84 வயது முதியவரான இசை ஆசிரியர் Elham Farah. இவரைக் காசாவிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் முன் வைத்துச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேலிய இராணுவம். முதலில் இஸ்ரேலிய இராணுவத்தால் காலில் சுடப்பட்டு வீதியில் விழுந்து கிடந்திருக்கின்றார் இந்த மூதாட்டி. உதவுவதற்காக ஆலயத்தில் இருந்து ஒருவராலும் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே தாக்குதல் பலமாக இருந்துள்ளது. நிலத்தில் விழுந்து கிடந்த இவர் மேல் இஸ்ரேலியத்தாங்கி ஒன்றை ஏற்றிக் கொண்டிருக்கின்றது இஸ்ரேலிய இராணுவம். ஆழ்ந்த இரங்கல்.
பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் இஸ்ரேல் அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறது மேற்குலகு. இந்நாடுகளின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றது இஸ்ரேல்- காசா யுத்தத்தில் இந்நாடுகளின் நிலைப்பாடு. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரை நியாயப்படுத்தும் நிலைப்பாட்டை மேற்குலகு நாடுகள் மாற்ற வேண்டும். இல்லாவிடில் அந்நாடுகள் அனைத்தும் போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுத்தண்டிக்கப்பட வேண்டும்.
ருஷ்யா & உக்ரேன் போரில் போட்டி போட்டிக்கொண்டு பொருளாதாரத் தடைகளை விதித்த மேற்கு நாடுகள், ருஷ்யரின் சொத்துகளை அபகரித்த மேற்கு நாடுகள், ஒருபட்சமாக ருஷ்யா மீது போர்க்குற்றச் சாட்டுகளை முன்னெடுத்து, குறிப்பாகச் சிறுவர்களை ருஷ்யாவுக்குக் கடத்தியதற்காக ருஷ்ய அதிபர் புட்டினைப் போர்க்குற்றவாளியாக இனங்கண்ட மேற்கு நாடுகள், இன்று நெதன்யாகுவின் தலைமையிலான இஸ்ரேலிய அரசு 3000ற்கும் அதிகமான குழந்தைகளைக் கொன்று குவித்துள்ள நிலையில், மருத்துவ நிலையங்களைத் தாக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில். ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவரென்று கொன்று குவித்துள்ள நிலையில் . இம்மேற்கு நாடுகள் வேடிககை பார்த்துக்கொண்டு நிற்கின்றன.