இவர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலுக்குப் பலியாகியவர்களில் ஒருவர். ஆனால் இவரைப்பற்றித் தமிழ் மக்கள் பொதுவாக அதிகம் அறிந்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவர் தன்னை அதிகமாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தாம் இயங்கிக்கொண்டிருந்ததுதான். இவர் ஒரு சட்டத்தரணி. மனித உரிமைகளுக்காகப் போராடிய சட்டத்தரணி. இவர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக இலண்டனில் வாழ்ந்து செல்வச் செழிப்பில் மிதந்திருக்கலாம்.ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை.
77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கு நோக்கிய புகலிடம் நாடி வந்த தமிழ் அகதிகளுக்கா தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கக் காரணமாயிருந்ததோடு அதன் இணைக்காரியதரிசியாகவும் இருந்திருக்கின்றார். தமிழ்ப்பகுதியிலிருந்து ஆங்கிலப் பத்திரிகையான சர்ட்டடே ரிவியூவை வெளிவரச் செய்தார். இவர் ஈழநாடு ஸ்தாபர்களில் ஒருவரான கே.சி,தங்கராஜாவுடன் இணைந்து இவற்றை வெளியிட்டார். இவை தவிர தமிழ்ப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டார். இலண்டன், தமிழகத்தில் தமிழர் தகவல் மையத்தை உருவாக்கினார். இவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்ப்பத்திரிகையொன்றை வெளியிட வேண்டுமென்ற இவரது ஆசைக்கேற்ப 'திசை' பத்திரிகை 'சற்றடே ரிவியூ'வின் சகோதரப் பத்திரிகையாக வெளிவந்ததாக எழுத்தாளர் அ.யேசுராசா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அப்பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் அ.யேசுராசா செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'திசை'யின் பிரதான ஆசிரியராகவிருந்தவர் எழுத்தாளர் மு.பொன்னம்பலம்.
இவ்விதம் இவரது பங்களிப்பு பரந்து பட்டது. தமிழ் மக்களின் நலன்களுக்காகச் செயற்பட்ட இவர் ஜூன் 19, 1988 அன்று வெள்ளை வானில் வந்த தமிழ்ப் போராட்ட அமைப்பொன்றினால் கடத்தப்பட்டார். அதன் பின் கானாமல் போனவர்களில் ஒருவராகி விட்டார். இவர்தான் கந்தையா கந்தசாமி. இவரைப்பற்றிய , இவரது பங்களிப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரையொன்று திசை பத்திரிகையின் 14.1989 பிரதியில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/244/24342/24342.pdf
இவரது மறைவைப்பற்றி விரிவானதொரு ஆங்கிலக் கட்டுரையினை ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜா எழுதியிருக்கின்றார். அதில் இவரைக் கடத்தியவர்கள் ஈரோஸ் என்றும், இவர் துண்டுகளாக்கிக்கொல்லப்பட்டு மலசலக் குழிக்குள் உடலின் பாகங்கள் போடப்பட்டன என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றார். அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு - https://dbsjeyaraj.com/dbsj/?p=82444