ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும். 1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி ஶசிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும் , திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு. இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் ( Durham ) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார். பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார். சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.
முதலில் உலக விடயங்களின் நிருபராகவும், பின்னர் ஆபிரிக்க நாடுகளின் நிருபராகவும் பணியாற்றினார். அதன் பின்னால் தென்னாபிரிக்க நிருபராக ஜொகனஸ்பேர்க் இல் நியமிக்கப்பட்டார். ஆபிரிக்க நாட்டு விவகாரங்களில் நன்கு தேர்ச்சியடைந்த இவர் பல ஆபிரிக்க நாடுகளில் பாரிய பிரச்சனைகள் நடைபெற்ற வேளைகளில் மிகவும் துணிகரமாக செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வந்திருந்தார்.
ருவாண்ட நாட்டு இனப்படுகொலைகள் , தெற்கு ஈராக் சதுப்புநில ஆரபியர்களின் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர் ஜோர்ஜ் அழகையா அவர்கள் . ஆப்கானிஸ்தான் , லைபிரியா , சிரியா லியோன் , சொமாலியா போன்ற நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களின் போது போர் உக்கிரமாக நடந்த பகுதிகளில் துணிச்சலாக முன்னின்று செய்திகளைச் சேகரித்தார். 1999ம் ஆண்டு பி.பி.ஸி மதிய ஒருமணிச் செய்தித்தொகுப்பின் உதவித் தொகுப்பாளராகக் கடைமயாற்றினார். 2002ம் ஆண்டு பி.பி.ஸி நான்காவது அலைவரிசையில் பிரதான செய்தி வாசிப்பாளராகப் பதவியேற்றார்.
2003ம் ஆண்டு பி.பி.ஸியின் முக்கிய செய்தியான மாலை ஆறு மணிச் செய்தியை மற்றொரு பிரபல்யமான செய்தியாளர் சோபி ரேவேத் ( Sophie Raeworth ) உடன் 2005 வரையும், பின்னர் மற்றொரு புகழ் பெற்ற செய்தியாளர் நட்டாஷா கப்பிளின்ஸ்கி ( Natasaha Kaplinski ) உடன் 2007ம் ஆண்டு வரையும் இணைச் செய்தியாளராகவும் பணியாற்றினார். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 மணிச் செய்திச் சேவையின் பிரதான தொகுப்பாளரானார் . அத்தோடு 2006 ம் ஆண்டிலிருந்து பி.பி.ஸி உலகசேவையின் , இன்றைய உலகச் செய்திகள் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு பி.பி.ஸி தொலைக்காட்சியின் பிரதான இரவு 10 மணிச் செய்திகளின் தொகுப்பாளர்கள் இல்லாததால் அதன் செய்தித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். ஆபிரிக்க நாட்டு அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட இவர் பிரபலமான ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களான நெல்சன் மண்டலே , முன்னால் ஐக்கிய நாடுகள் சபை காரியதரிசி கோவி ஆனன், மதகுரு டெஸ்மண்ட் டூடூ , முன்னால் சிம்பாவெ அதிபர் ரோபேர்ட் முகாபே ஆகியோருடன் நேர்காணல்களை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
அற்புதமான குரல்வளமும் ஆங்கில மொழியின் ஆளுமையும் கொண்டவர் அமரர் ஜோர்ஜ் அழகையா என்பதும் இவர் எமது பின்புல நாடான ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் பெருமைக்குரியதே . பிரான்ஸிஸ் ரோபாதன் ( Frances Robathan ) எனும் தனது சர்வகலாசாலைத் தோழியான வெள்ளை இனப் பெண்மணியைத் திருமணம் செய்த இவருக்கு இரண்டு ஆண் குழைந்தைகள் உண்டு. 2000ம் ஆண்டு பாவ்டா ( BAFTA ) எனும் பிரித்தானிய தொலைக்காட்சிச் சேவைகளுக்கான பரிசினைப் பெற்ற குழுவில் இவரும் அடங்குவர். ரோயல் டெலிவிஷன் சொசைடி எனும் அமைப்பினால் சிறந்த சர்வதேச நிருபர் எனும் பரிசையும் , அமெனெஸ்டி இன்டர்நஷனல் யூகே அமைப்பினால் சிறந்த ஊடகவியலாளர் எனும் பரிசுகளையும் பெற்றவர். 2008ம் ஆண்டு இங்கிலாந்து அரசினால் ஆர்டர் ஆவ் பிரிட்டிஷ் எம்பயர் - OBE எனும் விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
உலக வியாபார அரங்கில் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு தகுந்த ஊதியம் அளிக்கும் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும் அங்காடிகளிலேயே மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும் Fair trade Foundation எனும் அமைப்பின் நிர்வாகக்குழுவில் கெளரவ அங்கத்தினராக இருந்த இவரை அதிலிருந்து இராஜினாமாச் செய்யும்படி பி.பி.ஸி நிர்வாகம் கேட்டதை அடுத்து இராஜினாமாச் செய்தார். இதற்கு பொதுமக்களிடமிருந்து பி.பி.ஸிக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. அதற்கு விளக்கமாக பி.பி.ஸி தமது நடுநிலை வகிக்கும் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையாகவே அவரை இராஜினாமாச் செய்யச் சொல்லி கேட்டதாக கூறப்பட்டது.
2003 டிசம்பர் சுனாமி பேரலை அழிவுக்குப் பின்னர் 2004ம் ஆண்டு ஜோர்ஜ் அழகையா அவர்கள் தன் தாய்மண்ணான ஈழத்தின் மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்து பேரலையால் அழிந்த தனது பூர்வீக இல்லத்தைப் பார்வையிட்டார். அங்கு தானும் , தனது சகோதரிகளும் விளையாடிய கிணற்றுப் பகுதியை அடையாளம் கன்ட இவர் அதை மகிழ்வுடன் குறிப்பிடிருந்தார்.
இவரது பிரித்தானிய தொலைக்காட்சிப் பங்களிப்பு 2014ம் ஆண்டு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட புற்று நோயினால் தடைப்பட்டது. 2015ம் ஆண்டு இறுதியில் தனது நோய்க்கான வைத்தியம் நிறைவுற்றதாகவும் உடல்நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி மீண்டும் தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் இணைந்தார். மீன்டும் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் மருவியுள்ளாதாகக் கூறி தொலைக்காட்சிப் பணியை இடைநிறுத்திக் கொண்டார். 2020ம் ஆண்டு புற்றுநோய் தனது நுரையீரலுக்கு பரவியுள்ளதாகவும் இனித் தன்னைக் காப்பாற்ற முடியாது என்றும் அறிவித்திருந்தார். 37 வருடங்கள் மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இவர் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஆழமாக நேசித்தார்.
தனது கடைசி விருப்பமாக தனது உயிர் பிரியும் வரை தனது காதல் மனைவியின் கைகளைப் பற்றியபடி இருக்கவேண்டும் என்பதைக் கொண்டிருந்தார், அவரது ஆசைப்படியே அவரது மனையின் கைகளைப் பற்றியபடியே கடந்த 24ம் தேதி தனது 67வது வயதில் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்தார். தமிழன் என்று சொல்லடா , தலைநிமிர்ந்து நில்லடா என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் அமரர் ஜோர்ஜ் அழகையா . இத்தகைய ஒருவர் தான் புலம் பெயர்ந்த நாட்டிலே அனைத்து மக்களின் இல்லங்களிலும் ஓர் ஆசிய ஆளூமையாக ஒலித்துக் கொண்டிருந்ததே அவரது தமிழ்ப் பூர்வீகத்தினை உயர்த்திப் பிடிப்பதாகும். தமிழர்களாகிய நாமனைவரும் அவரது ஆத்மசாந்திக்காய்ப் பிரார்த்திப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.