நாட்கள் கடந்த பின்பும், அழகு கெடாமல் இருந்தது என்பதும் பெறப்படுகிறது.

இந்திரசித் இறந்தபோது இராவணன் போர்க்களத்திலிருந்து அவனது தலையற்ற உடலை, அழுதுகொண்டே தன் கைகளில் ஏந்தியவாறே அரண்மனைக்குக் கொண்டு வந்தான். என் அன்பு மகனைக் கொன்றவர்களான இராம இலட்சுமணர்களைக் கொன்ற பின்பே, என் மகனுக்கு இறுதிச் சடங்கினைச் செய்வேன், அதுவரை இந்த உடலை தைலத்திலிட்டுப் பாதுகாத்து வையுங்கள் என்று வீரர்களிடம் கூறுனான்.(இராவணன் சோகப் படலம் 3185)

இதிலிருந்து இறந்த உடலைப் பதப்படுத்திப் பாதுகாத்து வைக்கும் வழக்கம் அன்றே இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

பதினான்கு வருடங்கள் உறங்காமை

மனிதர்களுக்கு ஏதாவது பிரச்சனை, நோய், கவலை ஏற்பட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது. வயதானாலும் உறக்கம் வராது. ஆனால் வனவாசம் மேற்கொண்ட நாள் முதல் திரும்பி அயோத்தி வரும் வரை உள்ள பதினான்கு வருடங்களும் இலட்சுமணன் உறங்காமல் இராமன், சீதையைப் பாதுகாத்தான் என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அவனுக்கு உறங்காவில்லி என்றும் பெயர்.14 வருடங்கள் தூங்காமல் இருப்பது குறித்த செய்தி முதலில் கம்பராமாயணத்திலே இடம்பெற்றுள்ளது.

இந்திரசித் தலையை அங்கதன் எடுத்துச் செல்லல்

போரில் எதிரிகளை அம்பிட்டுக் கொல்வது என்பது நடைமுறைதான் என்றாலும், இறந்தவரின் தலையைக் கையோடு எடுத்துச் சொல்வது என்பது புதியது.(மிகுந்த கோபத்தில் ஒருவரின் தலையை வெட்டி உன் காலடியில் வைப்பேன் என்று பேச்சாகக் கூறுவர் ஆனால் அதையே உண்மையாக்கிவிட்டான்)

விரல் விட்டு எண்ணுதற்கு முன் நிற்கும் வீரன், உலகையேக் கலக்கி வென்ற வீரன் இராவணனின் மகன் இந்திரசித், இலட்சுமணனின் அம்பு பட்டு தலை துண்டிக்கப்பட்டு போர்க்களத்தில் இறந்து கிடந்தான். அங்கதன் அவன் தலையை எடுத்துக் கொண்டு சென்று இராமனின் பாதங்களில் வைத்தான்.

நிழலை பிடித்தே உருவைப் பிடித்தல்

நிழலைக் கையால் பிடிக்கமுடியாது. ஆனால் கடல்தாவு படலத்தில் வான்வழியே அடைத்து நின்ற அங்காரதாரையை அனுமன் வினவும் போது, நிழலைப் பற்றி இழுக்கும் வரத்தைப் பெற்றிருந்ததனால் என்னைப் பிடித்திழுத்தாய். ஓய்வில்லாமல் மிகுந்த உயரத்தில் தகுந்த வேகத்தோடு செல்வதைக் கண்டும் என் செயலின் அவசரத்தை உணரவில்லை. உன் வாயினால் நெடிய வானத்தை அளந்து, போகும்வழியை அடைத்தாய்.நீ யார் இங்கு இவ்வாறு நிற்பதன் நோக்கம் என்ன? என்று அனுமன் வினவினான்.

"சாயா வரம் தழுவினாய் தழீஇய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்
வாயால் அளந்து நெடுவான் வழி அடைத்தாய்
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான்"
(கடல்தாவு படலம் 80)

அசுவமேதயாமம், புத்திரகாமேட்டி யாகம்

அசுவமேத யாகம், புத்திரகாமேட்டியாகம், நிகும்பலை யாகம் குறித்துக் கம்பர் பேசியுள்ளார். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் புத்திரகாமேட்டி யாகம் செய்து குழந்தைப்பேற்றை அடையமுடியும் என்று கம்பர் கூறுகிறார். அத்தனைச் சிறப்புகளும் பெற்ற தசரதன் மக்கட்பேறு இல்லாததால் புத்திரகாமேட்டி யாகம் செய்து நான்கு புதல்வர்களைப் பெற்றான்.

நிகும்பலை யாகம்

போரில் வெற்றி பெற வேண்டுமானால் யாகம் வேள்வி செய்தால், அதைச் சிறப்பாக நிறைவு செய்தால் வெற்றி பெறுவர் என்றும் கூறியுள்ளார். இந்திரசித், போரில் வெற்றிபெற நிகும்பலையில் யாகம் செய்தான். வீடணன் சொல்லி இராமன், இலட்சுமணனை அனுப்பி அந்த வேள்வியை இடையில் அழித்தார். ஆகையால் இந்திரசித் வெற்றி பெற முடியாமல் போனது.

அறுபதினாயிரம் மனைவியர்

அந்தக் காலத்தில் மன்னர்கள் பல மனைவியரை மணந்து கொண்டு இன்பவாழ்க்கை நடத்தினர் என்றும், பல துணைவியரையும் சேர்த்துக் கொண்டனர் என்றும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பரத்தையர் இல்லத்திற்கும் அவர்கள் சென்ற செய்திகள் காணப்படுகிறது. என்றாலும், கம்பர் தம் இராமாயணத்தில் கோசலநாட்டின் மன்னனும், இராமனின் தந்தையுமான தசரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்தவன் என்று கூறுகிறார்.

தசரதன் இறந்தபோது அவனுடைய அறுபதினாயிரம் மனைவியரும் எரிகின்ற தீயில் விழுந்து அவனுடனேயே உயிர்த்துறந்தனர்.

அறுபதினாயிரம் அமைச்சர்கள்

தசரதனின் அரண்மனையில் அறுபதினாயிரம் அமைச்சர்கள் இருந்தனர் என்று கூறியிருக்கிறார்.

அறுபதினாயிரம் வீரர்கள்

மிதிலை மன்னன் சனகன் வில்லை வளைத்தவர்களுக்கே தன் மகளை திருமணம் செய்து தருவேன் என்ற நிபந்தனையை விதித்திருந்தான். அந்த சிவதனுசை அறுபதினாயிரம் வீரர்கள் சுமந்து வந்து திருமண மண்டபத்தில் வைத்தனர் என்று கூறுகிறார்.

அறுபதினாயிரம் அக்ரோணி சேனைகள்

பரதன், இராமனை அழைத்து வந்து அரசனாகச் செய்வேன் என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு கானகம் வந்தபோது அவனுடன் அந்த அறுபதினாயிரம் அக்ரோணி சேனைகளும் வந்தன என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

விமான ஓட்டி, தானாகவே இயங்கும் விமானம் 

தானாகவே இயங்கும் விமானம் குறித்து புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. புட்பக விமானம் குறித்துப் பதிவுகள் கம்பராமாயணத்தில் காணப்படுகிறது. தரையிலிருந்து சிறிது தூரம் சென்று பின் உயரே பறந்தும்,விமானி ஒட்டியும், விமானி இல்லாமல் மனவேகத்துடன் தானே ஓடியும், ஆட்கள் எத்தனை பேர் ஏறினாலும் அவர்கள் அனைவருக்கும் இடமளிக்கக்கூடிய வகையில் பெரியதாகவும், தரையிலிருந்து நேராக வானத்தில் பறந்து செல்லும்படியாகவும், ஒளியுடன் ஒலியுடன் கூடியதாக இருந்தது. தேவர்கள் வானுலகிற்குச் செல்லவும், பூமியில் இறந்து தேவரான தசரதனும் பூமிக்கு வரவும் வேறு விமானம் இருந்தது என்பதையும் கம்பராமாயணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மங்கலமுள்ளவர்களையும், உயிருடன் இருப்பவர்களையுமே புட்பகவிமானம் தாங்கிச் செல்லும் தன்மையுடையது என்பதும் பெறப்படுகிறது.

புட்பகவிமானத்தின் சிறப்பு

பர்ணசாலைக்கு வந்த இராம லட்சுமணர்கள் சீதையைக் காணாது தேடி வந்த போது, பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற நீண்ட வழியில் சென்றனர். சீதையைக் கவர்ந்து சென்றவனது தேர் நிலத்தின் மீது சென்றதால் உண்டான சக்கரங்களின் சுவடுகள் மறைந்து, ஓரிடத்தில் அந்தத் தேர் ஆகாயத்தில் எழுந்து சென்றதாகத் தெரிகிறது.

“மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து
விண்ணில் ஓங்கியது ஒரு நிலை மெய்உற வெந்த
புண்ணினூடு உறுவேல் என மனம் மிகப் புழுங்கி
எண்ணி நாம் இனிச் செய்வது என் இளவலே என்றான்”
(சடாயு உயிர் நீத்த படலம் 964)

இதிலிருந்து அந்த விமானம் தரையில் சிறிது தூரம் சென்று வானத்தில் பறந்து சென்றது.(தற்போதுள்ள விமானங்களும் ஓடுபாதையில் சிறிது தூரம் ஓடிய பின்பே, படிப்படியாக வானத்தை நோக்கிச் செல்லும்)என்பது பெறப்படுகிறது.

மருத்துமலை

சஞ்சீவகரணி, சந்தானகரணி, சல்லிய கரணி, சாவரணியகரணி என்பன குறித்து நிகண்டு நூல்களிலே சொல்லப்பட்டிருந்தாலும் மிகத் தெளிவாக கம்பரே தம் நூலில் குறிப்பிடுகிறார்.

மருத்துமலைப் படலத்தில் இந்திரசித் ஏவிய பிரம்மாத்திரத்தால் இராமன், இலட்சுமணன் உள்ளிட்ட அனைவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்ட சாம்பன், அனுமனிடம் சஞ்சிவி மருந்து இருக்கும் கரியமலைக்குச் செல்லும் முறையைக் கூறினான்.இறந்தவரைப் பிழைக்கச் செய்யும் மருந்து ஒன்றும், உடல் வேறு வேறு பிளவாகப் பிளந்தாலும் ஒட்டும்படி செய்யும் ஒரு மருந்தும், உடம்பில் பதிந்த ஆயுதங்களை வெளிப்படுத்தும் ஒரு மருந்தும், உருவம் சிதைந்து குலைந்துவிட, திரும்பவும் அதே உருவத்தைத்தரத்தக்க உண்மையான ஒரு மருந்தும் உள்ளன. வீரனே அங்கே சென்று அம்மருந்துகளைக் கொண்டு வருக என்று அம்மருந்துகளின் அடையாளங்களையும் உரைத்தான் அறிவில் சிறந்தவனான சாம்பன்.

மருத்துமலை மருத்துவ குணங்கள்

அனுமனிடம் மருத்துவமலையைக் கொணரச் சொன்னபோது அம்மலையின் மருத்துவ குணங்கள் குறித்து சாம்பன் கூறினான். நீ கொணர உள்ள மருத்துவமலையில் உள்ள மருந்து மூலிகைகள்.

1.சஞ்சீவகரணி- இறந்தவர்களைப் பிழைப்பிப்பது

2.சந்தானகரணி- உடம்பு வெவ்வேறு கூறுகளாய்ப் பிரிக்கப் பட்டாலும் பொருந்த செய்வது.

3.சல்லிய கரணி- உடம்புலே புதைந்த படைக்கலன்களை வெளிப்படும் படி செய்வது

4.சாவரணியகரணி- அடையாளம் தெரியாத வண்ணம் உருவழிந்த உடம்பை அதன் இயற்கை உருவம் அடைய செய்வது.

“மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
மெய் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருதுவிக்கும் ஒரு மருந்தும்
படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தவ உருவை அருளுவது ஓர் மெய்ம்
மருந்தும் உள நீ வீர
ஆண்டுஏகி கொணர்தி என அடையாளத்தோடும்
உரைத்தான் அறிவின் மிக்கான்”
(மருத்துமலைப்படலம் 2671)

பாதுகையே பதினான்கு ஆண்டுகள் அரசாண்டது

கைகேயி பெற்ற வரத்தினால் இராமன், காடு செல்ல தசரதன் வானகம் சென்றான்.கேகயநாட்டிலிருந்து திரும்பி வந்த பரதன் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்துவர முயற்சித்தான். இராமன் மறுக்கவே, தானும் அரசனாகப் பதவி ஏற்க விரும்பாமல், இராமனின் பாதுகையையே அவனிடமிருந்து கேட்டுப் பெற்று தன் தலைமேல் வைத்து எடுத்துச் சென்று அயோத்தியின் அரியணையில் வைத்தான். பதினான்கு ஆண்டுகள் கழித்து இராமன் திரும்பி அயோத்தி வரும்வரை அந்தப் பாதுகையே அரசாண்டது.

மாயமான்

இராவணன், மாரீசனிடம் சீதையைக் கவர்ந்து வர உதவும் படி கேட்டு மிரட்டியதால் தங்கமான மானாக மாரீசன் உருமாறி சீதையிருக்கும் இடம் சென்று அவளுக்கு ஆசை வரும்படி நடந்து கொண்டான். (தங்கத்தால் செய்து கற்கள் பதித்தபடி இருந்தது அந்த அழகிய மான்)

சீதையும் அந்த மானால் கவரப்பட்டு அதை நீயேப் பிடித்து வந்து தா என்று கேட்டாள். இலட்சுமணன் அது அரக்கர் என்று சொல்லியும் கேட்காமல் இராமன் மானின் பின்னால் சென்று, அதைப் பிடித்துவரமுயற்சித்தான். இறுதியில் இராமன் விட்ட அம்பினால் மாயமானான மாரீசன் உயிர்த்துறந்தான்.

கற்புக்கரசியை கடத்தி வந்து சிறைவைத்தல்

வேறுகுலத்தின் கற்புக்கரசியைக் கடத்தி வந்து அசோகவனத்தில் சிறை வைத்தது முதலில் கம்பராமாயணத்தில் தான் வந்துள்ளது.இராமனை,மானின் பின்னால் செல்ல வைத்து விட்டு,தனியாக இருந்த சீதையைக் கடத்தி வந்து இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்தான்.

உயிர் எல்லாம் உறையும் உடம்பு

கம்பராமாயணத்திற்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் மன்னனை உயிராகவும் மன்னனே முக்கியம் என்றும் பாடியுள்ளன. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியுள்ளது. ஆனால் கம்பராமாயணமே அரசியல் படலத்தில் வயிரம் பதித்த அணிகலன்களை அணிந்த, ஆண் சிங்கம் போன்ற வலிமை உடைய தசரதன் மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிராகக் கருதிக் காப்பவன். எனவே குற்றமற்ற அவனது நாட்டிலே உள்ள நடமாடும் உயிர்கள், நடமாடாமல் நிலைத்து நிற்கும் மரம், செடி போன்ற உயிர்கள் அனைத்தும் ஒன்றாகத் தங்கியிருக்கும் ஓர் உடம்பு போல இருந்தான்.

“வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்”
(அரசியல் படலம் 178)

முடிவுரை

தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள் என்று பல நூல்கள் இருப்பினும் அதில் கூறாத கம்பராமாயணத்தில் தான் முதன் முதலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை வரிசையாகக் காணலாம். முதல் விவாகரத்து,உயில்,பவர் ஆஃப் அட்டேனி,என் சாவுக்கு நீயே காரணம் என்று எழுதி வைத்து விட்டு இறப்பேன் எனல், முதல் மிமிக்ரி,பர்ணசாலையைப் பெயர்த்தல், நைட்ஷிப்ட்,அனைத்துலகப் பெண்களுக்கும் வேலை, சந்திரகாந்தக் கல்(A/ C Room) சேது பாலம் கட்டுதல்,பத்துத் தலை உள்ளவன்,உடலைப் பதப்படுத்துதல்,பதினான்கு வருடங்கள் உறங்காமை,நிழலைப் பிடித்து உருவைப் பிடித்தல்,அசுவமேதயாகம், அறுபதினாயிரம், மேனுவல் மிசினரி ஏரோப்பிளைன், மருத்துமலை, பாதுகையே நாடாண்டது, மாயமான், கற்புக்கரசியைச் சிறைவைத்தல், மன்னனே உயிர் என்ற நிலை மாறி, மக்கள் தான் முக்கியம் என்பன போன்ற பலப் பலக் கருத்துக்களை நாம் கம்பராமாயணத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. கருத்திருமன்.பி.சி. கம்பர் கவியும் கருத்தும்வர்த்தமான்னஃன் பதிப்பகம், சென்னை,2018
2. காசி.ஆ, கம்பரும் திருத்தக்கதேரும், தமிழ்சோலை பத்ப்பகம், சென்னை 2010.
3. சக்தி நடராசன்,க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு,2017.
4. சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
5. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
6. ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
7. ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
8. நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
9. பழனிவேலு.நா,காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு,2021.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
https://orcid.org/0000-0002-0895-0460


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்